Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Thursday, 28 January 2021

கற்புடைக் காதலும் பொற்புடைக் காதலும் – பகுதி 1

ஓம் குமரகுருதாச குருப்யோ நம: 

பாம்பன் சுவாமிகளின் திவ்ய வாழ்க்கை வரலாற்று நூலினை ஊன்றி படிக்கும்போது, நம் மனத்தினில் ஒரு கேள்வி எழும். பாம்பன் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் மீது காதலா? முருகப்பெருமானுக்கு பாம்பன் சுவாமிகளின் மீது காதலா? என்ற ஐயம் தோன்றும். இப்பதிவில் சில வரலாற்று நிகழ்ச்சிகளை மட்டும் மீள் பார்வை செய்வோம்.

சுவாமிகளின் அதி இளமைக் காலத்தில், கால்களில் காலணிகள் இல்லாமல் கோடைக்காலத்தில் சுடுமணல் வெளியில் நடந்தபோது, சுவாமிகளின் காலில் முள் தைத்தது. விண்ணென்று வலித்தது. கண்ணில் நீர் பெருகியது. காலிலும் செந்நீர் பெருகியது. சுவாமிகள் வருந்தினார், முள்ளினைக் காலில் இருந்து எடுக்க முயற்சித்த போது, சுவாமிகள் சிந்தித்தார். காலில் ஏறிய முள்ளினை உடலில் இருந்து எடுக்கும் போது இவ்வளவு வலி என்றால், உயிர் இவ்வுடலை விட்டு பிரியும் போது எவ்வளவு துயரோ என்று சுவாமிகள் வருந்தினார். துயரம் நம் சுவாமிகளுக்கு மட்டுமா என்ன? முருகனுக்கும் துயரமே. பொதுவாக, சைவ சித்தாந்தம் இறைவன் என்றும் இன்ப மயமாக உள்ளவன் என்றே பலத்துடன் உரைக்கும். ஆனால், அன்னையின் மேம்படு கருணை உடையவன் முருகன் என்பதால், தம் பிள்ளையான பாம்பன் சுவாமிகளின் துயரம் அவருக்கும் உண்டு அன்றோ? இதனால் அன்றோ மாணிக்க வாசக சுவாமிகள்

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

என்று பாடினார் என்று எண்ணத் தோன்றுகின்றது. இத்துயரினைத் துடைக்க நினைத்த பெருமான், அவ்வூர் தச்சர் ஒருவர் கனவில் தோன்றி, உடனே பாதக்குறடு ஒன்றினைச் செய் அதனை என் பத்தனுக்கு அணி செய் என்று கூறி மறைந்தார். இவ்வரலாற்றினைச் சுவாமிகளே தன்னுடைய பாடல்களில் பதிவு செய்து உள்ளார்.

கொடிய கோடையிற் சுடும ணற்கணே
   குருதி பாயவெ னடியி லேறுமுள்
வடிக ணீரிலே நனைத லுள்கியம்
   மழவ னுக்கணி குறட ளித்தியென்
றடியை நாடுமோர் தபதி பாற்புகன்
   றருளொர் தண்ணளி யிறைவ வென்னையும்
மிடிய னாகவே விடுவை யோவயின்
   மிளிர்கை யாளியே விபுதர் மீளியே
 
(அடியில் ஏறு முள் = பாதத்தில் குத்திய முள்; உள்கி=வருந்தி; மழவன்=இளைஞன் (சுவாமிகள்); அணிகுறடு=அழகிய காலணி; அடியை நாடும் ஓர் தபதி=முருகனின் திருவடியின் மீது பத்தி கொண்ட ஒரு தச்சர்; மிடியன்=வறுமையாளன் (அருளில் வறுமையாளன்); அயில் மிளிர் கையாளியே=வேலுடைய கையனே; விபுதர் மீளியே=தேவதேவனாகிய சிங்கமே)

இந்நிகழ்ச்சியில் முருகப்பெருமான் தந்தையைப் போன்று தம் பிள்ளையின் துயரத்தைத் துடைத்தார். 

அடுத்து தாயைப் போன்று கருணை செய்த திறத்தினைச் சிந்தை செய்வோம். உணவினை ஊட்டி குழந்தையை வளர்த்தல் அன்னையின் தன்மை. ஒருநாள் முருகப் பெருமான் சுவாமிகளின் கனவில் ஒரு அழகிய சைவரைப் போல் சென்று, அவரை ஓர் இல்லத்திற்கு அழைத்து கொண்டு போய் இனிப்பான பால்சோற்றைப் பிசைந்து சுவாமிகளுக்குத் தந்தும் அதனை தாமும் உண்டு சென்றார். முருகப் பெருமான் தந்தது ஞானமாகிய போனகம் (போனகம்=உணவு). இந்நிகழ்ச்சிக்குப் பின்பு சுவாமிகளின் கவிபாடும் புலமையும், நூலாராய்ச்சியும் பெருகி வளர்ந்தன.

வனப்பு மிக்கவொர் சைவரென் கனவில்
    வந்தெ னைக்கொடு போய்ப்பய சடிசில்
இனிப்பு றப்பிசைந் தனரதை யென்னோ
    டினித ருந்தியு மேகின ரதுதொட்
டுனைப்ப ழிச்சிடு கவிதையு நூலோ
    ருணர்வும் வளர்ந்தன விவையுமு னருளே
தனிப்ப திப்பொரு ளேதிரி புரத்தைத்
    தகித்த புன்னகைச் சண்முக சிவமே        
 
திருஞானசம்பந்தப் பெருமான் உமையம்மையிடம் இருந்து பால் அடிசில் உண்டதால் அவரை சேக்கிழார் பெருமான் "ஞானபோனகர்" என்று கூறுவார். முருகனிடத்திலிருந்து உணவு உண்ட நம் சுவாமிகளும் "ஞானபோனகரே" ஆவார்.

இந்நிகழ்ச்சி கனவில் தானே நடந்தது நனவில் நடக்கவில்லையே அதனால் அத்துணை சிறப்புடைத்து அன்று என்று எண்ணுதல் தவறு ஆகும். அருள் சம்பவங்கள் அருளாளர்களுக்கு கனவிலும் உணர்த்தப்படும். இது போன்ற கனவுகள் பொய் என்றால் பெரியபுராணமும் பொய்யே என்று சுவாமிகள் கனவதிகாரம் என்ற பகுதியில் கூறியுள்ளார். திருஞானசம்பந்த பெருமானுக்கு முத்துப் பல்லக்கு முத்துப் பந்தல் தந்த நிகழ்ச்சிகளைச் சிவபெருமான் அவர் கனவில் முன்பே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

அடுத்து முருகப் பெருமான் ஒரு நண்பனைப் போல் சுவாமிகளுக்கு அருள் செய்த குமரகோட்ட வரலாறு. சுவாமிகள் காஞ்சி அம் பதியில் உள்ள பெரிய கோவில்களை எல்லாம் தரிசனம் செய்து தன்னுடைய சொந்த ஊருக்கு புறப்பட ஆயத்தமான தருணத்தில், முருகப் பெருமான் அவர் முன் ஒரு பண்டிதரைப் போல் தோன்றி, சுவாமிகளிடம் உரையாடினார்.
 
முருகப் பெருமான்: நீர் எவ்வூர்?
பாம்பன் சுவாமிகள்: யான் தென்தேசம்
முருகப் பெருமான்: இங்கே வந்த காரியம் யாது?
பாம்பன் சுவாமிகள்: தெய்வ தரிசனமே
முருகப் பெருமான்: குமர கோட்டம் தரிசித்தது உண்டா?
பாம்பன் சுவாமிகள்: அஃது யாண்டுளது?
முருகப் பெருமான்: இங்கே தான் உளது; காட்டுவேன்; என் பின்னே வருக
  
என்று கூறி மேற்கு நோக்கி விரைவாக நடந்து சென்று உடன் வந்த சுவாமிகளை நோக்கி "இதோ கொடிமரம்; இதுவே குமர கோட்டம்" என்று சுட்டிக் காட்டினார். சுவாமிகளும் அதுகண்டு காட்டினவரைத் தேடினார் அவர் காணப்படவில்லை.
 
பிமர மீட்டஞ்செய் காஞ்சியி னான்சிலநாள்
    பெரிய கோயில்கள் கண்டுபு றப்படுஞான்
றமல மூர்த்தங்கொ ளாசுடை வீக்கியசெவ்
     அழக னாயென்முன் வந்துநுங் காரியமென்
குமர கோட்டங்க ணுற்றதின் றிங்கெனவே
     குயின்று காட்டிம றைந்தத யாநிதியே
தமசில் வேற்செங்கை யாநினை யேகருதித்
     தடவு கி​ன்றதெ னெஞ்சைவ லக்கரமே
 
(பிமரம் ஈட்டம் செய் காஞ்சி = வண்டுகள் கூட்டம் நிறைந்த (பொழில்களை உடைய) காஞ்சிபுரம்; அமல மூர்த்தங்கொள் ஆசுடை வீக்கிய செவ் அழகன் = வெண்ணிற தலைப்பாகை வடிவுடன் வந்த செவ்வுடல் அழகன் ; தமசில் வேற்செங்கையா=மலம் தீண்டாத வேல் பற்றிய சிவந்த கையனே ; நினை கருதித் தடவுகின்றது என் நெஞ்சை வலக்கரமே= உன்னை எண்ணியே என் நெஞ்சை என்னுடைய வலக்கரம் தடவுகின்றது)
 
நாம் நம் நண்பர் ஒருவர் வசிக்கும் பகுதியின் பக்கத்தில் ஏதோ ஒரு வேலையாகச் சென்று கொண்டிருக்கும் போது, நம் நண்பர் நம்மைக் கண்டால் உடனே நம்மை அவர் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவதை இன்றும் நாம் காணலாம். அதுபோன்றே, முருகப் பெருமான் ஒரு நண்பரைப் போல் சுவாமிகளைத் தன்னுடைய இல்லமான கோவிலுக்கு அழைத்துச் சென்ற கருணைத் தான் என்னே ! செந்தமிழில் இருவரும் உரையாடியது என்னே! அடிமுடி குறிக்க ஒண்ணா அண்ணலோடு, ஆடிசன் பேட்டை என்ற இடத்திலிருந்து குமர கோட்டம் வரை நம் சுவாமிகள் நடந்து சென்ற தவப்பேறு என்னே !
 
இப்பொழுது, முருகன் பாம்பன் சுவாமிகளுக்கு ஒரு பாதுகாவலனாக இருந்ததைப் பற்றிச் சிந்திப்போம். முருகப் பெருமான் சுவாமிகளை உள்ளும் புறமும் காத்தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரைச் சார்ந்தவர்களுக்கும் நலம் செய்த வரலாற்றினைக் காணலாம்.
 
பாம்பன் சுவாமிகள் துறவு மேற்கொண்டு புறப்படும் போது, முதலில் பாம்பன் பதியிலிருந்து பிரப்பன் வலசைப் பகுதியை அடைந்தார். அங்கு சுவாமிகளின் தாயார் அவர்கள் கவலை கொண்ட முகம்காட்டி, சுவாமிகளை நோக்கி "எனக்கு யாது கூறுவாய்?" என வினவி நின்றார். சுவாமிகள் முருகவேளை எண்ணி, "தாயே தடுக்க வேண்டா, செவ்வேளை நம்பினால் எல்லா நலமும் செய்தருளுவன். அவன் திருவுள்ளம் இருந்தவாறே எதுவும் முடியும்" என்று கூறி வந்தித்தார். அஃது உணர்ந்த உடனே சுவாமிகளின் தாயாரும் ஒரு ஒரமாக ஒதுங்கி நின்று விட்டார்.  பின்பு பல ஆண்டுகள் கழித்து தம்முடைய அன்னையார் குகனடி அடைந்தார் என்னும் செய்தியைச் சென்னையில் சுவாமிகள் பெற்றார். "முருகையப் பிள்ளையைக் (சுவாமிகளின் மகன்) கொண்டு உத்தரகிரியைகளைச் செய்து கொள்க" எனச் சீடர்களுக்கு அறிவித்துவிட்டு "என் ஆண்டவனே ! செவ்வேளே ! இவ்வுடம்பை ஈன்றாளுக்கு நல்லகதி கொடுக்க வேண்டும்" என்று முருகப் பெருமானை வேண்டுதல் புரிந்தார்.
 
மூஏழ் சுற்றம் முரண்உறு நரகுஇடை
ஆழாமே அருள் அரசே போற்றி
 
என்று மாணிக்க வாசக சுவாமிகள் பாடினது பொய்யாகுமா? மூவேழ் சுற்றம் என்பது இருபத்தொரு தலைமுறை என்று பொருள்படும். தன்னை அண்டிவந்த அடியார்களை மட்டும் அல்லாது அவர்களொடு தொடர்புடைய சுற்றத்தினர்களையும் நரகத்தில் வீழாமல் அருள்பவன் அல்லவா பரம்பொருள். சுவாமிகளின் தாயார் நற்கதி பேறு அடைந்தார் என்பதற்குச் சாட்சியாக பாம்பனில் செவிவழிச் செய்தியாகப் பின்வரும் செய்தி கூறப்படும்.
 
அன்னையார் குகனடி அடைந்த போது, பாம்பன் கிராமத்திற்கு எங்கிருந்தோ ஆறு பேர் கிராமத்துக்குள் வந்து அனைத்து உத்திர கிரியை வேலைகளுக்கும் உதவி புரிந்து பின் அப்பகுதி மக்கள் யாவரும் காணாத சில வாத்தியக் கருவிகளைக் கொண்டு இசைத்தும் சென்றார்கள் என்று கூறப்படுகின்றது.
 
இந்நிகழ்ச்சியினைக் எண்ணிப் பார்த்தால், எண்ணிலா விளையாட்டுடைப் பெருமான் தம் அடியவர் ஆற்றவேண்டிய கடமைகளையும் முன்னின்று தாமே தம் அருளால் செய்து முடித்தான் என்பதை உணரலாம்.
 
இன்னும் முருகப் பெருமான் சுவாமிகளுக்கு மருத்துவனாகவும், சேவகனாகவும் எல்லாம் எப்படி அருள்புரிந்தான், பாம்பன் சுவாமிகளும் முருகனுக்கு எப்படி தாயைப் போலவும், தந்தை போலவும், பாதுகாவலனைப் போலவும், மருத்தவனைப் போலவும், சேவகனைப் போலவும் அன்பு காட்டினார்கள் என்பதை எல்லாம் அடுத்த பதிவில் விரிவாக காணலாம் என்று கூறி இந்த பதிவினை முடிக்கின்றேன்.
 
கருத்தாக்கம் அளித்த பாம்பனடியார் திரு, குருமூர்த்தி அவர்களுக்கு நன்றி !
 
திருச்சிற்றம்பலம்
 
                                                           தொடரும்.....