ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
முருகவேளை முழுவதும் கருதும் யோகம் கமழும் பாம்பன் சுவாமிகள், எய்தரிய வீடு அளிக்கும் முருகப் பெருமானிடம் தாயைப் போலவும், தந்தையைப் போலவும், நண்பனைப் போலவும் காதலித்தத் திறத்தினைச் சென்ற பதிவில் கண்டோம். இனி சுவாமிகள் ஒரு பாதுகாவலனாகவும், மருத்துவராகவும், சேவகனாகவும் தொண்டாற்றிய அன்பு நெறியினைக் காணலாம்.
சைவ நெறி என்பது சிவத்துடன் சம்பந்தம் ஆவதை உணர்த்துவது. இறைவன் பன்னெடுங் காலமாக இந்த மானிட இனத்தைப் பக்குவப்படுத்தி சமைத்து அனைவருக்கும் ஏற்ற வகையில் பொதுவாக கொள்கைகளைக் கட்டமைக்கச் செய்து உருவானதே சைவ சமயம். இந்தச் சைவ நெறியின் மீது அவதூறுகளும், சைவ கடவுளர்களை இழிவுபடுத்தியும் சில வைணவர்கள் அடாச் செய்கைகளில் இறங்கினர். நம் சுவாமிகள் எவ்வாறு அறத்தின் வழியில் நின்று போராடிக் காத்தார் என்பதனை இங்கு சுருக்கமாகக் காணலாம். 1904-ஆம் ஆண்டு, சுவாமிகள் சிதம்பரத்திற்கு அருகாமையில் இருந்த பின்னத்தூர் (இவ்வூர் மாணிக்கவாசக சுவாமிகள் ஊமைப் பெண்ணை பேச வைத்த தலம்) என்னும் ஊரில் வசித்த போது, அங்குள்ள சில வைணவர்கள், சிவபெருமானையும் சிவனடியார்களையும் சிவசின்னங்களையும், சிவாலயத்தையும் இழித்துக் கூறி அவர்தம் சமயமான வைணவமே சிறந்தது எனப் போதித்து அவர்களை வைணமதத்து உள்படுத்தி வந்தார்கள். இச் செய்தியை திரு. பி.வ. இரத்தினசாமிப் பிள்ளை என்பவர் சுவாமிகளிடம் தெரிவித்தார். மேலும் அவ்வைணவர்கள் இவ்வித தூஷணங்களுக்கு ஆதரவாக ஆழ்வார்கள் அருளிய நாலாயிரபிரபந்த நூலினையே கைக்கொண்டு உள்ளனர் என்று தெரிவித்தார். ஆகையால் அந்த நாலாயிர பிரபந்தத்தே சிவபரமாக அமைந்துள்ள தருமங்களையும், அவை பற்றி எழும் ஐயங்களைத் தீர்த்தும், சைவ ஸ்தாபனங்களையும் போதிக்கும் வழியே ஒரு நூல் வசனவடிவில் சுருங்க அமைத்து தந்தால் என்போன்ற சைவர்களுக்கு பெரும்பயனாய் இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ் வேண்டுகோள் அங்கீகரித்த சுவாமிகளும் நாலாயிர பிரபந்த விசாரம் என்னும் நூலினை இயற்றி அருளினார். இந்நூல் 1905-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.
அவ்வூரில் உள்ள ஒரு சைவர், சிவபரத்துவ பிரபல சாஸ்த்ர பிரகடனம் என்ற ஒரு பத்திரிக்கையை வெளியிட்டதற்கு மறுப்பு கூறுமாப்போல் பெரும் அவதூறுகளும், கீழ்த்தரமான சொற்களும் உள்ளிட்டு அச்சகத்தின் பெயர் குறிப்பிடாமல் 01.09.1906-ல் வெளியிடப்பட்டது "வாயீர்வாள்" சிறுபுத்தகம். "பத்திரிக்கை முதலியவைகளை இனி பிரசுரித்தால் அவைகளுக்கு மாத்ரம் யாமும் எம்மவரும் கணிசமான மறுப்பிட்டு வாய் மாளப் பண்ணுவோம்" என இறுதியில் சுவாமிகளின் பெயரையும் குறிப்பிட்டு உள்ளதால் ஶ்ரீமத் சுவாமிகள் சைவசமயசரபம் எனும் நூலை வெளியிட்டார். இவைகள் சம்பந்தமாக ஒரு பத்திரிக்கை எவரும் அருவருக்கத் தக்க நிலையில் கீழ்த்தரமான உரைகளைப் பிரசுரித்ததாலும், சிதம்பரம், பின்னத்தூரில் சைவதூஷண சொற்பொழிவுகளும் துண்டுபிரசுரங்கள் வழங்கியதனாலும் ஶ்ரீமத் சுவாமிகள் வழக்குத் தொடர, வைணவர்கள் எதிர் வழக்குத் தொடர, அனைத்து வழக்குகளும் இறுதியில் சுவாமிகளுக்கு சாதகமாகவே முடிந்தன.
ஏழுவருட காலம், வைணவர்களுடைய கொலை மிரட்டலுக்கும், அவர்களால் செய்யப்பட்ட ஏவல் பில்லி சூன்ய ஆபிசார பிரயோகங்களுக்கும் அஞ்சாது இறைவன் திருவருளிலே அயராத நம்பிக்கை வைத்து சைவ நெறியை நிலை நாட்டியதை அவ்வமயம் சைவ சமயத்தார் கூட அறிந்து உணர்ந்தது இல்லை. இவ்வாறு சுவாமிகள் குன்றம் எறிந்த குமரவேலன் நெறியாம் சைவ நெறிக்கு ஒரு பாதுகாவலராக இருந்து அயரா தொண்டாற்றினார்.
இனி, சுவாமிகள் மருத்துவரைப் போல் தொண்டாற்றிய நலனைக் காணலாம். மருத்துவரின் பணி என்பது உற்ற பிணியைத் தீர்த்தல். ஆம், நம் சமுதாயத்திலும் மூடநம்பிக்கைகளும், சாதி பேதங்களும், பொய்யான ஆன்மீக நெறியும் புரையோடி இருந்தன. இந்தச் சமுகப் பிணிகளை எல்லாம் சுவாமிகள் தன்னுடைய பாடல்களிலும் உரைகளிலும் களைந்தார். மக்களுக்குத் தெளிவு தரும் கருத்துகளைத் தம்முடைய நூல்களில் எவ்வளவு தந்துள்ளார் என்பது அவரது நூல்களைக் கற்பவருக்குத் வெளிச்சமாகத் தென்படும். அவற்றை விரிக்கின் தனிக் கட்டுரையாக பெருகும் என்பதால் இவ்வளவில் முடித்து இறுதியாகச் சுவாமிகள் சேவகனைப் போல் தொண்டாற்றிய அன்பினைக் காணலாம்.
சுவாமிகள் முருகனிடத்தில் அடிமைத்திறம் பூண்டார்கள். தன்னை குமரகுருவிற்கு தாசன் என்று பரைசாற்றினார்கள். பாடும் பணியே பெரும் பணியாகக் கொண்டார்கள். அப்பாடல்கள் அனைத்தும் முருகப் பெருமானால் அங்கீகரிக்கப்பட்டன. அப்பாடல்கள் என்றுமே அழியாது என்று சுவாமிகளும் கூறியுள்ளார்கள்.
என்றுமே கிழியாது என்பாட்டு என்பதைப் புலமையோடு
நின்றுஉளீர் உணர்மின்
-ஒட்பமுணர்த்தல் – 7 (ஶ்ரீமத் குமாரசுவாமியம்)
(கிழியாது = அழியாது)
சுவாமிகளின் சந்தத் தமிழ்ப்பா கேட்க விரும்பிய முருகன், சுவாமிகளின் கனவில் தோன்றி இந்தச் சந்தத்தில் பாடுக என்று சந்தம் கூறி மறைந்தான். சுவாமிகள் பத்துவகைப் பேதம் உற சந்தத்தில் கந்தசாமி என்னும் பதிகம் பாடினார் என்பதும்; சுவாமிகள் "கோத்தயிர் வெண்ணெய் திருடன்" என்ற பாடலைப் பாடியதும் முருகனின் கையால் அன்போடு அடியுண்டதும், திருமுருகன் திருவடி நிலந்தோய இம்மண்ணில் வந்திருந்து பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணப்பாடல் கேட்டதும், இவ்வண்ணப்பாடல் எனக்கு விருப்பமாய் உள்ளது என்று கூறி மறைந்த அருள் வரலாற்று நிகழ்ச்சிகளின் மூலம் சுவாமிகளின் பணி எத்தகையச் சிறப்புடையது என்பதை அறியலாம்.
இதுவரையிலும், பாம்பன் சுவாமிகள் ஏக தெய்வ வழிபாட்டில் நின்று தன்னுடைய காதலைச் செவ்வேள் ஒருவனிடம் மட்டுமே கொண்டு வெளிப்படுத்திய கற்புடைக் காதலும், அக்காதலுக்கு பரிசாகப் பெருமானிடம் இருந்து சுடர்விட்டு பொலிவு தரும் பொற்புடைக் காதலைப் பெற்றார் என்பதைத் தொடர் கட்டுரையாகச் சிந்தித்தோம். இவ்வளவில் இந்தத் தொடர் கட்டுரையை முடிகின்றோம்.
இந்தத் தொடர் கட்டுரைக்குக் கருத்தாக்கம் தந்து உதவிய பாம்பன் அடியார் திரு. குருமூர்த்தி அவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் அளித்த அயிலரசு 6666 என்ற புலனக் குழுவினருக்கும் (WhatsApp Group Members) நன்றி!
திருச்சிற்றம்பலம்!