ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
முருகனின் அருளை முழுதாகப் பெற்ற முதுபெரும் கலையரசியும் அறநூல்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவரான ஔவைப் பிராட்டி தமிழ் கூறும் நல்லுலத்திற்குக் கிடைத்த அரும் பெரும் பெண் புலவர் ஆவார். இவரைப் பாம்பன் சுவாமிகள் 'முதிர் கலைமாது' என்றே குறிப்பிட்டு மகிழ்வார்.
பாம்பன் சுவாமிகள் தவம் இயற்றிய போது "கல்வி அறிவில் உம்முடைய திறம் இவருக்கும் உண்டு; இவர் உம்மை பார்க்கவே வந்தார்" என்று அருணகிரிநாத சுவாமிகளும் அகத்திய மாமுனியும் முருகனிடத்தில் பாம்பன் சுவாமிகளின் திறத்தினைக் கூறினார்கள். இத்தகைய சிறப்புடைச் சுவாமிகளை இலங்கையில் உள்ள புலவர்கள் கலைஞானி என்றே கூறி மகிழ்வார்கள்.
கலைமாது ஔவையும் கலைஞானி பாம்பனாரும் என்ற இந்தக் கட்டுரையில் பாம்பன் சுவாமிகள் ஔவைப் பிராட்டியைப் புகழ்ந்த மொழிகளையும் அவர்தம் தமிழிலும், அறக் கருத்துகளிலும் மனந் தோய்ந்த பாங்கினைச் சிறிதளவு காணலாம்.
![]() |
சுவாமிகள் ஔவைக்குச் சூட்டிய புகழாரங்கள்:
கல்வியங் கடலைக் கடந்து மேன் மிளிரும்
கருத்துடை ஔவை மூதாட்டி
[நூல்: திருவலங்கற்றிரட்டு - இசைத்தமிழ் - அடிமை 2வது பாடல்]
என்ற வரிகளால் ஔவைக்கு மணிமகுடம் சூட்டினார் நம் சுவாமிகள். மேலும்,
கம்பன் முதல் நற்கவிஞர்க்கு அரசியென
இருந்த முதிர் கலைமாது ஔவை
[நூல்: திருத்தொடையல் - 2வது பாடல் (நான்காவது மண்டலத்தைச் சார்ந்த சிறுநூற்றிரட்டு]
என்றும் பாராட்டியுள்ளார். மேலும் ஔவையைப் போன்ற ஆன்ற தமிழ் புலவர் அரிதிலும் அரியர். ஆகையால்,
அரிய ஔவை....
[நூல்: திருத்தொடையல் - 26வது பாடல் (நான்காவது மண்டலத்தைச் சார்ந்த சிறுநூற்றிரட்டு]
என்று கூறியுள்ளார்.
ஔவையின் மொழிகள் என்றும் சாகாது நிலைத்து நிற்பவை. ஆதலால், அவைகளை அமுத மொழிகள் என்றே சுவாமிகள் குறிப்பிட்டு உள்ளார்.
கொன்றை வேந்தனிலும் வரும் அமுத மொழிகளும்.....
[நூல்: திருப்பா உரை - 207ஆம் பக்கம்]
பொன்னில் இரத்தினங்களைப் பொதித்தல்:
பாம்பன் சுவாமிகள் பொன்னைப் போல் பொலிவுறும் அவர்தம் பாடல்களில் இரத்தினங்களைப் பதித்தாற் போல் ஔவையின் சில கருத்துகளைக் கையாண்டு உள்ளார். சிலவற்றை இங்குக் காண்போம்.
ஔவைப்பிராட்டி ஆத்திசூடியில் "பையலோடு இணங்கேல்" என்று கூறியுள்ளார். அறிவு முதிராது கல்லாத இளம் பிள்ளைகளே பையல்கள் ஆவார். அவர்களுடன் இணங்கி பழகுவதால் எந்த நன்மையும் இல்லை. இக்கருத்தை மனத்துள் கொண்ட சுவாமிகள், முருகன் தன்முன்னே தோன்றி அருளாமல் இருப்பது 'பையலோடு இணங்கேல்' என்னும் பழமொழி படியோ? என்று முருகனை நோக்கி வினவுகின்றார். அடியேன் நல்ல மெய் உணர்வு உற்ற பின்னும் என்னைப் பையல் என்று எண்ணலாமோ? என்றும் முருகனை நோக்கிக் கேட்கின்றார்.
பையலோடு இணங்கேல் என்னும் பழமொழிப் படியோ உன்றன்
துய்ய மெய் உளத்தில் உள்கித் தோன்றிடாது இருப்பாய்?
மெய் உணர்வாய மேலும் பையல் என்று உள்கலாம் கொல்
செய்ய தீ வரைப் பேர் எந்தை தெய்வமே கருணை செய்யே!
(துய்ய மெய் உள்ளம் = தூய்மையான உண்மை உள்ளம்; உள்கி=நினைத்து; உள்கலாம் கொல் = நினைக்கலாமோ?; செய்ய தீ வரைப் பேர் எந்தை= செம்மையான நெருப்பு மலையின் பேரையுடைய அருணகிரி எந்தையே)
[நூல்: முதல் மண்டலம் - பொன்னவிர் மேனி - 10வது பாடல்]
மேலும் ஆத்திசுடியில் "அஃகம் சுருக்கேல்" என்றொரு நீதி வலியுறுத்தப்படும். இங்கு அஃகம் என்பது தானியம்/முறைமை அதாவது அளவைக் குறித்தது. தானியத்திற்குக் கொடுக்கின்ற பணத்திற்கு மாறாக குறைந்த அளவில் பொருளைக் கொடுத்து லாபம் காணுதல் கூடாது. அனைத்துப் பொருள்களை விற்பதற்கும் இந்நீதி பொருந்தும். பாம்பன் சுவாமிகள் பாவங்களைப் பட்டியல் இடும் போது,
அனியாய நெஞ்சமுற்று அஃகம் சுருக்கி விற்று
அக ஓகை கொண்ட அகமோ....
(அஃகம் - அளவை; அக ஓகை கொண்ட அகமோ = உள்ளுக்குள்ளே மகிழ்ச்சி கொண்ட மனமோ?)
[நூல்: முதல் மண்டலம் - ஆனந்த முகில் - 9வது பாடல்]
என்று பாடி உள்ளார்.
ஆத்திசூடியில், 'ஙப் போல் வளை' என்று ஔவைப்பிராட்டி கூறியிருப்பார். இதன் பொருள் என்ன என்றால், தமிழில் “ங”, "ங்" என்ற எழுத்துகளைத் தவிர அதன் இனமான மற்ற ஙகர உயிர்மெய் வடிவங்கள் (ஙா, ஙி, ஙீ....) எங்கும் பயன்பாட்டில் இல்லை. எனினும், “ங” என்ற ஓரெழுத்து அதன் இனமான உயிர்மெய் எழுத்துகளைக் காலத்தில் புதைந்துவிடாமல் காத்து வருகிறது. அதுபோல் நம்முடைய சுற்றத்தாரால் நமக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் அவர்களை வளைத்துக் காத்தல் வேண்டும் என்று பாட்டி வலியுறுத்துகின்றார். இக்கருத்தினை விரும்பிய சுவாமிகள், சண்முக கவசத்தில்,
ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க
-சண்முக கவசம்
இறைவனது ஞானவேல் ஙகரத்தைப் போல் பயனில்லா எங்களைத் தழுவிக் காத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார்.
ஔவையார் யாரையும் உருவத்தை வைத்து மதிப்பிடல் கூடாது என்பதைக் கூறும்போது,
மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டாம்
இதழ்களினால் (மடல்கள்) பெரியது தாழம்பூ (தாழை) ஆனால் மகிழம் பூ (மகிழ்) இதழ்களினால் சிறியது ஆயினும் அதன் வாசனை (கந்தம்) இனிதாகவும் அதிகமாகவும் இருக்கும். அதுபோல் ஒருவரை உருவத்தினாலே சிறியவர் என்று நினைக்க வேண்டாம் என்று ஔவைப் பிராட்டி கூறியுள்ளார்.
இந்த அருமை உதாரணத்தைப் பாம்பன் சுவாமிகள் தாம் இயற்றிய பரிபூரணானந்த போதம் நூல் பாயிரத்தில் நூலின் சிறப்பை விவரிக்க கூறியுள்ளார்.
- - - - - - - - -சுருக்கமாச் சொற்றதாலே
மலர்மடற் கைதை ஆகா
வகுளமது ஆகும் இந்நூல்
சுருக்கமாக இயற்றப்பட்ட இந்த நூல் மடல்களை (இதழ்கள்) உடைய மலர்கள் உள்ள தாழாம்பூ (கைதை) ஆகாது. இந்நூல் மகிழம் பூவைப் (வகுளம்) போன்று அளவில் சிறியதாகவும் ஆனால் அதிக மணம் வீசுவதும் (அதிக பலன் அளிப்பதும்) ஆகும் என்று கூறியுள்ளார்.
ஔவைப் பிராட்டி பிறர் மனைவியின் மீது வைக்கும் ஆசை எத்துணைக் கொடியது என்பதை விளக்க நல்வழி 36வது பாடலில், நண்டு, சிப்பி, வேய் (மூங்கில்), கதலி (வாழை) ஆகியவை கருவை ஈனும் (நண்டு - குஞ்சு; சிப்பி - முத்து; மூங்கில் - அரிசி; வாழை - காய்க்குலை) காலத்தே அழிந்துவிடுவது போல் ஆடவர்கள் பிறர் மனைவி மீது ஆசை வைத்தால் அழிந்து விடுவர் என்று கூறிய கருத்தைச் சுவாமிகள் ஞான வாக்கியத்தில் பெண்ணாசைக்கு கூறியிருப்பார்.
ஞண்டுச் சூல் போல் ஒண்தொடி விழைவு
(சூல் = கரு ஈனுதலைக் குறிக்கும்; ஒண்தொடி = ஒளிப்பொருந்திய வளையலை அணியும் பெண்)
ஆத்திசூடியும் ஞானவாக்கியமும்:
ஔவைப்பிராட்டி அகர வரிசையில் நீதிநெறிகளை உலகிற்கு அருளிச் செய்தது போலவே நம் சுவாமிகளும் ஞான போதனைகளை உலக மக்களுக்கு அருளிச் செய்த வாக்கியங்களே ஞான வாக்கியம் ஆகும். இங்குச் சில ஒற்றுமையான கருத்துகளைக் காணலாம்.
நாம் எப்பொழுதும் பெருந் தூக்கம் கொள்ளல் கூடாது. அதே நேரத்தில் தூக்கம் இல்லை என்றாலும் நம் உடல் நலம் பாதிக்கும். தூக்கம் சரியான அளவில் இருத்தல் வேண்டும். இதனை ஔவையார் கூறும்போது,
"அனந்தல் ஆடேல்"
அனந்தல் - தூக்கம்; ஆடேல் - அதிகமாகச் செய்யாதே
என்று கூறியுள்ளார்.
இக்கருத்தினையே சுவாமிகள் ஞான மார்க்கத்தில்,
அனந்தல் குறைந்தால் மனம் செலும் மேலே
தூக்கம் குறைந்தால் மனம் தாமச குணம் (சோம்பல்) நீங்கி சத்துவ குணத்திற்குச் செல்லும் என்று சுவாமிகள் கூறியுள்ளார்.
பெரியவர்கள் "சீ சீ சை" என்று இகழும்படியாக நாம் (குற்றமுடையவர்களாக) திரிதல் கூடாது என்பதை ஔவையார்
"சையெனத் திரியேல்"
என்று கூறியுள்ளார். இதைப்போன்றே, சுவாமிகளும் "நிலையில்லா உலக வாழ்வை ஞானிகள் "சை" என்று இகழ்வர் என்று கூறியுள்ளார்.
சை என இகழ்வார் மெய்யர் உலகை
(மெய்யர் = ஞானிகள்)
ஔவையார் மேற் சொன்னவாறு "ஙப் போல் வளை" என்ற கருத்தைச் சுவாமிகள் 'ஞான குருவிற்கு' இலக்கணமாகக் கூறுகின்றார்.
ஙகரம் போல்வார் புகரில் குரவர்
அதாவது குற்றமில்லாத ஞான ஆசிரியர் அனைவரையும் 'ங' என்ற எழுத்துப் போல் தழுவிக் கொள்வார்.
மேலே தூக்கத்தைப் பற்றிக் கூறியவாறே உணவைப் பற்றியும் இருவரும் கூறியுள்ளார்கள்.
ஔவையார் கூறும்போது,
மீதூண் விரும்பேல்
(மீதூண் - அதிகமான உணவு)
இதே கருத்தைச் சுவாமிகள் கூறும்போது,
நுகர்வன கண்டு நுகர்க பசித்தால்
(பசித்தால் மட்டும் உண்ணத் தக்க உணவைத் தேர்ந்து உண்ணுக.)
என்று கூறியுள்ள ஒற்றுமைகளைக் கண்டு மகிழலாம்.
ஆன்றோர் வழி:
பெரியோர்கள் நூல் இயற்றும் போது, முன்னோர் வழியிலும் நின்று தங்களுடைய கருத்தினை நிலைநாட்டுவது மரபாகும். நம் சுவாமிகளும் தாம் கூறவந்த கருத்துகளை ஔவையாரின் மேற்கோள்களுடன் விளக்கியுள்ளார்.
சுவாமிகள் அருளிய சீவ யாதனா வியாசம் என்னும் நூலில் (178வது பாடலில்) கொல்லாமையை வலியுறுத்தும் போது,
நோன்பு எனல் கொன்று உண்ணாமை என்று ஓது நூனம்இல் ஔவையின் நூல்தான்......
பொருள்: நோன்பென்பது கொன்று உண்ணாமை என்ற ஔவையின் (கொன்றை வேந்தன்) குறைவற்ற நீதி நூல் கூறும்
என்று கூறியுள்ளார்.
திருப்பா திட்ப உரையில் திவ்விய சுப்பிரமணியம் என்ற பதிகத்தின் 8வது பாடல் உரையில் மௌன நிலையின் சிறப்பினை, கீழ்வருமாறு கூறியுள்ளார்.
"மோனம் என்பது ஞான வரம்பு"
எனக் கொன்றை வேந்தனிலும் வரும் அமுத மொழிகளும் இம்மோன முடிவினை நிலைப்பெறுத்தும் என்க"
இந்தப் பதிகத்தின் 10வது பாடலிலே, வீடுபேற்று அருள் இனிது பெறுதல் என்பது ஏதுவான ஒரு பருவத்தின் (காலத்தின்) போது தான் நிகழும் என்பதனை வலியுறுத்த சுவாமிகள் ஔவைப் பாட்டியின் கீழ்வரும் மூதுரை பாட்டின் வழி விளக்குகின்றார்.
அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா...
மேலும் திருப்பா பரிபூரணானந்தம் பதிகத்தின் 3வது பாடலின் உரைப்பகுதியில்,
"ஈசுவர வழிபாடில்லாதான் சன்மத்திலே தீயை வை" என்று வேதம் கட்டளையிட்டதன் நியாயத்தைக் கூறப்போந்த சுவாமிகள், அதனை ஔவையின் "கிட்டாதாயின் வெட்டென மற" என்ற கருத்தையும்; மூதுரையில் "தீயாரைக் காண்பதுவும் தீதே" என்ற பாடலின் மூலமும் விளக்குதலைக் கீழே காணலாம். சுவாமிகளின் வரிகள்:
அவன் சன்மத்திலே தீயை வை எனத் திருவருட் சுருதி தெரித்தது என்க. ஈண்டு அவனைத் திருத்துக எனாது (எனாது = சொல்லாது) நேசிக்க வேண்டா என்னும் கட்டளை பிறப்பித்தல் என்? எனின், -- அறியாது கடாயினாய்! (கடாயினாய்=கேட்டாய்)
நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
என்னும் கருணையம் பறை பிடித்து (கருணையான அழகிய உரையைக் கொண்டு) அவ்வாறு புரிய முயன்றும் கூடாது ஆயின், (நடக்கவில்லை என்றால்) "கிட்டாதாயின் வெட்டென மற" என்றபடி அவனை விட்டு நீங்குதலே நலனுடைத்து என்றல் அதற்கு விடையாம் என்க.
ஆகலின் அன்றே மூதுரையில் --
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே யவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீதே
என்று சுவாமிகள் எவ்வளவு அருமையாக வேதத்தின் கருத்தினை ஔவையின் நீதிமொழிகளின்படி விளக்கி புரியவைத்துள்ளார் என்பதை படிக்கும் போது நம் ஐயம் நீங்கி ஆனந்தம் பிறக்கும்.
சைவ சமய சரபத்தில் திருநீற்றின் பெருமையை விளக்க "நீறில்லா நெற்றி பாழ்" என்று ஔவையின் மொழிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
அழியாப் பெரும் புலவர்கள்:
ஞானக்கடலாக விளங்க கூடிய பாம்பன் சுவாமிகளின் படைப்புகளும், கல்வி கடலாக விளங்கும் ஔவைப் பிராட்டியின் படைப்புகளும் என்றும் அழியாது இம்மண்ணுலகில் நிலைப்பெற்று விளங்கும் என்று கூறியதை அவர்களின் நூல்களிலேயே காணலாம்.
ஔவையார் தனிப்பாடல் திரட்டின் 32வது பாடலில்
என்றும் கிழியாது என்பாட்டு;
என்று கூறியுள்ளார். இங்குக் கிழியாது என்பது அழியாது என்று பொருள் கொள்ள வேண்டும்.
பாம்பன் சுவாமிகளும் தன்னுடைய பாடல்களும் என்றும் அழியாது என்று கூறியுள்ளார்.
என்றுமே கிழியாது என்பாட்டு என்பதைப் புலமையோடு
நின்றுஉளீர் உணர்மின்
-ஒட்பமுணர்த்தல் – 7 (ஶ்ரீமத் குமாரசுவாமியம்)
இவ்விரு பெரும் புலவர்களின் நூல்களைக் கற்று நிற்பவர்களும் அழியாப் புகழ் பெறுவர் என்று கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன். ஏதேனும் குறைகள் இருப்பின் மன்னித்து ஆற்றுப்படுத்த வேண்டுகின்றேன். இறுதியாக, இவ்விரு பெரும் புலவர்களின் தமிழை வாழ்த்தும் அடியேனின் வாழ்த்து பாடலுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன்.
நேரிசை வெண்பா
கலைமாது ஔவை கலைஞானி பாம்பன்
அலைக்கடலூர் போற்றும் அடிகள் - நிலைத்த
இவர்களது இன்தமிழ் இன்பமே வாழீ
புவனமதில் என்றும் பொலிந்து
திருச்சிற்றம்பலம்!

Beautiful compilation of Gnanaguru Pambanars lofty texts along with Avvaiyars inspirational verses.Kudos
ReplyDeleteஅருமையான அருட் பதிவு. ஐயா எந்தத் தவறும் இல்லை. நன்றி வணக்கம்
ReplyDeleteசிறுவாபுரி நாராயண மூர்த்தி
ReplyDelete