Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Sunday, 19 December 2021

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள் - பகுதி 4

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

சிவஞானத்திற்குச் சிறந்த வழிகாட்டியாம் நம் பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் ஒன்பான் சுவைகள் என்னும் இத்தொடரில், இனி மருட்கை எனப்படும் வியப்புச் சுவையினைப் பற்றிக் காணலாம்.

தொல்காப்பிய நூற்பாவின்படி மருட்கை என்னும் வியப்பு எவைகளால் ஏற்படுகின்றது என்று காணலாம்.

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே

ஆம்! வியப்பு என்பது புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நான்கு காரணங்களால் ஏற்படும்.

  • புதுமை - இதுவரை காணாத ஒன்றினைக் காணும் போது வியப்பு ஏற்படும். உதாரணமாக, ஒருவருக்குக் கைகளில் ஆறு விரல்கள் இருக்குமானால் அது நமக்கு ஒரு வியப்பினைத் தரும்.
  • பெருமை - இங்குப் பெருமை என்பது மிகவும் பெரிவற்றைக் காணும் போது ஏற்படும் வியப்பு ஆகும். இவ்வளவு பெரிதா என்று எதனையேனும் பார்த்து வியப்படைகின்றோம் அல்லவா?
  • சிறுமை - அளவில் சிறியதாக எவற்றையேனும் காணும் போது ஏற்படும் வியப்பு.
  • ஆக்கம் - அறிவுடையோர்கள் எதனையேனும் உருவாக்கினால், அதனைப் பார்த்து வியத்தல். உதாரணமாக, விமானம், ஏவுகணை போன்றவற்றைப் பார்த்து வியப்படைதல் உண்டு அல்லவா?

இனி, சுவாமிகளின் பாடல்களில் இந்தச் சுவைகள் எப்படிப் பயின்று வந்துள்ளன என்று காண்போம்.

புதுமை

இம்மாதம் மார்கழி என்பதால் மயூர வாகன சேவன விழா வரலாற்று சம்பவத்திலிருந்தே புதுமைச் சுவையினைக் காணலாம்.  உப்பு நீக்கிய உணவினையே சுவாமிகள் தம் வாழ்நாளின் பெருபாலான நாட்களில் உண்டார். உப்பில் தான் எழும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து உள்ளது. அந்த உப்பை நீத்த உணவையுண்ட சுவாமிகளின் முரிந்த கால் கூடுவது கடினம் என்று ஆங்கிலேய மருத்துவர்கள் கருதினர். கருணைக்கடலாம் கந்தன் அருளால் கால் எலும்புகள் நன்கு கூடியது. தெய்வ சிகிச்சையே நடந்தது. இவ்வருள் நிகழ்ச்சிக்குப் பின், ஆங்கிலேய பெண் மருத்துவர் ஒருவர் சுவாமிகளின் கால் கூடிய வண்படங்களைப்  (X-Ray) பார்த்து பெரும் வியப்படைந்தார். 

(இங்கு,  X-Ray என்னும் ஆங்கில சொல்லைச் சுவாமிகள் வண்படம் என்று கூறிய தமிழாக்கச் சிறப்பும் வியப்பினைத் தரும்.) 

இப்பொழுது, பாடலில் உள்ள வரிகளைக் காண்போம்.

எம்மனித்தரும் உண்ணும் உப்பை இகந்த நும்கழல் ஆயுள்கள்
செம்மை உற்றமை மாவியப்பு எனல் செப்பி நின்றனள் அற்பொடே

(எம்மனித்தரும் - எந்த மனிதரும்; இகந்த - நீக்கிவிட்ட; நும்கழல் ஆயுள்கள் - உங்கள் காலின் வாழ்நாட்கள்; செம்மையுற்றமை - குணம் அடைந்தமை; செப்பி நின்றனள் - சொல்லி நின்றாள்; அற்பொடே - அன்புடனே)

நூல்: ஸ்ரீமத் குமாரசுவாமியம் - அசோக சால வாசம் - ஆறாம் பத்து - 8வது பாடல்

இப்பாடலில் உள்ள இவ்வரிகள் புதுமையால் தோன்றும் வியப்புச் சுவையினை மிகவும் அழகாக எடுத்துக் கூறுகின்றன.

சிறுமையும் பெருமையும்:

பெருமையால் (பெரியதால்) ஏற்படும் வியப்பும் சிறுமையால் (சிறியதால்) ஏற்படும் வியப்பினையும் சுவாமிகள் ஒரே பாடலிலேயே தந்து உள்ளார். 

முருகப் பெருமான் உருவ நிலையில் சின்னஞ்சிறிய குழந்தையாக இருந்த போதே தம்முடைய தந்தைக்கு ஓம் என்னும் பிரணவத்தின் பொருளைச் சொல்லியது வியப்பே! என்று வியக்கின்றார்.

இதைவிட வியப்பு என்னவென்றால், குகப்பெருமான் அருவ நிலையில் எல்லா உயிர்களின் ஆன்ம குகைகளில் இருந்தாலும், அந்த ஆன்மாக்களுக்கு அவன் எட்டாத நிலையில் இருப்பதை நினைத்தால் அதிவியப்பு உண்டாகின்றது என்று சுவாமிகள் கூறுகின்றார். 

இதுகாறும் சிறுமையால் (சிறியவற்றால்) ஏற்படும் வியப்பினைக் கூறிய சுவாமிகள் இனிப் பெருமையால் ஏற்படும் வியப்பினையும் இப்பாடலிலேயே கூறுகின்றார். புராணத்தின்படி, பெருநிலை எனப்படும் விஸ்வரூபம் எடுத்தவர்கள் அனுமனும் வீரபாகு தேவரும் ஆவார். இவர்களின் பெரியவடிவத்தை எல்லாம் தாண்டி பலப்பல கைகளும், தலைகளும் உடைய பிரமாண்ட வடிவத்தை எடுத்த முருகனின் தன்மையைக் கணித்து கூற யாரால் முடியும்? யார் கூறவல்லார்? என்று சுவாமிகள் வியக்கின்றார்.

உருநிலையில் குழவி வடிவுடன் இருந்தே
      உயர் தந்தைக்கு ஓம் பொருள் சொன்னது வியப்பே!
 அருநிலையில் உயிர்தோறும் இருந்து அந்த
     ஆவிகட்கு எட்டாது இருத்தல் அதிவியப்பே!
பெருநிலையில் அரிய அனுமான் வீரபாகுப்
      பெயருடையான் உருக்களைக் கடந்து
கரசிரங்கள் பல ஓங்க நின்ற நீர்மை
    கணிப்பவர் ஆர்? திருப்புகழ் சொன்னவன் ஆள் மன்னே!

நூல்: திருவலங்கற்றிரட்டு இசைத்தமிழ் - சுப்பிரமணிய இரகசியம் - 10வது பாடல்

இப்பாடலின் மூலம் சிறுமையாலும் பெருமையாலும் ஏற்படும் வியப்புச் சுவையினை உணரலாம்.

ஆக்கம்:

பாம்பன் சுவாமிகள் தமிழ் மொழியின் செம்மை நலத்தைக் கண்டு வியக்கின்றார். அத்தமிழ் தெய்வத் தன்மை நிறைந்தது. 

தம் தலைவனாகிய முருகப் பெருமான் ஈன்றாளினும் மேலான இரக்கம் உள்ளவன். அவனைப் பாடித் துதிப்பதற்குத் தேன் போல் கிடைத்த தெய்வத் தன்மை நிறைந்த தமிழே! என்று விளிக்கின்றார்.

ஈன்றாளின் மேலா மிரக்கமுள நச்செவ்வே
ணோன்றா டுதித்தினிய நூனுவலத்-தேன்பொற்
கிடைத்ததெய் வத்தமிழே கேணினையு நின்னைப்
படைத்தவனை யும்பழிச்சு வேன்

ஈன்றாளின் மேலாம் இரக்கமுள நச்செவ்வேள்
நோன் தாள் துதித்து இனிய நூல் நுவலத்-தேன்பொற்
கிடைத்த தெய்வத்தமிழே கேள் நினையும் நின்னைப்
படைத்தவனையும் பழிச்சுவேன்

நூல்: காசியாத்திரை - 67வது பாடல்

(ஈன்றாள் - அன்னை; நச்செவ்வேள் - நல்ல செவ்வேள்; நோன்தாள் - வலிமையான தாள்; நுவல - கூற) 

பாடலின் பொருள்: அன்னையினும் மேலாம் அருளுடைய நல்ல செவ்வேட் பரமனது உறுநர்த் தாங்கும் மதனுடை நோன்றாளைப் புகழ்ந்து உயிர்க்கு இன்பம் கூட்டும் நூல்களை அருளுவதற்குத் தேன் போன்று கிடைத்த தெய்வத்தமிழே! என் விருப்பத்தைக் கேட்பாயாக. நான் உன்னையும் உன்னைப் படைத்த குகப்பரமனையும் வாழ்த்துவேன்.

மேலும், ஒருபாடலில் தமிழ் மொழி ஆக்கத்தின் சிறப்பினைக் கண்டு எத்தலத்தவரும் (தமிழர் அல்லாதவரும்) இறும்பூது (வியப்பு) அடைவர் என்று கூறுகிறார்.

கடவுள் என்ற தூயத் தமிழ்ச்சொல்லின் பொருளைச் சுவாமிகள் விளக்கும் இடத்து, கடவு+உள்=கடவுள்; (கடவு=செலுத்து) அதாவது உயிர்களின் உள்ளக் குகைதோறும் இருந்து இச்சை, ஞானம், கிரியை என்பவற்றை இயக்கிச் செலுத்தும் உள்ளமாய் உள்ளது பிரமம் என்று கூறுகின்றார்.

செலுத்துதல் என்னும் சொல்லே கடவுதல் எனச் செந்நூல்கள்
பலத்துடன் உரைக்கும் ஆற்றால் பசுக்களின் உளத்தே நின்று
செலுத்து உளமாம் குகற்குக் கடவுள் என் திருப்பேர் ஒன்று எத்
தலத்தரும் இறும்பூது எய்தத் தமிழினில் ஏய்ந்தது ஆமே

நூல்: செக்கர்வேள் செம்மாப்பு

இப்பாடலில், இறைவனுக்குக் "கடவுள்" என்ற பொருத்தமான பொருள் ஆழமுடையத் திருப்பெயர் தமிழில் உள்ளதால், தமிழர்கள் மட்டும் மகிழ்ச்சி அடையும் விதமாக இல்லாமல், எந்தத் தலத்தில் உள்ளவரும் (எந்த நாட்டைச் சேர்ந்தவரும்) இந்தச் சிறப்பினைக் கண்டு அதிசயிக்குமாறு தமிழில் அமைந்தது என்று சுவாமிகள் கூறுகின்றார். இப்பாடல்கள் ஆக்கத்தினால் ஏற்படும் வியப்புச்சுவைக்கு எடுத்துக்காட்டாகும். 

இதுகாறும், பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் வியப்புச் சுவைக்கான சிறு சிறு உதாரணங்களைச் சுருக்கமாகக் கண்டோம். 

ஆனால், பாம்பன் சுவாமிகளின் பாடல்களே படிப்பவர்களுக்கு வியப்பினைத் தரும் என்பதை அனைவரும் உணர்வர். அது சுவாமிகளின் பாடலில் உள்ள  ஓசைநயத்தாலோ, முடுகுநடையாலோ, சொல்நயத்தாலோ, சித்திர கவிகளாலோ, விசித்திர கவிகளாலோ, பொருள் ஆழத்தாலோ மற்றும் எதனாலானும் வியப்பினைத்தரும் என்பதைச் சான்றோர்கள் உணர்வர் என்று கூறி இப்பகுதியினை முடிக்கின்றேன்.

இனிவரும் பதிவுகளில் அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை மற்றும் சமநிலை ஆகிய சுவைகளைக் காணலாம்.

திருச்சிற்றம்பலம்!


1 comment:

  1. சிறப்பான பதிவு 🙏🙏🙏

    ஓம் அத்தியாச்சிரம சுத்தாத்துவித வைதீக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச குருப்யோ நம:

    ReplyDelete