Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Monday, 8 March 2021

கற்புடைக் காதலும் பொற்புடைக் காதலும் - பகுதி 2

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

கற்பவர் விழுங்கும் கற்பகக் கனியான கந்தவேள் பெருமான் கவிராஜ சிங்கமான நம் பாம்பன் சுவாமிகளுக்கு அன்னையாய், தந்தையாய், நண்பனாய், பாதுகாவலனாய் அருள் பாலித்த தண்ணளியை அறிந்தோம்.  மேலும் முருகப்பெருமான் மருத்துவனாக அருள் பாலித்த திறத்தினைக் காணலாம்.

பாம்பன் சுவாமிகள் துறவு நெறி பூண்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர், வாந்தி பேதி என்னும் ஒரு நோயால் மூன்று நாட்கள் வரை துன்பப்பட்டு இருந்தபோது மரணமே எனும்படி செயலற்றுக் கிடந்து தம் உயிர் நாயகனான முருகப் பெருமான் மீது சித்தத்தைச் செலுத்தினவர் ஆயினார். எவ்வித அசைவற்றும் இருந்த சுவாமிகளின் நிலையைப் பாதி இரவில் கண்ட சுவாமிகளின் பத்தினியார், தம் கணவர் இறந்துவிட்டார் போலும் என்று கருதிக் கதறி அழுது கால் கைகள் காயப்படுமாறு வீழ்ந்து மூர்ச்சை ஆயினார். உடனே அங்கு காவியுடை அணிந்த ஒருவர் தோன்றினார். அவர் கையில் உள்ள பிரம்பினாலே அவ்வம்மையாரைத் தட்டி எழுப்பி "நீ இப்படி துன்பப்படுவது என்னை? அவன் மரணமாகவில்லை. இம்மாடத்தில் உள்ள திருநீற்றை எடுத்துக் கொண்டு, 'உன்னை நான் விட்டு அகலவில்லை' என்று யான் கூறினதாக அவன் செவியில் சொல். கண்ணைத் திறந்து கொள்வான்; திருநீற்றினை இட்டு இந்நோய் போயிற்று என்றும் கூறுதி" என்று சொல்லி அருளினார். உடனே பத்தினியார், "சுவாமி யான் வீட்டிற்கு விலக்கமே. திருநீற்றினை எப்படித் தொடுவேன்" என்று கூறினார். ஆண்டவனார், "இப்படிப்பட்ட  ஆபத்தில் அந்நியதி இல்லை; செய்" என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். அருமைப் பத்தினியாரும் அவ்விதமே செய்தார். சுவாமிகளும் குணமடைந்தார். இந்த அருள் நிகழ்ச்சியைச் சுவாமிகளே இடையறாது நிற்க விழைதல்  என்னும் பதிகத்தில் பதிவும் செய்து உள்ளார்.

செத்த மேனிபோல் வமன பேதிநோய்
திளைத்த போது நீறளித்து மேவினாய்

(திளைத்த போது = அனுபவித்த போது)

மற்றும் ஓர் நிகழ்ச்சி: சுவாமிகள் துறவு பூண்டு சென்னையில் இருந்தபோது, அவர்தம் அரையிலும் தொடையிலும் இரண்டு கட்டிகள் தோன்றி சுவாமிகளை நடக்க முடியாது செய்தன. 

சடைகற்றை தாங்கு உவ்விச் சங்கரனார் தந்த தங்கஅயில்
படைக்கை எந்தாய் அறியாமையினால்நான் செய்த பண்டைவினை
தொடைக்கட்டியோடு அரைக்கட்டியும் ஆ(க) தோன்றி என்னை
நடக்க ஒட்டாது செய்கின்றது சென்னை நகர்தனிலே

(சடைக்கற்றை தாங்கு உவ்வி சங்கரனார் - சடைத் தொகுதியை தாங்குகின்ற தலையை உடைய சங்கரனார்; பண்டைவினை - முன்வினை)

இத்துன்பத்தைச் சுவாமிகள் இவ்வாறு தம்பாடலில் பதிவும் செய்து உள்ளார். பாடுவார் துயர் தீர்க்கும் பரமன் ஒரு சிறு பிள்ளையாகத் தோன்றி கட்டி நைந்து போகும்படி மருந்து பூசிச் செல்பவன் ஆயினான்.  இவ்வாறு சிறு பிள்ளையாக முருகன் சுவாமிகளுக்கு மருந்து பூசுவதை அவ்வீட்டிற்கு உரியவரான திருமதி. ஜெகதாம்பாள் (பங்காரு அம்மாள் எனப் பெயரிய குமாரானந்த அம்மையாரின் மருமகள்) என்பவர் கனவில் கண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின், சுவாமிகள் முழு நலன் பெற்றார். இந்த அற்புத நிகழ்ச்சியைச் சுவாமிகளே பதிவும் செய்து உள்ளார்.

"...............................சென்னை சேர்
வாசி யானகா லூரு மீதுகோண்
      மருவு கட்டிநை வுறந லற்புறை
 பூசி நின்றவோர் பிள்ளையே"

கால்= பொழுது; ஊரு= தொடை; கோண் மருவு கட்டி = வளைவுகளில் (அரையில்) உள்ள கட்டி; நைவுற=வற்றிப்போக; நல்அற்பு= நல்ல அன்பு; உறை=மருந்து

மேலும் ஒரு நிகழ்ச்சி, சுவாமிகள் தூற்றுக்குடியைச் சேர்ந்த திருமந்திர நகரில் இருந்த போது வெயில் வெப்பத்தினால் ஓயாத இருமல் நோயால் சுவாமிகள் துன்பம் அடைந்தார். அதற்கு ஆற்றாத சுவாமிகள்,  திருச்செந்தூர் முருகப் பெருமானைச் சிந்தித்து "இத்துன்பு தீர்த்து அருள்தி" என்று விண்ணப்பித்தார். அடுத்த நாள் இரவில், சுவாமிகளின் கனவில், ஆங்கில உடையோடு ஒரு மருத்துவர் சுவாமிகளின் முன்னே தோன்றி, "வேதனை யாது?" என விசாரித்துத் தன்னுடன் நிற்கின்ற ஓர் இளைஞனை நோக்கி "இவருக்கு மருந்து கொடு" என்று கூறினார். அவ்வாறே அந்த இளைஞனும் மருந்தினை அளித்தான். பின்னர் அவ்விருமல் நோய் குணமுற்றது. 

"மாசின் மந்திரப்பேர் நகர்க் கண் நான்
     வதியும் நாள் விடா இருமல் நோயையே
 ஏசில் பண்டிதம் செய்து தீர்த்த செந்தி
       நகர் மன்னையா"

மாசில் மந்திரப் பேர் நகர் = குற்றமில்லாத திருமந்திர நகர்; கண் = இடத்தில்; ஏசில் பண்டிதம் = குற்றமில்லாத வைத்தியம்; செந்தி நகர் மன் ஐயா= திருச்செந்தூர் நகரில் நிலைப் பெற்ற ஐயா;

என்று சுவாமிகள் இந்நிகழ்ச்சியினைப் பதிவு செய்து உள்ளார்.

இந்நிகழ்ச்சிகளோடு அல்லாமல், சுவாமிகள் ஒருமுறை காது நோயால் துயர் அடைந்த போதும், வைசூரி என்னும் பெரிய அம்மை நோயால் வாடிய போதும் முருகப் பெருமானே முன்னின்று மருத்துவம் செய்தார் என்பதைச் சுவாமிகள் வாக்கினாலேயே அறியலாம்.

மற்றொர் காலை வெங் காது நோயினை
      மருவி வாடினேன் உறு வைசூரியால்
அற்றம் ஏய்தினேன் அங்கு உன் தயா
       அணைந்து அளித்ததே

 மற்றொர் காலை = மற்றொர் பொழுது; உறு வைசூரியால் = உற்ற பெரிய அம்மை நோயால்; அற்றம் எய்தினேன் = துன்பம் உற்றேன்; தயா = கருணை;

யாவற்றிற்கும் மேலாக, சுவாமிகளின் கால் முறிவுற்றதும் அது செவ்வேட்பரமன் அருளால் நன்குற்றதும், சேய்மையில் மயில்களது காட்சியும் அண்மையில் குழந்தை வேலன் காட்சியும் கொண்ட முருகனின் அருட்சாட்சி கூறும் மயூர வாகன சேவன நிகழ்ச்சி ஆகும்.

இங்கு நாம் உற்று நோக்க வேண்டியது என்னவென்றால், முருகப் பெருமான் சுவாமிகளுக்கு அருள் செய்தவை எல்லாம் சத்தியம் என்பதை உணர்த்த அந்நிகழ்ச்சிகளைச் சுவாமிகளின் அன்பர்களுக்கும் உணர்த்தினார்.  எவ்வாறு எனின், சுவாமிகள் தொடை மற்றும் அரைக் கட்டியால் துயர் உற்ற போது அவ்வீட்டிற்கு உரியவரான திருமதி ஜெகதாம்பாள் கனவில், நடந்த தெய்வச் சிகிச்சையினை முருகன் காட்சி படுத்தினான். அதேபோல் சுவாமிகள் கால் முறிவுண்டு மருத்துவ மனையில் இருந்த போது, முருகனின் மூன்று வேல்கள் சுவாமியின் கால்களை குணம் செய்வதை சுப்பிரமணியதாசருக்கு நினைவில் காணுமாறு சாட்சிபடுத்தியதை நாம் மறக்கலாகாது.

இத்துணை இத்துணை துன்பங்களிலும் சுவாமிகள் குமரனின் பாத மலர்களை ஒரு போதும் மறக்கவில்லை.

பல துன்பு பயில் நோய்கள்
வலி கொண்டு வரும் ஏனும்
கலி வென்ற முருகன் கால்
மலர் என்றும் மறவேனே

கலி வென்ற = சிறுமையை வென்ற

இத்திற பத்தியின் உறுதியினால் தான் சுவாமிகளுக்கு உற்ற துயர் அனைத்தும் வந்த இடம் தெரியாமல் தொலைந்தன.

இந்த உடம்பு எடுத்தே இவண் ஏற்ற பொல்லாங்கு அனைத்தும்
வந்த புலம் தெரியாது அற மாய்த்தவனே

இவண் = இங்கு; பொல்லாங்கு = தீமை; அற மாய்த்தவன் = அறும்படி அழித்தவன்

இவற்றை எல்லாம் நோக்கும் போது, சுவாமிகள் பாடியதோடு மட்டும் நில்லாமல் அந்நெறியிலேயே நின்ற திறம் நன்கு அறியலாம்.

அடுத்த கட்டுரையில், முருகப் பெருமான் எப்படி ஒரு சேவகனைப் போல் சுவாமிகளுக்கு அருள் சுரந்தார் என்பதையும்; மேலும் முருகப் பெருமானுக்குப் பாம்பன் சுவாமிகள் எப்படி தந்தையாகவும்,  தாயாகவும், நண்பனாகவும், பாதுகாவலனாகவும், மருத்துவனாகவும், சேவகனாகவும்  அன்புகாட்டினார் என்பதை எல்லாம் காணலாம் என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்கின்றோம். 

திருச்சிற்றம்பலம்!

தொடரும் ........