ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
கவிராஜ சிங்கமான நம் பாம்பன் சுவாமிகள் மயூரபந்த சித்திரகவியில், முருகப் பெருமானை நவரச பரத என்று போற்றியுள்ளார். ஆம், பழந்தமிழ் நூல்கள் கூறியுள்ள ஒன்பது சுவைகளான நகை (சிரிப்பு), அழுகை, இளிவரல் (அருவருப்பு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம் (வீரம்), வெகுளி (கோபம்), உவகை, சாந்தம் ஆகியவற்றைக் கொண்ட நாடக கலையின் தலைவராக முருகப் பெருமான் உள்ளார். இந்தத் தொடர் கட்டுரையில், பாம்பன் சுவாமிகள் பாடல்களில் எப்படி இந்த ஒன்பது சுவைகள் வெளிப்பட்டு உள்ளன என்பதைத் தொடர்ந்து காணலாம்.
காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றம் நீக்கிய ஞானியர் பாடல்களில் பத்தி நெறியையும் , ஆன்ம ஈடேற்றத்திற்கானச் சைவ சித்தாந்த கருத்துகளை நோக்குவதே சால சிறந்தது எனினும் இங்கு இலக்கிய பார்வையோடு ஒன்பான் சுவைகளைப் பற்றிச் சிந்திப்பதும் தவறாகாது. எண்ணலங்காரலகரி என்னும் பதிகத்தில் சுவாமிகள்,
"ஒன்பான் அவர் உத்தி சொல் காதை ரசம்"
என்று பாடியுள்ளதால் இந்த ஒன்பது சுவைகளைச் சிந்தித்தல் மகிழ்ச்சி தரும் என்பதால் இத்தலைப்பில் சிறிது சிந்திக்க முற்படுவோம்.
தொல்காப்பியர் இந்தச் சுவைகளை மெய்பாட்டியலில் பட்டியலிட்டு உள்ளார்.
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
மெய்ப்பாடு - உள்ளத்து உணர்வுகளை யாவரும் இனிது அறிய வெளிப்படுத்தும் இயல்பான உடற்குறிகள் ஆகும்.
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப - எட்டு விதமான அத்தன்மையை உடைய மெய்ப்பாடு எட்டு என்பர்
தொல்காப்பியர் இந்த எட்டு சுவைகளைப் பற்றி விரிவாக கூறியுள்ளார். பின் வந்த நாடக நூலார்கள் "சாந்தம்" என்னும் ஒரு சுவையையும் சேர்த்து ஒன்பது சுவைகளாக அமைத்துள்ளனர்.
இனி ஒவ்வொரு சுவைகளைப் பற்றியும் விரிவாகச் சிந்திப்போம்.
நகைச்சுவை:
தொல்காப்பியர் நகைச்சுவையைப் பற்றிக் கூறும் போது அது கீழ்கண்ட நான்கு வகையால் ஏற்படும் என்று கூறுகின்றார்.
உள்ளப் பட்ட நகை நான்கு என்ப
- எள்ளல் - பழிப்பு இல்லாமல் பரிகாசம் செய்வது. அதாவது நம் அன்பிற்கு உரியவர்களைக் கேலி, கிண்டல் செய்தல் போன்றவை.
- இளமை - பிள்ளைத் தன்மை. அதாவது அறிவு முதிராப் பிள்ளமை. நாம் இன்றும் ஏதேனும் முட்டாள் தனமான செயல்களைக் கண்டு "சிறுபிள்ளைத் தனமாக உள்ளதே" என்று சிரிக்கின்றோம் அல்லவா?
- பேதமை - அறியாமை
- மடம் - ஆராயாது எளிதில் நம்பும் தன்மை
எள்ளல்:
முதலில் எள்ளல் குறித்த நகைச்சுவைக்கான ஓரிரு உதாரணங்களைப் பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் காண்போம்.
சுவாமிகள் சில இடங்களில் முருகனைத் திருடன் என்று செல்லமாகக் கூறி மகிழ்கின்றார். நம் சிந்தையைக் கவர்ந்த கள்வன் குறக்கொடியான நம் தாய் வள்ளியையும் திருடியவன் என்பதால், கீழ்வருமாறு எள்ளல் செய்கின்றார்.
மூல நாயகம் ஆன மானினை
திருடு நாயகனே திருப்போருர் அம்மானே
பொருள்: வேடர்களின் ஊரில், ஒரு நாள் இரவு, அழகிற்கே மூலமும் தலைமையும் ஆன மான் போன்ற வள்ளியம்மையைத் திருடிய தலைவனே! திருப்போரூர் அம்மானே!
நூல்: இரண்டாம் மண்டலம் - திருப்போரூர் பதிகம் - 7வது பாடல்
மேலும், சுவாமிகள் ஓர் பாடலில், உன்னுடைய தந்தையும் மாமனும் திருடர்களாக இருக்க நீயோ பெண்ணைத் திருடிய பெருந் திருடனாக அல்லவோ உள்ளாய் என்று அன்போடு எள்ளி நகையாடுகின்றார்.
பூத்திருடன் தன் மதலாய் பொங்கு குறக் கோத்திரத்தோர்
பெண் திருடிச் சென்ற பெருந் திருடா என் போதம்
உண்டு திருடத் தெரியாயோ
நூல்: முதல் மண்டலம் - பகலெல்லாம் - 20வது பாடல்
கோத்தயிர் வெண்ணை திருடன் கோல மருகா - பசுவின் வெண்ணையைத் திருடிய கோபாலனாகிய திருமாலின் மருமகன்;
நறிய பூத்திருடன் தன் மதலாய் - திருவீழிமிழலையில் திருமால் ஆயிரம் பூக்களைக் கொண்டு வழிபடும்போது அதிலிருந்து ஒரு பூ திருடிய சிவனாரின் பிள்ளையே;
பொங்கு குறக் கோத்திரத்தோர் பெண் திருடிச் சென்ற பெருந் திருடா - கோபம் உடைய வேடர் குலத்தின் பெண்ணான வள்ளி நாயகியாரைத் திருடிச் சென்ற பெரும் திருடா
என் போதம் உண்டு திருடத் தெரியாயோ - என்னுடைய அகங்காரத்தை உண்டு அதனைத் திருட தெரியாதோ?
மேலும் ஒரு பாடலில் முருகனோடு தொடர்புடையவர்களை இழிவாகப் பழிப்பது போல் உயர்வாகப் போற்றியுள்ளார்.
தோலில்லா மால்குருவே சூர்கீண்ட - வேல் உள்ளோய்
கண் இல்லாள் காதலனே காதில்லா ஈசுர என்
உள்நில்லாது என்கொல் உரை
நூல்: முதல் மண்டலம் - பகலெல்லாம் - 21வது பாடல்
கால் இல்லா தான் மதலாய் - முருகனின் தந்தையான சிவபெருமான் ஏகபாத மூர்த்தி என்பதால் ஒரு கால் மட்டுமே உண்டு. அதனால் கால் இல்லா தான் மதலாய் என்று இகழ்ச்சியாகவும்; சிவபெருமான் காலத்தைக் (கால்=காலம்) கடந்தவன் என்பதால் காலத்தை கடந்தவரின் குழந்தையே என்று புகழ்ச்சியாகவும் கூறுகின்றார்.
கையில்லா தான் இளையோய் - விநாயகர் யானை உருவம் கொண்டவர் என்பதால் அவருக்கு தும்பிக்கை மட்டும் தான் உண்டு ஆனால் மற்ற கடவுளர்களுக்கு உள்ளது போல் கைகள் இல்லை என்பதால் கையில்லா விநாயகருக்குத் தம்பி என்று இகழ்ச்சி பொருளிலும்; "கை" என்ற சொல்லிற்குச் சிறுமை என்று பொருள். அதனால் சிறுமையில்லா விநாயகருக்குத் தம்பி என்று புகழ்ச்சி பொருளிலும் கூறியுள்ளார்.
தோல் இல்லா மால் குருவே - ஒரு சமயம் சிவபெருமான் திருமாலின் தோலை உரித்து சட்டையாக அணிந்ததால் அவருக்கு தோல் இல்லை. தோல் இல்லாத திருமாலுக்கு குருவே என்று இகழ்ச்சி பொருளிலும்; தோல் என்ற சொல்லிற்குத் தோல்வி என்றும் ஒரு பொருள். அதனால் தோல்வி இல்லாத திருமாலுக்குக் குருவே என்று புகழ்ச்சியாகவும் கூறியுள்ளார்.
கண் இல்லாள் காதலனே - இரக்கமில்லாமல் (கண்ணோட்டம் இல்லாமல்) வேட்டையாடும் வேடுவர் குலத்தில் தோன்றியதால் பெருமையில்லா (கண் = பெருமை) வள்ளியின் காதலனே என்று இகழ்ச்சி பொருளிலும்; கண் என்றால் பற்று என்றும் ஒரு பொருள். "அவனுக்கு அப்பொருளின் மீது ஒரு கண்" என்று சொல்லும் வழக்கு இன்றும் உள்ளது. ஆகவே கண் என்பது பற்று/ஆசை. அதனால், பற்று இல்லா வள்ளியின் காதலனே என்று புகழ்ச்சி பொருளிலும் கூறியுள்ளார்.
காதில்லா ஈசுர - ஒரு சமயம் நந்தி தேவர், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடி வந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனதாம். எனவே நந்தி தேவர் காது இல்லாதவர். காது இல்லா நந்தி தேவரின் கடவுளே என்று இகழ்ச்சி பொருளிலும்; காது என்றால் கொலை என்று பொருள் (காதுதல்=கொல்லுதல்). கொலை செய்யாதவர்களின் (அன்புடையவர்களின்) கடவுளே என்பதால் காதில்லா ஈசுர என்று புகழ்ச்சியாகவும் கூறியுள்ளார்.
சூர்கீண்ட வேல் உள்ளோய் என் உள் நில்லாது என்கொல் உரை - சூரனைக் கொன்ற வேலை உடையவனே! நீ என்னுள் மட்டும் நில்லாமல் இருப்பது ஏன்? சொல்லியருள்க!
இப்பாடலினைப் பொருள் உணர்ந்து படித்துப் பார்த்தால் நிச்சயம் முகத்தில் புண்முறுவல் தோன்றும்.
இளமை:
இனி, இளமை என்னும் வகையால் வரும் நகைச்சுவையைப் பற்றிக் காண்போம். இளமை என்பது அறிவு முதிராத சிறுபிள்ளை தனமான (முட்டாள்) செயல்கள். அவற்றினாலும் நமக்கு சிரிப்பு ஏற்படும்.
சுவாமிகள் பாடலில் ஒரு உதாரணம் சொல்லலாம்.
இறை மார்க்கத்தில் உள்ளவர்கள் இறைவனை நினைத்து நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக மனம் அடங்குதல் வேண்டும். அப்படி இல்லாமல் (நூலை மட்டும் படித்துவிட்டு) ஞானவான்கள் போல் பேசுவதைச் சுவாமிகள் கண்டிக்கின்றார். அவ்வாறு அவர்கள் செய்யும் செயல் எப்படி என்றால், அடுப்பில் நெருப்பை ஏற்படுத்தாமல், நெருப்பு என்ற எழுத்தை மட்டும் எழுதியுள்ள ஏட்டினை (காகிதத்தை) அடுப்பில் வைத்து விட்டு ஊதுவது போன்றதாகும் என்று சுவாமிகள் கூறுகின்றார். அறிவு முதிர்ச்சி இல்லாத சிறுபிள்ளை தனமான அவர்களின் செயல் சிரிப்பை உண்டாக்கின்றது அல்லவா?
தரத்தினைச் சிவணும்
(கருத்து அடங்காதார் - நினைப்பு அடங்காதவர்; ஞானம் கதைப்பது - ஞானத்தைப் பேசுவது; கருத்து இலாதான் - அறிவில்லாதவன்; சிவணும் - பொருந்தும்)
பேதமை:
இனி பேதமையால் வரும் நகைச்சுவையைக் காணலாம். பேதமை என்பது அறியாமை ஆகும். ஒருவர் அறியாமையால் செய்கின்ற செயல்கள் சில சமயம் நமக்கு சிரிப்பை உண்டாக்கும்.
பத்து பிரபந்தம் நூலில் பகுபடுபஞ்சமம் என்னும் பகுதியின் இரண்டாவது பாடலில் ஓர் அற்புதக் காட்சியைச் சுவாமிகள் விவரிக்கின்றார்.
ஒருநாள் முருகப் பெருமான் மயில் மீது ஏறி அமர்ந்து இருக்கும் போது, அந்த மயில் ஆகாயம் அளவு விரிந்துள்ள தன் தோகையால் முருகப் பெருமானின் திருமேனியை முடியதாம். முருகப் பெருமான் மயிலைப் பார்த்து ஏன் இப்படி மூடுதல் செய்கின்றாய் என்று கேட்டாராம். அதற்கு அந்த மயில் கானகம் வழியே செல்லும் போது வெயிலின் வெப்பம் தங்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக என்றதாம். உடனே முருகன், "நான் யார் என்று நினைக்கின்றாய்! மேலானவன் என்று மதிப்பாயாக! (அதாவது வெயில் என்னை என்ன செய்துவிட முடியும் என்றபடி)" என்று கூறி மயில் நன்றாக செல்ல அதனை உதைத்தாராம்.
அண்ட சராரங்களுக்கு அதிபதியான முருகனை வெயில் என்ன செய்து விட முடியும் என்பதை அறியாத மயில் அன்பு மிகுதியினால் முருகனின் திருமேனியைத் தன் தோகையால் மூடியதும் முருகனிடம் இருந்து உதையைப் பெற்றதும் அறியாமையால் ஏற்படும் நகைச்சுவைக்கு எடுத்துகாட்டு ஆகும்.
வான் ஆர் குரல் கொ(ண்)டு மூடிட ஏன் இவ்வணம் என வேள்
கான் ஆர் வெயில் மருவா வணம் என்னக் கதிர் அயிலோன்
நான் ஆர்? பரன் மதி என்று உதையிட்டான் நனி செலவே
(சுமன் - மலர் சூடியவன்; குரல் - தோகை; பரன் - மேலானவன்)
தேன் ஆர் சுமன் முருகோன் - தேன் நிறைந்த பூக்களைச் சூடிய முருகன்
மயில் ஏறச் - மயில் மீது ஆரோகணம் செய்யும் போது
சிகி திகழ் தன் வான் ஆர் குரல் கொ(ண்)டு மூடிட - அம்மயில் விளக்கம் செய்வதும் ஆகாயம் அளவு உடைய தன்னுடைய தோகையால் இறைவனின் திருமேனியை மூடுதல் செய்ய
ஏன் இவ்வ(ண்)ணம் என வேள் - ஏன் இப்படி (செய்கின்றாய்) என முருகன் (கேட்க)
கான் ஆர் வெயில் மருவா வணம் என்ன - காட்டு வழி செல்லும் போது ஏற்படும் வெயிலின் வெப்பம் ஏய்தா வகையாகச் செய்தனன் என்று சொல்ல
கதிர் அயிலோன் நான் ஆர் 'பரன்' மதி - ஒளியுடைய வேலவன், "நான் யார்? 'மேலானவன்' என்று மதிப்பாயாக" என்று கூறி...
நனி செல உதையிட்டான் - நன்றாகச் செல்ல உதையிட்டு அருளினான்.
மடம்:
மடம் என்பது எதனையும் ஆராயாது எளிதில் நம்பி ஏமாறுதலோ பக்குவம் இல்லாது இருத்தலோ ஆகும். இதுவும் அறிவுடையோருக்குச் சிரிப்பினை ஏற்படுத்தும்.
சுவாமிகளின் பாடலில் ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.
கடவுளைக் கனவில் கூட பார்த்து அறியாத சிலர், வேதாந்த கருத்துக்களை ஆழ்ந்து அறியாமல் படித்த அளவிலேயே "நாம் தாம் அனைவரும் தொழும் பிரமம்" என்று நினைத்து ஆணவமும் கொண்டு அருள் நெறியையும் விட்டுவிட்டு இழிவான நிலையினை அடைகின்றனர்.
அவர்கள் வேதாந்த கருத்துக்களை சைவசித்தாந்த முறையில் ஆராய்ந்து அறியாமல், நாமே பிரமம் என்று நினைத்து தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றும் செயலினைப் பார்த்து அறிஞர்கள் சிரிப்பார்கள்.
கீழ்வரும் பாடலில் அப்படிபட்டவர்களின் மடமையானச் செயலினைச் சுவாமிகள் விவரிக்கும் அழகு சிரிப்பினைத் தரும் ஏனென்றால் கடவுளைக் கனவில் கூட காணாதவர்கள் நானே பிரமம் என்று கூறிக்கொள்ளும் மடமையால்.....
கர்த்தவ்வியம்என்னும் உன்னைக்
கனவினும் காணாத மைந்தர் மறை முடிவின்
கருதத்தைப் படித்த அளவிலே
மேலவர்கள் தொழும் பிரமம் நாம் என நினைத்து அகம்
விளம்பி அருள் நெறியை விட்டு
வியன் அற்ற புன் தொழில் விடாத இழி பதிதராய்
விசுவத்து உழன்று கேடுவார்
(காலம் ஒரு மூன்று - இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்கள்; பொன்றாத சத்து - இறவாத மெய்ப்பொருள்; மறைமுடிவு - வேதாந்தம்; அகம் விளம்பி - செருக்கைக் கூறி; வியன் அற்ற புன் தொழில் - பெருமையற்ற அற்பத் தொழில்; இழி பதிதர் - இழிவான அற்பர்கள்; விசுவத்து - உலகத்து)
இதுவரை பாம்பன் சுவாமிகள் பாடல்களில் நகைச்சுவையைப் பற்றி சுருக்கமாகச் சிந்தித்தோம். மற்ற சுவைகளைப் பற்றி இனி வரும் கட்டுரைகளில் குருவருள் துணைக்கொண்டு சிந்திக்கலாம் என்று கூறி இவ்வளவில் முடிக்கின்றேன்....
திருச்சிற்றம்பலம்!
No comments:
Post a Comment