ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
ஆதரம் பயில் ஆருரர் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருமுறைகளையும் அருள்பேறுகளையும் எண்ணி எண்ணி பாம்பன் சுவாமிகள் மனம் நெகிழ்ந்துள்ளார் என்பதை நம்மால் அறிய முடிகிறது. சுந்தர மூர்த்தி சுவாமிகளின் குருபூசைத் திருநாளை ஒட்டி (27.07.2020) இங்கு சிலவற்றினைக் காண்போம்:
ஆதரம் பயில் ஆருரர் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருமுறைகளையும் அருள்பேறுகளையும் எண்ணி எண்ணி பாம்பன் சுவாமிகள் மனம் நெகிழ்ந்துள்ளார் என்பதை நம்மால் அறிய முடிகிறது. சுந்தர மூர்த்தி சுவாமிகளின் குருபூசைத் திருநாளை ஒட்டி (27.07.2020) இங்கு சிலவற்றினைக் காண்போம்:
பாம்பன் சுவாமிகள் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் பெயரைக் குறிப்பிடும் போது "முருகு கிளர் ஆரூரர்", "அழகுடையான்", "சுடர் பரவைக்கு இனியார்" என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.
பாம்பன் சுவாமிகள் திருவொற்றியூரில் நடைபெறும் மகிழ மரத்தடி சேவையில் கலந்துக் கொண்டு வழிபட்ட குறிப்பு அவர் தம் வரலாற்று நூலிலும் காணலாம்.
சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தலையில் சிவபெருமான் சேவடிகளை வைத்தது போல் தன் தலை மேலும் அந்த சேவடி என்கின்ற பூவைச் சூட்ட வேண்டும் என்று பாடியுள்ள பாடல்:
"சுந்தரத்தின் முடியிலடி சூட்டியாட் கொண்டதுபோல்
என்றனுக்குஞ் சேவடிப்பூ விரண்டினையுஞ் சூட்டாயோ"
என்றனுக்குஞ் சேவடிப்பூ விரண்டினையுஞ் சூட்டாயோ"
முத்தி நிலைகளைப் பற்றி பாம்பன் சுவாமிகள் பேசும் போது, தூல உடம்புடனே முத்தி அடைவது உண்டு என்பதை சுவாமிகள் சுந்தரரையும் சேரமான் பெருமானையும் வைத்து விளக்குகின்றார்.
"-----------------------------------சுந்தரர் சேரலன் தூலமுடன்
கயிலாயஞ் சேர்ந்தது போல்நனி சேர்வதும் காசில்அருள்
செயலாளர் சேர்முத்தி என்னலாம் ஓம் சிவ தேசிகனே"
கயிலாயஞ் சேர்ந்தது போல்நனி சேர்வதும் காசில்அருள்
செயலாளர் சேர்முத்தி என்னலாம் ஓம் சிவ தேசிகனே"
சமுதாயத்தில் என்றும் உள்ள பிரச்சனை குலம் தாழ்த்தி உயர்த்தி பேசுதல் என்பது தான். இந்த பிரச்சனையைப் பற்றி சுவாமிகள் பேசும் இடத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையை வைத்து தீர்வு கூறிய முறையைச் சிந்திப்போம்:
வடமொழியில் உள்ள நான்கு வேதங்களையும் படித்து உணர்வதற்கு இழிவான மரபினர் என்று கூறப்படுபவர்களுக்கு உரிமை இல்லை என்று கூறுவதைச் சுவாமிகள் மடமை என்று குறிப்பிடுகிறார்.
துன்பங்களைத் தகர்க்கவல்ல பத்திநெறியையும் ஞான நெறியையும் விரித்துக் கூறும் இனிய தமிழ் நூல்களும் பாடல்களும் இவர்களுக்கு இல்லையோ? என்று சுவாமிகள் வினவுகின்றார். ஒளிப் பொருந்திய பரவை நாச்சியாருக்கு இனியவரான சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்படும் மெய்யடியார்கள் எந்த குலம்? என்று சுவாமிகள் வினவுகின்றார்.
குல பேதம் பேசும் அறியாமைகளை விலக்கி அறிவால் உய்த்து உணர்வீர் என்று சொல்லும் மேலான அறிஞர்கள் போற்றி துதிக்கும் பெரிய குமரன் என்னை ஆட்கொண்டு அருள்வான் என்று பாடியுள்ளார். அந்தச் சந்த மிகுந்த திருப்பாடல்:
தனதன தத்ததனா தனதன தத்ததனா
தனதன தத்ததனா தனதன தத்ததனா
தனதன தத்ததனா தனதன தத்ததனா
வடமொழி யிற்சதுமா மறைபயி றற்கிழிவா
மரபுளர் கட்கதிகா ரமிலையெ னச்சொலினூம்
இடரறு பத்திமைஞா னமிவைகள் சொற்றிடுநூ
லினியத மிழ்க்கவியா திகளில வர்க்கிலையோ
சுடர்பர வைக்கினியா ரடியவர் மெய்ப்பெயரே
சொனபதி கத்திடையே யுளர்குல மெக்குலமா
மடமதொ ழித்துணர்வா லுணர்திரெ னச்சொலுமேன்
மதியர்ப ழிச்சுமகா குமரனெ னைக்கொளுமே
மரபுளர் கட்கதிகா ரமிலையெ னச்சொலினூம்
இடரறு பத்திமைஞா னமிவைகள் சொற்றிடுநூ
லினியத மிழ்க்கவியா திகளில வர்க்கிலையோ
சுடர்பர வைக்கினியா ரடியவர் மெய்ப்பெயரே
சொனபதி கத்திடையே யுளர்குல மெக்குலமா
மடமதொ ழித்துணர்வா லுணர்திரெ னச்சொலுமேன்
மதியர்ப ழிச்சுமகா குமரனெ னைக்கொளுமே
சுந்தரரின் பதிக அமைப்பில் மனந் தோய்ந்த சுவாமிகள் அதுபோன்றே சில பதிகங்களை அமைத்து ஆறுமுக சிவனாருக்கு மாலையாகச் சூட்டியுள்ளார்.
சுந்தர மூர்த்தி சுவாமிகளின் மற்றுப் பற்று எனக்கு இன்றி... என்ற பதிகத்தில் பாடல் தோறும் நான் மறக்கினும் சொல்லும் நா நமச் சிவாயவே என்று பாடிய படியே திருவலங்கற்றிரட்டில் திருச்சீரலைவாய் பதிகத்தில் பாம்பன் சுவாமிகள் "சாற்றிடும் நா சரவண பவவே" என்று பாடியுள்ளார்.
சுந்தரரின் இந்த பதிகத்திலேயே, இறைவனை எண்ணாத நாள்களை "அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள்", "மறந்திட்ட நாள்", "ஓவு நாள்", "உணர்வு அழியும் நாள்", "உயர் பாடை மேல் காவு நாள்" என்று நாள்களை பட்டியல் இட்டது போல் பாம்பன் சுவாமிகள் ஒரு முழுபதிகத்திலும் நாள் என்ற சொல் 60 முறை ஒலிக்கும் படி நாளறுபது என்று ஆறாவது மண்டலத்தில் பாடியுள்ளார்.
சுந்தர மூர்த்தி சுவாமிகள் தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே என்ற பதிகத்தில் என்னே என்னே என்று அடுக்கிக் கொண்டே செல்வார்:
தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே
அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே
அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே
மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனேே
சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே
அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே
அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே
மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனேே
சுவாமிகளும் இது போன்றே என்ன என்ன என்று ஒரு பாடல் பாடியுள்ளார்
கங்கையென் சுதனே யென்னக்
கார்த்திகை மதலா யென்னச்
சங்கரி மகனே யென்னச்
சங்கரன் குருவே யென்ன
மங்கைய ரிருவோ ருந்தூ
மணத்திருத் தலைவா வென்னப்
புங்கவர் பரமா வென்னப்
பொலிசிவ னடிபோற் றுவலே
கார்த்திகை மதலா யென்னச்
சங்கரி மகனே யென்னச்
சங்கரன் குருவே யென்ன
மங்கைய ரிருவோ ருந்தூ
மணத்திருத் தலைவா வென்னப்
புங்கவர் பரமா வென்னப்
பொலிசிவ னடிபோற் றுவலே
சுவாமிகள் இது போன்று அருளாளர்களின் பாடல்களில் மனம் தோய்ந்தும் பாடி இருக்கலாம் அல்லது முருகனின் அருளால் அவரை அறியாமலேயும் பாடி இருக்கலாம். ஏனென்றால் குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி என்ற நூலில், மக்களில் சிறந்துள்ளோர் (மகான்களின்) கருத்துகள்/சொற்கள் தன்னுடைய பாடல்களில் தன்னை அறியாமலேயே அமைந்து உள்ளதாக கூறி உள்ளார்.
"மக்களிற் சிறந்துளோர் வழங்கியுள்ள சொற்கள் என்
தொக்க நூல்உள் நான் அறிந்திடா வணம் தொடர்ந்தது அரோ"
தொக்க நூல்உள் நான் அறிந்திடா வணம் தொடர்ந்தது அரோ"
*தொக்க நூல்- நூல் தொகுதி (ஆறு மண்டல நூல்கள்)
இங்கு அடியேன் சிலவற்றை மட்டுமே பதிவிட்டு உள்ளேன். ஆழ்ந்து நோக்கினால் இன்னும் பல குறிப்புகள் காணக் கிடைக்கும் என்று கூறி இவ்வளவில் முடிக்கின்றேன்.
திருச்சிற்றம்பலம்


