ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
பாம்பன் சுவாமிகள் அருளிய பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் ஓசைநயமும், நவின்றோர்க்கு இனிமை பயப்பதும், பொருள் ஆழமும் உடையது. இந்தப் பஞ்சாமிர்த வண்ண பாராயணம் கேட்கும் பொருட்டு, திருமுருகன் தன் திவ்விய திருவடி தாமரைகள் புழுதிப் படிய, பிராட்டியோடு இந்தப் பூமிக்கு வந்து, தன் செந்நாவினை அசைத்து "இவ்வண்ணம் எனக்கு பிரீதியாய் உள்ளது. அஃது எங்கே பாராயணம் செய்யப்படுமோ அங்கே யான் வருவேன் இருப்பேன்" என்று கூறினான் என்றால் இதன் சிறப்புகளைச் சிற்றறிவுடைய அடியேனால் விளக்கவும் முடியுமோ? ஆயினும், அடியேன் இவ்வண்ணத்தில் இரசித்தச் சிலவற்றை இங்கே பதிவிடுகின்றேன்.
பொருட்சுவை:
இவ்வண்ணத்தில் சுவாமிகள் முதலில் முருகப் பெருமானை அறிமுகம் செய்யும் அழகே மகிழத்தக்கது. அனைவரும் என்றன் சொந்தம் இன்னும் அவர்களுக்கு தீது ஏது? என்று கூறி அவன் அவர்களைக் காக்கும் பொருட்டு அங்கங்கே உள்ள படைகளைக் கண்டு ஓயாது வேலினை ஏந்தி கொண்டு நிற்கின்றான் என்று கூறுகின்றார்.
என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது
ஏந்துவன் படை வேல்....
"அண்டும் (நாடுகின்ற) தொண்டர் வருந்தாமே இன்பம் தந்தருளும் தாளா" (தாளா=திருவடி உடையோனே) என்ற சொற்றொடரும் இன்பம் தரும்.
வள்ளியம்மையைச் சொல்லும் போது, வேட்டுவர் குலம் நலம் பெற அவர்களிடையே மகளாகத் தோன்றிய பெண் என்று கூறுகின்றார்.
"குன்றவர் நலம் பொருந்திட வளர்ந்த பந்தனை எனும் பெண்"
(பந்தனை = மகள்)
அப்படி என்ன நலத்தை வேட்டுவ குலத்தினர் பெற்றார்கள்? இதற்கான பதிலைச் சுவாமிகள் ஸ்ரீமத் குமாரசுவாமியத்தில் கூறியுள்ளார். அது என்னவென்றால், அனைத்து உலகையும் ஆளும் தானம் மிக்கு உள்ளவன் முருகன், அவனுக்கு என் பெண்ணைத் தானமாக கொடுக்கின்றேன் என்றால் அடியேன் பெற்றப் பேறு யார் பெறுவார் என்று நம்பி ராஜன் மகிழ்ந்ததாகச் சுவாமிகள் கூறுவார்.
சுவாமிகள் தெய்வயானைப் பிராட்டியைக் கூறும் போது கரும்பு எனும் சொல்லை இயம்பு குஞ்சரி என்று கூறுகிறார். "உம்மை வணங்கும் அடியவர்களுக்கு அருளுக" என்று தாய் போல் தந்தையிடம் பரிந்து சொல்வதாலோ அம்மையின் மொழிகளை கரும்பு போல் இனிக்கும் மொழிகள் என்று சுவாமிகள் கூறுகின்றார். சண்முக கவசத்திலும் ரஞ்சித மொழி தேவானை என்று சுவாமிகள் கூறுகின்றார்.
வள்ளியம்மையின் மொழிகளைக் கூறும்போது அவை, அழகு மிக்க கொஞ்சு மொழி உள்ள கிளிச்சொல் என்று கூறுகின்றார்.
மஞ்சுலம் உறைந்த கிஞ்சுக நறுஞ்சொல்...
(மஞ்சுலம் = அழகு; கிஞ்சுகம்=கிளி)
தமிழால் வழிபடுபவர்களின் பெருமையைக் கூறும் போது, "பெருகியுள்ள செந்தமிழ் பாக்களால் தினமும் இன்பத்துடன் துதிக்கும் அடியவர்களின் உள்ளத்தைத் தெளிவித்து அருள்பவனாக முருகன் உள்ளான்" என்று கூறுகின்றார்.
பதம் குரங்குநர் உளம் தெளிந்தருள்
பாவகியே சிகி ஊர் இறையே
(குரங்குநர்=வணங்குவோர்)
சுவாமிகள் முருகனிடம் சில வரங்களை அடுக்கிக் கொண்டே செல்லும் நயம் இனிமையானது. முதலில் பிறவியாகிய கடலைக் கடக்க அருள் வேண்டுகின்றார்; பின் இறைவனின் துணை கிடைக்க வேண்டுகின்றார். அதன்பின் தன் பிழைகளை நீக்க வேண்டுகின்றார். பிறகு சுவாமிகள் பாடவும் அதைக் கேட்டு முருகன் ஆடவும் வேண்டும் என்று வேண்டுகின்றார். தொடர்ந்து குளிர்ச்சியான கருணையை எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று கேட்கின்றார். இவ்வளவு வரங்களையும் எவ்வளவு சுருக்கமாக இசைத்தமிழில் கேட்டு உள்ளார்! காண்க!
பலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி
பாடவும் நீ நடம் ஆடவுமே
படர்ந்து தண் தயை நிதம் செயும்படி....
இன்னும் பற்பல பொருட்சுவைகள் நிரம்பி உள்ளன. விரிவு அஞ்சி இவ்வளவில் பொருட்சுவை பற்றிய கருத்துகளை முடிக்கின்றேன்.
கவிச்சுவை:
சுவாமிகள் உமையம்மையின் பாதங்களை வர்ணிக்கின்றார். அம்மையின் கால்கள் செக்கச் சிவந்து உள்ளன. அதைக் கண்டு செம்மையான தாமரைகள் நம்மைக் காட்டிலும் இவ்வளவு செம்மையா என்று அஞ்சுகின்றன. மேலும் அந்தக் கால்கள் உயிர்கள் தஞ்சம் என்று சென்று சேர்வதற்கு உரிமையான கால்கள் என்று கூறிய கவிநயம் அழகியது.
தஞ்சம் சேர் சொந்தம் சால் அம் செம் பங்கயம் அஞ்சும் கால்.....
(அம்= அழகு; பங்கயம்=தாமரை)
தயிர் வண்ணத்தில் சில வரங்களை வேண்டிய சுவாமிகள் நெய் வண்ணத்தில் உரிமையுடன் முருகனைச் சிலவற்றைச் செய்ய சொல்லுகின்றார்.
துனி யாவையும் நீ கடியாய் கடியாய்
பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு
(பிசி = பொய்)
இங்கு பொய் முதலான பல பிழைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகின்றார். அவ்வாறு வேண்டும் போது "பொறு பொறு பொறு பொறு" என்று நான்கு முறை கூறுகின்றார். உயிர்கள் வந்த நாள் தொட்டு இன்றைய நாள்வரை செய்துள்ள தீமைகள் பெருமலைப் போல் இருப்பதால், பொறு என்ற சொல்லை பலமுறையும் கூறியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
முருகப் பெருமானின் ஊர்தி மயில்; அது குகா குகா என்று அகவும்; மயிலுக்கு முன் முருகனின் ஊர்தி ஆடு ஆகும். அது 'மே..மே..' என்று கத்தும். இவ்வாறு கத்துவதற்கு ஏதேனும் பொருள் உண்டோ? இல்லையே! என்று தான் இருந்தேன். சருக்கரை வண்ணம் படித்தபின் புரிந்தது அது அவ்வாறு கத்துவதன் காரணம்:
பிறந்து செத்திட தொலைக்கு 'மே'
புத்தியில் அறிவினை விளக்கு 'மே'
நிறைந்த முத்தியும் இசைக்கு 'மே'....
'மே' என்னும் தேற்ற ஏகாரம் சருக்கரை வண்ணத்தில் அதிகமாக விரவியுள்ளது.
தேன் வண்ணத்தில், பலருடைய ஆடல்களைக் காட்சிபடுத்துகின்றார் சுவாமிகள். அத்துடன் முருகனின் வேல், மயில், கோழிக்கோடி, காதில் உள்ள குழைகள் போன்ற அனைத்தும் ஆடுகின்றன என்று கூறிய சுவாமிகள், ஓரிடத்தில் முருகனின் சிரிப்பைக் காட்டுகின்றார். முருகன் சிரிக்கும் போது ஒளி தோன்றுகின்றது. அந்த ஒளியும் ஆடுகின்றது என்பதை "மூரல் ஒளியாட" என்று பாடிய சுவாமிகளின் கவிச்சுவை களிப்பைத் தரும்.
சந்தச்சுவை:
பஞ்சாமிர்த வண்ணம் - வண்ணப்பாடல் என்பதால் ஓசை நயத்திற்குக் குறைவே இல்லை. சாதாரணமாக படிக்கும் போதே ஓசை ததும்பும். இசையொடு பாடினால் மதுரமாய் இருக்கும். இசைவாணர்கள் பற்பல இராகங்களில் இசையமைத்துப் பாட இடம் கொடுக்கும். ஒரே ஒரு உதாரணத்தைக் காட்ட விழைகின்றேன். உமையம்மையின் நடன காட்சியைக் குறிக்கும் போது,
தாந் ததீ ததீ ததீ ததீ
ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெய்.....
இந்த ஜதி சொல்வது போன்ற இந்த ஓசை அமைப்பில், "தாந் ததீ ததீ ததீ ததீ" என்று சொல்லும் போது இடைவெளி விட்டுவிட்டுக் குறைந்த வேகத்தில் நடக்கும் ஓசையும், அதன்பின் "ததிமிதி தத்தித் தரிகிட தத்தத் திரிகிட தத்தத் தெய்" என்று சொல்லும் போது ஓசை முடுகிச் சென்று துள்ளல் ஓசையாய் இனிமை பயக்கின்றது. கற்றறிந்த இசைவல்லுநர்கள் யாரேனும் ஊன்றிப் பார்த்து இந்தத் தலைப்பில் கீழ் (சந்தச் சுவை) ஆய்வு மேற்கொண்டால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மிக்க பயனளிக்கும்.
சொற்சுவை:
சூரபத்மனைப் பிளந்தச் செய்தியைக் கூறுமிடத்துச் சுவாமிகள் "துவந்துவம் பட வகிர்ந்து வென்று" என்று பாடியிருப்பார். இங்கே துவம் துவம்பட என்பது இரண்டு இரண்டாகும்படி என்ற பொருள். அதாவது 'சூரன், பதுமன் என்ற இருவரை (துவம்), சேவற் கொடியும் மயிலுமாக (துவம்பட=இரண்டாக) மாற்றினார் என்றும் பொருள் கொள்ளலாம். சண்டை இட்டு (துவந்துவம்=சண்டை) பிளந்தார் என்றும் வேறு விதமாகப் பொருள் கொள்ளலாம்.
சுவாமிகள் நோய் என்பதைக் குறிப்பதற்கானப் பொருளுடைய பல சொற்களைப் பால் வண்ணத்தில் பயன்படுத்தி உள்ளார். அவை பிணி, அழுங்கல், அணங்கு, நோய், புன்கண் என்பன.
கூம்பு 'அணங்கு' க(ண்)'நோய்' துயர் சார்ந்த 'புன்கணுமே'
இவை கற்போருக்குத் தமிழ் அறிவை விருத்தி செய்யும்.
சருக்கரை வண்ணத்தில், மண்ணுலகினைக் குறிக்க 'பூ' என்ற ஓரெழுத்துச் சொல்லையும், விண்ணுலகத்தைக் குறிக்க 'மீ' என்ற ஓரெழுத்துச் சொல்லையும் பயன்படுத்தி உள்ள நயம் அருமையானது.
'மீ' தலந் தனிலேயும் வண்டுஅறு
பூ மலர்ந்து உன் நாத அம்பத
நேயம் என்பதுவே தினந்திகழ்
மேலும் தேன் வண்ணத்தில், "காலிலியுமே ஆட" என்று கூறுகின்றார். இந்தக் "கால் இலி" என்ற சொல் சனிஸ்வரருக்கும் வாயு தேவருக்கும் பொருந்துமாறு உள்ளது. ஒரு சொல்லே இருவரை நினைக்குமாறு அமைந்துள்ளது.
வேடர் குலத்தைச் சிறப்பிக்க சுவாமிகள், "நாகரிகமே மேவு வேடர் மகள் ஆட" என்று பாடியுள்ளார். நாகரிகம் என்பது பண்பின் உச்சம்; தமக்கு கேடு வந்தாலும் பிறர் எத்துணையும் கேடு உறுதல் கூடாது என்று எண்ணும் நோக்கம். தியாகத்தைக் குறித்தது. இந்த நாகரிகத்திற்கு உரியவர்கள் வேடுவர்களே! வேடுவர் குலத்தில் பிறந்த கண்ணப்பரே, தான் கண்கள் இழந்தாலும் பரவாயில்லை, ஈசன் கண் பெற வேண்டும் என்று கண்ணெடுத்து அப்பினார் அல்லவா? இதனால் அன்றோ "நாகரிகம் மேவும் வேடர் மகள்" என்று சுவாமிகள் சிறப்பித்தார்.
தேவயானை அம்மையின் நடனத்தைக் குறிக்கும் போது "அருள் நய ஆனை மகள் ஆட" என்றார். கருணையுடன் செய்யும் நன்மைக்கு அடையாளமாய் தெய்வானை அம்மையைக் கூறினார். வள்ளிநாயகியாருக்கு "நாகரிகம்" என்ற அடைச் சொல்லும்; தெய்வானையாருக்கு "நயம்" என்ற அடைச் சொல்லும் புதுமை நலம் பயக்கின்றன.
கார்த்திகை 24ம் நாளில் சுவாமிகள் இந்தப் பேரின்ப வண்ணப் பாடலைப் பாடிய நாள். இந்த வருடத்தோடு 129 ஆண்டுகள் (09.12.2020) முடிகின்றன. இதனை முன்னிட்டு அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சிறிய கட்டுரையாக அமைத்துள்ளேன். இக்கட்டுரையில் ஏதேனும் சிறப்புகள் காணப்படின் அவை சுவாமிகள் இட்ட பிச்சை என்று மகிழ்கின்றேன். ஏதேனும் குறைகள் காணப்படின் மன்னித்து அருள வேண்டுகின்றேன்.
திருச்சிற்றம்பலம்!


