Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Sunday, 18 October 2020

பாமகள் பாடியப் பாடல்கள்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

     சரசுவதி தேவியைப் புகழும் பல பாடல்கள் உள்ளன. ஆனால் சரசுவதியே போற்றிப் பாடிய பாடல்கள் உள்ளனவா?  உள்ளன! ஆம் கலைமங்கையே  சாவா மூவா முருகப் பெருமானைப் போற்றிப்  பாடிய செய்தியை பாம்பன் சுவாமிகள் ஸ்ரீமத் குமாரசுவாமியம் நூலில் தெரிவிக்கின்றார். திருக்கந்தகிரி திருவிளையாடல் - இரண்டாம் பத்து என்ற பகுதியில் கீழ்வரும் ஆறு பாடல்களில் இவ்வரிய செய்தியைக் காணலாம்.

     திருக்கந்தகிரியில் முருகப் பெருமான் தம்முடைய இருதேவிமார்களும் சூழ மகா வனப்புடன் திருக்காட்சியை நல்கினார். இப்பெரும் காட்சியைக் கண்ட கலைமகள் பாடத் தொடங்கினாள்:

கலிவிருத்தம் - அடி ஒன்றுக்கு பதின் மூன்று எழுத்து

அரிய விப்பெருங் காட்சிமுன் னங்கலைமா
துரிய நற்கலன் மீட்டியு மாசுதனே
பெரிய வித்தகர் சித்தருள் ளேபெரியார்
தெரிய நச்சுநர் நின்றனை யேதெரிவார்

அரிய இப்பெரும் காட்சி முன் - அருமையான இப்பெரும் காட்சியின் முன்பு

அம் கலைமாது உரிய நற்கலன் மீட்டி - அழகிய கலைமாது தனது நல்ல வீணையை (கலன்=வீணை) மீட்டி..... (பாடத் தொடங்குகின்றாள்)

உமா சுதனே பெரிய வித்தகர் சித்தருள்ளே பெரியார் தெரிய நச்சுநர் - உமையின் மைந்தனே! பெரிய ஞானிகளுள்ளும் சித்தர்களுள்ளும் பெரியார் யார்? என்று தெரிந்துக் கொள்ள விரும்புபவர்;

நின்றனையே தெரிவார் - உன்னையே பெரியாராக அறிவார்

அடி ஒன்றுக்கு பன்னிரண்டு எழுத்து

ஈச தேசிலி ளந்திரு விற்றலைமை
பேச வேபிறி தின்றுனை யன்றிநின்மா
நேச தேவிகள் பக்கமு மந்நிலையாம்
மாச ணாதவுன் மைந்தைவென் மைந்துமிலை

ஈச தேசில் இளந்திருவில் தலைமை பேசவே - ஈசனே! ஒளிவீசும் (தேசு=ஓளி/தேஜஸ்) தன்மையிலும் இளமை செல்வத்திலும் தலைமையானது எது என்று பேசினால்

பிறிது இன்று உனை அன்றி - உன்னை அன்றி வேறு பொருள் இல்லை

நின் மா நேச தேவிகள் பக்கமும் அந் நிலையாம் - உன்னுடைய அன்பார்ந்த பெருமையுடை  தேவிகள் பக்கமும் இதுவே உண்மையாம். அதாவது முருகனின் ஒளியும் இளமைநலனும் அவர்தம் தேவிகளுக்கும் பொருந்தும்.

மாசு அணாத உன் மைந்தை வெல் மைந்தும் இலை - மாசு பொருந்தாத உன்னுடைய வலிமையை வெல்ல எந்த வலிமையும் இல்லை. 

மைந்து என்றால் வலிமை என்றும்; இது தூய தமிழ்ச் சொல் என்றும் சுவாமிகள் சேந்தன் செந்தமிழில் கூறியுள்ளார். மைந்தன் என்ற சொல் மகனைக் குறிக்க ஏன் வந்தது என்றால், தந்தை தளர்வுற்ற காலத்தில் மகன் வலிமையாய் இருந்து தாங்குதற்காகவே என்றும் சுவாமிகள் விளக்கி உள்ளார். 

வேதன் யாக்கைமெ லிந்துய்ய வெஞ்சிறைசெய்
நீத னார்க்குண னீயல தேவர்கொலோ
ஓதல் கேட்டலி லாதினி தோம்பொருளை
ஓத மாக்குரு வுண்டுகொ லோபிறருள் 

வேதன் யாக்கை மெலிந்து உய்ய வெஞ்சிறை செய் - பிரமாவின் (வேதன்=பிரமன்) உடம்பு மெலிந்து உய்தி பெறும்படி சிறைசெய்யும்

நீதன் ஆர்க்குணன் நீயலது ஏவர் கொலோ - நீதிமானும் (கருணை) நிறைந்த குணம் உடையவன் உன்னை அல்லால் பிறர் யாவர்­? 

ஓதல் கேட்டல் இலாது இனிது ஓம் பொருளை ஓத - கற்றலும் கேட்டலும் இல்லாமலேயே பிரணவப் பொருளை நன்கு எடுத்து உரைக்க

மாக்குரு உண்டு கொலோ பிறருள் -​ பெருமை உடைய ஞானாசிரியன் உன்னையன்றி பிறருள் ஒருவர் உண்டோ­?

பம்புன் வேலினு மிக்கப டைக்கலமின்
றும்பர் தார்களு ளிந்துள மொப்பதுமின்
றம்ப ராவுவை யங்களு ணீயளியால்
நம்பு மாமயில் போல்வதின் றேநயனால்

பம்பு உன் வேலினும் மிக்க படைக்கலம் இன்று - பிரகாசம் உடைய (பம்பு = பொலிவு) உன்னுடைய வேலாயுதத்தை விட சிறந்த ஆயுதம் இல்லை

உம்பர் தார்களுள் இந்துளம் ஒப்பதும் இன்று - தேவர் அணியும் மாலைகளுள் (தார்=மாலை) நினது கடப்பமலருக்கு (இந்துளம்=கடப்பம்) இணையானது ஒன்றும் இன்று

அம் பராவு வையங்களுள் நீ அளியால் நம்பு மாமயில் போல்வது இன்றே - அழகு நிறைந்த வாகனங்களுள்ளே (வையம் = வாகனம்/ஊர்தி) நீ அருளோடு (அளி=அருள்/அன்பு) விரும்பும் (நம்பு = விரும்பு என்றும் பொருள்) பெரிய மயில் போன்றது வேறு எதுவும் இல்லை

நயனால் - நீதியால் (அதாவது இங்கு உண்மையால்)

வன்ப தாகையுட் கோழியின் மல்குவதின்
றுன்ப தார்வவு வப்பினு யர்ந்ததுமின்
றென்ப தாரமு தோர்தவ ரென்பவர்பேண்
இன்ப தாமென வேமறை கூறிடுமே

வன் பதாகையுள் கோழியின் மல்குவது இன்று - வலிய கொடிகளுள் நின் கோழிக் கொடியை விடச் சிறந்தது இல்லை

உன் பத ஆர்வ உவப்பின் உயர்ந்ததும் இன்று - உன்னுடைய திருவடி அன்பினால் விளையும் இன்பத்தினும் உயர்ந்த இன்பம் இல்லை 

என்பது  ஆரமுதோர் தவர் என்பவர் பேண் - என்பது அருமையான தேவர்களும் தவசிகளும் (முனிவர்களும்) பேணிக் கொள்ளும்

இன்பது ஆம் எனவே மறை கூறிடுமே - இன்பமாம் என்று வேதம் கூறுமே

ஆக லிற்சுர ராதிபன் மூன்றுடனைந்
தாக வத்தர்க ளோதுக ணம்பணிதே
நீக ளித்தரு ணீட்டெனப் பாடினளே
மோக ழித்தனு பூதிசொன் னோன்முறையீர்

ஆகலிற் அத்தர்கள் ஓது  - ஆதலினால் பெரியவர்கள் கூறும்

சுரராதி  பன் மூன்றுடன் ஐந்தாக கணம் பணி தே- சுரர் முதலான பதிமூன்றுடன் ஐந்து (13+5) ஆகிய பதிணென் கணங்களும் (பதிணென் கணங்கள் ஆவன: அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசிகள், போக பூமியர் என்பன) வணங்கி பணிகின்ற தெய்வம் (தே)

நீ களித்து அருள் நீட்டு எனப் பாடினளே - நீ திருவுளம் மகிழ்ந்து எனக்கு அருள் தருவாயாக என்று சரசுவதி பாடினாள்

மோகு அழித்து அனுபூதி சொன்னோன் முறையீர் - உலக மோகத்தை ஒழித்துக் கந்தர் அனுபூதி பாடிய அருணகிரிநாதரது ஒழுக்கத்தை உடையீர்

முருகனின் சிறப்புகளை எல்லாம் நாமகள் எப்படிப் பாடித் துதித்தாள் என்று இந்த ஆறு பாடல்களில் சுவாமிகள் நமக்கு விளக்கியுள்ளார். சுவாமிகள் அருளிய தௌத்தியம் என்னும் பதிகத்தின் கடைசி வரி "பாமகள் புகழருட் பாத நமஸ்தே". இப்பொழுது, இவ்வரிகளின் ஆழத்தைச் சுவாமிகளின் நூலிலேயே கண்டோம். 

 திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment