Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Tuesday, 25 January 2022

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள் - பகுதி 5

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

நல்லவர்கள் வாழ்வாங்கு வாழவும் தீயவர்கள் மனம் திருந்தி வாழவும் அருள் செய் வள்ளலாம் பாம்பன் சுவாமிகள் பாடல்களில் ஒன்பான் சுவைகள் என்னும் இத்தொடர் கட்டுரையில், இனி பயம் எனப்படும் அச்சச் சுவையினைப் பற்றிக் காணலாம்.

தொல்காப்பிய நூற்பாவின் படி அச்சம் எந்தெந்த காரணங்களால் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

அணங்கே விலங்கே கள்வர்தம் மிறைஎனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே

ஆம், அச்சம் என்பது அணங்கினாலும் (பேய்/பூதம்), விலங்கினாலும், கள்வர்களாலும், தம்முடைய இறையாலும் ஏற்படுவது ஆகும். இவற்றினைச் சற்று விரிவாகக் காணலாம்.

  • அணங்கு - அணங்கு என்பது இங்குப் பேய், பூதம் போன்றவைகள் ஆகும். இவை அளவிடமுடியாத அச்சத்தை ஏற்படுத்தி அகப்பட்டவரை வருத்தும் இயல்புடையன.
  • விலங்கு - கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் புலி, சிங்கம், கரடி போன்ற விலங்குகள் ஆகும்.
  • கள்வர்கள் - சோர்வு பார்த்து நம்மை வஞ்சித்துக் கொடும் தொழில் புரிவோர். இவர்களால் அச்சம் விளைவது இயற்கையே.
  • தம் இறை - தம் இறை என்பது இங்குத் தன்னை ஆள்வோரைக் குறிக்கும். அந்த இறை என்பவர் தந்தையோ, ஆசிரியனோ, அரசனோ, வழிபடு தெய்வமாகவோ இருக்கலாம். இவர்களின் பெருமை கருதியும், இவர்களிடத்தில் கொண்ட பெருமதிப்பாலும், பெரியவர்களாகிய இவர்கள் மனம் கோணாமல் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வினாலேயும் பயம் ஏற்படும்.

இனி, பாம்பன் சுவாமிகள் பாடல்களில் இந்த நான்கு வகைகளினால் ஏற்படும் அச்சச் சுவையினைச் சுருக்கமாகக் காணலாம்.

அணங்கு:

பேய் பூதம் போன்ற எதிர்மறை சக்திகள்  இவ்வுலகில் இருப்பதனைச் சுவாமிகள் மறுக்கவில்லை. ஆனால் அவைகளை நம்பி வாழ்வதும் அவற்றின் மூலமாகப் பிழைப்பு நடுத்துபவர்களையும் சுவாமிகள் கடுமையாகச் சாடியுள்ளார்.

பேய், பூதம் போன்றவைகள் நிச்சயமாக நமக்கு பெரும் அச்சத்தினை விளைவிக்கும் இயல்புடையன. ஆனால் சுவாமிகள் இந்தப் பேயும் பூதமும் நம்மைப் பார்த்து பயம் கொள்ள வேண்டும் என்று முருகவேளின் வேலிடம் வேண்டுகின்றார்.

ஒலியெழ உரத்த சத்தத்தொடு வரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்கதப் பேய் பல கணத்து எவையானாலும்
கிலிகொள எனை வேல் காக்க

                                       சண்முக கவசம் - 10

ஒலியை எழுப்பி உரத்த சத்தத்துடன் வரும் பூதம் என்று கூறியதாலும், உயிரினைப் பலி கொள்ளும் இராக்கதப் பேய் என்று விளக்கியுள்ளதாலும், இங்கு அச்சச் சுவையினை நன்கு உணரலாம்.

பாம்பன் சுவாமிகள் பிரப்பன்வலசை என்னும் சிற்றூரில் உள்ள இடுகாட்டில் தவம் செய்த போது, முதல் ஐந்து நாட்கள் சில பேய்கள் சுவாமிகளைச் சூழ்ந்து தவத்திற்கு இடையூறாக அச்சம் விளைவித்தது. முருகப் பெருமான் திருவருள் அப்பேய்களைத் துரத்தியது என்று சுவாமிகள் கூறியுள்ளதைக் காணலாம்.

நில வளந்தரும் பிரப்பை ஈம மா 
    நிலன் இருந்து நான் நினை நினைந்த போது
அலகை ஐந்து நாள் எனை வளைந்து பேம்
      அது விளைத்தகால் அவை துரத்தினாய்

                      இடையறாது நிற்க விளைதல்  - 9வது பாடல்

(நிலம் வளம் தரும் பிரப்பை - நிலவளம் உடைய பிரப்பன்வலசை என்னும் சிற்றூரில்; ஈம மா நிலன் இருந்து - சுடுகாடாகிய பெரிய இடத்தில் இருந்து; நான் நினை நினைந்த போது - அடியேன் நின்னை நினைத்து தியானம் செய்த போது; அலகை ஐந்து நாள் எனை வளைந்து - பேய்கள் ஐந்து நாள் என்னை சூழ்ந்து; பேம் அது விளைத்தகால் - அச்சத்தை ஏற்படுத்திய போது; அவை துரத்தினாய் - அப்பேய்களைத் துரத்தி அருள் செய்தாய்)

நக்கீரர் பெருமானுக்கு முருகப் பெருமான் அருள் செய்த வரலாற்றைப் பாம்பன் சுவாமிகள் வடதிருமுல்லைவாயில் குகபரர் வண்ணத்தில் கூறும் போது, நக்கீரர் பெருமானை இரண்டு பூதங்கள் ஒரு குகையில் அடைத்தன. அப்போது இடர்பட்டு இருந்த நக்கீரரின் பயத்தை விளக்கும் போது,

துள்ளித் துடி துடித்து அஞ்சு அஞ்சற்க எனா ஒரு
வல் உத்தரவு அளித்து தன் அன்புக்குள் ஆனவர்

பொருள்: நக்கீரர் பெருமான் துடி துடித்து அஞ்சும் போது, முருகப் பெருமான் "அஞ்சற்க" என்ற வலிமையான உத்தரவு மொழியினை அளித்து நக்கீரர் பெருமானைத் தன்னுடைய அன்புக்குள் ஆக்கியவர்

இது போன்ற இடங்களில், பேய்களால் (அலகைகள்) ஏற்படும் அச்சத்தை நன்கு விளக்கி உள்ளார்.

விலங்கு

சண்முக கவசத்தில் நம்மை அச்சப்படுத்தி இடர் செய்யும் விலங்குகளைச் சுவாமிகள் அழகாகப் பட்டியல் இட்டு இருப்பார். கடுமையான விடத்தை (விஷத்தை) உடைய பாம்பு, சிங்கம், கரடி, புலி, பெரிய யானை, கொடுமையைக் கொண்டு உள்ள நாய், குரங்கு, பன்றி, பூனை என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதை அடியார் பெருமக்கள் நன்கு அறிவார்கள்.

மேலும் ஒரு உதாரணம், ஒருமுறை சுவாமிகளைத் தேள் ஒன்று கடித்து துன்புறுத்தியது. ஆனால் அப்போது சுவாமிகள் தேளின் வலியினைக் காட்டிலும் இறுதி நாளில் எமன் நம்மை வேதனைப்படுத்துவது எப்படி இருக்குமோ என்று அஞ்சிப் பாடியுள்ளார். அந்த வேதனை, ஒருவர் தன்னை வாளினைக் (கத்தி) கொண்டு வெட்டுவது, குத்துவது, வீசுவது போல் இருக்குமோ என்று வருந்திப் பாடியுள்ளார்.

தேள்விடம் என் காலைத் திருகிக் குடைதலில் இந்
நீள் உடலை நீக்கிடு நாள் நேர் துன்பு - வாள் கொடுஉற
வெட்டுவது குத்துவது வீசுவது போல் உறுமோ
இட்ட குமரேச! அறியேன்

                              காசியாத்திரை - 50

பொருள்: என் அன்புக்குரிய குமார பரமேசுவரனே! தேளின் விடமானது என் காலில் ஏறித் திருகிக் குடைகின்றதே. இதை நோக்கினால் இந்த நீண்ட உடம்பு கழிய வருநாளில் உண்டாகும் துன்பமானது வாள் கொண்டு இரண்டு துண்டாக வெட்டுவது போலிருக்குமோ? அவ்வாளால் உடம்பில் பல கால் குத்துவது போலிருக்குமோ? அவ்வாளை உடம்பின் பல இடங்களிலும் வீசுவது போலிருக்குமோ? அறிகிலேன்.

இதனைக் கொண்டு, விலங்கு என்ற வகையால் ஏற்படும் அச்சச் சுவையினை நன்கு அறியலாம்.

கள்வர்:

கள்வர்களாலும் நமக்கு பெரும் அச்சம் ஏற்படும். ஒருமுறை இரவு நேரத்தில், சுவாமிகள் பின்னத்தூருக்கு அருகில் இருக்கும் வளையன் மாதேவி என்னும் ஊருக்கு சில அன்பர்களுடன் சென்றார்கள். அவ்வூருக்குச் செல்லும் சமயம், சில கள்வர்கள் சுவாமிகளுக்கும் அவர் தம் அன்பர்களுக்கும் பேராபத்தினை விளைவிக்க கருதினர். ஆனால் கன்று அழைக்கும் முன்னே கருதி வரும் ஆ போல முருகன் சில காவலர்களை அப்பகுதியில் தோன்றச் செய்தார். காவலர்களின் மீது உள்ள அச்சத்தால் அந்தக் கள்வர்களின் எண்ணம் நிறைவேறாது போயிற்று.

எழில் இறாது உலாம் வளையலாள் இல் ஆம்
செவ்வை மார்க்கம் நான் ஏகி இராவிலே
     திருடர் கைப்படாது எனையும் நட்புளார்
எவ்வரும் புரந்திட்ட தண்ணளி ஈ

பொருள்: அழகு எக்காலத்தும் நீங்காது விளங்குகின்ற வளையன்மாதேவி என்னும் ஊருக்கு இரவிலே செல்லும் போது சூழ்ந்து கொண்ட திருடர்கள் கைகளில் நானும் என்னோடு போந்த அன்பர்களும் சிக்காதபடி காத்து குளிர்ந்த அருள் தந்தவனே!!

மேலும் சுவாமிகள் திருட்டு என்னும் தொழில் பஞ்சமா பாதகங்களுள் ஒன்று எனவும், அத்தொழிலினைக் கைக்கொண்டவர்களை வலிமையான சனி பற்றிக் கொள்ளும் என்றும்; அந்தச் சனி பதினைந்தில் பாதி அல்ல அதாவது ஏழரை நாட்டுச் சனி அல்ல ஜென்ம சனி என்றும் கூறியுள்ளார். திருட்டு தொழில் மேற்கொண்டோர் உலகத்தில் எந்த இன்பமும் இல்லாத தாய் தந்தையருக்கு மகனாகப் பிறந்து இளைத்து, முரத்தில் அங்கும் இங்கும் சுழல் தானியம் போல் துன்பம் உறுவார்கள் என்றும் தகராலய இரகசியத்தில் கூறியுள்ளார்.

மேலும் சுவாமிகள், இவ்வுலகில் வாழும் திருடர்களைக் காட்டிலும், நம்மோடே இருந்து நமக்கே பகை ஆகும் ஐம்புலக் கள்வர்களைக் கண்டே பயந்துள்ளார். 

அரசனுக்கு அடங்காத குடி மக்களைப் போல, என் இருதயத்திற்கு இணங்கி நில்லாத கரவு நெஞ்சமும் உன்னை கருதுமோ? பரம் பொருளே! அருள் பாலிக்க வேண்டுமே! என்று பாடியுள்ளார்.

அரசனுக்கு அடங்காக் குடி ஏய்ப்ப என்
இருதயத்திற்கு இணங்கி நி(ல்)லாக் கொடும்
கரவு நெஞ்சமும் கண்ணும் கொலோ நினைப்
பரமனே அருள் பாலிக்க வேண்டும் ஆல்
                        திருநிறைந்த சிவம் - 47

(குடி - குடிமக்கள்; ஏய்ப்ப - போல; கொடும் கரவு நெஞ்சம் - கொடிய கரப்புடைய நெஞ்சம்; கண்ணும் கொலோ நினை - கருதுமோ நின்னை?)

இந்த எடுத்துக்காட்டுகள் மூலம் கள்வர் என்னும் வகையால் ஏற்படும் அச்சச் சுவையினைக் கண்டோம்.

இறை:

பாம்பன் சுவாமிகளுக்கு இறையாய் நின்றவர் செவ்வேட்பரமனே. அந்தப் பரமன் மயிலின் மீது வரும் பிரமாண்ட காட்சியைச் சுவாமிகள் வர்ணிக்கும் போது, அவ்வுயர் காட்சியைக் கண்டு ஈன பிசாசுகள், பிரேதங்கள் தம் செயல்களை விட்டு உளம் கலங்கி நிற்கின்றன எனவும்; ஐராவதம் என்னும் யானையில் வரும் இந்திரன் முதலானோரும், அட்ட திக்கு பாலர்களும், தவத்தலைவர்களும் அச்சம் கொள்ளவும்; ஊழிமுடிவு என மயிலின் மீது வரும் இறைவனே! என்னுடைய ஊறு கெட என்று வருவாய் என்று பாடியுள்ளார்.

ஆழி சுலவும் புவி எலாம் ஒளி செய் விண்ணின் மணி
          அனைய மணிமுடி இலங்க
    அகலுள் வடவரையைச் சடால் என்ன மோதிடற்கு
           ஆன மொய்ம்பு அணி துலங்க 
நாழி ஓர் அரைக்குள் நிசிசரர் உயிர் முருக்கும் ஒரு
             நலிவில் வடிவேல் விளங்க
      நடுவற்ற ஈனப் பிசாசுகள் பிரேதங்கள்
             நடைவிட்டு உளம் கலங்கி
வேழம் இவர் இந்திராதர் திசைநாதர் தவநாதர்
           வெருவு உற்று உன் அடி வணங்க
       விண்தலமும் மண்தலமும் அலைவுற்று நிலைபிசகி 
            மேருகிரியும் குலுங்க
 ஊழி முடிவு என நவிரம் ஏறும் முதல்வா என்றன்
       ஊறுகெட என்று வருவாய்
   உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
        ஓங்கார குருநாதனே!!

                   முதன்மண்டலம் - திருப்பழநி - 1

(ஆழி சுலவும் புவி - கடல் சூழ்ந்த மண்ணுலகம்; விண்ணின் மணி அனைய மணிமுடி இலங்க - விண்ணில் ஒளி செய்யும் சூரியனைப் போல மணிமுடி விளங்க; அகலுள் வடவரையைச் சடால் என்ன மோதிடற்கு ஆன மொய்ம்பு அணி துலங்க - அகன்ற மந்திர மலையை சடால் என்று மோதிடும் அளவிற்கு வலிமையுள்ள தோள்களின் அணிகலன்கள் விளங்கவும்; நிசிசரர் உயிர் முருக்கும் - அசுரர்களின் உயிரை அழிக்கவும்; வெருவு உற்று - பயம் உற்று; வேழம் இவர் - யானையில் பயணிக்கும்)

மேலும், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணத்தில், சிவபெருமான் எமனை உதைத்ததைக் கூறும் போது "அஞ்சு அஞ்ச உதைத்தும்" என்று கூறியுள்ளார். அதாவது எமனின் ஐம்புலன்களும் அஞ்சும்படி உதைத்தார் என்று கூறுகின்றார்.

அடியவர்க்கு அடிமை நாம் என்னும் பதிகத்தின் முடிவில், தனக்கு முன்  வாழ்ந்த சிறந்த அடியவர்களின் பத்தியின் பெருமையைக் கண்டு தம் உள்ளத்தில் அஞ்சி அஞ்சி பாடுவதாகக் கூறியுள்ளார்.

உள் அஞ்சி அஞ்சி இவை பாடுகின்ற
        குமரகுரு தாசன் நாளும்
  அடி அடைய நேடி நிற்கும் அருளார் குகேசன்
         அடியவர்க்கு அடிமை நாமே

மேலும் ஒருவர் வாழ்வில் பயத்திற்கெல்லாம் பெரிய பயமாய் அமையும் வேதனை, மரண வேதனையே. அதனைச் சுவாமிகள் கூறும்போது,

வெருவில் வெருவு என்ன இனி வரவுள்ள கொடு மரண
      வேதனைக்கே என் மனம்
மெத்தப் பயந்து கவல்கின்றது இவ்விடயத்தில்
       மேதினியில் உதவி செய்ய
  ஒருவரால் ஆகுங் கொல்? என் ஐய! உன்னையே
உள்ளபடிநனி நம்பினேன்

      முதன் மண்டலம் - திருப்பரங்கிரி - 6

(வெருவில் வெருவு - பயத்தில் பயம்; கவல்கின்றது - கவலைக் கொள்கின்றது; மேதினியில் - உலகில்)

இந்த உதாரணங்களின் மூலம் , 'தம் இறை' என்ற வகையால் ஏற்படும் அச்சச் சுவையினை உணரலாம்.

இதுவரையிலும், குருவருளால் அச்சச் சுவையினைப் பற்றி ஓரளவுக்குச் சுருக்கமாகக் கண்டோம். இனி, அடுத்த பதிவுகளில் மீதமுள்ள சுவைகளைப் பற்றிக் காணலாம் என்று கூறி இப்பதிவினை முடித்துக் கொள்கின்றேன்.

திருச்சிற்றம்பலம்!

No comments:

Post a Comment