Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Sunday, 12 April 2020

மனிதனின் வாழ்நாட்கள்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

மனிதனின் வாழ்நாட்கள்:

கருணைக் கடலாய் விளங்கும் நம் பாம்பன் சுவாமிகள் 'திருவருட்கடல்'  என்னும் தலைப்பில் மனிதனின் வாழ்நாள்கள் எப்படி வீணாகக் கழிகின்றன என கணக்கிட்டு 'எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்' ஒரு பாடல் பாடி உள்ளார்.


"ஆண்டைய ராயுளொர்  நூற்றினும் மேலிலை
     யதிலரைக் கூறுநித் திரைக்காங்
காண்டிற மதிற்பதி னைந்திள மையிற்போங்
   கதிகிளர் சரைக்குமவ் விதம்போந்
தூண்டுமற் றிருபதி னோய்முத லானவை
   தொடர்வுறு மிதற்குளெண் ணறுநூல்
ஏண்டர வுணர்வதெங் கறிவதெங் கடைவதெங்
  கெனைக் கொளுந் திருவருட் கடலே"

ஆண்டையர் – மனிதர்

பாடலின் பொருள்:

என்னை ஆட்கொள்ள உள்ள திருவருட்கடலே ! மானுடரின் வாழ்நாள் நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லை. இதில் பாதிப்பகுதி உறக்கத்தில் கழிகிறது; பதினைந்து ஆண்டுகள் இளமைப் பருவ நிலைக்கு; பதினைந்து ஆண்டுகள் நரைநிலைக்குரிய முதுமைப் பருவத்துக்கு; நோய் முதலானவற்றுக்கும் மற்றுமுள்ள துன்பங்களுக்கும் ஆட்படிட்டிருக்கும் நிலைக்கு இருபது ஆண்டுகள். இவ்வாறு உள்ள நிலையில் எண்ணற்ற நூல்களை உறுதிநிலை அடையுமாறு நன்கு உணர்ந்து கொள்வது எவ்வாறு? இப்படி இருந்து, எந்த உயர்கதியை அடைய முடியும்?


திருச்சிற்றம்பலம்

Saturday, 11 April 2020

அடியார்க்கு பேரின்பம் தருவன

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

அடியார்க்கு பேரின்பம் தருவன

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் முருகனை கண்ணுதலான் (நெற்றிக் கண்ணுடைய சிவன்) தந்த கரும்பு என்று கூறுகின்றார்.

அந்த கரும்பு, யானை விரும்பி உண்ணுவது. தெய்வ-யானை அம்மை விரும்பி உண்ணும் கரும்பாக முருகன் உள்ளார் மற்றும் வள்ளி கொடி பற்றிப் படரவும் கொழுகொம்பு போன்ற கரும்பாக உள்ளார்.

இவ்விரு செயல்களை எண்ணும் தோறும் அடியார்களுக்கு இன்பு ஊறும் என்று சிதம்பர சுவாமிகள் பாடி உள்ளார்.

பாடல் கீழே:

கடவுட் பிடிக்கோர் களிப்பாகும் வள்ளிக்
கொடி சுற்றத் தானும் குலாவும் - அடியார்க்கே
எண்ணுதொறும் உள்ளத்தில் இன்பூறும் போரூரில்
கண்ணுதலான் தந்த கரும்பு

திருச்சிற்றம்பலம்

நனி கூவியும் வரக் கண்டிலேன்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

நனி கூவியும் வரக் கண்டிலேன்:

பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானை நன்றாகக் கூவி அழைத்தார்.  ஆனால்,  கருணையே வடிவான முருகன் ஏதோ காரணத்தால் அங்கு வரவில்லை. சுவாமிகள் சற்றே சிந்தித்தார். முருகன் இந்நேரம் இங்கு வாராது இருக்க காரணம் இதுவோ இதுவோ என்று எண்ணி எண்ணி ஸ்ரீமத் குமாரசுவாமியத்தில் வேட்கை காண்டத்து பகுதியில்  'வேற் கடவுள் வேட்கை' என்னும் தலைப்பில் பத்து பாடல்களை நயம்பட பாடியுள்ளார். இப்பாடல்களில் பத்து காரணங்களையும் பட்டியல் இட்டு உள்ளார். அவற்றுள் இக் கால சூழலுக்கு ஏற்றவாறு உள்ள 8 ஆம் பாடல் அடியார்களின் உள்ளத்தை உருக்கும்.

சீர்த்த தம் அடியார்கட்கு இங்கு முற் தீவினை பயனாகவே
ஆர்த்த நோய்கள் அழிக்கத் தந்திர மந்திர செய நீர்களை
வார்த்து நன்கு செய் மாமருந்திடு வேலை மேற்கொண்டு உளார் கொல்லோ
கூர்த்த வேல் பிடித்தாரை நான் நனி கூவியும் வரக் கண்டிலேன்

பெருமை உடைய என் அடியார்கள், முன் வினையின் காரணமாக நோய் உற்றார்கள். அந்நோய்களை அழிக்கவும், தம் அடியார்களை காக்கவும் மந்திர தந்திரம் (ஔடத சித்திகள்) செய்து நீர்களை வார்த்து மாமருந்து ஒன்று செய்து தன் அடியார்களுக்கு தரும் வேலையை அந்த வேலவன் மேற்கொண்டு உள்ளானோ? நான் நன்றாக கூவியும்‌ இங்கு வரவில்லையே என்று பாடிய நயம் என் என்று சொல்ல!!!!

திருச்சிற்றம்பலம்