ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
மனிதனின் வாழ்நாட்கள்:
கருணைக் கடலாய் விளங்கும் நம் பாம்பன் சுவாமிகள் 'திருவருட்கடல்' என்னும் தலைப்பில் மனிதனின் வாழ்நாள்கள் எப்படி வீணாகக் கழிகின்றன என கணக்கிட்டு 'எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்' ஒரு பாடல் பாடி உள்ளார்.
"ஆண்டைய ராயுளொர் நூற்றினும் மேலிலை
யதிலரைக் கூறுநித் திரைக்காங்
காண்டிற மதிற்பதி னைந்திள மையிற்போங்
கதிகிளர் சரைக்குமவ் விதம்போந்
தூண்டுமற் றிருபதி னோய்முத லானவை
தொடர்வுறு மிதற்குளெண் ணறுநூல்
ஏண்டர வுணர்வதெங் கறிவதெங் கடைவதெங்
கெனைக் கொளுந் திருவருட் கடலே"
ஆண்டையர் – மனிதர்
பாடலின் பொருள்:
என்னை ஆட்கொள்ள உள்ள திருவருட்கடலே ! மானுடரின் வாழ்நாள் நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லை. இதில் பாதிப்பகுதி உறக்கத்தில் கழிகிறது; பதினைந்து ஆண்டுகள் இளமைப் பருவ நிலைக்கு; பதினைந்து ஆண்டுகள் நரைநிலைக்குரிய முதுமைப் பருவத்துக்கு; நோய் முதலானவற்றுக்கும் மற்றுமுள்ள துன்பங்களுக்கும் ஆட்படிட்டிருக்கும் நிலைக்கு இருபது ஆண்டுகள். இவ்வாறு உள்ள நிலையில் எண்ணற்ற நூல்களை உறுதிநிலை அடையுமாறு நன்கு உணர்ந்து கொள்வது எவ்வாறு? இப்படி இருந்து, எந்த உயர்கதியை அடைய முடியும்?
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment