ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
கருணைக் கடலாம் நம் பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் ஒன்பான் சுவைகள் என்னும் இத்தொடர் கட்டுரையில், முதல் சுவையான நகைச்சுவையினைப் பற்றிச் சென்ற பதிவில் கண்டோம். இரண்டாவதாக உள்ள அழுகைச் சுவையினைப் பற்றிச் சிறிது காணலாம்.
அழுகைச் சுவையினை அவலச் சுவை என்றும் கூறுவர். இவ்வழுகை என்பது எவற்றால் ஏற்படும் என்று தொல்காப்பியர் பட்டியலிட்டு உள்ளார்.
விளிவில் கொள்கை அழுகை நான்கே
இளிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கினால் அழுகை ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். முதலில், இந்த ஒவ்வொன்றின் பொருளினை அறிவோம்.
- இளிவு - இதனை இழிவு என்றும் சொல்லுவர். மற்றவர்கள் தன்னை இழிபடுத்தும் போது ஏற்படும் அழுகை. உதாரணமாக, கால்கள் இல்லாத ஒருவரை நொண்டி நொண்டி என்று யாரேனும் அழைத்தால் அவருக்கு அழுகை ஏற்படும் அல்லவா?
- இழவு - இழப்புகளால் ஏற்படும் அழுகை. இவ்விழப்பு தன் அன்பிற்கு உரியவர்களின் இறப்போ, தம்முடைய பொருளினை இழப்பதோ எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் தோன்றும் அழுகையே இழவு எனப்படும்.
- அசைவு - இதனைத் தளர்ச்சி என்றும் கூறுவர். தன்னுடைய பழைய நிலையிலிருந்து தாழ்வதால் வரும் அழுகை. அது செல்வம், ஆரோக்கியம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக, கற்கோட்டை போன்று உடம்புடைய ஒருவன் திடீரென நோயுற்று பலவீனமான உடலுடன் மெலிந்து இருப்பான் என்றால் அவன் உள்ளம் வருந்தி அழும் அல்லவா?
- வறுமை - இல்லாமை. இதுவும் அழுகையைத் தரும்.
இளிவு:
பாம்பன் சுவாமிகள் பாடல்களின் இளிவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்கு ஓரிரு உதாரணங்களைக் காண்போம்.
சுவாமிகள் தாம் இம்மண்ணுலகில் வந்து பிறந்ததே தவக்குறைவினால் ஏற்பட்டது என்று வருந்தியுள்ளார். அப்படி பிறந்ததோடு அல்லாமல் கல் போன்ற கடின மனத்துடன் ஏன் பிறந்தேன் என்று வருந்துகின்றார். தன்னை கடையவரில் கடையவன் ( கீழ் மக்களில் கீழானவன்) என்று கடந்தவர்கள் (பெரியோர்கள்) கூறுமாறு உள்ளேனே என்று வருந்திப் பாடுகின்றார்.
கடையனெனக் கடந்தோர் கூறப்
புன் நெஞ்சோடு ஏன் பிறந்தேன் புண்ணியமொன்று
இல்லாத பொல்லேனுக்கும்
நல் நெஞ்சோடு அமரும் நிட்டை நல்குவையோ
அங்கண் எய்தி நளின பாதம்
என் நெஞ்சோடு இருக்க அருள் செய்வாயோ
சொல் இகல் வேல் இறையே அன்றே
(நல்குவையோ = கொடுப்பாயோ; அங்கண் எய்தி = அவ்விடத்தை அடைந்து; நளின பாதம் = தாமரை போன்ற திருவடி; இகல் வேல் இறையே = வலிமையான வேலுடைய கடவுளே)
நூல்: நான்காம் மண்டலம் - குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி - 29ஆம் பாடல்
பெரியவர்கள் தன்னைக் கீழானவன் என்று கூறிவிடுவார்களோ என்று சுவாமிகள் முருகனிடம் அழுது முறையிடும் இப்பாடல் இளிவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்கு உதாரணம் ஆகும். மேலும் ஒரு பாடலினைக் காணலாம்.
குமரகுருதாசன் என்ற பெயர் உடைய என்னை இவ்வுலக மக்கள் "இவன் குணம் இல்லாதவன்; இவன் அறிவில்லாதவன்; குற்றங்களுக்கே இருப்பிடமாக உள்ளான்; தேவ லோகத்தில் வாழ்வதற்குத் தேவையான புண்ணியச் செயல்கள் ஒன்றும் இல்லாதவன்" என்று இகழ்வதற்காகவோ அடியேன் பிரிவதற்கு அரிதான தாய், மனைவி, சுற்றத்தார் என அனைவரையும் விட்டு, மற்ற எல்லாவற்றையும் விட்டும், துறவு பூண்டு தனியேன் ஆனேன் என்று அழுது பாடுகின்றார்.
அறிவில்லான் கோதே உள்ளான்
அமரர் உலகினும் உய்ய அறம் இல்லான்
என மனுடர் அறைவதற்கோ
தமர் அரிய தாய் மனை மற்றெல்லாம் விட்டு
இங்ஙனமே தனியன் ஆனேன்
சமர அயில் பிடித்த தலைவா பிழைக்கு
மாறு அறியேன் சழக்கனேனே!
(கோதே உள்ளான் = குற்றமே உடையான்; அறம் இல்லான் = புண்ணியம் இல்லான்; அறைவதற்கோ = சொல்வதற்கோ; சமர அயில் = போர் செய்யும் வேல்; சழக்கனேன் = குற்றமுடையவன்)
நூல்: நான்காம் மண்டலம் - குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி - 22வது பாடல்
இந்தப் பாடலும் இளிவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
இழவு:
இனி இழவினால் ஏற்படும் அவலச் சுவைக்கான பாடல்கள் ஓரிண்டு இங்குச் சிந்திப்போம்.
சுவாமிகள் தம்முடைய தாயினை இழந்தார்; தந்தையையும் இழந்தார்; தமது குழந்தைகளை இழந்தார்; மனைவியையும் விட்டு துறவு பூண்டார். இவ்வுலகில் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு தொழிலினை செய்தே ஆக வேண்டும்; அதனையும் விட்டுவிட்டார்; இவற்றை எல்லாம் இழந்தாலும் உடலில் உற்ற நோயையோ பிறவி என்னும் நோயையோ இழக்கவில்லையே! அகப்பகைகளைக் கடக்கவில்லையே! துன்பினை அழிக்கும் வேற்பெருமானின் அன்பு நம்மை மறந்ததே! இனி நாம் கொள்ளும் நெறிதான் என்னே! என்று வருந்திப் பாடிய பாடல் கண்ணீரை வரவழைக்கும்.
சேய் இழந்தனம் தேசமும் இழந்தனம் திரவிய வினை நீத்தோம்
நோய் இழந்திலம் பகைமை கடந்திலம் நொசிவறு வேற்பெருமான்
நேயம் என்பது மறந்தது நாம் புகு நெறி எது புகல் நெஞ்சே!
(தாதையை இழந்தனம் - தந்தையை இழந்தோம்; இவண் இலை - இவ்விடம் இல்லை; திரவிய வினை - பொருளீட்டுவதற்காகச் செய்யும்தொழில்; நொசிவறு - துன்பத்தை அறுக்குகின்ற; புகல் நெஞ்சே - சொல் நெஞ்சே!)
நூல்: ஆறாவது மண்டலம் - ஸ்ரீமத் குமாரசுவாமியம் - நீதி விழைந்து இரங்கல் - 1வது பாடல்
இப்பாடல், இழவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பாடல் ஆகும்.
மேலும் ஒரு பாடல், சுவாமிகளுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் முனியாண்டியாப் பிள்ளை ஆவார். இவர் சுவாமிகளுக்குத் தமிழ் பயிற்றுவித்த ஆசிரியர் எனினும் சுவாமிகளிடத்தில் மிகுந்த தோழமையுடன் பழகியதாகவே தெரிகின்றது. ஏன் என்றால் சுவாமிகள் "என் ஆவிக்குச் (உயிருக்குச்) சரியாய் உள்ள நல் முனியாண்டியா பிள்ளை" என்று கூறுகின்றார். நமக்கு எப்பொழுதும் என்னுயிர் ஆசிரியர் என்று சொல்லும் வழக்கம் அவ்வளவாக இல்லை; ஆனால் என்னுயிர் நண்பன் என்று கூறும் வழக்கம் உண்டு. நண்பர்கள் எப்பொழும் ஒத்த கருத்து உடையவர்களாக இருப்பார்கள். சுவாமிகள் கூறிய சொற்றோடரைப் பார்க்கும் போது, சுவாமிகளும் முனியாண்டியாப் பிள்ளையும் நண்பர்களாகவே இருந்தார்கள் என உணர முடிகின்றது. அப்படிப்பட்ட முனியாண்டியாப் பிள்ளையை தம்முடைய இருபது வயதில் இழந்த சுவாமிகள், அந்தச் சோகத்தினைக் கீழ்வரும் பாடலில் எப்படி வெளிப்படுத்தி உள்ளார் என்பதைக் காண்போம்.
பாதமே புகழும் தனியேன் உனை
மேவிக் கொள்ளும் விர்த்தாந்தம் எலாம் நுவல்
வேத நூல் பல ஆய விளம்ப என்
ஆவிக்குச் சரியாய் உள நன் முனி
யாண்டியாப் பிள்ளையைப் பிரிந்து
கா உற்றுத் திரியும் படி ஆயினேன்
கர்த்தனே கந்த மாதன மூர்த்தியே
நூல்: முதல் மண்டலம் - அவனியாசை - 3வது பாடல்
இதன் பொருள்: மனிதரைப் பாடிப் பொருள் பெற்று பிழைப்பவரைப் போல் இல்லாமல் உன் திருவடியையே புகழ்ந்து பாடும் அடியேன், உன்னை அடைவதற்கு உரிய செய்திகளை எல்லாம் சொல்லும் வேத நூல்கள் பலவற்றைக் கூற, (ஊக்கமளித்த) என் உயிருக்கு நிகரான நல்ல முனியாண்டியாப் பிள்ளையைப் பிரிந்து இவ்வாறு வருந்தித் திரியும்படி ஆயினேன்! கடவுளே! கந்தமாதனத்தில் எழுந்தருளி உள்ள மூர்த்தியே!
இப்பாடலும் இழவினால் ஏற்படும் அவலச் சுவைக்கான எடுத்துக்காட்டாகும்.
அசைவு:
இனி அசைவினால் ஏற்படும் அழுகைச் சுவைக்கான ஒரு பாடலினைக் காணலாம்.
சுவாமிகள் முத்திப் பெறுவதற்குச் சில காலங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஸ்ரீமத் குமாரசுவாமியம் என்னும் நூலில், இடையறாது நிற்க விழைதல் என்னும் பகுதியில், முருகப் பெருமான் தன் வாழ்நாளில் உற்ற ஒவ்வொரு ஆபத்திலும் தன்னைக் காப்பாற்றியதையும் பல் வேறு சந்தர்பங்களில் அருள் செய்த பெருங்கருணையையும் எண்ணியெண்ணி மகிழ்ந்து பின் இற்றைப் பொழுது அவ் வேற்பெருமான் வந்து அருளாதது ஏன் என்று வாடி அழுகின்றார்.
என் வாழ்வின் ஆதாரமாய் உள்ளவனே! திருப்புகழ் பாடிய தமிழனின் கடவுளே! ஒளிரும் குகேசனே! அடியேன் பிரப்பன் வலசையில் தவம் இயற்றிய போது ஆறு நாட்கள் முடிந்து ஏழாவது நாள் அன்று, பகை, துன்பம், குற்றம் என எதுவும் அணுக முடியாத வடிவத்துடன் வந்து தகராலய இரகசியத்தை உபதேசித்தாய்! அவ்வுபதேசத்தைப் பெற்று முப்பத்து ஐந்து நாட்கள் தவம் முடித்து எழவும் அருளினாய். ஆனால் இன்று கொடியவனைப் போல் என்னை நீ கழிப்பது ஏன்? என்று பாடியுள்ள பாடல்:
அணுகு நாள் இரு முனிவரோடு இகல்
உறுகண் ஏதம் இல் வடிவன் ஆகி வந்து
உரைத்த உன்பறை பிடித்த என்றனை
இறுதி வைகல் முப்பதுடன் ஐந்திலே
எழ அயர்ந்த ஒர் களைகண் இங்கு எனைத்
தறுகணாளர் போல் கழிப்பது என் புகழ்த்
தமிழன் ஈசனே அவிர் குகேசனே
(இகல்=பகை, உறுகண்=துன்பம், ஏதம்=குற்றம், இல்=இல்லாத, உரைத்த உன் பறை=இதுவே தகராலய இரகசியம்; தறுகண்ணாளர் = கொடியவர்; களைகண் = ஆதாரமாய் உள்ளவனே)
நூல்: இடையறாது நிற்கவிழைதல் முதற்பத்து – 10 (ஶ்ரீமத் குமாரசுவாமியம்)
முருகப் பெருமான் பெருங்கருணை முன்பு பெற்று மகிழ்ந்ததும் அவ்வருள் இன்று கிட்டாமையால் சுவாமிகள் வருந்திப் பாடியதும் அசைவினால் ஏற்படும் அவலச் சுவைக்கு எடுத்துக்காட்டாகும்.
வறுமை:
இல்லாமை என்னும் வறுமை மிகவும் கொடியது. இவ்வுலகில் அனைத்தையும் துறந்த சுவாமிகள் பொருள் செல்வம் இல்லாமையை எண்ணி ஒருபோதும் வருந்தியதே இல்லை. அதனை முற்றிலும் வெறுக்கவும் செய்தார். முருகனின் அருளாகிய செல்வத்தை நிரம்பப் பெற்றார் சுவாமிகள். ஆனால் சுவாமிகளுக்கு அது போதவில்லை. அருளில் வறுமை உடையதாக எண்ணி வருந்தி சுவாமிகள் பாடிய ஒரு பாடலினைக் காணலாம்.
மறுகி வாடுவது அலாது உழல்
மனது சித்திர விளக்கெனச் சமைய
மாத்திரைப் பொழுதும் அறிகிலேன்
சிறுவனைச் சிறிது அணைக்க என்று உனது
திருவுளத்து இனிது இருந்திடில்
சித்தம் இப்படி மயங்குமோ புரையில்
செல்வம் என்னையும் ஒறுக்குமோ
வறுமை (அருள் இல்லாமை) என்னும் ஓர் நோயினால் மாறுபட்டு மனம் சுழன்று வாடுதல் அல்லாமல் உழல்கின்ற மனம் ஓவிய விளக்கு போல அசையாமல் அமைய ஒரு மாத்திரை (கணப் பொழுது) அளவு நேரம் கூட அறிகிலேன். சிறுவனை சிறுது அணைத்து கொள்ள திருவுளம் இனிது இருக்குமானால் அடியேனுடைய மனம் இப்படி மயங்குமோ? குற்றம் இல்லாச் செல்வம் அடியேனையும் தண்டிக்குமோ? என்று பாடியுள்ளார்.
இப்பாடல் வறுமையால் வரும் அழுகைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
இதுவரையிலும் சுவாமிகள் பாடலில் அமைந்துள்ள அழுகைச் சுவையினைப் பற்றி சிறிது சிந்தித்தோம். குருவருளால் இளிவரல் என்னும் அடுத்த சுவையினை அடுத்த பதிவில் காணலாம்.
திருச்சிற்றம்பலம்!