Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Saturday, 20 June 2020

சடங்குகளின் மீதான பாம்பன் சுவாமிகளின் பார்வை

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

சடங்குகளின் மீதான பாம்பன் சுவாமிகளின் பார்வை

முன்னுரை:

     'ஊன் எடுத்த உயிர்கள் அனைத்தும் இறைவனின் அருளை அடையவே தோன்றி இருக்கின்றன' என்று கருதியே, வானோருக்கு எல்லாம் ஆசிரியனாய் விளங்கும் குமரகுரு, அவ்வுயிர்களை எல்லாம் மதிக்கின்றான் என்று பாம்பன் சுவாமிகள் முருகனை நமக்கு அறிமுகம் செய்துவிக்கின்றார்.

           "ஊனார் சீவனெல்லாம் அருள் உயிர் என்றே மதிக்கும்
             வானோர் தேசிகனே!"

பதிகப் பெயர்: திருப்பழநி
பாடல் எண்: 8
நூலின் பெயர்: திருவலங்கற்றிரட்டு – முதல் காண்டம் (இசைத்தமிழ்)

பாடல் விளக்கம்: ஊன் அடைந்த உயிர்கள் எல்லாம் அருளினை அடையும் உயிர் என்றே மதிக்கின்ற வானோர் குருநாதன் (பழநி முருகன்).

     முழுமுதல் கடவுளே அனைத்து உயிர்களையும் மதிக்கின்றான் என்றால், நாம் அனைவரும் மற்ற உயிர்களை மதிக்கவும், அன்பு செலுத்தவும், அவ்வுயிர்களுக்கு உறுதி பயக்கும் நல்ல அறிவுரைகளை வழங்கவும் வேண்டும் என்ற கொள்கையில் பாம்பன் சுவாமிகளின் வாழ்வும் வாக்கும் அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

    இங்குச் சடங்குகளின் மீதான பாம்பன் சுவாமிகள் பார்வை என்ற கோணத்தில் சிலவற்றை ஆய்வோம்.

சமயச் சடங்குகள்:

     சமயச் சடங்குகள் அனைத்தும் இறைவனை அடையும் வழிக்கான படிநிலைகளே அதுவும் அதனை நன்கு உணர்ந்து செய்யபடும்போது மட்டுமே. ஆனால் அந்தச் சடங்குகளே கடவுள் இல்லை, அந்த சடங்குகளால் மட்டுமே கடவுளை அடைதல் என்பதும் இல்லை.

பூசைகள் குறித்த நிலைப்பாடு:

     குகன் என்னும் கடவுள் அனைத்து உயிர்களின் இருதயகமலத்தில் ஞான மயமாக உள்ளான் என்று பாம்பன் சுவாமிகள் தன்னுடைய தகராலய ரகசியம் என்ற நூலில் வலியுறுத்தி உள்ளார். அந்தக் கடவுளை அடைய மனத்தால் செய்யப்படும் அகபூசையும், அவ் இறைவனின் அடியார்க்கு செய்யப்படும் அமுது அளித்தல் என்னும் புறபூசையும் மட்டுமே வேண்டற்பாலது என்று பாம்பன் சுவாமிகள் பல இடங்களில் வழியுறுத்தி உள்ளார்.
அக வழிபாட்டினை வலியுறுத்தி,

வீட்டில் இருக்கும் விளக்கை விட்டே வெளியே நெருப்புக்
கேட்டு திரியும் மதியிலி போல் உனைக் கீழ்நிலையோர்
நாட்டிற் கருதுகின்றார் அந்த நாட்டம் என் நாட்டம் கொலோ

பதிகப் பெயர்: இந்துமிலைந்தோன்
பாடல் எண்: 8
நூலின் பெயர்: முதல் மண்டலம் (குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள்)

பாடல் விளக்கம்: வீட்டில் உள்ள விளக்கை விட்டுவிட்டு, வெளிச்சத்திற்காக வெளியே நெருப்பைக் கேட்டு அலையும் அறிவு இல்லாதார் போல், உன்னைக் கீழானவர் இவ்வுலகில் நினைக்கின்றனர்: அந்த கீழான எண்ணம் என் எண்ணமோ? இல்லை அன்றோ?

முதல் மண்டலமாகிய 'குமரகுருதாச சுவாமிகள் பாடல்' என்னும் பகுதியில் "குருபரக் கண்ணி" என்ற தலைப்பில்,

தீபந் தனை ஏற்றிச் செங்கை குவிப்பார்கள் அருள்
தீபம் இருக்கு நிலை தேரார் குருபரனே

பாடல் எண் : 18

பாடல் விளக்கம்: தீபத்தை ஏற்றி வைத்துச் சிவந்த கையைக் குவிப்பார்கள், அருள் தீபம் இருக்கும் நிலையைத் தெளியார் குருபரனே

சந்திரனைச் சூரியனைச் தாழ்வார்கள் அந்தரங்க
சந்திரனைச் சூரியனைச் சாரார் குருபரனே

பாடல் எண் : 19

பாடல் விளக்கம்: சந்திரனையும் சூரியனையும் வணங்குவோர்கள் உள்ளே இரகசியமாய் உள்ள சந்திரனையும், சூரியனையும் சேரார் குருபரனே

நோக்கு அதனை மூக்குநுனி நெற்றி நுதல் வைப்பார்கள்
நோக்கினது அங்கு என் எனவும் நோக்கார் குருபரனே

பாடல் எண் : 26

பாடல் விளக்கம்: கண் பார்வையினை மூக்கு நுனியிலோ அல்லது புருவ மத்தியிலோ வைப்பார்கள்; அங்குப் பார்த்தது என்ன என்பதும் ஆராய்ந்து பார்க்க மாட்டார் குருபரனே

ஞான ஆகாயம் ஆகிய பெரிய வெளியில் விளங்கும் இறைவனை அடையாமல் செய்யும் அனைத்தும் பயன் அற்றனவே என்றும் சுவாமிகள் குறிக்கின்றார்.

தூய ந(ன்)னீர் இடைத் தோயினும் அங்ஙன்
ஆய பல் தானம் அளிப்பினும் ஆர்வம்
ஏய் உயர் விரதம் இழைப்பினும் ஞான
ஆகாயம் அதைக் குறுகாவிடில் வறிதே

பாடல் எண்: 38
நூலின் பெயர்: தகராலய ரகசியம்

பாடல் விளக்கம்: கங்கை முதலிய தூய நதிகளில் மூழ்கினும், அந்நதி கரைகளிலே தங்கருத்தின் படி கோ தானம் முதலிய பல தானங்களை செய்தாலும், ஆசைவழிப் பொருந்தும் மேம்பட்ட விரதங்களை அனுட்டித்தாலும் சிதாகாசம் ஆகிய பரம்பொருளை அடையாவிடில், இத்தகைய காரியங்களும் பயன் அற்றனவே ஆம்

அடியவருக்கு அமுது செய்யும் புறபூசைப் பற்றி,

"வெளிப் பூசைகளில் மாகேச்சுர பூசை சிறந்தது. சிவனடியார்க்குத் திருவமுது செய்விப்பது மாகேச்சுர பூசை. மெய்யடியாரைக் கண்டுபிடித்தல் அருமை ஆதலின், அப் பூசையைப் பொதுவாகச் செய்க"

நூல்: சைவ மகிமை என்ற தலைப்பில் சுவாமிகள் இயற்றிய சொற்பொழிவு

விளக்கம்: வெளியில் செய்யப்படும் புறப்பூசையில் மிகவும் சிறந்தது மாகேச்சுவர பூசை. இந்த பூசை என்ன என்றால் சிவன் அடியார்களுக்கு திருவமுது (உணவு) செய்வித்து (உணவிட்டு) மகிழ்வது. மெய் அடியார்களை கண்டுபிடித்தல் என்பது அரிது ஆகலால் எந்த பூசையை பொதுவாகச் (பேதம் இல்லாமல் அனைவருக்கும்) செய்ய வேண்டும்.

இது மட்டும் அல்லாமல்,

தன் அடியவர்க்குச் செய்யும் அன்னம், ஆடை முதலிய சருவ உபசாரங்களையும் தனக்காகச் செய்யப்பட்டன என ஏன்று கொண்டு செய்தோரைத் தன தாக்கத்தில் இருத்தும் திருவருட் பெருங்கடலே முருகவேள்

நூல்: மூன்றாம் செவியறிவுறூஉ (சுவாமிகள் அன்பர்களுக்கு உரைத்த நீதி மொழிகள்)

விளக்கம்: இறைவனுடைய அடியவர்களுக்கு நாம் அளிக்கும் உணவு, ஆடை முதலிய அனைத்து உதவிகளையும் முருகவேள் தனக்கே செய்யப்பட்டது என்று ஏற்றுக் கொண்டு அதனை செய்தோரை செல்வ செழிப்பில் நிறுத்தும் திருவருட் பெரும் கடலாக முருகவேள் உள்ளான்.

பாவங்களுக்கு பிராயச்சித்தம்:

      ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஏதேனும் பாவம் செய்தால், அந்த பாவத்தில் இருந்து தப்பிக்க கழுவாய் (பிராயச்சித்தம்) தேடிக் கொள்ளல் என்பது மிகவும் இயல்பான ஒன்றே. பாவத்திற்கு கழுவாயாக, யாகம்/வேள்வி போன்றவற்றைச் செய்தல், இறைவனுக்கு அபிடேகம் செய்தல் மேலும் இது போன்ற பல சடங்குகளால் மனிதர்கள் தங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். அவ்வாறு இது போன்ற சடங்குகளால் தீர்த்துக் கொள்ள நினைத்தல் என்பது, ஒரு மனிதன் தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டி தன் மூக்கின் முடியை பறித்ததற்குச் சமம் ஆகும் என்று பாம்பன் சுவாமிகள் கூறுகின்றார். அப் பாவத்தில் இருந்து தப்பிக்க அவன் மீண்டும் அப்பாவத்தைச் செய்யாமல் இருப்பதும், கண்ணீர் பெருக உருகி இறைவனை நினைத்து வழிபடலே ஆகும் என்று பாம்பன் சுவாமிகள் வலியுறுத்தி உள்ளார்.

சத்தியமே நித்திய வாழ்க்கைக்கு உரியது என்பதை மறந்து திரிவோர் தாம் புரி பாவத்திற்குக் கழுவாயும் அறிவரோ! பொறுமையும் கழுவாயாம். பிறபாவம்​ அனைத்திற்கும் கழுவாய் எனப்படுவது, பெயர்த்தும் அப்பாவம் செய்யாது இருந்து கண்ணீர் வாரவாரக் கலுழ்ந்து கருத்தாவை நினைந்து துதித்து வழிபடலே என்று அறியாது புரி பிற முயற்சிகள், மூக்கு மயிர் பறித்து ஆள் பாரம் குறைக்க எண்ணுதல் ஒக்கும்,

நூல்: முதல் செவியறிவுறூஉ (சுவாமிகள் அன்பர்களுக்கு உரைத்த நீதி மொழிகள்)

மத அபிமானங்கள்

மத அபிமானங்களை கடந்து அறிவை அடைதலே சிறந்தது என்று பாம்பன் சுவாமிகள் பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார்.

முதல் மண்டலத்தை சேர்ந்த உள்ளூர்ச் சிவசுப்பிரமணிய சதகம் என்னும் பதிகத்தில்,

"மதபேத வம்புகளும் மானாபிமானமும்
 மறந்து அறிவை நேடல் என்றோ!

பாடல் எண் : 66
பாடல் விளக்கம்: மத வேற்றுமையினால் தோன்றும் வம்புகளையும், மானத்தையும் பற்றையும் மறந்து நல்ல அறிவைத் தேடுதல் என்றோ?

எங்கள் மதம் உங்கள் மதம் என்று பல திறவாதம்
இட்டு அறிவை மறந்த தோஷி

பாடல் எண்:39
பாடல் விளக்கம்: இது எங்கள் மதம் என்று தருக்கியும், அது உங்கள் மதம் என்று இகழ்ந்தும் பலவிதமான வாதம் செய்து அறிவு இழந்த குற்றம் உடையவன்.

பேய்களை நம்புதல்:

எதிர்மறைச் சக்திகளான பேய்களை நம்புவோர்களைச் சுவாமிகள் மிகவும் சாடி உள்ளார்.

சுவாமிகள், முதல் மண்டலத்தை சேர்ந்த குருபரக் கண்ணி என்னும் பாடலில்,

மாசற்ற உன்னை விட்டு மண்ணைகளையே வணங்கற்கு
ஆசைப்படுவோர் அதிகம் குருபரனே
*மண்ணை – பேய்

பாடல் எண் : 17
பாடல் விளக்கம்: குற்றமற்ற உன்னை விட்டுப் பேய்களை வணங்குவதற்கு ஆசைப்படுவோர் அதிகம் பேர் குருபரனே

முதல் மண்டலத்தை சேர்ந்த உள்ளூர்ச் சிவசுப்பிரமணிய சதகம் என்னும் பதிகத்தில்,

பேய்களைப் பூசைச் செய்து அது இது செய்வேன் என்று
பேசித் திரிந்த தோஷி

பாடல் எண்: 37
பாடல் விளக்கம்: பேய், முனி முதலிய சிறு தேவதைகளை வழிபட்டு, அப்படிச் செய்து விடுவேன், இப்படிச் செய்து விடுவேன் என்று பிறர் அஞ்சும் படிப் பேசித் திரிந்த குற்றம் உடையவன்:

நோய் வந்த காலையில் பேய்களைக் கும்பிட்டு
நோன்மையை மறந்த துட்டன்

பாடல் எண்: 45
பாடல் விளக்கம்: நோய் வந்த காலத்தில் தன்னைக் காப்பாற்ற வேண்டிப் பேய்களைக் கும்பிட்டு, உண்மைத் தவத்தை மறந்த தீயவன்

எந்திரங்களை வைத்து மந்திரம் கூறி வழிபாடு இயற்றல் :

மந்திரம் எந்திரம் (மந்திரித்த செப்புத் தகடுகளை வைத்து பூசை செய்தல்) போன்ற செய்கைகளையும் பாம்பன் சுவாமிகள் மறுத்து உள்ளார். சில சான்றுகள் :

மந்திர எந்திரம் அந்தர நெறிக்கில்

நூல்: சிறுநூற்றிரட்டு
பதிகப் பெயர்: ஞான வாக்கியம்
பாடல் எண்: 23

பாடல் விளக்கம்: இறை நெறியில் மந்திரம், எந்திரம் என்பவை இல்லை

 *அந்தர நெறி என்பது இறை நெறி (முத்தி நெறி).

வையத்து மாந்தரை அடக்கி நாம் வாழ என
மந்திரம் கற்ற தோஷி

நூல்: குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள் (முதல் மண்டலம்)
பதிகப் பெயர்: உள்ளூர்ச் சிவசுப்பிரமணிய சதகம்
பாடல் எண்: 36
பாடல் விளக்கம்: இந்த உலகில் உள்ள மக்களை எல்லாம் தான் அதிகாரத்துடனும் செல்வத்துடனும் அடக்கி ஆள வேண்டும் என்று அதற்கான இழிவான மந்திரங்களைக் கற்ற குற்றம் உடையவன்.

- - - - - - - - - - - - - - திருகுமர வேள் தாள்
புந்தியில் நினைந்து தெளி போத அறிஞர்க்கால்
எந்திரமும் மந்திரமும் ஏன் உணர்வு நெஞ்சே

நூல்: குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள் (முதல் மண்டலம்)
பதிகப் பெயர்: நெஞ்சுப் பத்து
பாடல் எண்: 6
பாடல் விளக்கம்: திருகுமர வேளின் திருவடியை மனத்தில் நினைத்து தெளிகின்ற ஞானம் உள்ள அறிஞர்க்கு இயந்திரமும், மந்திரமும் ஏன்? தேவை இல்லை என்றவாறு!

மேலும் முருகப் பெருமான் மந்திரத்திற்கும் வசப்படாதவன் அவனை மை போட்டும் காண முடியாது என்று சுவாமிகள் கூறி உள்ளார்.

"மந்திரம் கார் மையில் வசப்படானைப் பிடிக்கத்
தந்திரம் அது ஒன்று எனக்குச் சாற்றாய் நீ பொன் மயிலே"

நூல்: குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள் (முதல் மண்டலம்)
பதிகப் பெயர்: பொன் மயிற்கண்ணி
பாடல் எண்:​ 25

பாடல் விளக்கம்: அழகிய மயிலே! மந்திரங்களுக்கும் கருமையான மைக்கும் அகப்படாதவனைப் பிடித்துக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு சூழ்ச்சியை எனக்கு நீ கூறுவாய்.

நாள் நட்சத்திரம் போன்றவை:

இறைவன் நெறியில் நின்று வாழும் அடியார்களுக்கு, நாள் கோள் இராசி திதி போன்றவை இல்லை என்றும் சுவாமிகள் வலியுறுத்தி உள்ளார்.

ஆதி இடை அந்தரம் இலாத அயில் ஈசன்
பாத இணை கொண்டு அருள் படைத்த நிபுணர்க்கு
மாதமொடு இராசி திதி வாரம் எழுநாள் கோள்
ஏதுமிலை என்று அறிவில் ஏறு உணர்வு நெஞ்சே

நூல்: குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள் (முதல் மண்டலம்)
பதிகப் பெயர்: நெஞ்சுப் பத்து
பாடல் எண்:​ 7

பாடல் விளக்கம்: அறிவு உடைய நெஞ்சே! முதலும் நடுவும் முடிவும் இல்லாத வேல் இறைவன் இரு திருவடிகளை வணங்கி அருள் பெற்ற நிபுணர்களுக்கு, மாதம், இராசி, திதி, வாரம், எழுநாள், கோள் என எவையும் இல்லை என்று அறிவில் உணர்த்துவாயாக!

அடியார் பெருமக்களுக்கு நவக்கிரக கோள்கள் என்பன தீங்கு புரியாது.  அவை நன்மையே செய்யும். இதனை உணராத அறிவில்லாத மக்களே நவக்கிரங்களுக்கு பரிகாரம் செய்வார்கள் என்றும் பாம்பன் சுவாமிகள் கூறுகின்றார்.

பரிதி மதி சேய் அரி பொன் பளிங்கு சனி பாம்புகளும்
விரிதலை நாள் வேளைகளும் மிகை அடு நின் அடியவர்கட்கு
உரிய நலம் புரியும் அன்றி ஒருபோதும் படர்புரியா
தெரியலரும் தொண்டு இழைப்பார் சிவலோக சுந்தரனே

நூல்: குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள் (முதல் மண்டலம்)
பதிகப் பெயர்: சிவலோக சுந்தரமாலை
பாடல் எண்:​ 1

பாடல் விளக்கம்: சிவலோக சுந்தரனே! ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்னும் நவகோள்களும் ஒளியுடைய நாளில் உள்ள பலவகையான காலங்களும், (இராகு, எமகண்டம், குளிகை போன்றவை) பிறவி என்னும் பெரிய துன்பத்தை ஒழிக்கும் உன் அடியார்களுக்குத் தேவையான நன்மைகளைச் செய்யும் அன்றி, ஒருபோதும் துன்பத்தைச் செய்யமாட்டா. அறிவிலார் தாம் கோள்களினாலும் நாட்களில் வரும் கெட்ட காலங்களினாலும் தமக்குத் துன்பம் வாராது இருக்கப் பரிகாரம் செய்வார்கள். நாளும் கோளும் நல்லவர்களை என் செய்யும்?

இறைவனின் திருவடியை இறைஞ்சும் அன்பர்களுக்கு மாதம், தினம், வாரம், திதி, யோகம், கோள்கள் அனைத்தும் நன்மையே தரும் என்று பஞ்சாமிர்த வண்ணப் பாடலில் கூறுகின்றார்.

மாதமும் தினம் வாரமும் திதி
  யோகமும் பல நாள்களும் படர்
    மாதிரம் திரி கோள்களும் கழல்
      பேணும் அன்பர்கள் பால் நலம்தர

நூல்: சிறுநூற்றிரட்டு
பதிகப் பெயர்: பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்
பாடல் எண்:​ 4 (சருக்கரை வண்ணம்)

பாடல் விளக்கம்: மாதம், தினம், வாரம், திதி, யோகம், பல நட்சத்திரங்கள், பரந்த வானத்திலே திரியும் கிரகங்கள் ஆகிய யாவும் நினது திருவடியையே கருதுகின்ற அடியவர்கட்கு நலமே செய்யும்.

சாதி பேதங்கள்:

இறை மார்க்கத்தில் சாதி பேதம் இல்லை என்பதைப் பாம்பன் சுவாமிகள் பற்பல இடங்களில் கூறியுள்ளார். சில சான்றுகளை காண்போம்.

தகராலய ரகசிய அனுபவத்தை பெற முயற்சிக்கும் அன்பர்களுக்கு, அந்த நூலின் பாயிர பகுதியிலேயே "சாதி பேதங்களைத் தள்ளி விட வேண்டும்" என்ற கட்டளையை இட்டு உள்ளார்.

தள்ளற் பாலது சாதி விகற்பமே

நூல்: தகராலய இரகசியம்
பதிகப் பெயர்: பாயிரப் பகுதி
பாடல் எண்:​ 3

மேலும் குகேசன் அடியை உற்ற அறிஞர்க்கு சாதி, குலங்களை எல்லாம் கடந்தவர் ஆகின்றார் என்ற பொருளில்

- - - - - - - - -  -  - - குகேசனடி உள்ள உறழ்வர்க்கு
சாதி குலம் நாமம் நசை சஞ்சலம் விகற்பம்
ஏதுமிலை என்று அறிவில் ஏறு உணர்வு நெஞ்சே

நூல்: குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள் (முதல் மண்டலம்)
பதிகப் பெயர்: நெஞ்சுப் பத்து
பாடல் எண்:​ 8

பாடல் விளக்கம்: நெஞ்சே! குகேசன் திருவடியைச் சேர்ந்த அறிஞர்க்கு சாதி, குலம், பெயர், ஆசை, துன்பம், வேற்றுமை ஆகிய ஏதும் இல்லை என்னும் அறிவில் நிலைபெறுவாயாக

கடன் பெற்றவன், கடன் கொடுத்தவனைப் பார்த்தால் ஓடி விலகி மறைந்துக் கொள்வது போல், சாதி பேதம் உடையவன் சாதி பேதம் அற்ற இறைவனை அடையாது விலகிச் செல்வான் என்று சுவாமிகள் விளக்கி உள்ளார்.

கடன் கொடுத்தானைக் கண்டு கடன்பட்டான் விலகுவது போலச் சாதிபேதம் அற்ற சர்வ கர்த்தாவின் சன்னிதியைச் சாதிபேதம் உடையான் அடையாது விலகுனன் ஆவன்

நூல்: முதல் செவியறிவுறூஉ (சுவாமிகள் அன்பர்களுக்கு உரைத்த நீதி மொழிகள்)
மேலும்,

சாதி பேதத் தளை மாதுறவுக்கு இலை

நூல்: சிறுநூற்றிரட்டு
பதிகப் பெயர்: ஞான வாக்கியம்
பாடல் எண்: 44

பாடல் விளக்கம்: பெருமை பொருந்திய துறவு நிலைக்கு சாதி வேறுபாடு என்னும் பிணி இல்லை.

கடுமையான தவம் செய்தல்:

இறைவனிடம் சரணம் அடைந்தவர்கள் விரதமும் நோற்க வேண்டுமோ? என்று பாம்பன் சுவாமிகள் வினவுகின்றார்.

வரையிலும் பை வண்டறை
சுரம் அடைந்த துறையிலும்
விரத நோற்க வேண்டுமோ
சரண் அடைந்த தாசரே

நூல்: குமரகுருதாச சுவாமிகள் பாடல்கள் (முதல் மண்டலம்)
பதிகப் பெயர்: உலக வாழ்வு
பாடல் எண்:​ 11

பாடல் விளக்கம்: உன்னைச் சரண் அடைந்த அடியார் மலையிலும் அழகீய வண்டுகள் ஒலிக்கும் காடுகள் செறிந்த இடங்களிலும் தவம் செய்ய வேண்டுமோ?

இதயமாகிய சபையில் ஆடும் இறைவனை நினையாமல், உடலினை வெறுத்து ஒரு கட்டையைப் போல் தவம் செய்வதினால் எந்த பயனும் இல்லை என்ற கருத்தில்,

மெய்யை வெறுத்து விரத்தி அடைந்து
கையை விரித்து ஒரு கட்டை அது என்ன
மை அடர் கானில் இருப்பினும் மன்று ஆடு
ஐயனை நாடி உனாவிடில் அவமே

நூல்: தகராலய ரகசியம்
பதிகப் பெயர்: அண்ட தகர வித்தை இயல்
பாடல் எண்:​ 40

பாடல் விளக்கம்: தேக அபிமானத்தை முனைந்து, சார்பறுத்தலை எய்தி, (முடக்கிய முழங்கால்கள் மீது வைக்கப்பட்ட) இரு கரங்களையும் விரித்து ஒரு காட்டம் (கட்டையைப்) போல இருள் ஆர்ந்த கானகத்தில் அசையாமல் இருக்கினும் ஞான சபையில் நின்று நடனம் புரியும் சர்வலோக நாயகனை விரும்பித் தியானியாவிடில் செயற்கு அரிய இஃதும் விருதாவே (வீணே) ஆம்

முடிவுரை:

   சைவ அன்பர்கள் திருமுறைகளை பெட்டகத்தில் வைத்து பூட்டி வைத்தது போல் தங்கள் மனத்தில் வைத்துப் பூட்டி உள்ளாரா? சிவ லிங்கத்தை தங்கள் கழுத்தில் மாட்டி உள்ளோர், தங்கள் கருத்தில் மாட்டி உள்ளாரா? என்று சுவாமிகள் திருப்பா என்றும் ஞான நூலில் வினவுகின்றார்கள்.

    இது போன்று சுவாமிகள் தன்னுடைய பாடல் மற்றும் உரைநடை நூல்கள் முழுவதும் பொய் சாரா உண்மை நெறிகளையே மக்களுக்கும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டாளர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்கள்.

Wednesday, 10 June 2020

பாம்பன் சுவாமிகள் அருளிய வினாவுத்தரம் - பகுதி 3

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

வினாவுத்தரம்: (பகுதி 3)

பாம்பன் சுவாமிகள் வினாவுத்தரமாக பாடிய திருவலங்கற்றிரட்டு இரண்டாம் கண்டத்தில் உள்ள முதல் பாடலைச் சென்ற பதிவில் பார்த்தோம். 

இப்பொழுது, இரண்டாம் வினாவுத்தர பாடலினைக் காணலாம்.

எழுத்தரி லொழித்திட வேவுரையென்
கழுத்தினில் வளைத்திடு கலனெவனார்
கொழுத்தவர் திருத்தலை குவிப்பதெவன்
செழிப்புயர் குகற்குள திருத்தணிகை

பாடலில் உள்ள கேள்விகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்:

எழுத்து அரில் ஒழித்திட ஏவு உரை என்? - அரில் என்றால் குற்றம் என்று பொருள். எழுத்து குற்றம் என்றால் எழுத்துப் பிழையைக் குறிப்பது ஆகும். எழுத்துப் பிழையை நீக்குவதற்கு கட்டளையிடும் சொல் என்ன? திருத்து என்று தான் கூறுவோம். ஆகவே, இதன் விடை திருத்து என்பது ஆகும்.

கழுத்தினில் வளைத்திடு கலன் எவன்? - கலன் என்பது பூண் எனப்படும். அதாவது அணிதல். கழுத்தை சுற்றி அணிதல் என்பது மாலை ஆகும். அணி என்ற சொல்லுக்கு மாலை என்றும் ஒரு பொருள் உண்டு. ஆகவே, இதன் விடை அணி என்பது ஆகும்.

ஆர் கொழுத்தவர் திருத்தலை குவிப்பது எவன்?ஆர் = அன்பு; கொழுத்தவர் = செழிப்புற்றவர்; அதாவது மிகுதியாக உடையவர். அன்பு மிகுதியாக உடைய அடியார்கள் தலைக்கு மேல் குவிப்பது எது? கை என்பது விடையாகும்.

இந்த விடைகளைக் கூட்டினால்  திருத்து + அணி + கை = திருத்தணிகை.

எல்லா வளங்களும் உடைய குகப் பெருமானுக்கு உள்ள திருத்தணிகை என்ற விடையை ஈற்றடியில் சுவாமிகள் கூறுகின்றார்.

திருச்சிற்றம்பலம்

Sunday, 7 June 2020

பாம்பன் சுவாமிகள் பாடிய வினாவுத்தரம் - பகுதி 2

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

வினாவுத்தரம்: (பகுதி 2):

பாம்பன் சுவாமிகள் வினாவுத்தரமாக பாடிய திருவலங்கற்றிரட்டு முதற்கண்டத்தில் உள்ள பாடலைச் சென்ற பதிவில் பார்த்தோம். இனி இரண்டாம் கண்டத்தில் உள்ள முதல் பாடலினை பார்ப்போம்‌.

சமரமுதர் நாமமெது சாகா
விமலரணி பூணெதுமின் வில்லென்
குமரகுரு தாசனிறை கோயார்
அமரர்பணி சோதிமுரு கையன்

இப்பொழுது ஒவ்வொரு கேள்விக்கும் உள்ள பதிலைக் கூட்டுவோம்.

சமர் அமுதர் நாமம் எது? சமர் என்றால் போர், சண்டை; அமுதர் என்றால் தேவர்; போரிடும் (அரக்கர்களுடன்) தேவர்களை குறிக்கும் பெயர் எது? அமரர் என்பது விடையாகும். அமரர் என்றாலும் தேவர் என்றாலும் ஒன்றே.

சாகா விமலர் அணி பூண் எது? மரணமில்லாமலும் மலங்கள் இல்லாதவரும் ஆன சிவபெருமான் அணிகின்ற ஆபரணம் எது? விடை பாம்பு என்பது. பாம்பை பணி என்று கூறுவது வழக்கம். ஆதலால் இதன் விடை பணி ஆகும்.

மின் வில் என்? - மின் என்றால் மின்னுதல்; வில் என்பது ஒளியைக் குறிக்கும் சொல். மின்னுகின்ற ஒளி என்பது சோதி. ஆகவே இதன் விடை சோதி ஆகும்.

குமரகுரு தாசன் இறை கோ யார்? - பாம்பன் குமரகுரு தாசரின் தெய்வ அரசன் யார்? முருகையன் என்பது விடை. குமரகுரு தாசரின் இறை முருகு என்றும்; கோ யார்? என்பதற்கு விடையாக ஐயன் என்ற சொல்லைப்  பெற்று முருகு+ஐயன்=முருகையன்  என்றும் விடை பெறலாம்.

இந்த அனைத்து விடைகளையும் கூட்ட,
அமரர் +பணி+சோதி+முருகையன் என்று வரும்.

பாடலின் நான்காவது வரியில் அமரர் பணி சோதி முருகையன் என்று சுவாமிகள் விடை கூறுகின்றார்.

திருச்சிற்றம்பலம்

Wednesday, 3 June 2020

பாம்பன் சுவாமிகள் பாடிய வினாவுத்தரம்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

வினாவுத்தரம்: (பகுதி 1)

பாம்பன் சுவாமிகள் வினாவுத்தரமாக சில பாடல்கள் பாடியுள்ளார். வினா உத்தரம் என்பதன் பொருள் 'வினா விடை'. ஒரு பாடலிலேயே விடுகதைப் போல் சில கேள்விகளைக் கேட்டு அதன் பதிலையும் அப்பாடலிலே அமைக்கும் முறை ஆகும்.

சுவாமிகளின் பண்ணிசை நூலான திருவலங்கற்றிரட்டு என்ற நூலின் தொடக்கத்தில் அந்த நூலின் பெயரையே விடையாக வருமாறு வினாவுத்தர பாடல் ஒன்று பாடியுள்ளார்.

பின்னையின் பேர் ஆவது எது பீட்டின் சொல் என் பழகி
என்னும் மொழி என்? கவரி ஏந்திமிக்கார் முன் அசைத்தே
உய்பவனை ஏவுஉரை யாது? ஓம் சேய் பண் நூல் என்உரை 
செய் திருவலங்கற் றிரட்டு 

இப்பொழுது பாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடைகளை கூட்டுவோம்.

பின்னையின் பேர் ஆவது எது:  பின்னைஎன்பது திருமகளைக் குறிக்கும் சொல். சுருக்கமாக திரு.  பின் ஐ என்று பிரித்துக் கொண்டால் 'பின்பு வந்த கடவுள் (ஐ)' என்று பொருள் அதாவது விநாயகருக்கு பின்பு வந்த முருகன் என்றும் கொள்ளலாம். பொதுவாக இறைவனை திரு என்று குறிப்பர்.

பீட்டின் சொல் என்?: பீடு என்ற சொல்லிற்கு பொருள் என்ன? பெருமை, வலிமை என்று பொருள். வலிமை வலம்  எல்லாம் ஒரே பொருள் தரும் சொற்கள். இதற்கு விடை வலம்  ஆகும்.

பழகி எனும் மொழி என்?: பழகி என்றால் பழகுதல் என்பதலிருந்து வந்தது. பழகுதல் என்றால் கற்றல். பழகி என்றால் கற்று  எனப்படும்.

கவரி ஏந்தி மிக்கார் முன் அசைத்தே உய்பவனை ஏவு உரை யாது?:  விசிறி (சாமரம்) ஏந்தி பெரியவர்கள் முன் அசைத்து வாழ்பவனை ஏவுகின்ற உரை யாது? அதாவது சாமரத்தை கையில் வைத்திருப்பவனை பார்த்து நாம் சொல்லும் சொல் வீசு என்பது ஆகும். வீசு என்பதைத் தூய தமிழில் இரட்டு என்று கூறுவர். ஆகவே, இதன் விடை இரட்டு ஆகும்.

இந்த நான்கு கேள்விகளின் விடையை கூட்டினால்

திரு+வலம்+கற்று+இரட்டு=திருவலங்கற்றிரட்டு

என்று வரும்.

பிரவண வடிவான சேய் கடவுள் மீது பாடப்பட்ட பண்ணிசை நூலான திருவலங்கற்றிரட்டு என்ற பதிலைக் இறுதியில் கூறுகின்றார்.

திருச்சிற்றம்பலம்