Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Friday, 11 September 2020

மரங்கள்(அசோக மரங்கள்)செய்யும் மாயவித்தை:

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பாம்பன் சுவாமிகள் அருளிய அசோக சால வாசத்தில் தலைவி தோழியிடம் "இந்த வசந்த காலத்தில், நாம் எங்கு சென்று வரலாம்" என்று கேட்டாள். அதற்கு தோழி "அசோக மரங்கள் நிறைந்த இடத்திற்கு சென்று வரலாம்" என்று நேரடியாக பதில் கூறாமல் அசோக மரத்தின் தன்மையைக் கூறி பதில் அளிக்கும் நயத்தினைச் சுவாமிகள் அழகுற அமைந்துள்ளார்.

அசோக மரங்கள், வேரின் வழியே பெற்ற நீரினை எல்லாம் உட் கொண்டு தன்னுடைய கிளை, இலை, பூ போன்ற உறுப்புகள் தோறும் நிறமாக காட்டும். இச் செய்கை எது போன்றது என்றால், மாய வித்தை (கண்கட்டி வித்தை) செய்பவர்கள் ஒரு பொருளை ஒரு‌ இடத்தில் புதைத்து விட்டு அதனை வேறொர் இடத்தில் எடுத்து காட்டும் இயல்பை போன்றதாகும். 

இவ்வாறு அசோக மரங்கள் மாய ஜாலம் காட்டுபவர்களின் இயல்பைக் பெற்று உள்ளன என்று சுவாமிகள் பாடியுள்ளார்.

மூலவாய் வழிப்பருகு அறலினைத் துவர் முதிர்ந்து
கோலம் ஆர் சினைதொறும் நிறம் காட்டலில் குறையாச்
சாலம் வல்லவர் இயல்கொள் அசோக அம் சாலப்
பால் அடைந்து இவண் வரல் நலம்எனச் சகி பகர்ந்தாள்

மூலவாய் வழி - மரத்தின் மூலம் என்பது வேர் ஆகும். வாய் என்பது இடத்தைக் குறிக்கும். வேர் என்ற இடத்தில்

பருகு அறலினை - பருகிய நீரினை (அறல்= நீர்)

துவர் முதிர்ந்து - முழுதும் முதிர்ந்து (துவர்=முழுதும்)

கோலம் ஆர் - அழகு நிறைந்த

சினை தொறும் - கிளை, இலை, பூ போன்ற உறுப்புகள் தோறும் (சினை= உறுப்பு)

நிறம் காட்டலில் குறையா - நிறங்களை காட்டுவதில் குறைவு இல்லாத

சாலம் வல்லவர் - ஜாலம் (மாயா ஜாலம்) செய்வதில் திறமை கொண்டவர்

இயல் கொள் அசோக அம் சாலப் பால் - இயல்பை உடைய அசோக மரங்கள் நிறைந்த அழகிய இடத்தை

அடைந்து இவண் வரல் - அடைந்து மீண்டும் இவ்விடம் (இவண்- இவ்விடம்) வருதல்

நலம் என சகி பகர்ந்தாள் - நல்லது என்று தோழி கூறினாள்.

சுவாமிகள் விவரிக்கும் இந்த கவிச்சுவையை படிக்கும் போது நம் சோகமும் மறைந்து அசோகம் ஆகும்.

திருச்சிற்றம்பலம்