Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Monday, 1 November 2021

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள் - பகுதி 3

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

மனத்து இருள் நீக்கும் ஞான ஞாயிறாம் நம் "பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள்" என்னும் இத்தொடர் கட்டுரையில் நகைச்சுவை, அவலச்சுவைகளைப் பற்றிச் சென்ற பதிவுகளில் பார்த்தோம். இனி, இளிவரல் என்னும் இகழ்ச்சி சுவையினைப் பற்றிக் காண்போம்.

இளிவரல் என்பது இகழ்ச்சி ஆகும். பிறர் நம்மை இகழ்வதோ, நாம் பிறரை இகழ்வதோ ஆகும். அதாவது ஒருவரின் மானம் குன்ற (அவமானம்) வருவது ஆகும். இது அருவருப்பினையும் ஏற்படுத்தும். 

இந்த இளிவரல் எவற்றால் ஏற்படும் என்று தொல்காப்பியர் பட்டியல் இட்டு உள்ளார்.

மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே

இளிவரல் என்னும் இழிபுச் சுவை மூப்பாலும் பிணியாலும், வருத்தத்தாலும் மென்மையாலும் ஏற்படும். முதலில் இவற்றினைப் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

  • மூப்பு - வயது முதுமை என்பதே இந்த மூப்பு. இது இளமைக்கு மாறானது. மூப்பு என்பது அனைவருக்கும் இயற்கையாக வரக்கூடியது தானே அதனால் எப்படி இகழ்ச்சி ஏற்படும் என்று நாம் நினைக்கலாம்‌. ஓர் உதாரணத்தின் மூலம் மூப்பினால் ஏற்படும் இகழ்ச்சியினை நாம் உணரலாம். வயதான பெரியவர் ஒருவர் கூட்ட நெரிசலான ஓர் அரசு பேருந்தில் ஏறி பயணிக்க முயற்சி செய்தால், பேருந்தின் நடத்துனர், "ஏன் பெரியவரே! இந்த வயதான காலத்துல வீட்டிலே ஓரமா இருக்க கூடாதா? இந்தக் கூட்டத்துல நீ வேறயா?" என்று மூப்பை வைத்து இகழ்ச்சி செய்வதை நாம் பார்த்திருகின்றோம் அல்லவா? 
  • பிணி - பிணி என்பது நோய். இதுவும் நமக்கு இகழ்ச்சியைத் தோற்றுவிக்கும். பிணியுற்றவர் பிறர் தயவினை நாடியே வாழும் சூழல் உண்டாகும். நம் அன்பிற்கு உரியவர்கள் கூட பணிவிடைகள் செய்து செய்து ஒரு கட்டத்தில் வெறுப்பு அடைவதும் உண்டு‌. மேலும் நோய்யுற்றவனை அன்பிற்கு உரியவர்களே "நான் சொன்னதைக் கேட்டாயா! ஒவ்வாத பொருள்களைச் சாப்பிட்டுவிட்டு இப்பொழுது நோயுற்று எங்களை வேதனைபடுத்துகின்றாயே!" என்று இகழ்வதைக் கண்டிருப்போம்.
  • வருத்தம் - மன கவலை, மன கலக்கம் ஆகும்.  வருத்தத்தில்  உள்ளவர்களிடம் ஆறுதல் கூறுபவர்களைக் காட்டிலும் இகழ்ந்து உரைப்பவர்களே அதிகம். உதாரணமாக, "நான் சொன்ன மாதிரி செய்து இருந்தா ஏன் இப்படி கஷ்டபட போற?" போன்ற வாசகங்களை நாம் கேட்டிருப்போம்.
  • மென்மை - மென்மை என்றால் இயலாமை. பணம், பதவி, அதிகாரம் உடைய ஒருவன்,  ஓர் ஏழை தொழிலாளியைத் தன் இஷ்டப்படி எப்படித் திட்டினாலும் அவர் திருப்பி எதுவும் செய்ய இயலாமல் அமைதியாகப் பொறுத்துக் கொண்டு இருப்பார் அல்லவா?

இனி, பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் இந்த இழிபுச்சுவை எவ்வாறு வெளிப்பட்டு உள்ளன என்பதைச் சுருக்கமாகக் காணலாம்.

மூப்பு:

மூப்பு என்பது மிகவும் கொடியது. முதுமைக் காலத்தில் நம்மை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கும். சுவாமிகள் இத்துன்பினையும் இதனால் ஏற்படும் இகழ்ச்சியையும் கூறி பின் சாவா மூவா முருகப் பெருமானே இத்துன்பினைத் தீர்த்து அருள வேண்டும் என்று பாடிய பாடல்கள் பல உள்ளன.

அடியேன் படுத்த படுக்கையிலே பல நாட்கள் துன்புற்று, உணவு உட்கொள்ள முடியாமல் ஆகி, உற்றார்கள் பாலினை மட்டும் வாயில் விட்டு, அதன் மூலம் பால் வாயனாகித் துன்பு அடையவோ இந்தப் பாழான உடல் எடுத்தேன் என்று பாடிய பாடல்:

படுத்த படுக்கையிலே பால்வாய்ப் படற்கோ
எடுத்தேன் இத்தேகம் இயம்பாய் பரஞ்சுடரே!

நூல்: முதல் மண்டலம் - பரஞ்சுடர் கண்ணி - 65

மூப்பில் அறிவு வேலை செய்வது குறைந்து கொண்டே வரும். எதுவும் புரியாமல் நம்முடைய சீர்மை எல்லாம் குறைந்து துன்புறுவதற்கு முன்னமே முருகன் முத்தியைக் கொடுக்க வேண்டும் என்று அவர்தம் ஊர்தியான மயிலிடம் வேண்டுகின்றார். 

சித்தம் மிக அழுங்கிச் சீர்மை குலைந்திடும் முன்
முத்தி கொடு என்றே மொழி அவற்கு பொன்மயிலே!

நூல்: முதல் மண்டலம் - பொன் மயிற்கண்ணி - 37

மேலும் திருவலங்கற்றிரட்டு இசைத்தமிழ் நூலில் உள்ள திருத்தணிகைமலை பதிகம் முழுவதும், உலகவர் அனைவருக்கும் மூப்பு என்னும் இத்துன்பின் கொடுமையையும் அதனால் ஏற்படும் இகழ்வினையும் எடுத்து கூறி, இத்துன்பில் இருந்து மீள உபாயமும் கூறுகின்றார். ஒரே ஒரு பாடலினை மட்டும் இங்குக் காணலாம்.

பாய் கிடந்து பவ்வீ பெய்து பையல்கள் சீ எனும் முன்
காய் கிழங்கு உண்போர்கள் நாத! கருணை இரங்கி அருள்
தாய் கிரந்தி நூறு ஐ என்று தணிகை நெடும் கிரி வாழ்
சேய் கிளர்ந்த வேரி அம் தாள் திருவை வணங்குதுமே!

பாய் கிடந்து பவ்வீ பெய்து பையல்கள் சீ எனும் முன் - பாயில் படுத்துக் கிடந்து, அப்பாயிலே மலம் கழித்து, அந்நிலையைக் கண்டு பையல்கள் சீ என்று வசை கூறுவதன் முன்பு

காய் கிழங்கு உண்போர்கள் நாத! கருணை இரங்கி அருள் - காய் கிழங்குகளை மட்டும் உண்டு வாழ்ந்து தவம் இருப்போர்களின்  தலைவனே... கருணை செய்து இரங்கி அருள்க

தாய் கிரந்தி நூறு ஐ என்று தணிகை நெடும் கிரி வாழ் - தாயின் கருப்பம் என்னும் முடிச்சினை (கிரந்தி) அழிக்கும் (நூறு) தலைவனே (ஐ) என்று திருத்தணிகை என்னும் நெடிய மலையில் வாழ்கின்ற

சேய் கிளர்ந்த வேரி அம் தாள் திருவை வணங்குதுமே - குழந்தையின் உயர்ந்த மணம் வீசும் அழகிய திருவடியை வணங்குவோமாக

இனி, பிணி என்பதால் ஏற்படும் இழிபுச் சுவைக்கான பாடல்களைக் காண்போம்.

பிணி:

பிணி என்பது நம்மை முடக்கிவிட செய்வது. பிணியுற்ற பின் நம்மால் நம்முடைய பணிகளைச் செய்ய இயலாது. அப்படிப்பட்ட பிணியின் கொடுமையை எண்ணி சுவாமிகள் பாடிய ஓரிரு பாடல்களைக் காணலாம்.

நாட்டில் உள்ள துன்பம் தரும் பிணிகள் சோற்றால் ஆன இந்தக் கூட்டினை (உடம்பினை) அழிப்பதற்கு அளவில்லை! நாட்கள் இப்படியே கழிந்துக் கொண்டே சென்றால் பின் திருவருளுக்கு எப்படி ஆளாக முடியும் என்று வருந்திப் பாடிய பாடல்:

நாட்டுப் படர் பிணிகள் சோற்றுக் குரம்பையை
    நசிப்பதோ சங்கையில்லை
நாளாகு மேல் அருட்கு ஆளாவனோ என்னும்
     நடலையோ கொஞ்சம் இல்லை
 

நூல்: முதல் மண்டலம் - திருப்பழநி மலை - 4வது பாடல்

(குரம்பை - கூடு அதாவது உடம்பைக் குறிப்பது; சங்கையில்லை - அளவு இல்லை; நடலை - துன்பம்)

நோய் குடிக் கொண்டதனால் நாவும் தளர்வுற்று இறைவனைப் பாடித் துதிக்க இயலாது போயிற்று. மேலும் நோயின் கொடுமையால் முருகனைப் பற்றிய சிந்தனையையும் எழாமல் போயிற்று என்று வருந்திப் பாடிய பாடல்கள்:

நாவுந் தளர்வுறுகின்றது நல் தோத்திரம் நழுவ
நோவும் குடி கொளுகின்றது நுன் சிந்தை மிகாமல்....

நூல்: முதல் மண்டலம் - அயிலரசு - 7வது பாடல்

அடுத்ததாக, வருத்தத்தால்  ஏற்படும் இழிபுச் சுவைக்கான ஒரு பாடலினைக் காணலாம்.

வருத்தம்:

சுவாமிகள் முருகனின்‌ அருளினை முழுவதுமாகப் பெற்றிருந்தாலும், வீடுபேறு என்று கிடைக்குமோ என்று மிகவும் வருந்தி உள்ளார். முத்தி அடையாமல்  சாதாரண மனிதர்களைப் போல் இறந்தால் தாம் மேற்கொண்ட தவ வாழ்க்கையினை உலகத்தார் இழிவாக பேசுவார்களே என்று  வருந்தி உள்ளார்.

குமரகுருதாசர் என்று ஒருவர் இருந்தார். அவர் முருகனைப் பாடும் செயலே சிறந்தது என்று வாழ்ந்தார். பின் பலவிதமான  பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு எல்லோரைப் போலவும் இறந்தே விட்டார் என்று உலகத்தவர் சொல்லும்படி  உன் அருள் செய்யுமோ? என்று தன் வருத்தத்தினைக் கூறி பின்பு நமக்கு விடையைத் தருகின்றார். அவ்வாறு எல்லாம் முருகனின் அருள் நம்மை கைவிடாது அது நாம் மகிழும்படி முத்தியைத் தரும் என்று கூறி உள்ள பாடல்:

குகன் மஞ்சடி பாடும் செயல் கொடு நன்கு என கொண்டான்
மிகு தொந்தரைகளில் நைந்து உயிர் விடலாயினன் எனவே
சகமைந்தர்கள் சொலவும் கதி தரும் நின்னருள் செயுமோ?
மகிழும்படி அருளேசெயும் வலியார் அயில் அரசே

நூல்: முதல் மண்டலம் - அயிலரசு - 5வது பாடல்

(மஞ்சடி - அழகிய திருவடி; மிகு தொந்தரை - மிகுந்த தொல்லைகள்; நைந்து - துன்பப்பட்டு; சக மைந்தர்கள் - உலகத்தவர்கள்; வலியார் - வலிமை உடைய).

இப்பாடல் வருத்தத்தால் ஏற்படும் இழிபுச் சுவையினை நன்கு விளக்கும்.

இனி, மென்மையால் வரும் இழிபுச் சுவைக்கான சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

மென்மை:

மென்மை என்பது இயலாமையைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம். சுவாமிகள் பாடல்களில் ஓரிரு உதாரணங்களைக் காணலாம். 

காமத்தைத் தோற்றுவிப்பவன் கரிய வேளான மன்மதன் என்பவன். அக்காமத்தைச் சுட்டுத் தகித்தவன் சிவன் என்னும் செம்மேனி அம்மான். சுவாமிகள் மங்கையர் தம் இன்பு (காமம்) என்னும் துன்பினை செவ்வேளின் அருளால் வென்றவர். ஆனாலும் கூட,  இந்த மன்மதன் என்பவன் அவ்வளவு சாதாரணமானவனா என்ன? எவரையும் விட்டு வைப்பவன் அல்லவே! 

அண்ட பகிரண்டங்களுக்கு எல்லாம் தலைவனானவன் சிவபெருமான் ஆவார்.  ஒருமுறை தேவர்கள் அசுரர்களைப் போரில் வென்று தாம் தான் பெரியவர்கள் என்று செருக்கு உற்றார்கள். அவர்களின் செருக்கினை அடக்க சிவபெருமான், வெறும் ஒரு சிறு துரும்பினை வைத்து, அதனை எவர் அசைக்கின்றாறோ அவரே பெரியவர் என்று கூறினார். பின் அதனை அனைவரும் அசைக்க முடியாமல் வெட்கினர். மழு என்னும் ஆயுதத்தையும், மானின் கொம்பினையும், புலியின் தோலையும்,  பாம்பையும், யானையின் தோலையும் , நிலவினையும், கங்கை ஆற்றினையும் தரித்துக் கொண்டவர். அதுமட்டுமா, விண்ணவர்களின் துயர் தீர்க்க, திரிபுரங்களைச் சிரித்தே எரித்தவர். மேலும் பிரமனும் திருமாலும் தேடிக் காண கிடைக்காப் பேரொளியானவர். இவ்வளவு பராக்கிரமங்களை உடையவர் இடமே அந்த மன்மதன் ஒரு காலத்தில் அம்பு விட்டான் என்னும் வரலாறு உள்ளது என்றால் காய்ந்த இலை (சருகு) போல் உள்ள என்னை அவன் விட்டுவிடுவானா? என்று பாடிய பாடல் மென்மையினை விளக்கும் இழிபுச் சுவைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வண்ணமுடை ஒரு துரும்பால் அமரர் வலி எலாம்
           மக்கினம் அடையப் பண்ணியும்
     மழுமிருகம் உழுவை அதள் மதகரிப் போர்வை பிறை 
            வாரி அரவம் தரித்தும்
 விண்ணவர்கள் அலக்கண் அற வென்று பெரு முந்நகரம்
         வேவ முறுவல் விளைத்தும்
    வேதன் அரியும் தேடி அறிவறிய பேரொளி
            விரித்தும் உள ஒருவன் முன்னே
தண்ணவக் குடையன் நின்று அலர் விடுத்தான் எனும் 
      சரிதம் இவ்வுலகில் உளதேல்
   சருகு அனைய எற்கு அந்த மதன் அஞ்சுவன் கொல் உன்
         தண்ணளி கிடைக்கும் ஆயின்
மண்ணவரும் விண்ணவரும் என் வயம் எனச் சொல்ல
         வாய் உண்டு வாழ்வும் உண்டே
   மங்காத இன்பர் செறி குன்றுதோர் ஆடல் வதி
          மஞ்சார் பெருந் தகையனே

நூல்: முதல் மண்டலம் - திருக்குன்றுதோறாடல் 6வது பாடல்

(வண்ணமுடை ஒரு துரும்பு - அழகான ஒரு துரும்பு; மக்கினம் அடைய - மங்கச் செய்து; மழு - மழு என்னும் ஆயுதம்; மிருகம் - மான் அதாவது அதன் கொம்பு; உழுவை அதள் - புலித்தோல்; மதகரிப் போர்வை - மதம் உடைய யானையின் தோலினைப் போர்வையாக; பிறை - நிலவு; வாரி - கங்கை; அரவம் - பாம்பு; அலக்கண் - துன்பம்; வேவ - எரிந்து போக; முறுவல் விளைத்தும் - புன்முறுவல் செய்தும்; தண்ணவக் குடையன் - குளிர்மையான சந்திரனைக் குடையாகக் கொண்ட மன்மதன்; அலர் விடுத்தான் - பூமாலையால் ஆன மன்மத அம்பு விடுத்தான்; சருகு - இலை; மதன் - மன்மதன்; தண்ணளி - குளிர்ந்த அருள்;  என்வயம் - என் வசம்; வாய் உண்டு - இடம் உண்டு; மஞ்சார் - அழகு நிறைந்த)

மேலும் ஓர் பாடல், உயிர்கள் தம்முடைய மும்மல அழுக்கினைத் தம்முடைய வலிமையினால் அகற்றிக் கொள்ள முடியாது. திருவருள் கருணையினால் மட்டுமே மும்மலங்களும் உயிர்களை விட்டு நீங்கும் என்பதைச் சுவாமிகள் பின்வரும் பாடலில் உதாரணத்துடன் விளக்கி உள்ளார்.

சேறு என்னும் அழுக்கே சேற்றினை நீக்கிக் கொள்ளாது. மழையே அச்சேற்றினை நீக்கும். அதுபோல் உயிர்களே தம் குற்றங்களை நீக்கிக் கொள்ளா. திருவருள் என்னும் மழையே அக்குற்றங்களை நீக்கும் என்று சுவாமிகள் கூறியுள்ளார்.

சேற்றை மழை போக்கும் அன்றி சேறு அகற்றாது அவ்வாறு உன்
ஆற்றல் அன்றிப் போகாது அசுத்தம் சதாசிவமே!

நூல்: முதல் மண்டலம் - சதாசிவக் கண்ணி - 8

(அசுத்தம் - மும்மலங்கள்)

இப்பாடலில் உயிர்களின் இயலாமையும் இறைவனின் திருவருள் வல்லமையையும் சுவாமிகள் கூறியுள்ளார்.

இதுவரையிலும், இளிவரல் என்னும் மெய்ப்பாட்டிற்கான சுவாமிகளின் சில பாடல்களைச் சிந்தித்தோம். குருவருளால் மீதமுள்ள அடுத்த சுவைகளைச் சிந்திக்கலாம்.

திருச்சிற்றம்பலம்!


No comments:

Post a Comment