Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Wednesday, 12 May 2021

கற்புடைக் காதலும் பொற்புடைக் காதலும் - பகுதி 4

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடதாகக் கொண்ட செவ்வேள் பரமன், சித்து விளையாடா துறவினில் நின்று என்றும் செந்தில் வேலனின் சித்திர பாதமே சிந்தையாகக் கொண்ட நம் பாம்பன் சுவாமிகளுக்கு அருள் பாலித்த தண்ணளி கருணையைச் சென்ற பதிவுகளில் சிந்தை செய்தோம். இனி இப்பதிவில், பாம்பன் சுவாமிகள் தாயாகவும் தந்தையாகவும் நண்பராகவும் முருகனிடம் எப்படி அன்பு காட்டினார் என்று சற்று சிந்திப்போம்.

குழந்தையை ஈன்ற தாய், அக்குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், பரிசத்தையும், சிரிப்பையும், அழகைக் கண்டும், உச்சி மோந்தும் மகிழ்வது உலகில் இயற்கையே. நம் சுவாமிகளும் முருகனைக் குழந்தையாகப் பாவித்து ஈன்றாளைப் போல் அன்பில் உருகி நின்றார். இதற்கு சாட்சி, சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை என்னும் பதிகமே!

காதலால் தழுவ நிதியே வாராயோ கைகள் நீளுகின்றனவே!

தூவேறு இன்கரைகள் இங்குச் சொல்ல வாராயோ

கோவே என் செவிகள் இச்சை கொள்ளுகின்றனவே

(தூ ஏறு இன்கரைகள் = தூய்மை மிகுந்த இன்சொற்கள்)

உச்சி செவ்வன் மோந்து கொள்ள வித்தே என் மூக்கின் இச்சை மீறுகின்றனவே!

கண்மலர்கள் இன்பு மல்க மோந்து கொள்ள மெய்யா என் மூக்கின் இச்சை மீறுகின்றது அரோ!

இது போன்ற வரிகள், சுவாமிகள் சேய் கடவுளிடம் கொண்ட தீராக் காதலினை நன்கு புலப்படுத்தும். மேலும், இப்பதிகத்தில் சுவாமிகள் முருகனின் புன்முறுவலைக் காட்டுகின்றார். அந்தப் புன்முறுவலை முருகப்பெருமான் அன்பினால் பூக்கின்றான். அன்பினால் பூத்த அந்தப் புன்முறுவல் என்றும் அழியாதது (இரியா). புன்முறுவல் செய்கின்ற பெருமானின் பல்லழகு வில்லினைப் போன்று உள்ளதாகவும். அதிலிருந்து வரும் அம்புகள் என் துன்பினை அழிக்கின்ற  அம்புகள் என்றும் கூறி மகிழ்கின்றார்.

இரியா அன்பார் புன்முறுவல் செய்யும் ஆர்வில் பல்லழகு என் துன்பு ஈர் அம்பு எனவே நெஞ்சம் துள்ளுகின்றது அரோ

இப்பதிகத்தின் முடிவில், கிடைத்ததற்கு அரிய இப்பிறவி வீண்போகாதபடி முருகனை வந்தருள வேண்டுகின்றார்

வீண்போகாதபடி இங்ஙன் வாராய் வேற்குழவீ

இவ்வாறு சுவாமிகள் முருகனைக் குழந்தையாகப் பாவித்து தாய் போல் அன்பு நெறியில் நின்றதால் அன்றோ, சுவாமிகள் கால் முறிவுண்டு மருத்துவமனையில் இருந்த போது செவ்வேள் பரமன் நீங்கிலேன் என்னும்படி சிறு குழந்தையாக நெடும் பொழுது உடனிருந்து உற்ற துன்பினை நீக்கினான்.

இனி தந்தையாக அன்பு செய்த பாங்கினைக் காணலாம். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்ற தெய்வ புலவரின் வரிக்கு ஏற்றாற் போல் சுவாமிகள் தம் நூல்களின்  மூலம் முருகனை முன்னிலைப்படுத்தியும் அவனது பெருமையையும், பரத்துவத்தையும் கற்றறிந்த அறிஞர்களும் கற்பவர்களும் உணரும்படிச் செய்தார் . 

மேலும் தந்தை என்பவர் தன் பிள்ளையைப் பாதுகாப்பாகப் பேணிக் காப்பவர். தன் பிள்ளைக்கு எந்த ஒரு கேடு நேர்தலையும் அனுமதியாதவர். இங்கு ஓர் உதாரணத்தைக் காட்ட விழைகின்றேன். பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமான் ஏன் மறைப் பொருளாகவே உள்ளார்? அவர் அனைவரின் முன்னும் தோன்றி அனைவரும் காணுமாறு தரிசனமாகக் கூடாதா? என்று சிந்திக்கின்றார். பின் சுவாமிகள் உண்மையை உணர்ந்து அதை நமக்கும் உணர்த்துகின்றார்.

அந்தணனும் உனை ஒருகால் அவமதித்தான்
    விபரீத அறிவால் இப்பூ
வந்து உருவு உற்று இருப்பாயேல் இங்கு உளர் நீ
      பேய் ஏவல் மாயவித்தைத்
 தந்திரியோ எனவினவிப் பல சரசம்
        செய்து தலைதனிலும் குட்டச்
 சந்தேகம் இலை இதனைக் கருத்து அடைத்தோ
      மறைவு இருக்கும் சாமி ஆனாய்

                                             முதல் மண்டலம் - மறைமுடிவு - பாடல் எண் 2

பாடலின் பொருள்: பிரம தேவனும் உன்னை ஒரு சமயம்  விபரீத அறிவால் அவமதித்தான். இப்பூமியில் நீ வந்து உருவம் தாங்கி இருப்பாயானால், இங்கு உள்ளவர் உன்னை பேயோ, ஏவல், மாயவித்தை முதலியன காட்டுகின்ற தந்திரக்காரனோ எனக் கேட்டு பலவிதச் சேட்டைகள் செய்து,  உன் தலையிலும் குட்டுவதற்கு சந்தேகம் இல்லை. இதனைத் திருவுளத்தில் கருதியே மறைவு கொண்டு இருக்கும் சுவாமி ஆனாய் போலும்.

தன் பிள்ளையான முருகனை இவ்வுலகினர் அவமதித்து தலையில் குட்டி விடுவார்களோ என்று நினைத்து சுவாமிகள் அஞ்சுகின்றார். முருகன் மறைவு கொண்டு இருத்தலே நலம் என்று எண்ணுகின்றார். இப்படி தன் பிள்ளை எவ்வித துயரும் அடையக் கூடாது என்று சுவாமிகள் தந்தை உள்ளத்துடன்  வாழ்ந்தார். ஆம் இவ்வுலகினர் தம் பிள்ளையை எக்காரணம் கொண்டும் இழிவு படுத்தி விடக்கூடாது என்பதில்  மிகுந்த கவனத்துடன் இருந்தார். சுவாமிகள் கால் முறிவுண்டு மருத்துவமனையில் இருந்த போதும் தன்  துன்பினை எண்ணி கலங்காது, இவ்வுலகம் முருகனைக் குறைக் கூறி விடுமோ என்றே கருதி கலங்கினார்.

என்றன் நப்பதம் ஊறு கொண்டதை எண்ணி எண்ணி வசுந்தரை
என்றன் அப்பன் அயில் பிரானை இழித்து உரைத்திடுமோ இதற்கு
என் தடுப்பு அயர்வேன்

                                         அசோக சால வாசம் - ஆறாம் பத்து -  4வது பாடல்

(நப்பதம் = நல்ல கால்கள்; ஊறு கொண்டதை= முரிவு கொண்டதை; வசுந்தரை = உலகத்தினர்; அயில்பிரான் = வேல் பிரான்; அயர்வேன் = செய்வேன்)

இப்பாடலில் சுவாமிகள் முருகனை என்றன்‌ அப்பன் என்று‌கூறியது எப்படி என்றால், பொதுவாகத் தந்தைமார் தாம் பெற்ற பெண் பிள்ளையை அம்மா ‌என்றும்; ஆண் பிள்ளையை அப்பா என்றும் அழைப்பது போன்ற அன்பின் வெளிப்பாடாகும்.

இந்த உதாரணங்களைக் கொண்டு சுவாமிகளின் தந்தை உள்ளத்தினை நன்கு அறியலாம்.

இப்பொழுது சுவாமிகள் நண்பனைப் போல் முருகனோடு பழகிய நலனைக் காணலாம். சுவாமிகள் முருகனை நட்புக்கு உகந்த நாயகம் என்று கூறியுள்ளார். நட்புக்கு உகந்த நாயகம் என்ற தலைப்பில் பதிகமும் அருளி உள்ளார்.

எழிலார் சுரும்பு என்னும் பதிகத்தில்,

பிரியாத நட்பில் அடியேனை வைத்த பெரியோய் அணைத்தும் அருளே

என்றும்; சரண விண்ணப்பம் என்னும் பதிகத்தில்,

நட்பை மழை எனப் பொழி விலாச வானமே சரணம்

என்றும் பாடியுள்ளார்.

இந்த நட்பில் கேலி செய்து விளையாடுதலும் உண்டு. ஆம், ஒரு சமயம் சுவாமிகள் முருகனையும் அவர் தந்தையையும் மாமனையும் திருடன் என்று சொல்லி, பின் என் போதத்தை (பசு ஞானத்தை) மட்டும் திருட தெரியாதோ என்று பாடினார்.

கோத்தயிர் வெண்ணை திருடன் கோல மருகா நறிய 
பூத்திருடன் தன் மதலாய் பொங்கு குறக் கோத்திரத்தோர்
பெண் திருடிச் சென்ற பெருந் திருடா என் போதம்
உண்டு திருடத் தெரியாயோ

கோத்தயிர் வெண்ணை திருடன் கோல மருகா - பசுவின் வெண்ணையைத் திருடிய கோபாலனாகிய திருமாலின் மருமகன்; 

நறிய பூத்திருடன் தன் மதலாய் - திருவீழிமிழலையில் திருமால் ஆயிரம் பூக்களைக் கொண்டு வழிபடும்போது அதிலிருந்து ஒரு பூ திருடிய சிவனாரின் பிள்ளையே; 

பொங்கு குறக் கோத்திரத்தோர் பெண் திருடிச் சென்ற பெருந் திருடா - கோபம் உடைய வேடர் குலத்தின் பெண்ணான வள்ளி நாயகியாரைத் திருடிச் சென்ற பெரும் திருடா

இவ்வாறு பாடிய இந்தப் பாடலை ஒரு காகிதத்தில் எழுதி தலையணையின் கீழ் வைத்தார் சுவாமிகள். உடனே யாரோ தன்னுடைய முதுகில் மெத்தென கைக்கொண்டு அடித்தது போல் உணர்ந்தார் சுவாமிகள். உடனே சுவாமிகள் "இறைவ! எளியேன் பாடிய பாட்டு திருவுளத்திற்குச் சம்மதம் இல்லை என உணர்த்துமாறு இதன் மேலும் அறிவிக்கப்படும் ஆயின் அதனைப் பரிகரித்து (கிழித்து) விட கடவேன்" எனப் சிந்தித்துப் படுத்துக் கொண்டனர். அவ்வித அறிவிப்பு ஒன்றும் ஏற்படவில்லை‌.  சுவாமிகளை முருகன் முதுகில் மெத்தென மொத்தியது அன்பினால் தட்டிக் கொடுத்தது போன்றே ஆகும்.

நண்பனின் பாராட்டினை உணர்ந்த  சுவாமிகள் மேலும் ஒரு பாடலில் மொத்த சிவ குடும்பத்தையும் கேலி செய்யும் விதமாகவும் அதே நேரத்தில் தனக்கு முத்தி தந்து ஆள வேண்டும் என்றவாறு ஒரு பாடல்  பாடினார்.

அன்னைக்கு அரைவலி அப்பற்குத் தலைவலி ஓர்
கொன்னறு மாதுலற்குக் கூனற் கை - மன் நெஞ்சு
குத்துடைய  அண்ணனுக்குக் கோட்டுவாய் பேச்சில்லா
முத்தி தந்து ஆள் சண்முகா

அன்னைக்கு அரைவலி - முருகனின் அன்னையார் உமாதேவியார், சிவபெருமானின் திருமேனியில் பாதி இடத்தில் இடப்பக்கம் உள்ளார். அதனால் அம்மைக்கு இடுப்பு வலி.

அப்பற்குத் தலைவலி - முருகனின் தந்தை  ஆகிய சிவபெருமான் தன்  தலையில் கங்கையைச் சுமந்துக் கொண்டு இருப்பதால் அவருக்கு என்றும் தலைவலி.

ஓர் கொன்னறு மாதுலற்குக் கூனற்கை - அச்சமற்ற மாமனாகிய திருமால் என்றும் சங்கைப் பிடித்தபடி உள்ளதால் அவருக்கு வளைந்த (கூன்=வளைவு) கை

மன் நெஞ்சு குத்துடைய (கூத்துடைய) அண்ணனுக்குக் கோட்டு வாய்  - நெஞ்சகத்தில் நிலைப்பெற்ற திருக்கூத்தினைச் செய்கின்ற அண்ணன் ஆகிய விநாயகர் வாயில் தந்தம் உடையவர் ஆதலால் அவருக்கு கோணவாய்

பேச்சில்லா முத்தி தந்து ஆள் சண்முகா - சண்முகனாகிய நீ பேச்சில்லா முத்தியைத் தந்து ஆள்

தாய், தந்தை, மாமன், அண்ணன் ஆகிய அனைவரும் நோயாளிகளாகவும் உடல்குறைபாடு உடையவர்களாகவும் இருக்கின்றனர். சண்முகனான நீயும் பேச்சில்லா முத்தியை தருபவன் ஆதலால் நீ ஓர் ஊமை போலும்.. . என்று சுவாமிகள் தன் நண்பனாகிய முருகனிடம் கேலி செய்து விளையாடிய நயம் எண்ணும் தோறும் மகிழத்தக்கது.

அடுத்த பதிவில் மேலும் சுவாமிகள் பாதுகாவலனாகவும் மருத்துவராகவும் சேவகனாகவும் தொண்டாற்றிய சிறப்பினைக் காணலாம்.

திருச்சிற்றம்பலம்

தொடரும்....