ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
ஞான ஞாயிறு பாம்பன் சுவாமிகளைப் பற்றி மொழி ஞாயிறு தேவ நேய பாவாணர் கூறியதைப் பற்றிப் பார்க்கலாம்:
மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தேவ நேய பாவாணர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியர் வ. சுப்பிரமணிய பிள்ளைக்கு 17.08.1971 அன்று எழுதிய கடிதத்தில் உள்ள வரிகள்:
“பாம்பன் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எழுதிய ‘சேந்தன் செந்தமிழ்’ பார்க்கவில்லை. 1906இல் நான் நாலாட்டைச் சிறுவனாயிருந்த போதும் அடிகட்குப் பத்தாண்டு முன்பும் அவர்கள் தனித்தமிழ்க்காப்பு நூல் முதன்முதலாக எழுதினார்களென்பது மிக மிக மெச்சத்தக்கதே. உடனே ஒரு படி வாங்கி அனுப்புக. தமிழர் வரலாற்றில் அவர்களைப் பாராட்ட வேண்டும். தமிழ் வரலாறு அச்சிட்டபோது தாங்கள் இச்செய்தியைத் தெரிவிக்க வில்லையே” (17.8.71 வ.சு.)
இந்த கடிதத்தில் நாலாட்டை என்பது நான்கு வயது என்றும்; அடிகட்கு பத்தாண்டு முன்பு என்பது மறைமலை அடிகளை குறித்தது. அதாவது மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கம் தொடங்கியது 1916. சுவாமிகள் சேந்தன் செந்தமிழ் அருளியது 1906. அதனால் தான் அடிகட்கு (மறைமலை அடிகளுக்கு) பத்தாண்டு முன்பும் என்று கூறிப்பிட்டு உள்ளார்.
திருச்சிற்றம்பலம்