ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
பெரியது என்ன? என்ற கேள்வி எழுந்த போது, கல்வியங் கடலைக் கடந்து
மேன் மிளிரும் கருத்துடை ஒளவை மூதாட்டி தொண்டர்களே (இறையடியவரே) பெரியவர்கள் என்று
உரைத்தார். இத்திறத்த தொண்டர்களின் காலடிகள் இந்த அடிமையின் தலையில் பட்டால் பிரமலிபி
(தலையெழுத்து/தலைவிதி) அழிந்தே விடும் என்கின்றார் பாம்பன் சுவாமிகள். இக்கருத்துகள்
ஏதோ மகிமை படுத்துவதற்காக சொல்லப்படுவன அன்று. இது சத்தியமே. இதன் உண்மையை, நாம் அனைவரும்
அறிந்த சுவாமிகளின் வரலாற்றின் மூலமாகவே மெய்ப்பிக்கலாம்.
பிரப்பன் வலசை என்னும் ஊரில் உள்ள சுடுகாடு. அங்கே பிணங்களும்,
பேய்களும், பாம்புகளுமே உண்டு. கோயில் சுடுகாடு
என்று திருவாசகம் கூறினாலும் நம்மனோர் செல்ல அஞ்சுகின்ற இடம் சுடுகாடு. சுவாமிகள் தவம்
செய்தது சுடுகாடு தான் என்பதைச் சுவாமிகளின் வாக்கினாலேயே அறியலாம். சுவாமிகள் ஈம மா நிலம் என்று இந்தச் சுடுகாட்டினைத்
தம் பாடலில் கூறிப்பிட்டு உள்ளார்.
சுவாமிகளின் காலடிகள் இந்தச் சுடுகாட்டில் பட்டனதால், இன்பக்கடல் படிந்த எந்தை அருணகிரி என்று பாம்பன் சுவாமிகளால் புகழப்பெற்ற சந்தமுனிவரின் சீரடிகளும் சுடுகாடாக இருந்த இந்நிலத்தில் பட்டன.
சுவாமிகளின் காலடிகள் இந்தச் சுடுகாட்டில் பட்டனதால், திருமாலும் அயனும் தேடி அறியா திருமுருகனின் திருவடிகள் சுடுகாடாக இருந்த இந்நிலத்தில் தோய்ந்தன.
இந்நிலம் கோயிலும் கண்டது. இன்று தஞ்சம் என்று பல உயிர்கள் வந்து
அருள்பெறும் இடமாய் உள்ளது. இங்குள்ள முருகப் பெருமானைப் பற்றிச் சுவாமிகள் பிரப்பன்வலசை
பதிகத்தில் கூறும்போது,
நம் சிவபிரான் எனும் மயூர முருகையர்
இதன் பொருள்: நம்முடைய சிவபிரான் ஆகிய மயில் ஊரும் முருகையன், தஞ்சம் என்று நிற்பவர்களுக்கு "அஞ்சற்க" என்ற சொல்லினைக் கூறி அருள்புரிகின்றான்
எனவும், மேலும் ஒரு பாடலில்
இதன் பொருள்: இறைவனை உண்மையாக நினைப்பவர்கள், உண்மையாகவே உய்தி பெற வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு பெரிய வள்ளல் முருகையர்
(உள்ளபடி – உண்மையாக; உன்னுதல் = தியானித்தல்/நினைத்தல்; உய்ய – உய்திபெறல்)
என்று முருகனின் கருணையையும் அருட்கொடையையும் இப்பதிகத்தில் பாடி உள்ளார்.
அருள் வரலாற்றில், ஒரு ஞானியின் காலடிகள் பட்ட இடம் எவ்வளவு சிறப்புகளைப் பெற்றன என்பதை நாம் கண்கூடாகக் காணலாம். பாம்பன் சுவாமிகள் திருவடிகள் பட்டனதால் பேய்கள் நடமாடும் சுடுகாடே , சகல நன்மைகளைத் தரும் கோயிலாக மாறியது என்றால், சுவாமிகளின் திருவடிகளை நம் இதயத்தில் பதிந்தால், பொறாமை, வஞ்சம் முதலான மனத்தில் உள்ள பேய்கள் அழிந்து இறைவன் வாழும் கோயிலாக நம் மனம் மாறும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பு: பாம்பன் சுவாமிகளின் கருணையினால், அவர் திருக்காலடிகளின் சிறப்பினைக் கூறி, இந்தக் கோணத்தில் இக்கட்டுரையை எழுத ஆற்றுப்படுத்திய பாம்பன் அடியார் திரு. குருமூர்த்தி அவர்களுக்கு நன்றி!
திருச்சிற்றம்பலம்