Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Sunday, 19 December 2021

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள் - பகுதி 4

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

சிவஞானத்திற்குச் சிறந்த வழிகாட்டியாம் நம் பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் ஒன்பான் சுவைகள் என்னும் இத்தொடரில், இனி மருட்கை எனப்படும் வியப்புச் சுவையினைப் பற்றிக் காணலாம்.

தொல்காப்பிய நூற்பாவின்படி மருட்கை என்னும் வியப்பு எவைகளால் ஏற்படுகின்றது என்று காணலாம்.

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே

ஆம்! வியப்பு என்பது புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நான்கு காரணங்களால் ஏற்படும்.

  • புதுமை - இதுவரை காணாத ஒன்றினைக் காணும் போது வியப்பு ஏற்படும். உதாரணமாக, ஒருவருக்குக் கைகளில் ஆறு விரல்கள் இருக்குமானால் அது நமக்கு ஒரு வியப்பினைத் தரும்.
  • பெருமை - இங்குப் பெருமை என்பது மிகவும் பெரிவற்றைக் காணும் போது ஏற்படும் வியப்பு ஆகும். இவ்வளவு பெரிதா என்று எதனையேனும் பார்த்து வியப்படைகின்றோம் அல்லவா?
  • சிறுமை - அளவில் சிறியதாக எவற்றையேனும் காணும் போது ஏற்படும் வியப்பு.
  • ஆக்கம் - அறிவுடையோர்கள் எதனையேனும் உருவாக்கினால், அதனைப் பார்த்து வியத்தல். உதாரணமாக, விமானம், ஏவுகணை போன்றவற்றைப் பார்த்து வியப்படைதல் உண்டு அல்லவா?

இனி, சுவாமிகளின் பாடல்களில் இந்தச் சுவைகள் எப்படிப் பயின்று வந்துள்ளன என்று காண்போம்.

புதுமை

இம்மாதம் மார்கழி என்பதால் மயூர வாகன சேவன விழா வரலாற்று சம்பவத்திலிருந்தே புதுமைச் சுவையினைக் காணலாம்.  உப்பு நீக்கிய உணவினையே சுவாமிகள் தம் வாழ்நாளின் பெருபாலான நாட்களில் உண்டார். உப்பில் தான் எழும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து உள்ளது. அந்த உப்பை நீத்த உணவையுண்ட சுவாமிகளின் முரிந்த கால் கூடுவது கடினம் என்று ஆங்கிலேய மருத்துவர்கள் கருதினர். கருணைக்கடலாம் கந்தன் அருளால் கால் எலும்புகள் நன்கு கூடியது. தெய்வ சிகிச்சையே நடந்தது. இவ்வருள் நிகழ்ச்சிக்குப் பின், ஆங்கிலேய பெண் மருத்துவர் ஒருவர் சுவாமிகளின் கால் கூடிய வண்படங்களைப்  (X-Ray) பார்த்து பெரும் வியப்படைந்தார். 

(இங்கு,  X-Ray என்னும் ஆங்கில சொல்லைச் சுவாமிகள் வண்படம் என்று கூறிய தமிழாக்கச் சிறப்பும் வியப்பினைத் தரும்.) 

இப்பொழுது, பாடலில் உள்ள வரிகளைக் காண்போம்.

எம்மனித்தரும் உண்ணும் உப்பை இகந்த நும்கழல் ஆயுள்கள்
செம்மை உற்றமை மாவியப்பு எனல் செப்பி நின்றனள் அற்பொடே

(எம்மனித்தரும் - எந்த மனிதரும்; இகந்த - நீக்கிவிட்ட; நும்கழல் ஆயுள்கள் - உங்கள் காலின் வாழ்நாட்கள்; செம்மையுற்றமை - குணம் அடைந்தமை; செப்பி நின்றனள் - சொல்லி நின்றாள்; அற்பொடே - அன்புடனே)

நூல்: ஸ்ரீமத் குமாரசுவாமியம் - அசோக சால வாசம் - ஆறாம் பத்து - 8வது பாடல்

இப்பாடலில் உள்ள இவ்வரிகள் புதுமையால் தோன்றும் வியப்புச் சுவையினை மிகவும் அழகாக எடுத்துக் கூறுகின்றன.

சிறுமையும் பெருமையும்:

பெருமையால் (பெரியதால்) ஏற்படும் வியப்பும் சிறுமையால் (சிறியதால்) ஏற்படும் வியப்பினையும் சுவாமிகள் ஒரே பாடலிலேயே தந்து உள்ளார். 

முருகப் பெருமான் உருவ நிலையில் சின்னஞ்சிறிய குழந்தையாக இருந்த போதே தம்முடைய தந்தைக்கு ஓம் என்னும் பிரணவத்தின் பொருளைச் சொல்லியது வியப்பே! என்று வியக்கின்றார்.

இதைவிட வியப்பு என்னவென்றால், குகப்பெருமான் அருவ நிலையில் எல்லா உயிர்களின் ஆன்ம குகைகளில் இருந்தாலும், அந்த ஆன்மாக்களுக்கு அவன் எட்டாத நிலையில் இருப்பதை நினைத்தால் அதிவியப்பு உண்டாகின்றது என்று சுவாமிகள் கூறுகின்றார். 

இதுகாறும் சிறுமையால் (சிறியவற்றால்) ஏற்படும் வியப்பினைக் கூறிய சுவாமிகள் இனிப் பெருமையால் ஏற்படும் வியப்பினையும் இப்பாடலிலேயே கூறுகின்றார். புராணத்தின்படி, பெருநிலை எனப்படும் விஸ்வரூபம் எடுத்தவர்கள் அனுமனும் வீரபாகு தேவரும் ஆவார். இவர்களின் பெரியவடிவத்தை எல்லாம் தாண்டி பலப்பல கைகளும், தலைகளும் உடைய பிரமாண்ட வடிவத்தை எடுத்த முருகனின் தன்மையைக் கணித்து கூற யாரால் முடியும்? யார் கூறவல்லார்? என்று சுவாமிகள் வியக்கின்றார்.

உருநிலையில் குழவி வடிவுடன் இருந்தே
      உயர் தந்தைக்கு ஓம் பொருள் சொன்னது வியப்பே!
 அருநிலையில் உயிர்தோறும் இருந்து அந்த
     ஆவிகட்கு எட்டாது இருத்தல் அதிவியப்பே!
பெருநிலையில் அரிய அனுமான் வீரபாகுப்
      பெயருடையான் உருக்களைக் கடந்து
கரசிரங்கள் பல ஓங்க நின்ற நீர்மை
    கணிப்பவர் ஆர்? திருப்புகழ் சொன்னவன் ஆள் மன்னே!

நூல்: திருவலங்கற்றிரட்டு இசைத்தமிழ் - சுப்பிரமணிய இரகசியம் - 10வது பாடல்

இப்பாடலின் மூலம் சிறுமையாலும் பெருமையாலும் ஏற்படும் வியப்புச் சுவையினை உணரலாம்.

ஆக்கம்:

பாம்பன் சுவாமிகள் தமிழ் மொழியின் செம்மை நலத்தைக் கண்டு வியக்கின்றார். அத்தமிழ் தெய்வத் தன்மை நிறைந்தது. 

தம் தலைவனாகிய முருகப் பெருமான் ஈன்றாளினும் மேலான இரக்கம் உள்ளவன். அவனைப் பாடித் துதிப்பதற்குத் தேன் போல் கிடைத்த தெய்வத் தன்மை நிறைந்த தமிழே! என்று விளிக்கின்றார்.

ஈன்றாளின் மேலா மிரக்கமுள நச்செவ்வே
ணோன்றா டுதித்தினிய நூனுவலத்-தேன்பொற்
கிடைத்ததெய் வத்தமிழே கேணினையு நின்னைப்
படைத்தவனை யும்பழிச்சு வேன்

ஈன்றாளின் மேலாம் இரக்கமுள நச்செவ்வேள்
நோன் தாள் துதித்து இனிய நூல் நுவலத்-தேன்பொற்
கிடைத்த தெய்வத்தமிழே கேள் நினையும் நின்னைப்
படைத்தவனையும் பழிச்சுவேன்

நூல்: காசியாத்திரை - 67வது பாடல்

(ஈன்றாள் - அன்னை; நச்செவ்வேள் - நல்ல செவ்வேள்; நோன்தாள் - வலிமையான தாள்; நுவல - கூற) 

பாடலின் பொருள்: அன்னையினும் மேலாம் அருளுடைய நல்ல செவ்வேட் பரமனது உறுநர்த் தாங்கும் மதனுடை நோன்றாளைப் புகழ்ந்து உயிர்க்கு இன்பம் கூட்டும் நூல்களை அருளுவதற்குத் தேன் போன்று கிடைத்த தெய்வத்தமிழே! என் விருப்பத்தைக் கேட்பாயாக. நான் உன்னையும் உன்னைப் படைத்த குகப்பரமனையும் வாழ்த்துவேன்.

மேலும், ஒருபாடலில் தமிழ் மொழி ஆக்கத்தின் சிறப்பினைக் கண்டு எத்தலத்தவரும் (தமிழர் அல்லாதவரும்) இறும்பூது (வியப்பு) அடைவர் என்று கூறுகிறார்.

கடவுள் என்ற தூயத் தமிழ்ச்சொல்லின் பொருளைச் சுவாமிகள் விளக்கும் இடத்து, கடவு+உள்=கடவுள்; (கடவு=செலுத்து) அதாவது உயிர்களின் உள்ளக் குகைதோறும் இருந்து இச்சை, ஞானம், கிரியை என்பவற்றை இயக்கிச் செலுத்தும் உள்ளமாய் உள்ளது பிரமம் என்று கூறுகின்றார்.

செலுத்துதல் என்னும் சொல்லே கடவுதல் எனச் செந்நூல்கள்
பலத்துடன் உரைக்கும் ஆற்றால் பசுக்களின் உளத்தே நின்று
செலுத்து உளமாம் குகற்குக் கடவுள் என் திருப்பேர் ஒன்று எத்
தலத்தரும் இறும்பூது எய்தத் தமிழினில் ஏய்ந்தது ஆமே

நூல்: செக்கர்வேள் செம்மாப்பு

இப்பாடலில், இறைவனுக்குக் "கடவுள்" என்ற பொருத்தமான பொருள் ஆழமுடையத் திருப்பெயர் தமிழில் உள்ளதால், தமிழர்கள் மட்டும் மகிழ்ச்சி அடையும் விதமாக இல்லாமல், எந்தத் தலத்தில் உள்ளவரும் (எந்த நாட்டைச் சேர்ந்தவரும்) இந்தச் சிறப்பினைக் கண்டு அதிசயிக்குமாறு தமிழில் அமைந்தது என்று சுவாமிகள் கூறுகின்றார். இப்பாடல்கள் ஆக்கத்தினால் ஏற்படும் வியப்புச்சுவைக்கு எடுத்துக்காட்டாகும். 

இதுகாறும், பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் வியப்புச் சுவைக்கான சிறு சிறு உதாரணங்களைச் சுருக்கமாகக் கண்டோம். 

ஆனால், பாம்பன் சுவாமிகளின் பாடல்களே படிப்பவர்களுக்கு வியப்பினைத் தரும் என்பதை அனைவரும் உணர்வர். அது சுவாமிகளின் பாடலில் உள்ள  ஓசைநயத்தாலோ, முடுகுநடையாலோ, சொல்நயத்தாலோ, சித்திர கவிகளாலோ, விசித்திர கவிகளாலோ, பொருள் ஆழத்தாலோ மற்றும் எதனாலானும் வியப்பினைத்தரும் என்பதைச் சான்றோர்கள் உணர்வர் என்று கூறி இப்பகுதியினை முடிக்கின்றேன்.

இனிவரும் பதிவுகளில் அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை மற்றும் சமநிலை ஆகிய சுவைகளைக் காணலாம்.

திருச்சிற்றம்பலம்!


Monday, 1 November 2021

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள் - பகுதி 3

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

மனத்து இருள் நீக்கும் ஞான ஞாயிறாம் நம் "பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள்" என்னும் இத்தொடர் கட்டுரையில் நகைச்சுவை, அவலச்சுவைகளைப் பற்றிச் சென்ற பதிவுகளில் பார்த்தோம். இனி, இளிவரல் என்னும் இகழ்ச்சி சுவையினைப் பற்றிக் காண்போம்.

இளிவரல் என்பது இகழ்ச்சி ஆகும். பிறர் நம்மை இகழ்வதோ, நாம் பிறரை இகழ்வதோ ஆகும். அதாவது ஒருவரின் மானம் குன்ற (அவமானம்) வருவது ஆகும். இது அருவருப்பினையும் ஏற்படுத்தும். 

இந்த இளிவரல் எவற்றால் ஏற்படும் என்று தொல்காப்பியர் பட்டியல் இட்டு உள்ளார்.

மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே

இளிவரல் என்னும் இழிபுச் சுவை மூப்பாலும் பிணியாலும், வருத்தத்தாலும் மென்மையாலும் ஏற்படும். முதலில் இவற்றினைப் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

  • மூப்பு - வயது முதுமை என்பதே இந்த மூப்பு. இது இளமைக்கு மாறானது. மூப்பு என்பது அனைவருக்கும் இயற்கையாக வரக்கூடியது தானே அதனால் எப்படி இகழ்ச்சி ஏற்படும் என்று நாம் நினைக்கலாம்‌. ஓர் உதாரணத்தின் மூலம் மூப்பினால் ஏற்படும் இகழ்ச்சியினை நாம் உணரலாம். வயதான பெரியவர் ஒருவர் கூட்ட நெரிசலான ஓர் அரசு பேருந்தில் ஏறி பயணிக்க முயற்சி செய்தால், பேருந்தின் நடத்துனர், "ஏன் பெரியவரே! இந்த வயதான காலத்துல வீட்டிலே ஓரமா இருக்க கூடாதா? இந்தக் கூட்டத்துல நீ வேறயா?" என்று மூப்பை வைத்து இகழ்ச்சி செய்வதை நாம் பார்த்திருகின்றோம் அல்லவா? 
  • பிணி - பிணி என்பது நோய். இதுவும் நமக்கு இகழ்ச்சியைத் தோற்றுவிக்கும். பிணியுற்றவர் பிறர் தயவினை நாடியே வாழும் சூழல் உண்டாகும். நம் அன்பிற்கு உரியவர்கள் கூட பணிவிடைகள் செய்து செய்து ஒரு கட்டத்தில் வெறுப்பு அடைவதும் உண்டு‌. மேலும் நோய்யுற்றவனை அன்பிற்கு உரியவர்களே "நான் சொன்னதைக் கேட்டாயா! ஒவ்வாத பொருள்களைச் சாப்பிட்டுவிட்டு இப்பொழுது நோயுற்று எங்களை வேதனைபடுத்துகின்றாயே!" என்று இகழ்வதைக் கண்டிருப்போம்.
  • வருத்தம் - மன கவலை, மன கலக்கம் ஆகும்.  வருத்தத்தில்  உள்ளவர்களிடம் ஆறுதல் கூறுபவர்களைக் காட்டிலும் இகழ்ந்து உரைப்பவர்களே அதிகம். உதாரணமாக, "நான் சொன்ன மாதிரி செய்து இருந்தா ஏன் இப்படி கஷ்டபட போற?" போன்ற வாசகங்களை நாம் கேட்டிருப்போம்.
  • மென்மை - மென்மை என்றால் இயலாமை. பணம், பதவி, அதிகாரம் உடைய ஒருவன்,  ஓர் ஏழை தொழிலாளியைத் தன் இஷ்டப்படி எப்படித் திட்டினாலும் அவர் திருப்பி எதுவும் செய்ய இயலாமல் அமைதியாகப் பொறுத்துக் கொண்டு இருப்பார் அல்லவா?

இனி, பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் இந்த இழிபுச்சுவை எவ்வாறு வெளிப்பட்டு உள்ளன என்பதைச் சுருக்கமாகக் காணலாம்.

மூப்பு:

மூப்பு என்பது மிகவும் கொடியது. முதுமைக் காலத்தில் நம்மை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கும். சுவாமிகள் இத்துன்பினையும் இதனால் ஏற்படும் இகழ்ச்சியையும் கூறி பின் சாவா மூவா முருகப் பெருமானே இத்துன்பினைத் தீர்த்து அருள வேண்டும் என்று பாடிய பாடல்கள் பல உள்ளன.

அடியேன் படுத்த படுக்கையிலே பல நாட்கள் துன்புற்று, உணவு உட்கொள்ள முடியாமல் ஆகி, உற்றார்கள் பாலினை மட்டும் வாயில் விட்டு, அதன் மூலம் பால் வாயனாகித் துன்பு அடையவோ இந்தப் பாழான உடல் எடுத்தேன் என்று பாடிய பாடல்:

படுத்த படுக்கையிலே பால்வாய்ப் படற்கோ
எடுத்தேன் இத்தேகம் இயம்பாய் பரஞ்சுடரே!

நூல்: முதல் மண்டலம் - பரஞ்சுடர் கண்ணி - 65

மூப்பில் அறிவு வேலை செய்வது குறைந்து கொண்டே வரும். எதுவும் புரியாமல் நம்முடைய சீர்மை எல்லாம் குறைந்து துன்புறுவதற்கு முன்னமே முருகன் முத்தியைக் கொடுக்க வேண்டும் என்று அவர்தம் ஊர்தியான மயிலிடம் வேண்டுகின்றார். 

சித்தம் மிக அழுங்கிச் சீர்மை குலைந்திடும் முன்
முத்தி கொடு என்றே மொழி அவற்கு பொன்மயிலே!

நூல்: முதல் மண்டலம் - பொன் மயிற்கண்ணி - 37

மேலும் திருவலங்கற்றிரட்டு இசைத்தமிழ் நூலில் உள்ள திருத்தணிகைமலை பதிகம் முழுவதும், உலகவர் அனைவருக்கும் மூப்பு என்னும் இத்துன்பின் கொடுமையையும் அதனால் ஏற்படும் இகழ்வினையும் எடுத்து கூறி, இத்துன்பில் இருந்து மீள உபாயமும் கூறுகின்றார். ஒரே ஒரு பாடலினை மட்டும் இங்குக் காணலாம்.

பாய் கிடந்து பவ்வீ பெய்து பையல்கள் சீ எனும் முன்
காய் கிழங்கு உண்போர்கள் நாத! கருணை இரங்கி அருள்
தாய் கிரந்தி நூறு ஐ என்று தணிகை நெடும் கிரி வாழ்
சேய் கிளர்ந்த வேரி அம் தாள் திருவை வணங்குதுமே!

பாய் கிடந்து பவ்வீ பெய்து பையல்கள் சீ எனும் முன் - பாயில் படுத்துக் கிடந்து, அப்பாயிலே மலம் கழித்து, அந்நிலையைக் கண்டு பையல்கள் சீ என்று வசை கூறுவதன் முன்பு

காய் கிழங்கு உண்போர்கள் நாத! கருணை இரங்கி அருள் - காய் கிழங்குகளை மட்டும் உண்டு வாழ்ந்து தவம் இருப்போர்களின்  தலைவனே... கருணை செய்து இரங்கி அருள்க

தாய் கிரந்தி நூறு ஐ என்று தணிகை நெடும் கிரி வாழ் - தாயின் கருப்பம் என்னும் முடிச்சினை (கிரந்தி) அழிக்கும் (நூறு) தலைவனே (ஐ) என்று திருத்தணிகை என்னும் நெடிய மலையில் வாழ்கின்ற

சேய் கிளர்ந்த வேரி அம் தாள் திருவை வணங்குதுமே - குழந்தையின் உயர்ந்த மணம் வீசும் அழகிய திருவடியை வணங்குவோமாக

இனி, பிணி என்பதால் ஏற்படும் இழிபுச் சுவைக்கான பாடல்களைக் காண்போம்.

பிணி:

பிணி என்பது நம்மை முடக்கிவிட செய்வது. பிணியுற்ற பின் நம்மால் நம்முடைய பணிகளைச் செய்ய இயலாது. அப்படிப்பட்ட பிணியின் கொடுமையை எண்ணி சுவாமிகள் பாடிய ஓரிரு பாடல்களைக் காணலாம்.

நாட்டில் உள்ள துன்பம் தரும் பிணிகள் சோற்றால் ஆன இந்தக் கூட்டினை (உடம்பினை) அழிப்பதற்கு அளவில்லை! நாட்கள் இப்படியே கழிந்துக் கொண்டே சென்றால் பின் திருவருளுக்கு எப்படி ஆளாக முடியும் என்று வருந்திப் பாடிய பாடல்:

நாட்டுப் படர் பிணிகள் சோற்றுக் குரம்பையை
    நசிப்பதோ சங்கையில்லை
நாளாகு மேல் அருட்கு ஆளாவனோ என்னும்
     நடலையோ கொஞ்சம் இல்லை
 

நூல்: முதல் மண்டலம் - திருப்பழநி மலை - 4வது பாடல்

(குரம்பை - கூடு அதாவது உடம்பைக் குறிப்பது; சங்கையில்லை - அளவு இல்லை; நடலை - துன்பம்)

நோய் குடிக் கொண்டதனால் நாவும் தளர்வுற்று இறைவனைப் பாடித் துதிக்க இயலாது போயிற்று. மேலும் நோயின் கொடுமையால் முருகனைப் பற்றிய சிந்தனையையும் எழாமல் போயிற்று என்று வருந்திப் பாடிய பாடல்கள்:

நாவுந் தளர்வுறுகின்றது நல் தோத்திரம் நழுவ
நோவும் குடி கொளுகின்றது நுன் சிந்தை மிகாமல்....

நூல்: முதல் மண்டலம் - அயிலரசு - 7வது பாடல்

அடுத்ததாக, வருத்தத்தால்  ஏற்படும் இழிபுச் சுவைக்கான ஒரு பாடலினைக் காணலாம்.

வருத்தம்:

சுவாமிகள் முருகனின்‌ அருளினை முழுவதுமாகப் பெற்றிருந்தாலும், வீடுபேறு என்று கிடைக்குமோ என்று மிகவும் வருந்தி உள்ளார். முத்தி அடையாமல்  சாதாரண மனிதர்களைப் போல் இறந்தால் தாம் மேற்கொண்ட தவ வாழ்க்கையினை உலகத்தார் இழிவாக பேசுவார்களே என்று  வருந்தி உள்ளார்.

குமரகுருதாசர் என்று ஒருவர் இருந்தார். அவர் முருகனைப் பாடும் செயலே சிறந்தது என்று வாழ்ந்தார். பின் பலவிதமான  பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு எல்லோரைப் போலவும் இறந்தே விட்டார் என்று உலகத்தவர் சொல்லும்படி  உன் அருள் செய்யுமோ? என்று தன் வருத்தத்தினைக் கூறி பின்பு நமக்கு விடையைத் தருகின்றார். அவ்வாறு எல்லாம் முருகனின் அருள் நம்மை கைவிடாது அது நாம் மகிழும்படி முத்தியைத் தரும் என்று கூறி உள்ள பாடல்:

குகன் மஞ்சடி பாடும் செயல் கொடு நன்கு என கொண்டான்
மிகு தொந்தரைகளில் நைந்து உயிர் விடலாயினன் எனவே
சகமைந்தர்கள் சொலவும் கதி தரும் நின்னருள் செயுமோ?
மகிழும்படி அருளேசெயும் வலியார் அயில் அரசே

நூல்: முதல் மண்டலம் - அயிலரசு - 5வது பாடல்

(மஞ்சடி - அழகிய திருவடி; மிகு தொந்தரை - மிகுந்த தொல்லைகள்; நைந்து - துன்பப்பட்டு; சக மைந்தர்கள் - உலகத்தவர்கள்; வலியார் - வலிமை உடைய).

இப்பாடல் வருத்தத்தால் ஏற்படும் இழிபுச் சுவையினை நன்கு விளக்கும்.

இனி, மென்மையால் வரும் இழிபுச் சுவைக்கான சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

மென்மை:

மென்மை என்பது இயலாமையைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம். சுவாமிகள் பாடல்களில் ஓரிரு உதாரணங்களைக் காணலாம். 

காமத்தைத் தோற்றுவிப்பவன் கரிய வேளான மன்மதன் என்பவன். அக்காமத்தைச் சுட்டுத் தகித்தவன் சிவன் என்னும் செம்மேனி அம்மான். சுவாமிகள் மங்கையர் தம் இன்பு (காமம்) என்னும் துன்பினை செவ்வேளின் அருளால் வென்றவர். ஆனாலும் கூட,  இந்த மன்மதன் என்பவன் அவ்வளவு சாதாரணமானவனா என்ன? எவரையும் விட்டு வைப்பவன் அல்லவே! 

அண்ட பகிரண்டங்களுக்கு எல்லாம் தலைவனானவன் சிவபெருமான் ஆவார்.  ஒருமுறை தேவர்கள் அசுரர்களைப் போரில் வென்று தாம் தான் பெரியவர்கள் என்று செருக்கு உற்றார்கள். அவர்களின் செருக்கினை அடக்க சிவபெருமான், வெறும் ஒரு சிறு துரும்பினை வைத்து, அதனை எவர் அசைக்கின்றாறோ அவரே பெரியவர் என்று கூறினார். பின் அதனை அனைவரும் அசைக்க முடியாமல் வெட்கினர். மழு என்னும் ஆயுதத்தையும், மானின் கொம்பினையும், புலியின் தோலையும்,  பாம்பையும், யானையின் தோலையும் , நிலவினையும், கங்கை ஆற்றினையும் தரித்துக் கொண்டவர். அதுமட்டுமா, விண்ணவர்களின் துயர் தீர்க்க, திரிபுரங்களைச் சிரித்தே எரித்தவர். மேலும் பிரமனும் திருமாலும் தேடிக் காண கிடைக்காப் பேரொளியானவர். இவ்வளவு பராக்கிரமங்களை உடையவர் இடமே அந்த மன்மதன் ஒரு காலத்தில் அம்பு விட்டான் என்னும் வரலாறு உள்ளது என்றால் காய்ந்த இலை (சருகு) போல் உள்ள என்னை அவன் விட்டுவிடுவானா? என்று பாடிய பாடல் மென்மையினை விளக்கும் இழிபுச் சுவைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வண்ணமுடை ஒரு துரும்பால் அமரர் வலி எலாம்
           மக்கினம் அடையப் பண்ணியும்
     மழுமிருகம் உழுவை அதள் மதகரிப் போர்வை பிறை 
            வாரி அரவம் தரித்தும்
 விண்ணவர்கள் அலக்கண் அற வென்று பெரு முந்நகரம்
         வேவ முறுவல் விளைத்தும்
    வேதன் அரியும் தேடி அறிவறிய பேரொளி
            விரித்தும் உள ஒருவன் முன்னே
தண்ணவக் குடையன் நின்று அலர் விடுத்தான் எனும் 
      சரிதம் இவ்வுலகில் உளதேல்
   சருகு அனைய எற்கு அந்த மதன் அஞ்சுவன் கொல் உன்
         தண்ணளி கிடைக்கும் ஆயின்
மண்ணவரும் விண்ணவரும் என் வயம் எனச் சொல்ல
         வாய் உண்டு வாழ்வும் உண்டே
   மங்காத இன்பர் செறி குன்றுதோர் ஆடல் வதி
          மஞ்சார் பெருந் தகையனே

நூல்: முதல் மண்டலம் - திருக்குன்றுதோறாடல் 6வது பாடல்

(வண்ணமுடை ஒரு துரும்பு - அழகான ஒரு துரும்பு; மக்கினம் அடைய - மங்கச் செய்து; மழு - மழு என்னும் ஆயுதம்; மிருகம் - மான் அதாவது அதன் கொம்பு; உழுவை அதள் - புலித்தோல்; மதகரிப் போர்வை - மதம் உடைய யானையின் தோலினைப் போர்வையாக; பிறை - நிலவு; வாரி - கங்கை; அரவம் - பாம்பு; அலக்கண் - துன்பம்; வேவ - எரிந்து போக; முறுவல் விளைத்தும் - புன்முறுவல் செய்தும்; தண்ணவக் குடையன் - குளிர்மையான சந்திரனைக் குடையாகக் கொண்ட மன்மதன்; அலர் விடுத்தான் - பூமாலையால் ஆன மன்மத அம்பு விடுத்தான்; சருகு - இலை; மதன் - மன்மதன்; தண்ணளி - குளிர்ந்த அருள்;  என்வயம் - என் வசம்; வாய் உண்டு - இடம் உண்டு; மஞ்சார் - அழகு நிறைந்த)

மேலும் ஓர் பாடல், உயிர்கள் தம்முடைய மும்மல அழுக்கினைத் தம்முடைய வலிமையினால் அகற்றிக் கொள்ள முடியாது. திருவருள் கருணையினால் மட்டுமே மும்மலங்களும் உயிர்களை விட்டு நீங்கும் என்பதைச் சுவாமிகள் பின்வரும் பாடலில் உதாரணத்துடன் விளக்கி உள்ளார்.

சேறு என்னும் அழுக்கே சேற்றினை நீக்கிக் கொள்ளாது. மழையே அச்சேற்றினை நீக்கும். அதுபோல் உயிர்களே தம் குற்றங்களை நீக்கிக் கொள்ளா. திருவருள் என்னும் மழையே அக்குற்றங்களை நீக்கும் என்று சுவாமிகள் கூறியுள்ளார்.

சேற்றை மழை போக்கும் அன்றி சேறு அகற்றாது அவ்வாறு உன்
ஆற்றல் அன்றிப் போகாது அசுத்தம் சதாசிவமே!

நூல்: முதல் மண்டலம் - சதாசிவக் கண்ணி - 8

(அசுத்தம் - மும்மலங்கள்)

இப்பாடலில் உயிர்களின் இயலாமையும் இறைவனின் திருவருள் வல்லமையையும் சுவாமிகள் கூறியுள்ளார்.

இதுவரையிலும், இளிவரல் என்னும் மெய்ப்பாட்டிற்கான சுவாமிகளின் சில பாடல்களைச் சிந்தித்தோம். குருவருளால் மீதமுள்ள அடுத்த சுவைகளைச் சிந்திக்கலாம்.

திருச்சிற்றம்பலம்!


Tuesday, 5 October 2021

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள் - பகுதி 2

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

கருணைக் கடலாம் நம் பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் ஒன்பான் சுவைகள் என்னும் இத்தொடர் கட்டுரையில்,  முதல் சுவையான நகைச்சுவையினைப் பற்றிச் சென்ற பதிவில் கண்டோம். இரண்டாவதாக உள்ள அழுகைச் சுவையினைப் பற்றிச் சிறிது காணலாம்.

அழுகைச் சுவையினை அவலச் சுவை என்றும் கூறுவர். இவ்வழுகை என்பது எவற்றால் ஏற்படும் என்று தொல்காப்பியர் பட்டியலிட்டு உள்ளார்.

இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே

இளிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கினால் அழுகை ஏற்படும் என்று  தொல்காப்பியர் கூறுகின்றார். முதலில், இந்த ஒவ்வொன்றின் பொருளினை அறிவோம்.

  • இளிவு - இதனை இழிவு என்றும் சொல்லுவர். மற்றவர்கள் தன்னை இழிபடுத்தும் போது ஏற்படும் அழுகை. உதாரணமாக, கால்கள் இல்லாத ஒருவரை நொண்டி நொண்டி என்று யாரேனும் அழைத்தால் அவருக்கு அழுகை ஏற்படும் அல்லவா?
  • இழவு - இழப்புகளால் ஏற்படும் அழுகை. இவ்விழப்பு தன் அன்பிற்கு உரியவர்களின் இறப்போ, தம்முடைய பொருளினை இழப்பதோ எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் தோன்றும் அழுகையே இழவு எனப்படும்.
  • அசைவு - இதனைத் தளர்ச்சி என்றும் கூறுவர். தன்னுடைய பழைய நிலையிலிருந்து தாழ்வதால் வரும் அழுகை. அது செல்வம், ஆரோக்கியம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  உதாரணமாக, கற்கோட்டை போன்று உடம்புடைய ஒருவன் திடீரென நோயுற்று பலவீனமான உடலுடன் மெலிந்து இருப்பான் என்றால் அவன் உள்ளம் வருந்தி அழும் அல்லவா?
  • வறுமை - இல்லாமை. இதுவும் அழுகையைத் தரும்.

இளிவு:

பாம்பன் சுவாமிகள் பாடல்களின் இளிவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்கு ஓரிரு உதாரணங்களைக் காண்போம். 

சுவாமிகள் தாம் இம்மண்ணுலகில் வந்து பிறந்ததே தவக்குறைவினால் ஏற்பட்டது என்று வருந்தியுள்ளார். அப்படி பிறந்ததோடு அல்லாமல் கல் போன்ற கடின மனத்துடன் ஏன் பிறந்தேன் என்று வருந்துகின்றார்.  தன்னை கடையவரில் கடையவன் ( கீழ் மக்களில் கீழானவன்) என்று கடந்தவர்கள் (பெரியோர்கள்) கூறுமாறு உள்ளேனே என்று வருந்திப் பாடுகின்றார்.

கல் நெஞ்சோடு ஏன் பிறந்தேன் கடையவரிற்
     கடையனெனக் கடந்தோர் கூறப்
புன் நெஞ்சோடு ஏன் பிறந்தேன் புண்ணியமொன்று
      இல்லாத பொல்லேனுக்கும்
நல் நெஞ்சோடு அமரும் நிட்டை நல்குவையோ
      அங்கண் எய்தி நளின பாதம் 
என் நெஞ்சோடு இருக்க அருள் செய்வாயோ
    சொல் இகல் வேல் இறையே அன்றே

(நல்குவையோ = கொடுப்பாயோ; அங்கண் எய்தி = அவ்விடத்தை அடைந்து; நளின பாதம் = தாமரை போன்ற திருவடி; இகல் வேல் இறையே = வலிமையான வேலுடைய கடவுளே)

நூல்: நான்காம் மண்டலம் - குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி - 29ஆம் பாடல்

பெரியவர்கள் தன்னைக் கீழானவன் என்று கூறிவிடுவார்களோ என்று சுவாமிகள் முருகனிடம் அழுது முறையிடும் இப்பாடல்  இளிவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்கு உதாரணம் ஆகும். மேலும் ஒரு பாடலினைக் காணலாம்.

குமரகுருதாசன் என்ற பெயர் உடைய என்னை இவ்வுலக மக்கள் "இவன் குணம் இல்லாதவன்; இவன் அறிவில்லாதவன்; குற்றங்களுக்கே இருப்பிடமாக உள்ளான்; தேவ லோகத்தில் வாழ்வதற்குத்  தேவையான புண்ணியச் செயல்கள் ஒன்றும் இல்லாதவன்" என்று இகழ்வதற்காகவோ அடியேன் பிரிவதற்கு அரிதான தாய், மனைவி, சுற்றத்தார் என அனைவரையும் விட்டு, மற்ற எல்லாவற்றையும் விட்டும், துறவு பூண்டு தனியேன் ஆனேன்‌ என்று அழுது பாடுகின்றார்.

குமரகுரு தாசன் இவன் குணமில்லான்
     அறிவில்லான் கோதே உள்ளான்
அமரர் உலகினும் உய்ய அறம் இல்லான்
        என மனுடர் அறைவதற்கோ
தமர் அரிய தாய் மனை மற்றெல்லாம் விட்டு
        இங்ஙனமே தனியன் ஆனேன்
சமர அயில் பிடித்த தலைவா பிழைக்கு
        மாறு அறியேன் சழக்கனேனே!

(கோதே உள்ளான் = குற்றமே உடையான்; அறம் இல்லான் = புண்ணியம் இல்லான்; அறைவதற்கோ = சொல்வதற்கோ; சமர அயில் = போர் செய்யும் வேல்; சழக்கனேன் = குற்றமுடையவன்)

நூல்: நான்காம் மண்டலம் - குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி - 22வது பாடல்

இந்தப் பாடலும் இளிவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

இழவு:

இனி இழவினால் ஏற்படும் அவலச் சுவைக்கான பாடல்கள் ஓரிண்டு இங்குச் சிந்திப்போம்.

சுவாமிகள் தம்முடைய தாயினை இழந்தார்; தந்தையையும் இழந்தார்; தமது குழந்தைகளை இழந்தார்; மனைவியையும் விட்டு துறவு பூண்டார்.  இவ்வுலகில் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு தொழிலினை செய்தே ஆக வேண்டும்; அதனையும் விட்டுவிட்டார்; இவற்றை எல்லாம் இழந்தாலும் உடலில் உற்ற நோயையோ பிறவி என்னும் நோயையோ இழக்கவில்லையே! அகப்பகைகளைக் கடக்கவில்லையே! துன்பினை அழிக்கும் வேற்பெருமானின் அன்பு நம்மை மறந்ததே! இனி நாம் கொள்ளும் நெறிதான் என்னே! என்று வருந்திப் பாடிய பாடல் கண்ணீரை வரவழைக்கும்.

தாய் இழந்தனம் தாதையை இழந்தனம் தாரமும் இவண் இலை
சேய் இழந்தனம் தேசமும் இழந்தனம் திரவிய வினை நீத்தோம்
நோய் இழந்திலம் பகைமை கடந்திலம் நொசிவறு வேற்பெருமான்
நேயம் என்பது மறந்தது நாம் புகு நெறி எது புகல் நெஞ்சே!

(தாதையை இழந்தனம் - தந்தையை இழந்தோம்; இவண் இலை - இவ்விடம் இல்லை; திரவிய வினை - பொருளீட்டுவதற்காகச் செய்யும்தொழில்; நொசிவறு - துன்பத்தை அறுக்குகின்ற; புகல் நெஞ்சே - சொல் நெஞ்சே!)

நூல்: ஆறாவது மண்டலம் - ஸ்ரீமத் குமாரசுவாமியம் - நீதி விழைந்து இரங்கல் - 1வது பாடல்

இப்பாடல், இழவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பாடல் ஆகும்.

மேலும் ஒரு பாடல், சுவாமிகளுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் முனியாண்டியாப் பிள்ளை  ஆவார். இவர் சுவாமிகளுக்குத் தமிழ் பயிற்றுவித்த ஆசிரியர் எனினும் சுவாமிகளிடத்தில் மிகுந்த தோழமையுடன் பழகியதாகவே தெரிகின்றது. ஏன் என்றால் சுவாமிகள் "என் ஆவிக்குச் (உயிருக்குச்) சரியாய் உள்ள நல் முனியாண்டியா பிள்ளை"  என்று கூறுகின்றார். நமக்கு எப்பொழுதும் என்னுயிர் ஆசிரியர் என்று சொல்லும் வழக்கம் அவ்வளவாக இல்லை; ஆனால் என்னுயிர் நண்பன் என்று கூறும் வழக்கம் உண்டு. நண்பர்கள் எப்பொழும் ஒத்த கருத்து உடையவர்களாக இருப்பார்கள். சுவாமிகள் கூறிய சொற்றோடரைப் பார்க்கும் போது, சுவாமிகளும் முனியாண்டியாப் பிள்ளையும் நண்பர்களாகவே இருந்தார்கள் என உணர முடிகின்றது. அப்படிப்பட்ட முனியாண்டியாப் பிள்ளையை தம்முடைய இருபது வயதில் இழந்த சுவாமிகள், அந்தச் சோகத்தினைக் கீழ்வரும் பாடலில் எப்படி வெளிப்படுத்தி உள்ளார் என்பதைக் காண்போம்.

பாவிற்று உண்பவர் போல நில்லாமல் உன்
       பாதமே புகழும் தனியேன் உனை
மேவிக் கொள்ளும் விர்த்தாந்தம்  எலாம் நுவல்
       வேத நூல் பல ஆய விளம்ப என்
ஆவிக்குச் சரியாய் உள நன் முனி
       யாண்டியாப் பிள்ளையைப் பிரிந்து
 கா உற்றுத் திரியும் படி ஆயினேன்
        கர்த்தனே கந்த மாதன மூர்த்தியே

நூல்: முதல் மண்டலம் - அவனியாசை - 3வது பாடல்

இதன் பொருள்: மனிதரைப் பாடிப் பொருள் பெற்று பிழைப்பவரைப் போல் இல்லாமல் உன் திருவடியையே புகழ்ந்து பாடும் அடியேன், உன்னை அடைவதற்கு உரிய செய்திகளை எல்லாம் சொல்லும் வேத நூல்கள் பலவற்றைக் கூற, (ஊக்கமளித்த) என் உயிருக்கு நிகரான நல்ல முனியாண்டியாப் பிள்ளையைப் பிரிந்து இவ்வாறு வருந்தித் திரியும்படி ஆயினேன்! கடவுளே! கந்தமாதனத்தில் எழுந்தருளி உள்ள மூர்த்தியே!

இப்பாடலும் இழவினால் ஏற்படும் அவலச் சுவைக்கான எடுத்துக்காட்டாகும்.

அசைவு:

இனி அசைவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்கான ஒரு பாடலினைக் காணலாம்.

சுவாமிகள் முத்திப் பெறுவதற்குச் சில காலங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஸ்ரீமத் குமாரசுவாமியம் என்னும் நூலில், இடையறாது நிற்க விழைதல் என்னும் பகுதியில்,  முருகப் பெருமான் தன் வாழ்நாளில் உற்ற ஒவ்வொரு ஆபத்திலும் தன்னைக் காப்பாற்றியதையும் பல் வேறு சந்தர்பங்களில் அருள் செய்த பெருங்கருணையையும் எண்ணியெண்ணி மகிழ்ந்து பின் இற்றைப் பொழுது அவ் வேற்பெருமான் வந்து அருளாதது ஏன் என்று வாடி அழுகின்றார். 

என் வாழ்வின் ஆதாரமாய் உள்ளவனே! திருப்புகழ் பாடிய தமிழனின் கடவுளே! ஒளிரும் குகேசனே! அடியேன் பிரப்பன் வலசையில் தவம் இயற்றிய போது ஆறு நாட்கள் முடிந்து ஏழாவது நாள் அன்று, பகை, துன்பம், குற்றம் என எதுவும் அணுக முடியாத வடிவத்துடன் வந்து தகராலய இரகசியத்தை உபதேசித்தாய்! அவ்வுபதேசத்தைப் பெற்று முப்பத்து ஐந்து நாட்கள் தவம் முடித்து எழவும் அருளினாய். ஆனால் இன்று கொடியவனைப் போல் என்னை நீ கழிப்பது ஏன்? என்று பாடியுள்ள பாடல்:

அறுதினத்திலே மனம் அடங்கி மேல்
   அணுகு நாள் இரு முனிவரோடு இகல்
உறுகண் ஏதம் இல் வடிவன் ஆகி வந்து
   உரைத்த உன்பறை பிடித்த என்றனை
இறுதி வைகல் முப்பதுடன் ஐந்திலே
    எழ அயர்ந்த ஒர் களைகண் இங்கு எனைத்
தறுகணாளர் போல் கழிப்பது என் புகழ்த்
     தமிழன் ஈசனே அவிர் குகேசனே

(இகல்=பகை, உறுகண்=துன்பம், ஏதம்=குற்றம், இல்=இல்லாத, உரைத்த உன் பறை=இதுவே தகராலய இரகசியம்; தறுகண்ணாளர் = கொடியவர்; களைகண் = ஆதாரமாய் உள்ளவனே) 

நூல்: இடையறாது நிற்கவிழைதல் முதற்பத்து – 10 (ஶ்ரீமத் குமாரசுவாமியம்)

முருகப் பெருமான் பெருங்கருணை முன்பு பெற்று மகிழ்ந்ததும் அவ்வருள் இன்று கிட்டாமையால் சுவாமிகள் வருந்திப் பாடியதும் அசைவினால் ஏற்படும் அவலச் சுவைக்கு எடுத்துக்காட்டாகும்‌.

வறுமை:

இல்லாமை என்னும் வறுமை மிகவும் கொடியது.  இவ்வுலகில் அனைத்தையும் துறந்த சுவாமிகள் பொருள் செல்வம் இல்லாமையை எண்ணி ஒருபோதும் வருந்தியதே இல்லை. அதனை முற்றிலும் வெறுக்கவும் செய்தார். முருகனின் அருளாகிய செல்வத்தை நிரம்பப் பெற்றார் சுவாமிகள்.  ஆனால் சுவாமிகளுக்கு அது போதவில்லை. அருளில் வறுமை உடையதாக எண்ணி வருந்தி சுவாமிகள் பாடிய ஒரு பாடலினைக் காணலாம்.

வறுமை என் ஓர் பிணியில் பிணங்கி மனம்
        மறுகி வாடுவது அலாது உழல்
     மனது சித்திர விளக்கெனச் சமைய 
           மாத்திரைப் பொழுதும் அறிகிலேன்
சிறுவனைச் சிறிது அணைக்க என்று உனது
        திருவுளத்து இனிது இருந்திடில்
   சித்தம் இப்படி மயங்குமோ புரையில்
         செல்வம் என்னையும் ஒறுக்குமோ

வறுமை (அருள் இல்லாமை) என்னும் ஓர் நோயினால் மாறுபட்டு மனம் சுழன்று வாடுதல் அல்லாமல் உழல்கின்ற மனம் ஓவிய விளக்கு போல அசையாமல் அமைய ஒரு மாத்திரை (கணப் பொழுது) அளவு நேரம் கூட அறிகிலேன். சிறுவனை சிறுது அணைத்து கொள்ள திருவுளம் இனிது இருக்குமானால் அடியேனுடைய மனம் இப்படி மயங்குமோ? குற்றம் இல்லாச் செல்வம் அடியேனையும் தண்டிக்குமோ? என்று பாடியுள்ளார்.

இப்பாடல் வறுமையால் வரும் அழுகைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இதுவரையிலும் சுவாமிகள் பாடலில் அமைந்துள்ள அழுகைச் சுவையினைப் பற்றி சிறிது சிந்தித்தோம். குருவருளால் இளிவரல் என்னும் அடுத்த சுவையினை அடுத்த பதிவில் காணலாம்.

திருச்சிற்றம்பலம்!



Tuesday, 21 September 2021

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள் - பகுதி 1

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

கவிராஜ சிங்கமான நம் பாம்பன் சுவாமிகள் மயூரபந்த சித்திரகவியில், முருகப் பெருமானை நவரச பரத என்று போற்றியுள்ளார். ஆம், பழந்தமிழ் நூல்கள் கூறியுள்ள ஒன்பது சுவைகளான நகை (சிரிப்பு), அழுகை, இளிவரல் (அருவருப்பு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம் (வீரம்), வெகுளி (கோபம்), உவகை, சாந்தம் ஆகியவற்றைக் கொண்ட  நாடக கலையின் தலைவராக முருகப் பெருமான் உள்ளார். இந்தத் தொடர் கட்டுரையில், பாம்பன் சுவாமிகள் பாடல்களில் எப்படி இந்த ஒன்பது சுவைகள் வெளிப்பட்டு உள்ளன என்பதைத் தொடர்ந்து காணலாம். 

காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றம் நீக்கிய ஞானியர் பாடல்களில் பத்தி நெறியையும் , ஆன்ம ஈடேற்றத்திற்கானச் சைவ சித்தாந்த கருத்துகளை நோக்குவதே சால சிறந்தது எனினும் இங்கு இலக்கிய பார்வையோடு ஒன்பான் சுவைகளைப் பற்றிச் சிந்திப்பதும் தவறாகாது. எண்ணலங்காரலகரி என்னும் பதிகத்தில் சுவாமிகள்,

"ஒன்பான் அவர் உத்தி சொல் காதை ரசம்" 

என்று பாடியுள்ளதால் இந்த ஒன்பது சுவைகளைச் சிந்தித்தல் மகிழ்ச்சி தரும் என்பதால் இத்தலைப்பில் சிறிது சிந்திக்க முற்படுவோம்‌.

தொல்காப்பியர் இந்தச் சுவைகளை மெய்பாட்டியலில் பட்டியலிட்டு உள்ளார்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப

மெய்ப்பாடு - உள்ளத்து உணர்வுகளை யாவரும் இனிது அறிய வெளிப்படுத்தும் இயல்பான உடற்குறிகள் ஆகும்.

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப  - எட்டு விதமான அத்தன்மையை உடைய மெய்ப்பாடு எட்டு என்பர்

தொல்காப்பியர் இந்த எட்டு சுவைகளைப் பற்றி  விரிவாக கூறியுள்ளார். பின் வந்த நாடக நூலார்கள் "சாந்தம்" என்னும் ஒரு சுவையையும் சேர்த்து ஒன்பது சுவைகளாக அமைத்துள்ளனர்.

இனி ஒவ்வொரு சுவைகளைப் பற்றியும் விரிவாகச் சிந்திப்போம்.

நகைச்சுவை:

தொல்காப்பியர் நகைச்சுவையைப் பற்றிக் கூறும் போது அது கீழ்கண்ட நான்கு வகையால் ஏற்படும் என்று கூறுகின்றார்.

எள்ளல் இளமை பேதமை மடனென்று
உள்ளப் பட்ட நகை நான்கு என்ப

  • எள்ளல் - பழிப்பு இல்லாமல் பரிகாசம் செய்வது. அதாவது நம் அன்பிற்கு உரியவர்களைக் கேலி, கிண்டல் செய்தல் போன்றவை. 
  • இளமை - பிள்ளைத் தன்மை. அதாவது அறிவு முதிராப் பிள்ளமை. நாம் இன்றும் ஏதேனும் முட்டாள் தனமான செயல்களைக் கண்டு "சிறுபிள்ளைத் தனமாக உள்ளதே" என்று சிரிக்கின்றோம் அல்லவா?
  • பேதமை - அறியாமை
  • மடம் - ஆராயாது எளிதில் நம்பும் தன்மை 

எள்ளல்:

முதலில் எள்ளல் குறித்த நகைச்சுவைக்கான ஓரிரு உதாரணங்களைப் பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் காண்போம்.    

சுவாமிகள் சில இடங்களில் முருகனைத் திருடன் என்று செல்லமாகக் கூறி மகிழ்கின்றார். நம் சிந்தையைக் கவர்ந்த கள்வன் குறக்கொடியான நம் தாய் வள்ளியையும் திருடியவன் என்பதால், கீழ்வருமாறு எள்ளல் செய்கின்றார்.

முருடர் ஊர் இடை ஓர் இரா எழில்
     மூல நாயகம் ஆன மானினை
 திருடு நாயகனே திருப்போருர் அம்மானே

பொருள்: வேடர்களின் ஊரில், ஒரு நாள் இரவு, அழகிற்கே மூலமும் தலைமையும் ஆன மான் போன்ற வள்ளியம்மையைத் திருடிய தலைவனே!  திருப்போரூர் அம்மானே!

நூல்: இரண்டாம் மண்டலம் - திருப்போரூர் பதிகம் - 7வது பாடல்

மேலும், சுவாமிகள் ஓர் பாடலில், உன்னுடைய தந்தையும் மாமனும் திருடர்களாக இருக்க நீயோ பெண்ணைத் திருடிய பெருந் திருடனாக அல்லவோ உள்ளாய் என்று அன்போடு எள்ளி நகையாடுகின்றார். 

கோத்தயிர் வெண்ணை திருடன் கோல மருகா நறிய 
பூத்திருடன் தன் மதலாய் பொங்கு குறக் கோத்திரத்தோர்
பெண் திருடிச் சென்ற பெருந் திருடா என் போதம்
உண்டு திருடத் தெரியாயோ

நூல்: முதல் மண்டலம் - பகலெல்லாம் - 20வது பாடல்

கோத்தயிர் வெண்ணை திருடன் கோல மருகா - பசுவின் வெண்ணையைத் திருடிய கோபாலனாகிய திருமாலின் மருமகன்; 

நறிய பூத்திருடன் தன் மதலாய் - திருவீழிமிழலையில் திருமால் ஆயிரம் பூக்களைக் கொண்டு வழிபடும்போது அதிலிருந்து ஒரு பூ திருடிய சிவனாரின் பிள்ளையே; 

பொங்கு குறக் கோத்திரத்தோர் பெண் திருடிச் சென்ற பெருந் திருடா - கோபம் உடைய வேடர் குலத்தின் பெண்ணான வள்ளி நாயகியாரைத் திருடிச் சென்ற பெரும் திருடா

என் போதம் உண்டு திருடத் தெரியாயோ - என்னுடைய அகங்காரத்தை உண்டு அதனைத் திருட தெரியாதோ?

மேலும் ஒரு பாடலில் முருகனோடு தொடர்புடையவர்களை இழிவாகப் பழிப்பது போல் உயர்வாகப் போற்றியுள்ளார். 

காலில்லா தான் மதலாய் கையில்லா தான் இளையோய்
தோலில்லா மால்குருவே சூர்கீண்ட - வேல் உள்ளோய்
கண் இல்லாள் காதலனே காதில்லா ஈசுர என்
உள்நில்லாது என்கொல் உரை

நூல்: முதல் மண்டலம் - பகலெல்லாம் - 21வது பாடல்

கால் இல்லா தான் மதலாய் - முருகனின் தந்தையான சிவபெருமான்  ஏகபாத மூர்த்தி என்பதால் ஒரு கால் மட்டுமே உண்டு. அதனால் கால் இல்லா தான் மதலாய் என்று இகழ்ச்சியாகவும்; சிவபெருமான் காலத்தைக் (கால்=காலம்) கடந்தவன் என்பதால் காலத்தை கடந்தவரின் குழந்தையே என்று புகழ்ச்சியாகவும் கூறுகின்றார்.

கையில்லா தான் இளையோய் - விநாயகர் யானை உருவம் கொண்டவர் என்பதால் அவருக்கு தும்பிக்கை மட்டும் தான் உண்டு ஆனால் மற்ற கடவுளர்களுக்கு உள்ளது போல் கைகள் இல்லை என்பதால் கையில்லா விநாயகருக்குத் தம்பி என்று இகழ்ச்சி பொருளிலும்; "கை" என்ற சொல்லிற்குச் சிறுமை என்று பொருள். அதனால் சிறுமையில்லா விநாயகருக்குத் தம்பி என்று புகழ்ச்சி பொருளிலும் கூறியுள்ளார்.

தோல் இல்லா மால் குருவே - ஒரு சமயம் சிவபெருமான் திருமாலின் தோலை உரித்து சட்டையாக அணிந்ததால் அவருக்கு தோல் இல்லை. தோல் இல்லாத திருமாலுக்கு குருவே என்று இகழ்ச்சி பொருளிலும்; தோல் என்ற சொல்லிற்குத் தோல்வி என்றும் ஒரு பொருள். அதனால் தோல்வி இல்லாத திருமாலுக்குக் குருவே என்று புகழ்ச்சியாகவும் கூறியுள்ளார்.

கண் இல்லாள் காதலனே - இரக்கமில்லாமல் (கண்ணோட்டம் இல்லாமல்) வேட்டையாடும் வேடுவர் குலத்தில் தோன்றியதால் பெருமையில்லா (கண் = பெருமை) வள்ளியின் காதலனே என்று இகழ்ச்சி பொருளிலும்; கண் என்றால் பற்று என்றும் ஒரு பொருள். "அவனுக்கு அப்பொருளின் மீது ஒரு கண்" என்று சொல்லும் வழக்கு இன்றும் உள்ளது. ஆகவே கண் என்பது பற்று/ஆசை. அதனால், பற்று இல்லா வள்ளியின் காதலனே என்று புகழ்ச்சி பொருளிலும் கூறியுள்ளார்‌.

காதில்லா ஈசுர - ஒரு சமயம் நந்தி தேவர், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடி வந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனதாம். எனவே நந்தி தேவர் காது இல்லாதவர். காது இல்லா நந்தி தேவரின் கடவுளே என்று இகழ்ச்சி பொருளிலும்; காது என்றால் கொலை என்று பொருள் (காதுதல்=கொல்லுதல்). கொலை செய்யாதவர்களின் (அன்புடையவர்களின்) கடவுளே என்பதால் காதில்லா ஈசுர என்று புகழ்ச்சியாகவும் கூறியுள்ளார். 

சூர்கீண்ட வேல் உள்ளோய் என் உள் நில்லாது என்கொல் உரை - சூரனைக் கொன்ற வேலை உடையவனே! நீ என்னுள் மட்டும் நில்லாமல் இருப்பது ஏன்? சொல்லியருள்க!

இப்பாடலினைப் பொருள் உணர்ந்து படித்துப் பார்த்தால் நிச்சயம் முகத்தில் புண்முறுவல் தோன்றும்.

இளமை:

இனி, இளமை என்னும் வகையால் வரும் நகைச்சுவையைப் பற்றிக் காண்போம். இளமை என்பது அறிவு முதிராத சிறுபிள்ளை தனமான (முட்டாள்) செயல்கள். அவற்றினாலும் நமக்கு சிரிப்பு ஏற்படும். 

சுவாமிகள் பாடலில் ஒரு உதாரணம் சொல்லலாம்.

இறை மார்க்கத்தில் உள்ளவர்கள் இறைவனை நினைத்து நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக மனம் அடங்குதல் வேண்டும். அப்படி இல்லாமல் (நூலை மட்டும் படித்துவிட்டு) ஞானவான்கள் போல் பேசுவதைச் சுவாமிகள் கண்டிக்கின்றார். அவ்வாறு அவர்கள் செய்யும் செயல் எப்படி என்றால், அடுப்பில் நெருப்பை ஏற்படுத்தாமல், நெருப்பு என்ற எழுத்தை மட்டும் எழுதியுள்ள ஏட்டினை (காகிதத்தை) அடுப்பில் வைத்து விட்டு ஊதுவது போன்றதாகும் என்று சுவாமிகள் கூறுகின்றார். அறிவு முதிர்ச்சி இல்லாத சிறுபிள்ளை தனமான அவர்களின் செயல் சிரிப்பை உண்டாக்கின்றது அல்லவா?

கருத்து அடங்காதார் ஞானம் கதைப்பது கருத்து இலாதான்
நெருப்பு எனப் பொறித்த ஏட்டை நேர் அடுப்பு இட வைத்து ஊது
தரத்தினைச் சிவணும்

நூல்: திருவலங்கற்றிரட்டு இசைத்தமிழ் - பூரணப்பொருள் - 10ஆம் பாடல்

(கருத்து அடங்காதார் - நினைப்பு அடங்காதவர்; ஞானம் கதைப்பது - ஞானத்தைப் பேசுவது; கருத்து இலாதான் - அறிவில்லாதவன்; சிவணும் - பொருந்தும்)

பேதமை:

இனி பேதமையால் வரும் நகைச்சுவையைக் காணலாம். பேதமை என்பது அறியாமை ஆகும். ஒருவர் அறியாமையால் செய்கின்ற செயல்கள் சில சமயம் நமக்கு சிரிப்பை உண்டாக்கும். 

பத்து பிரபந்தம் நூலில் பகுபடுபஞ்சமம் என்னும் பகுதியின் இரண்டாவது பாடலில் ஓர் அற்புதக் காட்சியைச் சுவாமிகள் விவரிக்கின்றார்.

ஒருநாள் முருகப் பெருமான் மயில் மீது ஏறி அமர்ந்து இருக்கும் போது, அந்த மயில் ஆகாயம் அளவு விரிந்துள்ள தன் தோகையால் முருகப் பெருமானின் திருமேனியை முடியதாம். முருகப் பெருமான் மயிலைப் பார்த்து ஏன் இப்படி மூடுதல் செய்கின்றாய் என்று கேட்டாராம். அதற்கு அந்த மயில் கானகம் வழியே செல்லும் போது வெயிலின் வெப்பம் தங்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக என்றதாம். உடனே முருகன்,  "நான் யார் என்று நினைக்கின்றாய்! மேலானவன் என்று மதிப்பாயாக! (அதாவது வெயில் என்னை என்ன செய்துவிட முடியும் என்றபடி)" என்று கூறி மயில் நன்றாக செல்ல அதனை உதைத்தாராம்.

அண்ட சராரங்களுக்கு அதிபதியான முருகனை வெயில் என்ன செய்து விட முடியும் என்பதை அறியாத மயில் அன்பு மிகுதியினால் முருகனின் திருமேனியைத் தன் தோகையால் மூடியதும் முருகனிடம் இருந்து உதையைப் பெற்றதும் அறியாமையால் ஏற்படும் நகைச்சுவைக்கு எடுத்துகாட்டு ஆகும்.

தேன் ஆர் சுமன் முருகோன் மயில் ஏறச் சிகி திகழ் தன்
வான் ஆர் குரல் கொ(ண்)டு மூடிட ஏன் இவ்வணம் என வேள்
கான் ஆர் வெயில் மருவா வணம் என்னக் கதிர் அயிலோன்
நான் ஆர்? பரன் மதி என்று உதையிட்டான் நனி செலவே

(சுமன் - மலர் சூடியவன்; குரல் - தோகை; பரன் - மேலானவன்)

தேன் ஆர் சுமன் முருகோன் - தேன் நிறைந்த பூக்களைச் சூடிய முருகன்

மயில் ஏறச் - மயில் மீது ஆரோகணம் செய்யும் போது

சிகி திகழ் தன் வான் ஆர் குரல் கொ(ண்)டு மூடிட - அம்மயில் விளக்கம் செய்வதும் ஆகாயம் அளவு உடைய தன்னுடைய தோகையால் இறைவனின் திருமேனியை மூடுதல் செய்ய

ஏன்  இவ்வ(ண்)ணம் என வேள் - ஏன் இப்படி (செய்கின்றாய்) என முருகன் (கேட்க)

கான் ஆர் வெயில் மருவா வணம் என்ன - காட்டு வழி செல்லும் போது  ஏற்படும் வெயிலின் வெப்பம் ஏய்தா வகையாகச் செய்தனன் என்று சொல்ல

கதிர் அயிலோன் நான் ஆர் 'பரன்' மதி - ஒளியுடைய வேலவன், "நான் யார்? 'மேலானவன்' என்று மதிப்பாயாக" என்று கூறி...

நனி செல உதையிட்டான் - நன்றாகச் செல்ல உதையிட்டு அருளினான்.

மடம்:

மடம் என்பது எதனையும் ஆராயாது எளிதில் நம்பி ஏமாறுதலோ பக்குவம் இல்லாது இருத்தலோ ஆகும். இதுவும் அறிவுடையோருக்குச் சிரிப்பினை ஏற்படுத்தும்.

சுவாமிகளின் பாடலில் ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். 

கடவுளைக் கனவில் கூட பார்த்து அறியாத சிலர், வேதாந்த கருத்துக்களை ஆழ்ந்து அறியாமல் படித்த அளவிலேயே "நாம் தாம் அனைவரும் தொழும் பிரமம்" என்று நினைத்து ஆணவமும் கொண்டு அருள் நெறியையும் விட்டுவிட்டு இழிவான நிலையினை அடைகின்றனர். 

அவர்கள் வேதாந்த கருத்துக்களை சைவசித்தாந்த முறையில் ஆராய்ந்து அறியாமல், நாமே பிரமம் என்று நினைத்து தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றும் செயலினைப் பார்த்து அறிஞர்கள் சிரிப்பார்கள்.

கீழ்வரும் பாடலில் அப்படிபட்டவர்களின் மடமையானச் செயலினைச் சுவாமிகள் விவரிக்கும் அழகு சிரிப்பினைத் தரும் ஏனென்றால் கடவுளைக் கனவில் கூட காணாதவர்கள் நானே பிரமம் என்று கூறிக்கொள்ளும் மடமையால்.....

காலம் ஒரு மூன்றினும் பொன்றாத சத்துஆய
        கர்த்தவ்வியம்என்னும் உன்னைக்
   கனவினும் காணாத மைந்தர் மறை முடிவின்
         கருதத்தைப் படித்த அளவிலே
மேலவர்கள் தொழும் பிரமம் நாம் என நினைத்து அகம் 
        விளம்பி அருள் நெறியை விட்டு
  வியன் அற்ற புன் தொழில் விடாத இழி பதிதராய்
          விசுவத்து உழன்று கேடுவார்

நூல்: முதல் மண்டலம் - திருச்செந்தில் - 4வது பாடல்

(காலம் ஒரு மூன்று - இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்கள்; பொன்றாத சத்து - இறவாத மெய்ப்பொருள்; மறைமுடிவு - வேதாந்தம்; அகம் விளம்பி - செருக்கைக் கூறி; வியன் அற்ற புன் தொழில் - பெருமையற்ற அற்பத் தொழில்; இழி பதிதர் - இழிவான அற்பர்கள்; விசுவத்து - உலகத்து)

இதுவரை பாம்பன் சுவாமிகள் பாடல்களில் நகைச்சுவையைப் பற்றி சுருக்கமாகச் சிந்தித்தோம். மற்ற சுவைகளைப் பற்றி இனி வரும் கட்டுரைகளில் குருவருள் துணைக்கொண்டு சிந்திக்கலாம் என்று கூறி இவ்வளவில் முடிக்கின்றேன்....

திருச்சிற்றம்பலம்!


Sunday, 15 August 2021

கலைமாது ஔவையும் கலைஞானி பாம்பனாரும்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

முருகனின் அருளை முழுதாகப் பெற்ற முதுபெரும் கலையரசியும்    அறநூல்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவரான ஔவைப் பிராட்டி தமிழ் கூறும் நல்லுலத்திற்குக் கிடைத்த அரும் பெரும் பெண் புலவர் ஆவார்.  இவரைப் பாம்பன் சுவாமிகள் 'முதிர் கலைமாது' என்றே குறிப்பிட்டு மகிழ்வார்.

பாம்பன் சுவாமிகள் தவம் இயற்றிய போது "கல்வி அறிவில் உம்முடைய திறம் இவருக்கும் உண்டு; இவர் உம்மை பார்க்கவே வந்தார்" என்று அருணகிரிநாத சுவாமிகளும் அகத்திய மாமுனியும் முருகனிடத்தில் பாம்பன் சுவாமிகளின் திறத்தினைக் கூறினார்கள். இத்தகைய சிறப்புடைச் சுவாமிகளை இலங்கையில் உள்ள புலவர்கள் கலைஞானி என்றே கூறி மகிழ்வார்கள்.

கலைமாது ஔவையும் கலைஞானி பாம்பனாரும் என்ற இந்தக் கட்டுரையில் பாம்பன் சுவாமிகள் ஔவைப் பிராட்டியைப் புகழ்ந்த  மொழிகளையும் அவர்தம் தமிழிலும், அறக் கருத்துகளிலும் மனந் தோய்ந்த பாங்கினைச் சிறிதளவு காணலாம்.


சுவாமிகள் ஔவைக்குச் சூட்டிய புகழாரங்கள்:

கல்வியங் கடலைக் கடந்து மேன் மிளிரும் 
கருத்துடை ஔவை மூதாட்டி

[நூல்: திருவலங்கற்றிரட்டு - இசைத்தமிழ் - அடிமை 2வது பாடல்]

என்ற வரிகளால் ஔவைக்கு மணிமகுடம் சூட்டினார் நம் சுவாமிகள். மேலும்,

கம்பன் முதல் நற்கவிஞர்க்கு அரசியென
இருந்த முதிர் கலைமாது ஔவை

[நூல்: திருத்தொடையல் - 2வது பாடல் (நான்காவது மண்டலத்தைச் சார்ந்த சிறுநூற்றிரட்டு]

என்றும் பாராட்டியுள்ளார். மேலும் ஔவையைப் போன்ற ஆன்ற தமிழ் புலவர் அரிதிலும் அரியர். ஆகையால்,

அரிய ஔவை....

[நூல்: திருத்தொடையல் - 26வது பாடல் (நான்காவது மண்டலத்தைச் சார்ந்த சிறுநூற்றிரட்டு]

என்று கூறியுள்ளார்.

ஔவையின் மொழிகள் என்றும் சாகாது நிலைத்து நிற்பவை‌‌. ஆதலால், அவைகளை அமுத மொழிகள் என்றே சுவாமிகள் குறிப்பிட்டு உள்ளார்.

கொன்றை வேந்தனிலும் வரும் அமுத மொழிகளும்.....

[நூல்: திருப்பா உரை - 207ஆம் பக்கம்]

பொன்னில் இரத்தினங்களைப் பொதித்தல்:

பாம்பன் சுவாமிகள் பொன்னைப் போல் பொலிவுறும் அவர்தம் பாடல்களில் இரத்தினங்களைப் பதித்தாற் போல் ஔவையின் சில கருத்துகளைக் கையாண்டு உள்ளார். சிலவற்றை இங்குக் காண்போம்.

ஔவைப்பிராட்டி ஆத்திசூடியில் "பையலோடு இணங்கேல்" என்று கூறியுள்ளார். அறிவு முதிராது கல்லாத இளம் பிள்ளைகளே பையல்கள் ஆவார். அவர்களுடன் இணங்கி பழகுவதால் எந்த நன்மையும் இல்லை. இக்கருத்தை மனத்துள் கொண்ட சுவாமிகள், முருகன் தன்முன்னே தோன்றி அருளாமல் இருப்பது 'பையலோடு இணங்கேல்' என்னும் பழமொழி படியோ? என்று முருகனை நோக்கி வினவுகின்றார். அடியேன் நல்ல மெய் உணர்வு உற்ற பின்னும் என்னைப் பையல் என்று எண்ணலாமோ? என்றும் முருகனை நோக்கிக் கேட்கின்றார்.

பையலோடு இணங்கேல் என்னும் பழமொழிப் படியோ உன்றன்
துய்ய மெய் உளத்தில் உள்கித் தோன்றிடாது இருப்பாய்?
மெய் உணர்வாய மேலும் பையல் என்று உள்கலாம் கொல்
செய்ய தீ வரைப் பேர் எந்தை தெய்வமே கருணை செய்யே!

(துய்ய மெய் உள்ளம் = தூய்மையான உண்மை உள்ளம்; உள்கி=நினைத்து; உள்கலாம் கொல் = நினைக்கலாமோ?; செய்ய தீ வரைப் பேர் எந்தை= செம்மையான நெருப்பு மலையின் பேரையுடைய அருணகிரி எந்தையே)

[நூல்: முதல் மண்டலம் - பொன்னவிர் மேனி - 10வது பாடல்]

மேலும் ஆத்திசுடியில் "அஃகம் சுருக்கேல்" என்றொரு நீதி வலியுறுத்தப்படும். இங்கு அஃகம் என்பது தானியம்/முறைமை அதாவது அளவைக் குறித்தது. தானியத்திற்குக் கொடுக்கின்ற பணத்திற்கு மாறாக குறைந்த அளவில் பொருளைக் கொடுத்து லாபம் காணுதல் கூடாது. அனைத்துப் பொருள்களை விற்பதற்கும் இந்நீதி பொருந்தும். பாம்பன் சுவாமிகள் பாவங்களைப் பட்டியல் இடும் போது,

அனியாய நெஞ்சமுற்று அஃகம் சுருக்கி விற்று
அக ஓகை கொண்ட அகமோ....

(அஃகம் - அளவை; அக ஓகை கொண்ட அகமோ = உள்ளுக்குள்ளே மகிழ்ச்சி கொண்ட மனமோ?)

[நூல்: முதல் மண்டலம் - ஆனந்த முகில் - 9வது பாடல்]

என்று பாடி உள்ளார்.

ஆத்திசூடியில், 'ஙப் போல் வளை' என்று ஔவைப்பிராட்டி கூறியிருப்பார். இதன் பொருள் என்ன என்றால், தமிழில் “ங”, "ங்" என்ற எழுத்துகளைத் தவிர அதன் இனமான மற்ற ஙகர உயிர்மெய் வடிவங்கள் (ஙா, ஙி, ஙீ....) எங்கும் பயன்பாட்டில் இல்லை. எனினும், “ங” என்ற ஓரெழுத்து அதன் இனமான உயிர்மெய் எழுத்துகளைக் காலத்தில் புதைந்துவிடாமல் காத்து வருகிறது. அதுபோல் நம்முடைய சுற்றத்தாரால் நமக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் அவர்களை வளைத்துக் காத்தல் வேண்டும் என்று பாட்டி வலியுறுத்துகின்றார். இக்கருத்தினை விரும்பிய சுவாமிகள், சண்முக கவசத்தில்,

ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க
                                                 -சண்முக கவசம்

இறைவனது ஞானவேல் ஙகரத்தைப் போல் பயனில்லா எங்களைத் தழுவிக் காத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார்.

ஔவையார் யாரையும் உருவத்தை வைத்து மதிப்பிடல் கூடாது என்பதைக் கூறும்போது,

மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டாம்

இதழ்களினால் (மடல்கள்) பெரியது தாழம்பூ (தாழை) ஆனால் மகிழம் பூ (மகிழ்) இதழ்களினால் சிறியது ஆயினும் அதன் வாசனை (கந்தம்) இனிதாகவும் அதிகமாகவும் இருக்கும். அதுபோல் ஒருவரை உருவத்தினாலே சிறியவர் என்று நினைக்க வேண்டாம் என்று ஔவைப் பிராட்டி கூறியுள்ளார்.

இந்த அருமை உதாரணத்தைப் பாம்பன் சுவாமிகள் தாம் இயற்றிய பரிபூரணானந்த போதம்  நூல் பாயிரத்தில் நூலின் சிறப்பை விவரிக்க கூறியுள்ளார்.

- - - - - - - - -சுருக்கமாச் சொற்றதாலே
மலர்மடற் கைதை ஆகா
    வகுளமது ஆகும் இந்நூல்
    
சுருக்கமாக இயற்றப்பட்ட இந்த நூல் மடல்களை (இதழ்கள்) உடைய  மலர்கள் உள்ள தாழாம்பூ (கைதை) ஆகாது. இந்நூல் மகிழம் பூவைப் (வகுளம்) போன்று அளவில் சிறியதாகவும் ஆனால் அதிக மணம் வீசுவதும் (அதிக பலன் அளிப்பதும்) ஆகும் என்று கூறியுள்ளார்.

ஔவைப் பிராட்டி பிறர் மனைவியின் மீது வைக்கும் ஆசை எத்துணைக் கொடியது என்பதை விளக்க நல்வழி 36வது பாடலில், நண்டு, சிப்பி, வேய் (மூங்கில்), கதலி (வாழை) ஆகியவை கருவை ஈனும்  (நண்டு - குஞ்சு; சிப்பி - முத்து; மூங்கில் - அரிசி; வாழை - காய்க்குலை) காலத்தே அழிந்துவிடுவது போல் ஆடவர்கள் பிறர் மனைவி மீது ஆசை வைத்தால் அழிந்து விடுவர் என்று கூறிய கருத்தைச் சுவாமிகள் ஞான வாக்கியத்தில் பெண்ணாசைக்கு கூறியிருப்பார்.

ஞண்டுச் சூல் போல் ஒண்தொடி விழைவு

(சூல் = கரு ஈனுதலைக் குறிக்கும்; ஒண்தொடி = ஒளிப்பொருந்திய வளையலை அணியும் பெண்) 

ஆத்திசூடியும் ஞானவாக்கியமும்:

ஔவைப்பிராட்டி அகர வரிசையில் நீதிநெறிகளை உலகிற்கு அருளிச் செய்தது போலவே நம் சுவாமிகளும் ஞான போதனைகளை உலக மக்களுக்கு அருளிச் செய்த வாக்கியங்களே ஞான வாக்கியம் ஆகும். இங்குச் சில ஒற்றுமையான கருத்துகளைக் காணலாம். 

நாம் எப்பொழுதும் பெருந் தூக்கம் கொள்ளல் கூடாது. அதே நேரத்தில் தூக்கம் இல்லை என்றாலும் நம் உடல் நலம் பாதிக்கும். தூக்கம் சரியான அளவில் இருத்தல் வேண்டும். இதனை ஔவையார் கூறும்போது,

"அனந்தல் ஆடேல்

அனந்தல் - தூக்கம்; ஆடேல் - அதிகமாகச் செய்யாதே

என்று கூறியுள்ளார்.

இக்கருத்தினையே சுவாமிகள் ஞான மார்க்கத்தில்,

அனந்தல் குறைந்தால் மனம் செலும் மேலே

தூக்கம் குறைந்தால் மனம் தாமச குணம் (சோம்பல்) நீங்கி சத்துவ குணத்திற்குச் செல்லும் என்று சுவாமிகள் கூறியுள்ளார்.

பெரியவர்கள் "சீ சீ சை" என்று இகழும்படியாக நாம் (குற்றமுடையவர்களாக) திரிதல் கூடாது என்பதை ஔவையார்

"சையெனத் திரியேல்"

என்று கூறியுள்ளார். இதைப்போன்றே, சுவாமிகளும் "நிலையில்லா உலக வாழ்வை ஞானிகள் "சை" என்று இகழ்வர் என்று கூறியுள்ளார்.

சை என இகழ்வார் மெய்யர் உலகை

(மெய்யர் = ஞானிகள்)

ஔவையார் மேற் சொன்னவாறு "ஙப் போல் வளை" என்ற கருத்தைச் சுவாமிகள் 'ஞான குருவிற்கு' இலக்கணமாகக் கூறுகின்றார்.

ஙகரம் போல்வார் புகரில் குரவர்

அதாவது குற்றமில்லாத ஞான ஆசிரியர் அனைவரையும் 'ங' என்ற எழுத்துப் போல் தழுவிக் கொள்வார்.

மேலே தூக்கத்தைப் பற்றிக் கூறியவாறே உணவைப் பற்றியும் இருவரும் கூறியுள்ளார்கள்.

ஔவையார் கூறும்போது,

மீதூண் விரும்பேல்

(மீதூண் - அதிகமான உணவு)

இதே கருத்தைச் சுவாமிகள் கூறும்போது,

நுகர்வன கண்டு நுகர்க பசித்தால்

(பசித்தால் மட்டும் உண்ணத் தக்க உணவைத் தேர்ந்து உண்ணுக.)

என்று கூறியுள்ள ஒற்றுமைகளைக் கண்டு மகிழலாம்.

ஆன்றோர் வழி:

பெரியோர்கள் நூல் இயற்றும் போது, முன்னோர் வழியிலும் நின்று தங்களுடைய கருத்தினை நிலைநாட்டுவது மரபாகும். நம் சுவாமிகளும் தாம் கூறவந்த கருத்துகளை ஔவையாரின் மேற்கோள்களுடன் விளக்கியுள்ளார்‌.

சுவாமிகள் அருளிய சீவ யாதனா வியாசம் என்னும் நூலில் (178வது பாடலில்) கொல்லாமையை வலியுறுத்தும் போது,

நோன்பு எனல் கொன்று உண்ணாமை என்று ஓது நூனம்இல் ஔவையின் நூல்தான்......

பொருள்: நோன்பென்பது கொன்று உண்ணாமை என்ற ஔவையின் (கொன்றை வேந்தன்) குறைவற்ற நீதி நூல் கூறும் 

என்று கூறியுள்ளார்.

திருப்பா திட்ப உரையில் திவ்விய சுப்பிரமணியம் என்ற பதிகத்தின் 8வது பாடல் உரையில் மௌன நிலையின் சிறப்பினை, கீழ்வருமாறு கூறியுள்ளார்.

"மோனம் என்பது ஞான வரம்பு"

எனக் கொன்றை வேந்தனிலும் வரும் அமுத மொழிகளும் இம்மோன முடிவினை நிலைப்பெறுத்தும் என்"

இந்தப் பதிகத்தின் 10வது பாடலிலே, வீடுபேற்று அருள் இனிது பெறுதல் என்பது ஏதுவான ஒரு பருவத்தின் (காலத்தின்) போது தான் நிகழும் என்பதனை வலியுறுத்த சுவாமிகள் ஔவைப் பாட்டியின் கீழ்வரும் மூதுரை பாட்டின் வழி விளக்குகின்றார்.

அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா...

மேலும் திருப்பா பரிபூரணானந்தம் பதிகத்தின் 3வது பாடலின் உரைப்பகுதியில்,

"ஈசுவர வழிபாடில்லாதான் சன்மத்திலே தீயை வை" என்று வேதம் கட்டளையிட்டதன் நியாயத்தைக் கூறப்போந்த சுவாமிகள், அதனை ஔவையின் "கிட்டாதாயின் வெட்டென மற" என்ற கருத்தையும்; மூதுரையில் "தீயாரைக் காண்பதுவும் தீதே" என்ற பாடலின் மூலமும் விளக்குதலைக் கீழே காணலாம். சுவாமிகளின் வரிகள்:

அவன் சன்மத்திலே தீயை வை எனத் திருவருட் சுருதி தெரித்தது என்க. ஈண்டு அவனைத் திருத்துக எனாது (எனாது = சொல்லாது) நேசிக்க வேண்டா என்னும் கட்டளை பிறப்பித்தல் என்? எனின், -- அறியாது கடாயினாய்! (கடாயினாய்=கேட்டாய்)

நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்

என்னும் கருணையம் பறை பிடித்து (கருணையான அழகிய உரையைக் கொண்டு) அவ்வாறு புரிய முயன்றும் கூடாது ஆயின், (நடக்கவில்லை என்றால்) "கிட்டாதாயின் வெட்டென மற" என்றபடி அவனை விட்டு நீங்குதலே நலனுடைத்து என்றல் அதற்கு விடையாம் என்க.

ஆகலின் அன்றே மூதுரையில் --

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே யவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீதே

என்று சுவாமிகள் எவ்வளவு அருமையாக வேதத்தின் கருத்தினை ஔவையின் நீதிமொழிகளின்படி விளக்கி புரியவைத்துள்ளார் என்பதை படிக்கும் போது நம் ஐயம் நீங்கி ஆனந்தம் பிறக்கும்.

சைவ சமய சரபத்தில் திருநீற்றின் பெருமையை விளக்க "நீறில்லா நெற்றி பாழ்" என்று ஔவையின் மொழிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

அழியாப் பெரும் புலவர்கள்:

ஞானக்கடலாக விளங்க கூடிய பாம்பன் சுவாமிகளின் படைப்புகளும், கல்வி கடலாக விளங்கும் ஔவைப் பிராட்டியின் படைப்புகளும் என்றும் அழியாது இம்மண்ணுலகில் நிலைப்பெற்று விளங்கும் என்று கூறியதை அவர்களின் நூல்களிலேயே காணலாம்.

ஔவையார் தனிப்பாடல் திரட்டின் 32வது பாடலில்

என்றும் கிழியாது என்பாட்டு;

என்று கூறியுள்ளார். இங்குக் கிழியாது என்பது அழியாது என்று பொருள் கொள்ள வேண்டும்.

பாம்பன் சுவாமிகளும் தன்னுடைய பாடல்களும் என்றும் அழியாது என்று கூறியுள்ளார்.

என்றுமே கிழியாது என்பாட்டு என்பதைப் புலமையோடு
நின்றுஉளீர் உணர்மின்
                                   -ஒட்பமுணர்த்தல் – 7 (ஶ்ரீமத் குமாரசுவாமியம்)  
                                   
இவ்விரு பெரும் புலவர்களின் நூல்களைக் கற்று நிற்பவர்களும் அழியாப் புகழ் பெறுவர் என்று கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன். ஏதேனும் குறைகள் இருப்பின் மன்னித்து ஆற்றுப்படுத்த வேண்டுகின்றேன். இறுதியாக, இவ்விரு பெரும் புலவர்களின் தமிழை வாழ்த்தும் அடியேனின் வாழ்த்து பாடலுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

நேரிசை வெண்பா

கலைமாது ஔவை கலைஞானி பாம்பன்
அலைக்கடலூர்  போற்றும் அடிகள்  - நிலைத்த
இவர்களது இன்தமிழ் இன்பமே வாழீ
புவனமதில் என்றும் பொலிந்து

திருச்சிற்றம்பலம்!

Thursday, 15 July 2021

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக நாமாவளி - உரை

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக நாமாவளி என்ற தோத்திரப் பாடல், சுவாமிகளின் 32வது வியாசமாகிய குரு சிஷ்ய சம்பவ வரலாற்று வியாசத்தின் நிறைவுப் பகுதியில், குருநாதரின் உரையை செவிமடுத்த சீடன், ஆங்கு ஆனந்த பரவசத்தில் அழுந்தினவனாய்த் தனது  தருக்கம் ஒழிந்து சண்முகப் பிரமத்தைத் தானே விதந்து தோத்தரிப்பதாய் அமைந்து உள்ளது.


நாமாவளி = நாம+அவளி. நாமம்=திருப்பெயர்கள்; அவளி=வரிசை; ஆறுமுகக் கடவுளின் திருப்பெயர்களை வரிசையாகச் சொல்லும் தோத்திரப் பாடலாகும்.

சண்முக நாமாவளி என்ற இத்தோத்திரப் பாடல், பாம்பன் சுவாமிகள் அருளிய 6666-னில் சேராது. ஏனெனில் இப்பாடல் உரைநடை நூலான வியாசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதுபோன்று  சில அருமையான காப்பு, வாழ்த்துப் பாடல்கள் வியாசங்களில் காணப்படுகின்றன. 

தோத்திரம்

ஹரஹர சிவசிவ சண்முக நாதா
ஹரஹர சிவசிவ வென்முக நாதா

ஹரஹர சிவசிவ பரம விலாசா
ஹரஹர சிவசிவ வபய குகேசா

அருண கிரிபரவு மருணெறி நாதா
தரும வுறுவர்புகழ் சததள பாதா

அரிபிர மாதிக டொழுவடி வேலா
திருவடி நாரவ ருளமுறை சீலா

எனினிய குருநித மெணுமதி யீசா
சனனவெய் தறவளி தருபர மேசா

பாசா பாச பாப விநாசா
மாசே றாத மான நடேசா

போஜா வாஜா பூஜகர் நேசா
தேஜா ராஜா தேவஸ மாஜா

தீஞ்சுவை யருளொரு திருவா ரமுதே
ஓம் சரவணபவ வுருவே யருவே

பொருள்:

ஹர ஹர சிவசிவ சண்முக நாதா  - ஹர ஹர = அரனே! அரனே! அரன் என்றால் அழிப்பவன் அதாவது தீமைகளை அழிப்பவன் என்று பொருள். சிவ சிவ = சிவனே! சிவனே! சிவன் என்றால் நன்மையைச் (மங்கலத்தைச்) செய்பவர் என்று பொருள். அந்த நன்மை, வீடுபேறாகிய முத்தி ஆகும். சண்முக நாதா = ஆறுமுகத் தலைவனே!

ஹரஹர சிவசிவ வென்முக நாதா - என் முக நாதா = என்னுடைய முதன்மையானத் தலைவனே என்று பொருள் கொள்ளலாம். முகம் என்பது பல பொருள்களைத் தரும். அவற்றுள் இடம், காரணம், நோக்கம், தியானம் என்ற பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டால்;

இடம் - என் இடத்தில் வீற்றிருக்கும் தலைவனே;

காரணம் - என்னுடைய காரணப் பொருளாய் உள்ள தலைவனே;

நோக்கம் - அடியேனின் நோக்கமாய் உள்ள தலைவனே;

தியானம் - என்னுடைய தியானப் பொருளாகிய தலைவனே;

என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். பாம்பன் சுவாமிகள் சேந்தன் செந்தமிழில் முகத்திற்கு - முன், முதன்மை, தொடக்கம் என்று பொருள் கூறி உள்ளதால் என்னுடைய முதன்மையானத் தலைவனே என்பதையே முக்கிய பொருளாகக் கொள்ளலாம்.

ஹரஹர சிவசிவ பரம விலாசா  - பரம = பரம் பொருளே! விலாசா - அலகிலா திருவிளையாடல்களைச் செய்பவனே! விலாசம் என்பதற்கு அழகு என்றும் பொருள். பரம விலாசா என்பதைத் தொடர் சொல்லாகக் கொண்டால் மேலான (பரம்=மேல்) திருவிளையாடல்களைச் செய்பவனே என்றும்; மேலான அழகனே என்றும் பொருள்.

ஹரஹர சிவசிவ வபய குகேசா - அபய =  தஞ்சம் என்று அடைந்த உயிர்களுக்கு அடைக்கலம் அளிப்பவரே! குகேசா = ஆன்மாக்களின் இருதயக் குகையில் வீற்றிருக்கும் ஈசனே!

அருணகிரி பரவு அருள் நெறி நாதா  - அருணகிரி நாத ஆனந்த பராபரர் துதிக்கும் அருள் நெறியின் தலைவனே!

தரும வுறுவர்புகழ் சததள பாதா  - அறத்தின் வடிவான நல்லோர்கள் புகழ்கின்ற,  (சததள=)ஆயிரம் இதழ் தாமரையை ஒத்த திருவடியை உடையவனே!

அரி பிரமாதிகள் தொழு வடி வேலா - திருமால் பிரமர் முதலான (பிரம ஆதிகள்=பிரம்மன் முதலானவர்கள்) அனைவரும் தொழுது வணங்கும் அழகிய வேலை உடையவனே;

திருவடி நாரவர் உளம் உறை சீலா  - அத்தகைய (ஆயிரம் இதழ் தாமரையை ஒத்த திருவடி) திருவடிகளில் மீது அன்பு (நார் = அன்பு; =நாரவர்=அன்புடையோர்) கொண்டவர்களின் உள்ளத்தையே இருப்பிடமாகக் கொண்ட நல்லொழுக்கம் (சீலம்=நல்லொழுக்கம்) உடையவனே!

என் இனிய குரு நிதம் எ(ண்)ணு மதி ஈசா - என்னுடைய இனிமையான குருவாகிய விவேக பூரணர் (நமக்கு பாம்பன் சுவாமிகள்) தினமும் நினைவில் வைத்து எண்ணி வணங்குகின்ற ஈசனே!

சனன வெய்து அற அளி தரு பரமேசா - பிறப்பு என்னும் வெம்மையை  (வெய்து=வெம்மை) அறப்பதற்கு (நீக்குவதற்கு) அன்பு (என்னும் குளிர்ச்சியை) தரும்  பரம ஈசனே!

பாசா பாச பாப விநாசா - பாசாபாச =பாச + அபாச என்று பிரித்து பொருள் காணலாம். பாசமாகிய பற்றுகளில் இருந்து பற்றற்று (அபாச= விருப்பமின்மை) இருப்பவன்; பாப விநாசா = (உயிர்களின்) பாவத்தை அழிப்பவனே! 

மாசு ஏறாத மான(ச) நடேசா -  குற்றமற்றவர்கள் சிந்தனையில் (மானசம்= எண்ணம்; மானச என்பது இங்கு கடைசி எழுத்தாகிய 'ச' இல்லாமல் மான என்று வந்துள்ளது. இதற்கு கடைக்குறை என்று இலக்கணம் கூறுவர்) நடனம் செய்கின்ற ஈசனே!

போஜா வாஜா பூஜகர் நேசா - போஜன் என்றால் இயற்கை நலன்களை உடையவன் என்று பொருள்; வாஜா என்பதற்கு அழுக்கற்றவன் அதாவது குற்றமற்றவன் என்று பொருள்.  இயற்கை நலம் உள்ளவனே! அழுக்கு அற்றவனே! தன்னை பூசிப்பவர்களிடம் அன்பாய் இருப்பவனே!

(பூசகர் = பூசிப்பவர்; நேசம் = அன்பு)

தேஜா ராஜா தேவ ஸமாஜா -  தேஜா = ஒளிவடிவானவனே; ராஜா = அனைத்தையும் ஆள்பவனே; தேவ சமாஜா = தேவர்களின் (சமாசம் = கூட்டம்) கூட்டத்தைச் சேர்ந்தவனே; தேவ சேனாதிபதி என்ற நாமத்தைக் கருதுக.

தீஞ்சுவை அருள் ஒரு திருவார் அமுதே -  (தீஞ்சுவை = இனிய சுவை; திருவார்= தெய்வத்தன்மை நிறைந்த;) இனிய சுவையாகிய பேரின்ப சுவையைத் தந்து அருளும் தெய்வத் தன்மை நிறைந்த அமுதமே! இது முத்தி தருவதைக் குறித்தது.

ஓஞ் சரவணபவ உருவே அருவே - ஓம் சரவணபவ என்ற மகா மந்திரத்திற்கு உரியவனே! உருவ நிலையில் வழிபடும் அடியார்களுக்குத் தடத்த நிலையில் (உருவத்துடனே) அருள் புரிந்து பின் சொருப நிலையிலும் (அருவமாகவும்) அருள்புரிபவனே!!

திருச்சிற்றம்பலம்!

குறிப்பு: அடியேனின் சிற்றறிவில் எழுந்த இவ்வுரையில் ஏதேனும் குற்றங்கள் இருப்பின் சுவாமிகளும் அவர்தம் அடியார்களும் பொறுத்து அருளி ஆற்றுபடுத்த வேண்டுகின்றேன்.

Wednesday, 30 June 2021

கற்புடைக் காதலும் பொற்புடைக் காதலும் - பகுதி 5

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

முருகவேளை முழுவதும் கருதும் யோகம் கமழும் பாம்பன் சுவாமிகள், எய்தரிய வீடு அளிக்கும் முருகப் பெருமானிடம் தாயைப் போலவும், தந்தையைப் போலவும், நண்பனைப் போலவும் காதலித்தத் திறத்தினைச் சென்ற பதிவில் கண்டோம். இனி சுவாமிகள் ஒரு பாதுகாவலனாகவும், மருத்துவராகவும், சேவகனாகவும் தொண்டாற்றிய அன்பு நெறியினைக் காணலாம்.

சைவ நெறி என்பது சிவத்துடன் சம்பந்தம் ஆவதை உணர்த்துவது. இறைவன் பன்னெடுங் காலமாக இந்த மானிட இனத்தைப் பக்குவப்படுத்தி சமைத்து அனைவருக்கும் ஏற்ற வகையில் பொதுவாக கொள்கைகளைக் கட்டமைக்கச் செய்து உருவானதே சைவ சமயம்.  இந்தச் சைவ நெறியின் மீது அவதூறுகளும், சைவ கடவுளர்களை இழிவுபடுத்தியும் சில வைணவர்கள் அடாச் செய்கைகளில் இறங்கினர். நம் சுவாமிகள் எவ்வாறு அறத்தின் வழியில் நின்று போராடிக் காத்தார் என்பதனை இங்கு சுருக்கமாகக் காணலாம்.  1904-ஆம் ஆண்டு, சுவாமிகள் சிதம்பரத்திற்கு அருகாமையில் இருந்த பின்னத்தூர் (இவ்வூர் மாணிக்கவாசக சுவாமிகள் ஊமைப் பெண்ணை பேச வைத்த தலம்) என்னும் ஊரில் வசித்த போது, அங்குள்ள சில வைணவர்கள், சிவபெருமானையும் சிவனடியார்களையும் சிவசின்னங்களையும், சிவாலயத்தையும் இழித்துக் கூறி அவர்தம் சமயமான வைணவமே சிறந்தது எனப் போதித்து  அவர்களை வைணமதத்து உள்படுத்தி வந்தார்கள். இச் செய்தியை திரு. பி.வ. இரத்தினசாமிப் பிள்ளை என்பவர் சுவாமிகளிடம் தெரிவித்தார். மேலும் அவ்வைணவர்கள் இவ்வித தூஷணங்களுக்கு ஆதரவாக ஆழ்வார்கள் அருளிய நாலாயிரபிரபந்த நூலினையே கைக்கொண்டு உள்ளனர் என்று தெரிவித்தார். ஆகையால் அந்த நாலாயிர பிரபந்தத்தே சிவபரமாக அமைந்துள்ள தருமங்களையும், அவை பற்றி எழும் ஐயங்களைத் தீர்த்தும், சைவ ஸ்தாபனங்களையும் போதிக்கும் வழியே ஒரு நூல் வசனவடிவில் சுருங்க அமைத்து தந்தால் என்போன்ற சைவர்களுக்கு பெரும்பயனாய் இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ் வேண்டுகோள் அங்கீகரித்த சுவாமிகளும் நாலாயிர பிரபந்த விசாரம் என்னும் நூலினை இயற்றி அருளினார். இந்நூல் 1905-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

அவ்வூரில் உள்ள ஒரு சைவர், சிவபரத்துவ பிரபல சாஸ்த்ர பிரகடனம் என்ற ஒரு பத்திரிக்கையை வெளியிட்டதற்கு மறுப்பு கூறுமாப்போல் பெரும் அவதூறுகளும், கீழ்த்தரமான சொற்களும் உள்ளிட்டு அச்சகத்தின் பெயர் குறிப்பிடாமல் 01.09.1906-ல் வெளியிடப்பட்டது "வாயீர்வாள்" சிறுபுத்தகம். "பத்திரிக்கை முதலியவைகளை இனி பிரசுரித்தால் அவைகளுக்கு மாத்ரம் யாமும் எம்மவரும் கணிசமான மறுப்பிட்டு வாய் மாளப் பண்ணுவோம்" என இறுதியில் சுவாமிகளின் பெயரையும் குறிப்பிட்டு உள்ளதால் ஶ்ரீமத் சுவாமிகள் சைவசமயசரபம் எனும் நூலை வெளியிட்டார். இவைகள் சம்பந்தமாக ஒரு பத்திரிக்கை எவரும் அருவருக்கத் தக்க நிலையில் கீழ்த்தரமான உரைகளைப் பிரசுரித்ததாலும், சிதம்பரம், பின்னத்தூரில் சைவதூஷண சொற்பொழிவுகளும் துண்டுபிரசுரங்கள் வழங்கியதனாலும் ஶ்ரீமத் சுவாமிகள் வழக்குத் தொடர, வைணவர்கள் எதிர் வழக்குத் தொடர, அனைத்து வழக்குகளும் இறுதியில் சுவாமிகளுக்கு சாதகமாகவே முடிந்தன.

ஏழுவருட காலம், வைணவர்களுடைய கொலை மிரட்டலுக்கும், அவர்களால் செய்யப்பட்ட ஏவல் பில்லி சூன்ய ஆபிசார பிரயோகங்களுக்கும் அஞ்சாது இறைவன் திருவருளிலே அயராத நம்பிக்கை வைத்து சைவ நெறியை நிலை நாட்டியதை அவ்வமயம் சைவ சமயத்தார் கூட அறிந்து உணர்ந்தது இல்லை. இவ்வாறு சுவாமிகள் குன்றம் எறிந்த குமரவேலன் நெறியாம் சைவ நெறிக்கு ஒரு பாதுகாவலராக இருந்து அயரா தொண்டாற்றினார்.

இனி, சுவாமிகள் மருத்துவரைப் போல் தொண்டாற்றிய நலனைக் காணலாம். மருத்துவரின் பணி என்பது உற்ற பிணியைத் தீர்த்தல். ஆம், நம் சமுதாயத்திலும் மூடநம்பிக்கைகளும், சாதி பேதங்களும், பொய்யான ஆன்மீக நெறியும் புரையோடி இருந்தன. இந்தச் சமுகப் பிணிகளை எல்லாம் சுவாமிகள் தன்னுடைய  பாடல்களிலும் உரைகளிலும் களைந்தார். மக்களுக்குத் தெளிவு தரும் கருத்துகளைத் தம்முடைய நூல்களில் எவ்வளவு தந்துள்ளார் என்பது அவரது நூல்களைக் கற்பவருக்குத் வெளிச்சமாகத் தென்படும். அவற்றை விரிக்கின் தனிக் கட்டுரையாக பெருகும் என்பதால் இவ்வளவில் முடித்து இறுதியாகச் சுவாமிகள் சேவகனைப் போல் தொண்டாற்றிய அன்பினைக் காணலாம். 

சுவாமிகள் முருகனிடத்தில் அடிமைத்திறம் பூண்டார்கள். தன்னை குமரகுருவிற்கு தாசன் என்று பரைசாற்றினார்கள். பாடும் பணியே பெரும் பணியாகக் கொண்டார்கள். அப்பாடல்கள் அனைத்தும் முருகப் பெருமானால் அங்கீகரிக்கப்பட்டன. அப்பாடல்கள் என்றுமே அழியாது என்று சுவாமிகளும் கூறியுள்ளார்கள்.

என்றுமே கிழியாது என்பாட்டு என்பதைப் புலமையோடு
நின்றுஉளீர் உணர்மின்

                                   -ஒட்பமுணர்த்தல் – 7 (ஶ்ரீமத் குமாரசுவாமியம்)  

(கிழியாது = அழியாது)

சுவாமிகளின் சந்தத் தமிழ்ப்பா கேட்க விரும்பிய முருகன், சுவாமிகளின் கனவில் தோன்றி இந்தச் சந்தத்தில் பாடுக என்று சந்தம் கூறி மறைந்தான். சுவாமிகள் பத்துவகைப் பேதம் உற சந்தத்தில் கந்தசாமி என்னும் பதிகம் பாடினார் என்பதும்; சுவாமிகள் "கோத்தயிர் வெண்ணெய் திருடன்" என்ற பாடலைப் பாடியதும் முருகனின் கையால் அன்போடு அடியுண்டதும், திருமுருகன் திருவடி நிலந்தோய இம்மண்ணில் வந்திருந்து பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணப்பாடல் கேட்டதும், இவ்வண்ணப்பாடல் எனக்கு விருப்பமாய் உள்ளது என்று கூறி மறைந்த அருள் வரலாற்று நிகழ்ச்சிகளின் மூலம் சுவாமிகளின் பணி எத்தகையச் சிறப்புடையது என்பதை அறியலாம்.

இதுவரையிலும், பாம்பன் சுவாமிகள் ஏக தெய்வ வழிபாட்டில் நின்று தன்னுடைய காதலைச் செவ்வேள் ஒருவனிடம் மட்டுமே கொண்டு வெளிப்படுத்திய கற்புடைக் காதலும், அக்காதலுக்கு பரிசாகப் பெருமானிடம் இருந்து சுடர்விட்டு பொலிவு தரும் பொற்புடைக் காதலைப் பெற்றார் என்பதைத் தொடர் கட்டுரையாகச் சிந்தித்தோம். இவ்வளவில் இந்தத் தொடர் கட்டுரையை முடிகின்றோம்.

இந்தத் தொடர் கட்டுரைக்குக் கருத்தாக்கம் தந்து உதவிய பாம்பன் அடியார் திரு. குருமூர்த்தி அவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம்  அளித்த அயிலரசு 6666  என்ற புலனக் குழுவினருக்கும் (WhatsApp Group Members) நன்றி!

திருச்சிற்றம்பலம்!

Wednesday, 12 May 2021

கற்புடைக் காதலும் பொற்புடைக் காதலும் - பகுதி 4

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடதாகக் கொண்ட செவ்வேள் பரமன், சித்து விளையாடா துறவினில் நின்று என்றும் செந்தில் வேலனின் சித்திர பாதமே சிந்தையாகக் கொண்ட நம் பாம்பன் சுவாமிகளுக்கு அருள் பாலித்த தண்ணளி கருணையைச் சென்ற பதிவுகளில் சிந்தை செய்தோம். இனி இப்பதிவில், பாம்பன் சுவாமிகள் தாயாகவும் தந்தையாகவும் நண்பராகவும் முருகனிடம் எப்படி அன்பு காட்டினார் என்று சற்று சிந்திப்போம்.

குழந்தையை ஈன்ற தாய், அக்குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், பரிசத்தையும், சிரிப்பையும், அழகைக் கண்டும், உச்சி மோந்தும் மகிழ்வது உலகில் இயற்கையே. நம் சுவாமிகளும் முருகனைக் குழந்தையாகப் பாவித்து ஈன்றாளைப் போல் அன்பில் உருகி நின்றார். இதற்கு சாட்சி, சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை என்னும் பதிகமே!

காதலால் தழுவ நிதியே வாராயோ கைகள் நீளுகின்றனவே!

தூவேறு இன்கரைகள் இங்குச் சொல்ல வாராயோ

கோவே என் செவிகள் இச்சை கொள்ளுகின்றனவே

(தூ ஏறு இன்கரைகள் = தூய்மை மிகுந்த இன்சொற்கள்)

உச்சி செவ்வன் மோந்து கொள்ள வித்தே என் மூக்கின் இச்சை மீறுகின்றனவே!

கண்மலர்கள் இன்பு மல்க மோந்து கொள்ள மெய்யா என் மூக்கின் இச்சை மீறுகின்றது அரோ!

இது போன்ற வரிகள், சுவாமிகள் சேய் கடவுளிடம் கொண்ட தீராக் காதலினை நன்கு புலப்படுத்தும். மேலும், இப்பதிகத்தில் சுவாமிகள் முருகனின் புன்முறுவலைக் காட்டுகின்றார். அந்தப் புன்முறுவலை முருகப்பெருமான் அன்பினால் பூக்கின்றான். அன்பினால் பூத்த அந்தப் புன்முறுவல் என்றும் அழியாதது (இரியா). புன்முறுவல் செய்கின்ற பெருமானின் பல்லழகு வில்லினைப் போன்று உள்ளதாகவும். அதிலிருந்து வரும் அம்புகள் என் துன்பினை அழிக்கின்ற  அம்புகள் என்றும் கூறி மகிழ்கின்றார்.

இரியா அன்பார் புன்முறுவல் செய்யும் ஆர்வில் பல்லழகு என் துன்பு ஈர் அம்பு எனவே நெஞ்சம் துள்ளுகின்றது அரோ

இப்பதிகத்தின் முடிவில், கிடைத்ததற்கு அரிய இப்பிறவி வீண்போகாதபடி முருகனை வந்தருள வேண்டுகின்றார்

வீண்போகாதபடி இங்ஙன் வாராய் வேற்குழவீ

இவ்வாறு சுவாமிகள் முருகனைக் குழந்தையாகப் பாவித்து தாய் போல் அன்பு நெறியில் நின்றதால் அன்றோ, சுவாமிகள் கால் முறிவுண்டு மருத்துவமனையில் இருந்த போது செவ்வேள் பரமன் நீங்கிலேன் என்னும்படி சிறு குழந்தையாக நெடும் பொழுது உடனிருந்து உற்ற துன்பினை நீக்கினான்.

இனி தந்தையாக அன்பு செய்த பாங்கினைக் காணலாம். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்ற தெய்வ புலவரின் வரிக்கு ஏற்றாற் போல் சுவாமிகள் தம் நூல்களின்  மூலம் முருகனை முன்னிலைப்படுத்தியும் அவனது பெருமையையும், பரத்துவத்தையும் கற்றறிந்த அறிஞர்களும் கற்பவர்களும் உணரும்படிச் செய்தார் . 

மேலும் தந்தை என்பவர் தன் பிள்ளையைப் பாதுகாப்பாகப் பேணிக் காப்பவர். தன் பிள்ளைக்கு எந்த ஒரு கேடு நேர்தலையும் அனுமதியாதவர். இங்கு ஓர் உதாரணத்தைக் காட்ட விழைகின்றேன். பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமான் ஏன் மறைப் பொருளாகவே உள்ளார்? அவர் அனைவரின் முன்னும் தோன்றி அனைவரும் காணுமாறு தரிசனமாகக் கூடாதா? என்று சிந்திக்கின்றார். பின் சுவாமிகள் உண்மையை உணர்ந்து அதை நமக்கும் உணர்த்துகின்றார்.

அந்தணனும் உனை ஒருகால் அவமதித்தான்
    விபரீத அறிவால் இப்பூ
வந்து உருவு உற்று இருப்பாயேல் இங்கு உளர் நீ
      பேய் ஏவல் மாயவித்தைத்
 தந்திரியோ எனவினவிப் பல சரசம்
        செய்து தலைதனிலும் குட்டச்
 சந்தேகம் இலை இதனைக் கருத்து அடைத்தோ
      மறைவு இருக்கும் சாமி ஆனாய்

                                             முதல் மண்டலம் - மறைமுடிவு - பாடல் எண் 2

பாடலின் பொருள்: பிரம தேவனும் உன்னை ஒரு சமயம்  விபரீத அறிவால் அவமதித்தான். இப்பூமியில் நீ வந்து உருவம் தாங்கி இருப்பாயானால், இங்கு உள்ளவர் உன்னை பேயோ, ஏவல், மாயவித்தை முதலியன காட்டுகின்ற தந்திரக்காரனோ எனக் கேட்டு பலவிதச் சேட்டைகள் செய்து,  உன் தலையிலும் குட்டுவதற்கு சந்தேகம் இல்லை. இதனைத் திருவுளத்தில் கருதியே மறைவு கொண்டு இருக்கும் சுவாமி ஆனாய் போலும்.

தன் பிள்ளையான முருகனை இவ்வுலகினர் அவமதித்து தலையில் குட்டி விடுவார்களோ என்று நினைத்து சுவாமிகள் அஞ்சுகின்றார். முருகன் மறைவு கொண்டு இருத்தலே நலம் என்று எண்ணுகின்றார். இப்படி தன் பிள்ளை எவ்வித துயரும் அடையக் கூடாது என்று சுவாமிகள் தந்தை உள்ளத்துடன்  வாழ்ந்தார். ஆம் இவ்வுலகினர் தம் பிள்ளையை எக்காரணம் கொண்டும் இழிவு படுத்தி விடக்கூடாது என்பதில்  மிகுந்த கவனத்துடன் இருந்தார். சுவாமிகள் கால் முறிவுண்டு மருத்துவமனையில் இருந்த போதும் தன்  துன்பினை எண்ணி கலங்காது, இவ்வுலகம் முருகனைக் குறைக் கூறி விடுமோ என்றே கருதி கலங்கினார்.

என்றன் நப்பதம் ஊறு கொண்டதை எண்ணி எண்ணி வசுந்தரை
என்றன் அப்பன் அயில் பிரானை இழித்து உரைத்திடுமோ இதற்கு
என் தடுப்பு அயர்வேன்

                                         அசோக சால வாசம் - ஆறாம் பத்து -  4வது பாடல்

(நப்பதம் = நல்ல கால்கள்; ஊறு கொண்டதை= முரிவு கொண்டதை; வசுந்தரை = உலகத்தினர்; அயில்பிரான் = வேல் பிரான்; அயர்வேன் = செய்வேன்)

இப்பாடலில் சுவாமிகள் முருகனை என்றன்‌ அப்பன் என்று‌கூறியது எப்படி என்றால், பொதுவாகத் தந்தைமார் தாம் பெற்ற பெண் பிள்ளையை அம்மா ‌என்றும்; ஆண் பிள்ளையை அப்பா என்றும் அழைப்பது போன்ற அன்பின் வெளிப்பாடாகும்.

இந்த உதாரணங்களைக் கொண்டு சுவாமிகளின் தந்தை உள்ளத்தினை நன்கு அறியலாம்.

இப்பொழுது சுவாமிகள் நண்பனைப் போல் முருகனோடு பழகிய நலனைக் காணலாம். சுவாமிகள் முருகனை நட்புக்கு உகந்த நாயகம் என்று கூறியுள்ளார். நட்புக்கு உகந்த நாயகம் என்ற தலைப்பில் பதிகமும் அருளி உள்ளார்.

எழிலார் சுரும்பு என்னும் பதிகத்தில்,

பிரியாத நட்பில் அடியேனை வைத்த பெரியோய் அணைத்தும் அருளே

என்றும்; சரண விண்ணப்பம் என்னும் பதிகத்தில்,

நட்பை மழை எனப் பொழி விலாச வானமே சரணம்

என்றும் பாடியுள்ளார்.

இந்த நட்பில் கேலி செய்து விளையாடுதலும் உண்டு. ஆம், ஒரு சமயம் சுவாமிகள் முருகனையும் அவர் தந்தையையும் மாமனையும் திருடன் என்று சொல்லி, பின் என் போதத்தை (பசு ஞானத்தை) மட்டும் திருட தெரியாதோ என்று பாடினார்.

கோத்தயிர் வெண்ணை திருடன் கோல மருகா நறிய 
பூத்திருடன் தன் மதலாய் பொங்கு குறக் கோத்திரத்தோர்
பெண் திருடிச் சென்ற பெருந் திருடா என் போதம்
உண்டு திருடத் தெரியாயோ

கோத்தயிர் வெண்ணை திருடன் கோல மருகா - பசுவின் வெண்ணையைத் திருடிய கோபாலனாகிய திருமாலின் மருமகன்; 

நறிய பூத்திருடன் தன் மதலாய் - திருவீழிமிழலையில் திருமால் ஆயிரம் பூக்களைக் கொண்டு வழிபடும்போது அதிலிருந்து ஒரு பூ திருடிய சிவனாரின் பிள்ளையே; 

பொங்கு குறக் கோத்திரத்தோர் பெண் திருடிச் சென்ற பெருந் திருடா - கோபம் உடைய வேடர் குலத்தின் பெண்ணான வள்ளி நாயகியாரைத் திருடிச் சென்ற பெரும் திருடா

இவ்வாறு பாடிய இந்தப் பாடலை ஒரு காகிதத்தில் எழுதி தலையணையின் கீழ் வைத்தார் சுவாமிகள். உடனே யாரோ தன்னுடைய முதுகில் மெத்தென கைக்கொண்டு அடித்தது போல் உணர்ந்தார் சுவாமிகள். உடனே சுவாமிகள் "இறைவ! எளியேன் பாடிய பாட்டு திருவுளத்திற்குச் சம்மதம் இல்லை என உணர்த்துமாறு இதன் மேலும் அறிவிக்கப்படும் ஆயின் அதனைப் பரிகரித்து (கிழித்து) விட கடவேன்" எனப் சிந்தித்துப் படுத்துக் கொண்டனர். அவ்வித அறிவிப்பு ஒன்றும் ஏற்படவில்லை‌.  சுவாமிகளை முருகன் முதுகில் மெத்தென மொத்தியது அன்பினால் தட்டிக் கொடுத்தது போன்றே ஆகும்.

நண்பனின் பாராட்டினை உணர்ந்த  சுவாமிகள் மேலும் ஒரு பாடலில் மொத்த சிவ குடும்பத்தையும் கேலி செய்யும் விதமாகவும் அதே நேரத்தில் தனக்கு முத்தி தந்து ஆள வேண்டும் என்றவாறு ஒரு பாடல்  பாடினார்.

அன்னைக்கு அரைவலி அப்பற்குத் தலைவலி ஓர்
கொன்னறு மாதுலற்குக் கூனற் கை - மன் நெஞ்சு
குத்துடைய  அண்ணனுக்குக் கோட்டுவாய் பேச்சில்லா
முத்தி தந்து ஆள் சண்முகா

அன்னைக்கு அரைவலி - முருகனின் அன்னையார் உமாதேவியார், சிவபெருமானின் திருமேனியில் பாதி இடத்தில் இடப்பக்கம் உள்ளார். அதனால் அம்மைக்கு இடுப்பு வலி.

அப்பற்குத் தலைவலி - முருகனின் தந்தை  ஆகிய சிவபெருமான் தன்  தலையில் கங்கையைச் சுமந்துக் கொண்டு இருப்பதால் அவருக்கு என்றும் தலைவலி.

ஓர் கொன்னறு மாதுலற்குக் கூனற்கை - அச்சமற்ற மாமனாகிய திருமால் என்றும் சங்கைப் பிடித்தபடி உள்ளதால் அவருக்கு வளைந்த (கூன்=வளைவு) கை

மன் நெஞ்சு குத்துடைய (கூத்துடைய) அண்ணனுக்குக் கோட்டு வாய்  - நெஞ்சகத்தில் நிலைப்பெற்ற திருக்கூத்தினைச் செய்கின்ற அண்ணன் ஆகிய விநாயகர் வாயில் தந்தம் உடையவர் ஆதலால் அவருக்கு கோணவாய்

பேச்சில்லா முத்தி தந்து ஆள் சண்முகா - சண்முகனாகிய நீ பேச்சில்லா முத்தியைத் தந்து ஆள்

தாய், தந்தை, மாமன், அண்ணன் ஆகிய அனைவரும் நோயாளிகளாகவும் உடல்குறைபாடு உடையவர்களாகவும் இருக்கின்றனர். சண்முகனான நீயும் பேச்சில்லா முத்தியை தருபவன் ஆதலால் நீ ஓர் ஊமை போலும்.. . என்று சுவாமிகள் தன் நண்பனாகிய முருகனிடம் கேலி செய்து விளையாடிய நயம் எண்ணும் தோறும் மகிழத்தக்கது.

அடுத்த பதிவில் மேலும் சுவாமிகள் பாதுகாவலனாகவும் மருத்துவராகவும் சேவகனாகவும் தொண்டாற்றிய சிறப்பினைக் காணலாம்.

திருச்சிற்றம்பலம்

தொடரும்....