ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக நாமாவளி என்ற தோத்திரப் பாடல், சுவாமிகளின் 32வது வியாசமாகிய குரு சிஷ்ய சம்பவ வரலாற்று வியாசத்தின் நிறைவுப் பகுதியில், குருநாதரின் உரையை செவிமடுத்த சீடன், ஆங்கு ஆனந்த பரவசத்தில் அழுந்தினவனாய்த் தனது தருக்கம் ஒழிந்து சண்முகப் பிரமத்தைத் தானே விதந்து தோத்தரிப்பதாய் அமைந்து உள்ளது.
நாமாவளி = நாம+அவளி. நாமம்=திருப்பெயர்கள்; அவளி=வரிசை; ஆறுமுகக் கடவுளின் திருப்பெயர்களை வரிசையாகச் சொல்லும் தோத்திரப் பாடலாகும்.
சண்முக நாமாவளி என்ற இத்தோத்திரப் பாடல், பாம்பன் சுவாமிகள் அருளிய 6666-னில் சேராது. ஏனெனில் இப்பாடல் உரைநடை நூலான வியாசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதுபோன்று சில அருமையான காப்பு, வாழ்த்துப் பாடல்கள் வியாசங்களில் காணப்படுகின்றன.
தோத்திரம்
ஹரஹர சிவசிவ வென்முக நாதா
ஹரஹர சிவசிவ பரம விலாசா
ஹரஹர சிவசிவ வபய குகேசா
அருண கிரிபரவு மருணெறி நாதா
தரும வுறுவர்புகழ் சததள பாதா
அரிபிர மாதிக டொழுவடி வேலா
திருவடி நாரவ ருளமுறை சீலா
எனினிய குருநித மெணுமதி யீசா
சனனவெய் தறவளி தருபர மேசா
பாசா பாச பாப விநாசா
மாசே றாத மான நடேசா
போஜா வாஜா பூஜகர் நேசா
தேஜா ராஜா தேவஸ மாஜா
தீஞ்சுவை யருளொரு திருவா ரமுதே
ஓம் சரவணபவ வுருவே யருவே
பொருள்:
ஹர ஹர சிவசிவ சண்முக நாதா - ஹர ஹர = அரனே! அரனே! அரன் என்றால் அழிப்பவன் அதாவது தீமைகளை அழிப்பவன் என்று பொருள். சிவ சிவ = சிவனே! சிவனே! சிவன் என்றால் நன்மையைச் (மங்கலத்தைச்) செய்பவர் என்று பொருள். அந்த நன்மை, வீடுபேறாகிய முத்தி ஆகும். சண்முக நாதா = ஆறுமுகத் தலைவனே!
ஹரஹர சிவசிவ வென்முக நாதா - என் முக நாதா = என்னுடைய முதன்மையானத் தலைவனே என்று பொருள் கொள்ளலாம். முகம் என்பது பல பொருள்களைத் தரும். அவற்றுள் இடம், காரணம், நோக்கம், தியானம் என்ற பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டால்;
இடம் - என் இடத்தில் வீற்றிருக்கும் தலைவனே;
காரணம் - என்னுடைய காரணப் பொருளாய் உள்ள தலைவனே;
நோக்கம் - அடியேனின் நோக்கமாய் உள்ள தலைவனே;
தியானம் - என்னுடைய தியானப் பொருளாகிய தலைவனே;
என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். பாம்பன் சுவாமிகள் சேந்தன் செந்தமிழில் முகத்திற்கு - முன், முதன்மை, தொடக்கம் என்று பொருள் கூறி உள்ளதால் என்னுடைய முதன்மையானத் தலைவனே என்பதையே முக்கிய பொருளாகக் கொள்ளலாம்.
ஹரஹர சிவசிவ பரம விலாசா - பரம = பரம் பொருளே! விலாசா - அலகிலா திருவிளையாடல்களைச் செய்பவனே! விலாசம் என்பதற்கு அழகு என்றும் பொருள். பரம விலாசா என்பதைத் தொடர் சொல்லாகக் கொண்டால் மேலான (பரம்=மேல்) திருவிளையாடல்களைச் செய்பவனே என்றும்; மேலான அழகனே என்றும் பொருள்.
ஹரஹர சிவசிவ வபய குகேசா - அபய = தஞ்சம் என்று அடைந்த உயிர்களுக்கு அடைக்கலம் அளிப்பவரே! குகேசா = ஆன்மாக்களின் இருதயக் குகையில் வீற்றிருக்கும் ஈசனே!
அருணகிரி பரவு அருள் நெறி நாதா - அருணகிரி நாத ஆனந்த பராபரர் துதிக்கும் அருள் நெறியின் தலைவனே!
தரும வுறுவர்புகழ் சததள பாதா - அறத்தின் வடிவான நல்லோர்கள் புகழ்கின்ற, (சததள=)ஆயிரம் இதழ் தாமரையை ஒத்த திருவடியை உடையவனே!
அரி பிரமாதிகள் தொழு வடி வேலா - திருமால் பிரமர் முதலான (பிரம ஆதிகள்=பிரம்மன் முதலானவர்கள்) அனைவரும் தொழுது வணங்கும் அழகிய வேலை உடையவனே;
திருவடி நாரவர் உளம் உறை சீலா - அத்தகைய (ஆயிரம் இதழ் தாமரையை ஒத்த திருவடி) திருவடிகளில் மீது அன்பு (நார் = அன்பு; =நாரவர்=அன்புடையோர்) கொண்டவர்களின் உள்ளத்தையே இருப்பிடமாகக் கொண்ட நல்லொழுக்கம் (சீலம்=நல்லொழுக்கம்) உடையவனே!
என் இனிய குரு நிதம் எ(ண்)ணு மதி ஈசா - என்னுடைய இனிமையான குருவாகிய விவேக பூரணர் (நமக்கு பாம்பன் சுவாமிகள்) தினமும் நினைவில் வைத்து எண்ணி வணங்குகின்ற ஈசனே!
சனன வெய்து அற அளி தரு பரமேசா - பிறப்பு என்னும் வெம்மையை (வெய்து=வெம்மை) அறப்பதற்கு (நீக்குவதற்கு) அன்பு (என்னும் குளிர்ச்சியை) தரும் பரம ஈசனே!
பாசா பாச பாப விநாசா - பாசாபாச =பாச + அபாச என்று பிரித்து பொருள் காணலாம். பாசமாகிய பற்றுகளில் இருந்து பற்றற்று (அபாச= விருப்பமின்மை) இருப்பவன்; பாப விநாசா = (உயிர்களின்) பாவத்தை அழிப்பவனே!
மாசு ஏறாத மான(ச) நடேசா - குற்றமற்றவர்கள் சிந்தனையில் (மானசம்= எண்ணம்; மானச என்பது இங்கு கடைசி எழுத்தாகிய 'ச' இல்லாமல் மான என்று வந்துள்ளது. இதற்கு கடைக்குறை என்று இலக்கணம் கூறுவர்) நடனம் செய்கின்ற ஈசனே!
போஜா வாஜா பூஜகர் நேசா - போஜன் என்றால் இயற்கை நலன்களை உடையவன் என்று பொருள்; வாஜா என்பதற்கு அழுக்கற்றவன் அதாவது குற்றமற்றவன் என்று பொருள். இயற்கை நலம் உள்ளவனே! அழுக்கு அற்றவனே! தன்னை பூசிப்பவர்களிடம் அன்பாய் இருப்பவனே!
(பூசகர் = பூசிப்பவர்; நேசம் = அன்பு)
தேஜா ராஜா தேவ ஸமாஜா - தேஜா = ஒளிவடிவானவனே; ராஜா = அனைத்தையும் ஆள்பவனே; தேவ சமாஜா = தேவர்களின் (சமாசம் = கூட்டம்) கூட்டத்தைச் சேர்ந்தவனே; தேவ சேனாதிபதி என்ற நாமத்தைக் கருதுக.
தீஞ்சுவை அருள் ஒரு திருவார் அமுதே - (தீஞ்சுவை = இனிய சுவை; திருவார்= தெய்வத்தன்மை நிறைந்த;) இனிய சுவையாகிய பேரின்ப சுவையைத் தந்து அருளும் தெய்வத் தன்மை நிறைந்த அமுதமே! இது முத்தி தருவதைக் குறித்தது.
ஓஞ் சரவணபவ உருவே அருவே - ஓம் சரவணபவ என்ற மகா மந்திரத்திற்கு உரியவனே! உருவ நிலையில் வழிபடும் அடியார்களுக்குத் தடத்த நிலையில் (உருவத்துடனே) அருள் புரிந்து பின் சொருப நிலையிலும் (அருவமாகவும்) அருள்புரிபவனே!!
திருச்சிற்றம்பலம்!
குறிப்பு: அடியேனின் சிற்றறிவில் எழுந்த இவ்வுரையில் ஏதேனும் குற்றங்கள் இருப்பின் சுவாமிகளும் அவர்தம் அடியார்களும் பொறுத்து அருளி ஆற்றுபடுத்த வேண்டுகின்றேன்.
