Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த முதல் மண்டலத்தைச் சார்ந்த
தேர்ந்தேனேயென்கண்ணி

உரையாசிரியர்: பேராசிரியர் ப. இராமன் அவர்கள்

சத்திநிபாத விளக்கம்

பொன்னாடு மண்ணாடும் போற்றுங் குமரேசன்
தன்னாணை யெல்லாந் தயாளமென்று தேர்ந்தேனே.
 
பொன் நாடும் மண்நாடும் போற்றும் குமரேசன்
தன் ஆணை எல்லாம் தயாளம் என்று தேர்ந்தேனே.

பொருள்: விண்ணுலகும் மண்ணுலகும் துதிக்கும் குமரேசனுடைய ஆணை எல்லாம் கருணை என்று தெளிந்தேன். 1

அனாதிமல பந்தவுயி ரம்மலத்தை யாய்ந்து
மனோலயமுற் றுய்யவிவண் வந்ததென்றுந் தேர்ந்தேனே.
 
அனாதி மல பந்த உயிர் அம்மலத்தை ஆய்ந்து
மனோ லயம் உற்று உய்ய இவண் வந்தது என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அனாதியாகிய ஆணவமலக்கட்டில் உள்ள உயிர், அம்மலத்தை ஆராய்ந்து அந்தக் கட்டை அறுக்க இறைவனுடன் மனம் ஐக்கியமாகி உய்தற்பொருட்டு, இவ்வுலகில் வந்து தோன்றியது என்றும் தெளிந்தேன். 2

எம்பெருமான் சேவடிக்கன் பில்லாத சீவனெல்லாம்
தம்பெருமை குன்றித் தவிக்குமென்றுந் தேர்ந்தேனே.

எம்பெருமான் சேவடிக்கு அன்பு இல்லாத சீவன் எல்லாம்
தம்பெருமை குன்றித் தவிக்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: எம்பெருமான் செய்ய திருவடிக்கு அன்பில்லா உயிர்கள் எல்லாம், தம் பெருமை குறைந்து வருந்தும் என்றும் தெளிந்தேன். 3

மாயையின் பொய்ப்போக வாஞ்சைதனை மெய்யென்று
மாயுமுயிர் வந்துவந்து மாளுமென்றுந் தேர்ந்தேனே.
 
மாயையின் பொய்ப் போக வாஞ்சைதனை மெய் என்று
மாயும் உயிர் வந்து வந்து மாளும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: மாயையின் பொய்யான அனுபோகப் பற்றை, மெய் என்று இறக்கும் உயிர், பிறந்து பிறந்து இறக்கும் என்றும் தெளிந்தேன். 4

பொய்ப்போகங் கைத்தவாக்குப் பூரணத்தைக் காட்டவெம்மான்
மெய்ப்போத கஞ்செய்யு மெய்ப்பிரிவுந் தேர்ந்தேனே.
 
பொய்ப் போகம் கைத்தவர்க்குப் பூரணத்தைக் காட்ட எம்மான்
மெய்ப் போதகம் செய்யும் மெய்ப்பரிவும் தேர்ந்தேனே.

பொருள்: பொய்யான அனுபோகம் கைத்தவர்க்குப் பூரணப் பொருளைக் காட்ட, எம்மான் மெய் அனுபோகம் செய்விக்கும் மெய்யன்பும் தெளிந்தேன். 5

செய்தவினைக் கீடாகச் சேர்ந்த பிறப்பினின்றும்
தெய்வமுயர் சென்மமதிற் சேர்க்குமென்றுந் தேர்ந்தேனே.

செய்த வினைக்கு ஈடாகச் சேர்ந்த பிறப்பினின்றும்
தெய்வம் உயர் சென்மம் அதில் சேர்க்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: முன்பு செய்த வினைக்கு ஈடாக எடுத்த இப்பிறவியினின்றும், தெய்வம் உயர்ந்த பிறப்பில் சேர்க்கும் என்றும் தெளிந்தேன். 6

மாயையின்கர்ப் பத்துண் மலவிருளி லேகிடந்து
தோயுயிரைச் சுத்திசெய்வான் விட்டதையுந் தேர்ந்தேனே.

மாயையின் கர்ப்பத்துள் மல இருளிலே கிடந்து
தோய் உயிரைச் சுத்தி செய்வான் விட்டதையும் தேர்ந்தேனே.

பொருள்: மாயையின் கருப்பத்துள் ஆணவமல இருளிலே கிடந்து மூழ்கும் உயிரை, மலம் நீக்கிச் சுத்தம் செய்தற்பொருட்டு வெளியில் விட்டதையும் தெளிந்தேன். 7

விட்டவுயி ராம்பசுவின் மெய்ம்மூல தேகமொளி
ஒட்டுமிடை மாயையெனு முண்மையையுந் தேர்ந்தேனே.

விட்ட உயிராம் பசுவின் மெய்ம்மூல தேகம்ஒளி
ஒட்டும் இடை மாயை எனும் உண்மையையும் தேர்ந்தேனே.

பொருள்: விடப்பட்ட உயிரான பசுவின் உண்மையான மூல உடம்பு ஒளியைப் பொருந்தும் இடம் மாயை எனும் உண்மையையும் தெளிந்தேன். 8

காரணவம் மூலவுடற் கட்டுயிர்க்குச் சூக்கமெனும்
சாரவுடம் பீதலருட் டாதையென்றுந் தேர்ந்தேனே.

காரண அம்மூல உடல் கட்டு உயிர்க்குச் சூக்கம் எனும்
சார உடம்பு ஈதல் அருள்தாதை என்றும் தேர்ந்தேனே

பொருள்: காரண தேகம் எனும் அம்மூல உடல், ஆணவமலக் கட்டில் உள் உயிர்க்குச் சூக்கும உடம்பு தருதல் அருள் தந்தை என்றும் தெளிந்தேன். 9

சூக்கவுயிர் தூலமெய்துங் காலமள வாகாயத்
தேக்கமுற்றுத் தான்கிடக்கு மென்பதையுந் தேர்ந்தேனே.

சூக்க உயிர் தூலம் எய்தும் காலம் அளவு ஆகாயத்து
ஏக்கம் உற்றுத் தான் கிடக்கும் என்பதையும் தேர்ந்தேனே.

பொருள்: சூக்கும் உயிர் தூல உடம்பு அடையும் காலம் வரையிலும், ஆகாயத்தில் ஏக்கத்துடன் கிடக்கும் என்பதையும் தெளிந்தேன். 10

சூக்குமத்திற் பக்குவந்தான் கண்டாற் றொடர்புபற்றி
ஆக்கலசை யாத்தா வரத்திலென்றுந் தேர்ந்தேனே.

சூக்குமத்தில் பக்குவம்தான் கண்டால் தொடர்புபற்றி
ஆக்கல் அசையாத் தாவரத்தில் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: சூக்கும உயிர் பக்குவப்படும்போது தொடர்பு காரணமாகப் படைக்கப்படுதல் அசையாத தாவரத்தில் என்றும் தெளிந்தேன்! 11

தாவரத்திற் பக்குவந்தா னுற்றாற் சரிக்குமுயி
ராவனவுள் ளூருருவ மண்ணுமென்றுந் தேர்ந்தேனே.

தாவரத்தில் பக்குவம்தான் உற்றால் சரிக்கும் உயிர்
ஆவன உள்ளூர் உருவம் அண்ணும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: தாவரத்தில் பக்குவம் உண்டானால், அசையும் உயிர் ஆவன ஊரும் உருவம் அடையும் என்றும் தெளிந்தேன்! 12

ஊருயிரிற் பக்குவந்தா னுற்றா லுதகமதிற்
சேருயிருட் பல்லுருவஞ் சேருமென்றந் தேர்ந்தேனே.

ஊர் உயிரில் பக்குவம்தான் உற்றால் உதகம் அதில்
சேர் உயிருள் பல்உருவம் சேரும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: ஊர்வன ஆன உயிரில் பக்குவம் அடைந்தால், நீரில் வாழும் பல்வேறு உருவங்கள் கொள்ளும் என்றும் தெளிந்தேன்; அதாவது ஒவ்வொரு பிறப்பிலும் பலமுறை பிறப்புக்கொள்ளும் என்றும் தெளிந்தேன்! 13

[அடி குறிப்பு: பல்லுருவமென்றதனால், இங்கே ஒவ்வொரு பிறப்பிலும் பலமுறையெனப் பொருள் விரித்துக்கொள்ளவேண்டும் அவ்வாறனைத்திற்குங் கொள்க.]

நீருயிரிற் பக்குவந்தா னுற்றா னிகழ்விசும்பிற்
சாரங்கொள் புள்ளாச் சமையுமென்றுந் தேர்ந்தேனே.

நீர் உயிரில் பக்குவம் தான் உற்றால் நிகழ் விசும்பில்
சாரம் கொள் புள்ளாய்ச் சமையும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: நீர் வாழ்வன பக்குவம் அடைந்தால் தோன்றும் வானத்தில் செல்லும் பறவையாகப் படைக்கப்படும் என்றும் தெளிந்தேன்! 14

புள்ளுருவிற் பக்குவந்தா னுற்றாற் புவியிலுய்யும்
மள்ள விலங்குருவம் வாங்குமென்றுந் தேர்ந்தேனே.

புள் உருவில் பக்குவம்தான் உற்றால் புவியில் உய்யும்
மள்ள விலங்கு உருவம் வாங்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: பறவை உருவில் பக்குவம் அடைந்தால், மண்ணுலகில் வாழும் வலிமையான விலங்கு உருவம் கொள்ளும் என்றும் தெளிந்தேன். 15

விலங்குருவிற் பக்குவந்தா னுற்றால் விவேகம்
இலங்குபல மக்களுடம் பேற்குமென்றுந் தேர்ந்தேனே.

விலங்கு உருவில் பக்குவம்தான் உற்றால் விவேகம்
இலங்கு பல மக்கள் உடம்பு ஏற்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: விலங்கு உருவத்தில் பக்குவம் உண்டானால், அறிவு விளங்கும் பல மக்கள் உடம்பை ஏற்கும் என்றும் தெளிந்தேன். 16

அம்மக்க ளிற்சிலர்தா மாசி றவமிழைத்துச்
செம்மைச் சுவர்க்கமடை வாரெனவுந் தேர்ந்தேனே.

அம் மக்களில் சிலர்தாம் ஆசுஇல் தவம் இழைத்துச்
செம்மைச் சுவர்க்கம் அடைவார் எனவும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த மக்களில் சிலர் குற்றமற்ற தவம் செய்து, நல்ல சுவர்க்கம் அடைவார் எனவும் தெளிந்தேன்! 17

மானுடத்திற் பக்குவந்தா னுற்றவுயிர் மாண்புடைய
தானப் பரதகண்டஞ் சாருமென்றுந் தேர்ந்தேனே.

மானுடத்தில் பக்குவம்தான் உற்ற உயிர் மாண்புஉடைய
தானப் பரத கண்டம் சாரும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: மானுடத்தில் பக்குவம் அடைந்தால், உயிர்கள் மாட்சிமையுடைய இடமான பரத கண்டத்தைச் சேரும் என்றும் தெளிந்தேன். 18

பரதத்திற் பக்குவமாம் பண்படைநல் லாவி
பிரமமுத னான்குட் பிறக்குமென்றுந் தேர்ந்தேனே.

பரதத்தில் பக்குவம் ஆம் பண்பு அடை நல் ஆவி
பிரமம் முதல் நான்குள் பிறக்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் முதலான நான்கு வருணங்களாகப் பிறக்கும் என்றும் தெளிந்தேன். 19

[அடி குறிப்பு: பிரமமுதனான்கு பிரம சத்திரிய வைசிய சூத்திரம் எனப்படு நான்கு வருணம். இவ்வருணங்கள் தொழிலாற் கொள்ளப்படுவன.]

நால்வருண மேவிநிற்கு ஞான்று புறமதமாம்
மால்கிளக்கு மார்க்க மருவுமென்றுந் தேர்ந்தேனே.

நால் வருணம் மேவி நிற்கு ஞான்று புறமதம் ஆம்
மால் கிளக்கு மார்க்கம் மருவும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: நான்கு வருணங்களைச் சார்ந்து நிற்கும் பொழுது, புறச்சமயம் ஆகும் மயக்கம் கூறும் மார்க்கத்தைப் பொருந்தும் என்றும் தெளிந்தேன். 20

புறமதத்திற் பக்குவமுற் றாலதுதான் போதச்
செறிவி லனித்தழுத்தி சேருமென்றுந் தேர்ந்தேனே.

புறமதத்தில் பக்குவம் உற்றால் அதுதான் போதச்
செறிவுஇல் அனித்த முத்தி சேரும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: புறச்சமயத்தில் பக்குவம் அடைந்தால், அது அறிவுச் செறிவு இல்லாத, நிலையில்லாத முத்தியைச் சேரும் என்றும் தெளிந்தேன். 21

அந்த வனித்தமுத்தி யாகியபின் பாதியுடைச்
சொந்தவக மார்க்கமதிற் றோன்றுமென்றுந் தேர்ந்தேனே.

அந்த அனித்த முத்தி ஆகிய பின்பு ஆதிஉடைச்
சொந்த அக மார்க்கம் அதில் தோன்றும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த நிலையில்லாத முத்தி ஆகிய பின்பு, ஆதியான சிவபெருமானுடைய சொந்தமான அகச் சமயத்தில் வந்து பிறக்கும் என்றும் தெளிந்தேன். 22

அகச்சமய மாறிலுள்ள சாதனமம் மூர்த்தி
பகமந்த்ர நிட்டைப் பதவளவுந் தேர்ந்தேனே.

அகச் சமயம் ஆறில் உள்ள சாதனம் அம் மூர்த்தி
பகமந்த்ர நிட்டைப் பத அளவும் தேர்ந்தேனே.

பொருள்: அகச் சமயம் எனப்படும் அறு சமயங்களிலும் உள் சாதனம் அந்த மூர்த்தியை மோட்ச மந்திர நிட்டையில் கூடி அடையும் பதமுத்தியின் அளவும் தெளிந்தேன். 23

[அடி குறிப்பு: பகமந்த்ரம் மோக்ஷமந்திரம்; வடநூன் முடிபு. பகம் மோக்ஷம்.]

அக்கதிக்கட் பக்குவந்தா னுற்றவுயி ராகமத்தின்
மிக்கசித் தாந்தநெறி மேவுமென்றுந் தேர்ந்தேனே.

அக்கதிக்கண் பக்குவம்தான் உற்ற உயிர் ஆகமத்தின்
மிக்க சித்தாந்த நெறி மேவும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த முத்தியில் பக்குவம் அடைந்த உயிர், ஆகமத்தின் மிக்க சித்தாந்த நெறியைச் (36 தத்துவங்களைக் கூறும் சித்தாந்தம்) சாரும் என்றும் தெளிந்தேன். 24

[அடி குறிப்பு: ஆகமத்தின் மிக்க சித்தாந்தம் 36-தத்துவங்களைக்கூறு சித்தாந்தம்.]

சித்தாந்த சோபான நான்கிற் செழுஞ்சரியைக்
கொத்தா லுலோக முறுமெனவுந் தோந்தேனே.
 
சித்தாந்த சோபான நான்கில் செழும் சரியைக்கு
ஒத்தால் உலோகம் உறும் எனவும் தேர்ந்தேனே.

பொருள்: சித்தாந்தம் வகுத்துள்ள படிகள் நான்கில், வளமான சரியை நெறியைப் பற்றி ஒழுகினால், சாலோகம் எனும் பதமுத்தி வாய்க்கும் எனத் தெளிந்தேன். 25

கிரியைதனில் யோகினின்றாற் கேள்பூக்க வாழும்
இரிபில் சமீபமுரு வெய்துமென்றுந் தேர்ந்தேனே.
 
கிரியை தனில் யோகில் நின்றால் கேள் பூக்க வாழும்
இரிபு இல் சமீப உரு எய்தும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: கிரியை நெறியிலும் யோக நெறியிலும் நின்றால், நட்புத் தோன்ற வாழும் அழிவில்லாத சாமீப பதவியும், சாரூப பதவியும் முறையே எய்தும் என்றும் தெளிந்தேன். 26

முக்கதியு மெக்காலு மொய்வினையின் போகமிவை
தொக்கென் றருவிருத்தல் சுத்தமென்றுந் தேர்ந்தேனே.
 
முக்கதியும் எக்காலும் மொய்வினையின் போகம் இவை
தொக்கு என்று அரு இருத்தல் சுத்தம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: சரியை, கிரியை, யோகம் என்னும் நெறிகள் மூலம் அடையும் சாலோக, சாமீப சாரூப பதவிகள், எக்காலத்திலும் கூட்டமான வினையின் போகம் எனும் இவை குறைவு என்றும் ஞானமாகிய அருவில் இருத்தல் சுத்தம் என்றும் தெளிந்தேன். 27

[அடி குறிப்பு: வினையின் போகம் - சரியை கிரியை யோகமென்னுந் தொழில் வழியெய்து போகம். தொக்கென் றருவிருத்தல் குறைவென்று (ஞானமாகிய) அருவிலிருத்தல்.]

சுத்தவிந்தப் பக்குவத்தைத் தூயதல மென்றுமுயிர்ச்
சித்தின் விளக்கமென்றுஞ் சேயருளிற் றேர்ந்தேனே.

சுத்த இந்தப் பக்குவத்தைத் தூய தலம் என்றும் உயிர்ச்
சித்தின் விளக்கம் என்றும் சேய் அருளில் தேர்ந்தேனே.

பொருள்: சுத்தம் என்னும் இந்தப் பக்குவத்தைத் தூய்மையான தலம் என்றும், உயிர் என்னும் அறிவின் விளக்கம் என்றும், செவ்வேட்பரமனின் அருளினால் தெளிந்தேன். 28

இத்தலமெல் லாத்தவர்க்கு மேசிலணு வர்க்கவைந்து
கர்த்தருக்கு மெட்டாக் கதழ்வெனவுந் தேர்ந்தேனே.
 
இத்தலம் எல்லாத் தவர்க்கும் ஏசு இல் அணுவர்க்க
ஐந்து கர்த்தருக்கும் எட்டாக் கதழ்வு எனவும் தேர்ந்தேனே.

பொருள்: இத்தலம் எல்லாத் தவம் உடையவருக்கும், குற்றமில்லாத பசுவர்க்கத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்திகளான அயன் அரி, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் ஆகியவர்க்கும் எட்டாத பெருமை உடையது எனவும் தெளிந்தேன். 29

அருளென்னுஞ் சிற்சத்தி யங்ஙன முட்டங்க
உருவில் விதேகமுத்திக் குன்னுமென்றுந் தேர்ந்தேனே.
 
அருள் என்னும் சிற்சத்தி அங்ஙனம் உள்தங்க
உருவு இல் விதேக முத்திக்கு உன்னும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அருள் என்று கூறப்படும் சிற்சத்தி, அவ்வாறு மனத்துள் தங்கவும் உருவம் இல்லாத முத்தி எனப்படும் விதேக முத்திக்கு மனம் நினைக்கும் என்றும் தெளிந்தேன். 30

[அடி குறிப்பு: "விதேக முத்தி இன்னதென்பதைச் செக்கர்வேளிறுமாப்பில் 28,29 ஆஞ் செய்யுள் களிலறியலாம்.]

இத்தரத்தி லைக்கியத்தை யெய்தறுணி பென்னுமிச்சை
உத்துங்க மாக வுதிக்குமென்றுந் தேர்ந்தேனே.
 
இத்தரத்தில் ஐக்கியத்தை எய்தல் துணிபு என்னும் இச்சை
உத்துங்கம் ஆக உதிக்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: இந்தத் தரத்தில் சீவான்மாவும் பரமான்மாவும் ஐக்கியம் கொள்ளுதல் உறுதி என்னும் விருப்பம் மேன்மையாகத் தோன்றும் என்றும் தெளிந்தேன். 31

அப்பரமே யாசா னிலிங்கமடி யாரெனப்பேண்
துப்புச் சமரசமுந் தோன்றுமென்றும் தேர்ந்தேனே
 
அப்பரமே ஆசான் இலிங்கம் அடியார் எனப்பேண்
துப்புச் சமரசமும் தோன்றும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்தப் பரம்பொருளே குரு, இலிங்கம், அடியார் எனப் போற்றப்பெறும் தூய சமரசம் எனும் உணர்வும் தோன்றும் என்றும் தெளிந்தேன் 32

பிறப்பிறப்புக் கேதுவென்னும் பெந்தவுத்தி யோகம்
துறக்க விராகமக்காற் றோன்றுமென்றுந் தேர்ந்தேனே.

பிறப்பு இறப்புக்கு ஏது என்னும் பெந்த உத்தியோகம்
துறக்க இராகம் அக்கால் தோன்றும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: பிறப்பிற்கும் இறப்பிற்கும் காரணம் எனப்படும் பற்று ஆகிய உள்ள மிகுதியைத் துறக்கும் காலத்தில் இறைவனிடம் அன்பு தோன்றும் என்றும் தெளிந்தேன். 33

ஆனசமு சாரமென்று கேட்டாலு மஞ்சியுள்ள
மானசமு மூச்சு மடங்குமென்றுந் தேர்ந்தேனே.
 
ஆனசமுசாரம் என்று கேட்டாலும் அஞ்சி உள்ள
மானசமும் மூச்சும் அடங்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: உலகப்பற்று என்று காதால் கேட்டாலும், அச்சம் கொள்ளுகின்ற மனமும் மூச்சும் அடங்கும் என்று தெளிந்தேன். 34

பாச மகன்றமுத்தர் பக்கலைவிட் டேகாத
வாசமு நற்பணியு மல்குமென்றுந் தேர்ந்தேனே.
 
பாசம் அகன்ற முத்தர் பக்கலை விட்டு ஏகாத
வாசமும் நற்பணியும் மல்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: பாசங்கள் விலகிய முத்தரின் பக்கத்தைவிட்டுச் செல்லாத மணமும், நல்ல தொண்டும் பெருகும் என்றும் தெளிந்தேன். 35

நற்பணியின் முத்தரயர் நற்பூசை போலவுயிர்
உற்சாக மாயிழைக்க வுன்னுமென்றுந் தேர்ந்தேனே.
 
நற்பணியின் முத்தர் அயர் நல்ல பூசை போல உயிர்
உற்சாகமாய் இழைக்க உன்னும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: நல்ல தொண்டில் முத்தர் செய்கின்ற நல்ல பூசை போல, உயிர் உற்சாகமாய்ச் செய்வதற்கு நினைக்கும் என்றும் தெளிந்தேன்.

அன்னணமற் பாற்பூசை யாற்றிச் சிவபணியும்
நன்னருறச் செய்யுமென்று நன்றாகத் தேர்ந்தேனே.
 
அன்னணம் அற்பால் பூசை ஆற்றிச் சிவபணியும்
நன்னர் உறச் செய்யும் என்று நன்றாகத் தேர்ந்தேனே.

பொருள்: அவ்வாறாக அல்லாமல் அன்பினால் பூசை செய்து சிவத் தொண்டும் செய்யும் என்று நன்கு தெளிந்தேன். 37

அன்பாற் சிவசரிதங் கேட்கு மனாரதமும்
நன்கார் சிவத்தைநெஞ்சி னாட்டுமென்றுந் தேர்ந்தேனே.
 
அன்பால் சிவசரிதம் கேட்கும் அனாரதமும்
நன்கு ஆர் சிவத்தை நெஞ்சில் நாட்டும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: இறைவன்மீது கொள்ளும் அன்பினால், சிவபெருமான் சரிதம் கேட்கும் எப்போதும் நன்கு பொருந்திய சிவத்தை மனத்தில் நினைக்கும் என்றும் தெளிந்தேன். 38

மோக்கப் பிரசாத போகமோ கிக்குமங்ஙன்
ஆக்கியுற்ற போக மருந்துமென்றுந் தேர்ந்தேனே.
 
மோக்கப் பிரசாத போகம் மோகிக்கும் அங்ஙன்
ஆக்கி உற்ற போகம் அருந்தும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: மோட்சப் பிரசாதம் எனும் அருட்செல்வத்தை விரும்பும் அங்ஙன் உண்டான செல்வத்தை நுகரும் என்றும் தெளிந்தேன்.39

முத்தருற வாதி மொழிந்தவெட்டும் வாக்கோடு
சித்தமுடம் பென்பனவுஞ் சுத்தியென்றுந் தேர்ந்தேனே.
 
முத்தர் உறவு ஆதி மொழிந்த எட்டும் வாக்கோடு
சித்தம் உடம்பு என்பனவும் சுத்தி என்றும் தேர்ந்தேனே.

பொருள்: முத்தர் உறவு முதலியன என்று இதுகாறும் கூறப்பட்ட எட்டும் மொழி, மனம், மெய் என்பனவும் பரிசுத்தம் என்றும் தெளிந்தேன். 40

இச்சுத்தி சீவனுற்றா லெம்பெருமான் பித்தேறி
இச்சகத்துப் பற்றையிகந் தேகுமென்றுந் தேர்ந்தேனே.
 
இச்சுத்தி சீவன் உற்றால் எம்பெருமான் பித்து ஏறி
இச்சகத்துப் பற்றை இகந்து ஏகும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: சீவான்மா இந்தப் பரிசுத்தத்தை அடைந்தால், எம்பெருமான் மீது பித்து அதிகம் உண்டாகி, இவ்வுலகப் பற்றை நீக்கிவிடும் என்றும் தெளிந்தேன். 41

எந்தை பராபரத்தை யெண்ணியய ரிக்கருமம்
பந்தந் தராவெனநூல் பன்னுமென்றுந் தேர்ந்தேனே.
 
எந்தை பராபரத்தை எண்ணி அயர் இக்கருமம்
பந்தம் தரா என நூல் பன்னும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: எம்முடைய தந்தையான மேலான கடவுளை நினைத்துச் செய்யும் இச்செயல்கள் பற்றைத் தரமாட்டா என்று சாத்திர நூல்கள் கூறும் என்றும் தெளிந்தேன்.

இப்பருவ மேவிளைக்கும் பத்திசத்தி யுட்பதிந்தால்
ஒப்பில் விவேக முதிக்குமென்றுந் தேர்ந்தேனே.
 
இப்பருவமே விளைக்கும் பத்தி சத்திஉள் பதிந்தால்
ஒப்பு இல் விவேகம் உதிக்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: இந்தப்பருவம் உண்டாக்கும் பத்தியினால் சத்திநிபாதம் நிகழுமாயின் ஒப்பில்லாத ஞானம் தோன்றும் என்றும் தெளிந்தேன்.43

பத்தியெனு மஞ்சனத்தை யிட்டாற் பரமகுரு
சுத்திசெய வென்றெதிரே தோன்றுமென்றுந் தேர்ந்தேனே.
 
பத்தி எனும் அஞ்சனத்தை இட்டால் பரமகுரு
சுத்திசெய என்று எதிரே தோன்றும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: பத்தி என்று கூறப்படும் மையை அணிந்து கொண்டால், பரமகுரு ஆன்மாவைச் சுத்தி செய எதிரே தோன்றும் என்றும் தெளிந்தேன். 44

 

ஞானாசாரியரருள் விளக்கம்

இந்தவுயர் பக்குவமுற் றாலணுவிற் கெம்பெருமான்
வந்துமலம் போக்கும் வழுத்துமென்றுந் தேர்ந்தேனே.
 
இந்த உயர் பக்குவம் உற்றால் அணுவிற்கு எம்பெருமான்
வந்து மலம் போக்கும் வழுத்தும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: இந்த உயர்வான பக்குவத்தை அடைந்துவிட்டால், உயிருக்கு எம்பெருமான் வந்து ஆணவமலத்தை நீக்குவன், உபதேசமும் செய்தருளுவன் என்றும் தெளிந்தேன். 45

[அடி குறிப்பு: வழுத்தல் = சொல்லல்; 27 – 76 ன் குறிப்புரை காண்க.]

மாநுடத்தை மாற்றவென மாநுடமா வந்துநின்று
நானென்னல் சீத்தறிவு நல்குமென்றுந் தேர்ந்தேனே.
 
மாநுடத்தை மாற்ற என மாநுடம் ஆவந்து நின்று
நான் என்னல் சீத்து அறிவு நல்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: மானுடத்தை மாற்றுவதற்கு என்று மானுட வடிவம் ஆக வந்து நின்று, நான் என்னும் அகங்காரத்தை ஒழித்து, அறிவை அளித்தருளும் என்றும் தெளிந்தேன். 46

தாங்கித்தா னாக்கியென்றுந் தன்னடிக்கீழ் வைத்தனிலை
ஆங்கதியென் றாகமநூ லார்க்குமென்றுந் தேர்ந்தேனே.
 
தாங்கித்தான் ஆக்கி என்றும் தன் அடிக்கீழ் வைத்தல் நிலை
ஆம் கதி என்று ஆகமநூல் ஆர்க்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: உயிருக்கு ஆதாரமாகி அதனைச் சிவமாக்கி, என்றும் தன் திருவடிக் கீழ் வைத்தல் நிலையான கதி என்று சிவாகம நூல்கள் கூறும் என்றும் தெளிந்தேன். 47

இந்தவுயர் தீட்சைகுரு மேனியிலு மேர்ச்சீடன்
சிந்தையிலு நின்றருளே செய்யுமென்றுந் தேர்ந்தேனே.
 
இந்த உயர் தீட்சை குருமேனியிலும் ஏர்ச்சீடன்
சிந்தையிலும் நன்று அருமவ செய்யும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: இந்த உயர்வான தீட்சை, ஞானாசிரியன் திருமேனியிலும் அழகிய சீடனின் உள்ளத்திலும் நின்று அருள்புரியும் என்றும் தெளிந்தேன். 48

கள்ளமில்விஞ் ஞானகலர் கட்கிறைவ னாரருடான்
உள்ளுளே நின்றுமறைப் போட்டுமென்றுந் தேர்ந்தேனே.
 
கள்ளம் இல் விஞ்ஞான கலர்கட்கு இறைவன் ஆர் அருள்தான்
உள்உளே நின்று மறைப்பு ஒட்டும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: வஞ்சனை இல்லாத விஞ்ஞான கலர்களுக்கு இறைவன் அழகிய அருள்தான் மனத்தில் நின்று ஆணவமலத்தை நீக்கும் என்றும் தெளிந்தேன். 49

தண்ணருளுட் கன்மமலஞ் சார்ந்த பிரளயர்க்குக்
கண்ணுதலா நின்றுகதி காட்டுமென்றுந் தேர்ந்தேனே.
 
தண்அருள் உள் கன்மமலம் சார்ந்த பிரளயர்க்குக்
கண்நுதலா நின்று கதிகாட்டும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: குளிர்ந்த அருள் உள்ள கன்மமலம் சார்ந்த பிரளயாகலர்க்குச் சிவபெருமானாக முன்னே வந்து நின்று அடைவதற்குரிய நற்கதி இது என்று காட்டும் என்றும் தெளிந்தேன். 50

தெவ்விலருண் மும்மலத்துச் சித்தாஞ் சகலரெதிர்
அவ்வவுரு வாய்நின் றருளுமென்றுந் தேர்ந்தேனே.
 
தெவ்இல் அருள் மும்மலத்துச் சித்து ஆம் சகலர் எதிர்
அவ்அவ் உருவாய் நின்று அருளும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: பகையில்லாத அருள் உடைய ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலம் உடைய அறிவு ஆகும் சகலர் என்பவர் எதிரில், அந்த அந்த உருவாக நின்று அருள்புரியும் என்றும் தெளிந்தேன். 51

குருவென்னுஞ் சொற்கருத்தங் குற்சிதமா மோகம்
மருவாம னீக்குகின்ற மன்னனென்றுந் தேர்ந்தேனே.
 
குரு என்னும் சொற்கு அருத்தம் குறிசத மாமோகம
மருவாமல் நீக்குகின்ற மன்னன் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: குரு என்னும் சொல்லுக்குப் பொருள், அருவருப்பான பெரிய ஆசை பொருந்தாமல் நீக்குகின்ற அரசன் என்றும் தெளிந்தேன். 52

தீட்சை விளக்கம்

காரண மாயையெனுங் கர்ப்பங் கடத்தியெழிற்
பேர்உடலி லேற்றுவது பீசமென்றுந் தேர்ந்தேனே.
 
காரண மாயை எனும் கர்ப்பம் கடத்தி எழில்
பேருடலில் ஏற்றுவது பீசம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: காரண மாயை என்று கூறப்படும் கருப்பத்திலிருந்து அப்புறப்படுத்தி, அழகிய பெரிய உடம்பில் ஏற்றுவதுதான் பீசம் என்றும் தெளிந்தேன். 53

சன்மமுளை யாயிருக்குங் கன்மஞ் சவட்டியந்தச்
சென்மமுடி வாள்வதுநிர்ப் பீசமென்றுந் தேர்ந்தேனே.
 
சன்ம முளையாய் இருக்கும் கன்மஞ் சவட்டி அந்தச்
சென்ம முடிவு ஆள்வது நிர்ப்பீசம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: பிறப்பிற்கு முளையாய் இருக்கும் வினையை ஒழித்து, அந்தப் பிறப்பின் முடிவை ஆள்வது நிர்ப்பீசம் என்றும் தெளிந்தேன். 54

தெருளாரு நிர்ப்பீச தீட்சைசெய்த போதே
ஒருமூன்று நீக்கியிட லுண்டெனவுந் தேர்ந்தேனே.
 
தெருள் ஆரும் நிர்ப்பீச தீட்சை செய்த போதே
ஒரு மூன்று நீக்கி இடல் உண்டு எனவும் தேர்ந்தேனே.

பொருள்: தெளிவு பொருந்திய நிர்ப்பீச தீட்சை செய்தபொழுதே, சஞ்சிதம், ஆகாமியம், பிராரத்தம் ஆகிய மூன்று கன்மங்களை நீக்கி விடுதல் உண்டு எனவும் தெளிந்தேன். 55

முக்கரும முந்தீர்ந்த வக்கணமே முத்தியுறல்
சிக்ககன்ற சத்யநிரு வாமென்றுந் தேர்ந்தேனே.
 
முக்கருமமும் தீர்ந்த அக்கணமே முத்தி உறல்
சிக்கு அகன்ற சத்யநிருவாணம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: மேற்கூறிய மூன்று வினைகளும் நீங்கிய அந்தப் பொழுதே முத்தி உண்டாதல் சிக்கல் நீங்கிய சத்திய நிருவாணம் என்றும் தெளிந்தேன். 56

[அடி குறிப்பு: சத்யநிருவாணம் - வடநூன்முடிபு.]

பேசிந் நிருவாணம் பெற்றானென் பாற்கொருகால்
தேசொ டுமாபதியார் செய்ததென றேர்ந்தேனே.
 
பேசு இந் நிருவாணம் பெற்றான் என்பாற்கு ஒருகால்
தேசு ஓடு உமாபதியார் செய்தது எனல் தேர்ந்தேனே.

பொருள்: பேசப்பட்ட இந்த சத்திய நிருவாண தீட்சையைப் பெற்றான் சாம்பான் என்பவனுக்கு, ஒரு சமயம் உமாபதி சிவம் மகத்துவம் செய்தார் என்றலையும் தெளிந்தேன். 57

[அடி குறிப்பு: "பெற்றான்" என்பான் கதி யாதாம்? என்பது பற்றி 46-16ன் குறிப்புரையிற் கூறியாயிற்று.]

சீரியநிர்ப் பீசத்துந் திண்மைப் பிரார்த்தமன்
றோரிரண்டு நீக்குதலு முண்டெனவுந் தேர்ந்தேனே.
 
சீரிய நிர்ப்பீசத்தும் திண்மைப் பிரார்த்தம் அன்று ஓர்
இரண்டு நீக்குதலும் உண்டு எனவும் தேர்ந்தேனே.

பொருள்: சிறந்த நிர்ப்பீச தீட்சையிலும், உறுதியான பிராரத்த கன்மம் என்பதில், அப்போது ஒன்று அல்லது இரண்டை நீக்குதலும் உண்டு எனவும் தெளிந்தேன். 58

[அடி குறிப்பு: பிரார்த்தம் - பிராரப்தம் என்னும் வடசொற் சிதைவு.]

இத்தீட்சை பெற்றோர்க் கெடுத்த வுடலொழிகால்
நத்துபிரா ரத்த நசிக்குமென்றுந் தேர்ந்தேனே.
 
இத்தீட்சை பெற்றோர்க்கு எடுத்த உடல் ஒழிகால்
நத்து பிராரத்தம் நசிக்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: இந்த நிர்ப்பீச தீட்சை பெற்றவர்களுக்கு உடம்பு ஒழியும் காலத்தில், அதனைச் சேர்ந்த பிராரத்த கன்மமும் உடன் ஒழியும் என்றும் தெளிந்தேன். 59

இந்தநிரு வாணமென்ப தின்பேர் சிரமிதனால்
பந்தமற்ற பேர்தாம் பலவரென்றுந் தேர்ந்தேனே.
 
இந்த நிருவாணம் என்பதின் பேர் சிரம் இதனால்
பந்தம் அற்ற பேர்தான் பலவர் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: இந்த நிருவாணம் என்பதின் பேர் அத்தியாச் சிரமம்; இதனால் பற்று அற்ற பேர்கள்தான் பல்லோர் என்றும் தெளிந்தேன். 60

சேமநல்கு மீதசத்ய தீட்சையென்று மித்தையுற்றோர்
ஆமிலத்தைப் போலிருப்பா ரன்பரென்றுந் தேர்ந்தேனே.
 
சேமம் மல்கும் ஈது அசத்ய தீட்சை என்றும் இத்தைஉற்றோர்
ஆமிலத்தைப் போல் இருப்பார் அன்பர் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: நன்மைமிகும் இத்தீட்சை அசத்ய தீட்சை என்றும், இதனைப் பெற்றோர் புளியம் பழமும் தோடும் போல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் அன்பர் என்றும் தெளிந்தேன். 61

தீட்சையெனுஞ் சொற்கருத்தந் தெய்வமொன்றைப் போக்கியொன்றை
மாட்சியரு ளாலே வழங்கலென்றுந் தேர்ந்தேனே.

தீட்சை எனும் சொற்கு அருத்தம் தெய்வம் ஒன்றைப் போக்கி ஒன்றை
மாட்சி அருளாலே வழங்கல் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: தீட்சை என்னும் இந்தச் சொல்லுக்குப் பொருள், தெய்வம் தன் மாட்சியுடைய அருளால் ஒன்றைப் போக்கி ஒன்றை வழங்குதல் என்றும் தெளிந்தேன். 62

நெல்லிற் றவிடுமியுண் ணிற்குமுளை போலிருக்கும்
பொல்லா மலமூன்றும் போக்கலென்றுந் தேர்ந்தேனே.

நெல்லில் தவிடு உமி உள் நிற்கும் முளை போல் இருக்கும்
பொல்லா மலம் மூன்றும் போக்கல் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: நெல்லில் தவிடும் உமியும் உள்ளே முளையும் இருத்தல் போல், இருக்கும் பொல்லாத ஆணவமலம், கன்மமலம், மாயாமலம் மூன்றும் நீக்குதல் என்றும் தெளிந்தேன்.63

எக்காலு நீங்காத வெங்கடவு டன்னிலையை
எக்கழுத்த வன்பினனி யீதலென்றுந் தேர்ந்தேனே.

எக்காலும் நீங்காத எம் கடவுள் தன் நிலையை
எக்கழுத்த அன்பில் நனி ஈதல் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: எந்தக் காலத்திலும் உயிரைவிட்டுப் பிரியாத எம்முடைய கடவுளின் நிலையை இறுமாப்பான அன்பினால் நன்கு தருதல் என்றும் தெளிந்தேன். 64

மேலுரைத்த பக்குவங்கண் மேவார்க்கு மேன்மார்க்கம்
சீலமுட னீயாது தெய்வமென்றுந் தேர்ந்தேனே.

மேல் உரைத்த பக்குவங்கள் மேவார்க்கு மேல் மார்க்கம்
சீலம் உடன் ஈயாது தெய்வம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: மேலே கூறிய பக்குவங்கள் பெறாதவர்களுக்கு, மேலான மார்க்கத்தைத் தெய்வம் அழகுடன் ஈயாது என்றும் தெளிந்தேன். 65

மீன்சினையைப் பார்ப்பதுபோன் மின்விழியாற் பேதித்தல்
தானயன தீட்சையென்று சங்கையறத் தேர்ந்தேனே.

மீன் சினையைப் பார்ப்பது போல் மின் விழியால் பேதித்தல்
தான் நயன தீட்சை என்று சங்கை அறத் தேர்ந்தேனே.

பொருள்: மீன் தன் முட்டையைப் பார்த்துப் பொரிக்கச் செய்வதுபோல், ஒளியுடைய கண்களால் பார்த்து மாற்றுதல்தான் (கண் தீட்சை) நயன தீட்சை என்று ஐயம் அறத் தெளிந்தேன். 66

ஆமையண்ட நோக்குதல்போ லாஞ்சோகம் பாவனையில்
தேமருவல் பாவனையென் றீட்சையென்றுந் தேர்ந்தேனே.
 
ஆமை அண்டம் நோக்குதல் போல் ஆம் சோகம் பாவனையில்
தே மருவல் பாவனை என் தீட்சை என்றும் தேர்ந்தேனே.

பொருள்: ஆமை ஆனது தன் முட்டையைக் கரையில் குழிக்குள் புதைத்து வைத்து விட்டுத்தான் வாழும் நீருக்குள் இருந்தபடி, அம்முட்டையை நினைத்து நினைத்து அந்த நினைப்பால் பொரிக்கச் செய்யும்; அதுபோல் குரு ஆனவர் சோகம் பாவனையினால் கடவுளைப் பொருந்திச் சீடனுக்குத் தீட்சை அளித்தல் பாவனை தீட்சை என்றும் தெளிந்தேன். 67

கோழியண்டங் கோடலொப்பக் கொள்கரங்க ளாலணைத்தல்
பாழிப் பரிசமென்ப பாங்கரென்றுந் தேர்ந்தேனே.
 
கோழி அண்டம் கோடல் ஒப்பக் கொள் கரங்களால் அணைத்தல்
பாழிப் பரிசம் என்ப பாங்கர் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: கோழி தன் முட்டை மேல் அமர்ந்து அடைகாப்பதுபோல், குரு ஆனவர் சீடனைத் தம் கைகளால் தீண்டிச் செய்யும் தீட்சை, பெருமையுடைய பரிச தீட்சை என்னும் பக்கத்தைச் சேர்ந்ததாகும் என்றும் தெளிந்தேன். 68

நெஞ்சினடு வேநுழைந்து நிற்குமுயி ரைக்கிளப்பிச்
செஞ்சிவத்தி லேநிறுத்தல் யோகமென்றுந் தேர்ந்தேனே.
 
நெஞ்சின் நடுவே நுழைந்து நிற்கும் உயிரைக் கிளப்பிச்
செம்சிவத்திலே நிறுத்தல் யோகம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: குரு ஆனவர் சீடனின் மனத்தின் நடுவில் நுழைந்து, நிற்கும் உயிரைச் கிளப்பிச் செம்மையான சிவத்தில் நிறுத்தல் யோக தீட்சை என்றும் தெளிந்தேன். 69

மந்திரத்தி னாயகமா மந்திரங்கள் சொல்லிவைத்தல்
செந்திருக்கொள் வாக்கெனுமோர் தீட்சையென்றுந் தேர்ந்தேனே.
 
மந்திரத்தின் நாயக மா மந்திரங்கள் சொல்லி வைத்தல்
செந்திருக்கொள் வாக்கு எனும் ஓர் தீட்சை என்றும் தேர்ந்தேனே.

பொருள்: மந்திரத்தின் தலைமையான மகாமந்திரங்களை ஓதி வைத்தல், செவ்வையும் அழகும் கொண்ட வாக்கு தீட்சை என்றும் தெளிந்தேன். 70

புத்தகத்தி னேராப் பொருள்விளக்கிக் காட்டுவது
சித்துரைக்குஞ் சாத்திரமென் றீட்சைமென்றுந் தேர்ந்தேனே.

புத்தகத்தில் நேராப் பொருள் விளக்கிக் காட்டுவது
சித்து உரைக்கும் சாத்திரம் என் தீட்சை என்றும் தேர்ந்தேனே.

பொருள்: புத்தகத்தில் உள்ள பொருளைக் குரு ஆனவர் சீடனுக்கு நேரே விளக்கி உரைப்பது ஞானம் உரைக்கும் சாத்திர தீட்சை என்றும் தெளிந்தேன். 71

கட்டீட்சை யாதி கழறியுள்ள வோராறும்
சிட்டரடை மெய்ஞ்ஞான தீட்சையென்றுந் தேர்ந்தேனே.
 
கண்தீட்சை ஆதி கழறி உள்ள ஓர் ஆறும்
சிட்டர் அடை மெய்ஞ்ஞான தீட்சை என்றும் தேர்ந்தேனே.

பொருள்: கண் தீட்சை முதலியனவாகக் கூறப்பட்டுள்ள ஓர் ஆறு தீட்சைகளும், சீடர்கள் குருவினிடம் அடைகின்ற மெய்ஞ்ஞான தீட்சைகள் ஆகும் என்றும் தெளிந்தேன். 72

[அடி குறிப்பு: கட்டீட்சை = நயன தீட்சை]

ஒரேழுத்து விளக்கம்

சின்மயமாத் தீக்கையெல்லாந் தேசிகன்சொல் லோர்மொழியில்
தன்மயமாக் காட்டுமென்றுஞ் சங்கையறத் தேர்ந்தேனே.

சின்மய மாத் தீக்கை எல்லாம் தேசிகன் சொல் ஓர் மொழியில்
தன் மயம் ஆக் காட்டும் என்றும் சங்கை அறத் தேர்ந்தேனே.

பொருள்: அறிவுமயம் ஆன மாட்சிமையுடைய தீக்கை எல்லாவற்றையும், குரு சொல்லும் ஒரு மொழியினால் தன் மயம் ஆகக்காட்டும் என்றும் ஐயமறத் தெளிந்தேன். 73

ஓர்மொழியே மோனநிலை யோர்மொழியே நிற்குநிலை
ஓர்மொழியே யோரெழுத்து மென்றவுண்மை தேர்ந்தேனே.
 
ஓர் மொழியே மோன நிலை; ஒர் மொழியே நிற்கும் நிலை;
ஓர் மொழியே ஒர் எழுத்தும் என்ற உண்மை தேர்ந்தேனே.

பொருள்: ஒரு மொழியே மௌன நிலை; ஒரு மொழியே நிலைபெறும் நிலை; ஒரு மொழியே ஓர் எழுத்தும் ஆகும் என்னும் உண்மையையும் தெளிந்தேன். 74

ஒரெழுத்தே யோதாம லோதவுள்ள தென்றுமந்த
ஓரெழுத்தை யோலையெழுத் தில்லையென்றுந் தேர்ந்தேனே.
 
ஓர் எழுத்தே ஒதாமல் ஒத உள்ளது என்றும் அந்த
ஓர் எழுத்தை ஓலை எழுத்து இல்லை என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த ஓர் எழுத்தே ஓதாமல் ஓதப்படக் கூடியதாக உள்ளதாகும்; அந்த ஓர் எழுத்தை ஓலையில் எழுதப்பட்ட எழுத்து இல்லை என்றும் தெளிந்தேன். 75

ஒரெழுத்தே பற்றியவா றொவ்வவந்து முற்றுமென
ஆரணந்தா னோதுவண்ண மாக்குமென்றுந் தேர்ந்தேனே.
 
ஓர் எழுத்தே பற்றியவாறு ஒவ்வ வந்து முற்றும் என
ஆரணம் தான் ஓது வண்ணம் ஆக்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த ஓர் எழுத்தே நாம் பிடித்துக் கொண்டாடிப் பொருத்தமாக வந்து நன்கு நிறைவேற்றும் என வேதங்கள் ஓதும் வண்ணம் செய்யும் என்றும் தெளிந்தேன். 76

ஓரெழுத்தே சித்தாந்த மோரெழுத்தே வேதாந்தம்
ஓரெழுத்தே நாதாந்த வுண்மையென்றுந் தேர்ந்தேனே.
 
ஓர் எழுத்தே சித்தாந்தம் ஓர் எழுத்தே வேதாந்தம்
ஓர் எழுத்தே நாதாந்த உண்மை என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த ஓர் எழுத்தே சித்தாந்தம் ஆகும்; அந்த ஓர் எழுத்தே வேதாந்தம் ஆகும்; அந்த ஓர் எழுத்தே நாதாந்தத்தின் உண்மையை உணர்த்தும் என்றும் தெளிந்தேன். 77

ஓரெழுத்தே போதாந்த மோரெழுத்தே யோகாந்தம்
ஓரெழுத்தே யோவாக் கலாந்தமென்றுந் தேர்ந்தேனே.
 
ஓர் எழுத்தே போதாந்தம் ஓர் எழுத்தே யோகாந்தம்
ஓர் எழுத்தே ஒவாக் கலாந்தம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த ஓர் எழுத்தே போதாந்தம் ஆகும்; அந்த ஓர் எழுத்தே யோகாந்தம் ஆகும்; அந்த ஓர் எழுத்தே ஒழியாத கலாந்தம் ஆகும் என்றும் தெளிந்தேன். 78

ஓரெழுத்தே யொன்றிரண்டென் றோதாச் சமரசமும்
ஓரெழுத்தே யெங்குமுள்ள வுண்மையென்றுந் தேர்ந்தேனே.

ஓர் எழுத்தே ஒன்று இரண்டு என்று ஒதாச் சமரசமும்
ஓர் எழுத்தே எங்கும் உள்ள உண்மை என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த ஓர் எழுத்தே ஒன்று எனவும் இரண்டு எனவும் ஓதாத சமரசமாகும்; அந்த ஓர் எழுத்தே எங்கும் நிறைந்துள்ள உண்மைப் பொருள் என்றும் தெளிந்தேன். 79

ஓரெழுத்தே யைந்தெழுத்து மோரெழுத்தே யோமெனலும்
சீரியசின் முத்திரையு மென்றுநனி தேர்ந்தேனே.
 
ஓர் எழுத்தே ஐந்தெழுத்தும் ஓர் எழுத்தே ஓம் எனலும்
சீரிய சின் முத்திரையும் என்று நனி தேர்ந்தேனே.

பொருள்: அந்த ஓர் எழுத்தே ஐந்து எழுத்துமாகும்; அந்த ஓர் எழுத்தே ஓம் எனலும் ஆகும்; (இதுவே சூக்கும சடக்கரம்) சிறந்த சின் முத்திரையும் அதுவே என நன்கு தெளிந்தேன். 80

[அடி குறிப்பு:  "ஓம்" இதுவே சூக்கும சடக்கரம்.]

அவ்வெழுத்திற் கைந்துகுறி யாமவற்றுண் மூன்றசத்து
செவ்வையுள்ள மற்றிரண்டுந் தீர்க்கமென்றுந் தேர்ந்தேனே.
 
அவ் எழுத்திற்கு ஐந்து குறியாம் அவற்றுள் மூன்று அசத்து
செவ்வை உள்ள மற்று இரணடும் தீர்க்கம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த ஓங்காரமாகிய எழுத்திற்கு ஐந்து குறியாகும். அவற்றுள் மூன்று அசத்து செவ்வை உள்ள மற்று இரண்டும் தீர்க்கம் என்றும் தெளிந்தேன். 81

அவ்வெழுத்தை ஞாதுருஞே யங்காட்சி யற்றுளவோர்
தெவ்விலின்ப மாமதுரத் தேனெனவுந் தேர்ந்தேனே.
 
அவ்எழுத்தை ஞாதுரு ஞேயம் காட்சி அற்று உள ஓர்
தெவ்இல் இன்ப மாமதுரத் தேன் எனவும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த எழுத்தைக் காண்பான், காணப்படுபொருள், காட்சி அற்று உள்ள ஒரு பகையில்லாத இன்பமான சிறந்த இனிமையான தேன் எனவும் தெளிந்தேன். 82

வைதிகத்திருநீற்று வண்மைவிளக்கம்

வீட்டகத்திற் சாணி மெழுகிநலஞ் செய்தலொக்கும்
சேட்டமறை நீறு திமிர்தலென்றுந் தேர்ந்தேனே

வீட்டு அகத்தில் சாணி மெழுகி நலம் செய்தல் ஒக்கும்
சேட்டம் அறை நீறு திமிர்தல் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: வீட்டு இடத்தைச் சாணியினால் மெழுகி நன்மை செய்தலை ஒக்கும், மேன்மை கூறும் திருநீறு உடம்பில் பூசுதல் என்றும் தெளிந்தேன். 83

நீறிடா நெட்டுடம்பு சுத்தமில்லை நீத்தவுயிர்
ஊறகத்தி லேயுறைவோ ரொக்குமென்றுந் தேர்ந்தேனே.
 
நீறு இடா நெட்டு உடம்பு சுத்தம் இல்லை நீத்த உயிர்
ஊறு அகத்திலே உறை வோர் ஒக்கும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: நீறு பூசாத பெரிய உடம்பு தூய்மையானது இல்லை; அது நீங்கிய உயிர் இடையூறுள்ள இடத்தில் வசிப்போரை ஒக்கும் என்றும் தெளிந்தேன். 84

[அடி குறிப்பு: ஊறகத்தில் = இடையூறுள்ளவிடத்தில்.]

ஆபாத சூட மணியுயிரா டாவிடினும்
ஆபாத சூடநல மாகுமென்றுந் தேர்ந்தேனே.
 
ஆபாத சூடம் அணி உயிர் ஆடாவிடினும்
ஆபாத சூடம் நலம் ஆகும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகிய உயிர் நீராடாவிடினும், உச்சி முதல் உள்ளங்கால்வரை திருநீறு பூசுதல் நன்மை ஆகும் என்றும் தெளிந்தேன். 85

[அடி குறிப்பு: ஆடாவிடினும் நீரில் முழுகாவிடினும்.]

மேலாந் தவத்தழகை வெண்ணீ றளிக்குமென
நூலாளர் வாக்கு நுலலுமென்றுந் தேர்ந்தேனே.

மேல் ஆம் தவத்து அழகை வெண்ணீறு அளிக்கும் என
நூல் ஆளர் வாக்கு நுவலும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: மேலான தவத்தின் அழகை திருவெண்ணீறு அளிக்கும் என்று, ஞான நூல் கற்றோர் வாக்குக் கூறும் என்றும் தெளிந்தேன். 86

சாத்துவிக மெய்ஞ்ஞானந் தான்வளர்ப்பா னக்கினியிற்
பூத்ததிரு நீற்றைநனி பூசலென்றுந் தேர்ந்தேனே.
 
சாத்துவிக மெய்ஞ் ஞானம் தான் வளர்ப்பான் அக்கினியில்
பூத்த திருநீற்றை நனி பூசல் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அக்கினியில் தோன்றிய திருநீற்றை நன்கு பூசிக்கொள்ளுதலே சாத்துவிக மெய்யறிவை ஒருவன் வளர்க்கத் துணைபுரியும் என்றும் தெளிந்தேன். 87

உற்றபிணி தீர்ப்பா னுரியோர்க் கருமருந்தும்
அற்றமற்ற வெண்ணீறே யாகுமென்றுந் தேர்ந்தேனே.
 
உற்ற பிணிதீர்ப்பான் உரியோர்க்கு அருமருந்தும்
அற்றம் அற்ற வெண்ணீறே ஆகும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: உண்டான நோயைத் தீர்க்கும் பொருட்டு நோயுடையவர்க்குக் கிடைத்தற்கு அரிய மருந்தாக உள்ளது, துன்பம் இல்லாத திருவெண்ணீறே ஆகும் என்றும் தெளிந்தேன். 88

அம்பரத்தி னாசைவிஞ்ச வம்புவியி னாசைதுஞ்ச
எம்பெருமா னிட்டபொடி யீதெனவுந் தேர்ந்தேனே.
 
அம்பரத்தின் ஆசை விஞ்ச அம்புவியின் ஆசை துஞ்ச
எம்பெருமான் இட்ட பொடி ஈது எனவும் தேர்ந்தேனே.

பொருள்: விண்ணுலக ஆசை மிகவும், மண்ணுலக ஆசை மறையவும் எம்பெருமான் அளித்த பொடியே இத்திருநீறு எனவும் தெளிந்தேன். 89

எத்தனைதாங் கற்றாலு மெத்தனைதாம் பெற்றாலும்
இத்திரு நீற்றைவிடா ரின்பரென்றுந் தேர்ந்தேனே.
 
எத்தனை தாம் கற்றாலும் எத்தனைதாம் பெற்றாலும்
இத்திருநீற்றை விடார் இன்பர் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: எவ்வளவு கல்வி கற்றாலும் எவ்வளவு பேறுகள் பெற்றாலும், இன்பம் விரும்புவோர் இத்திருநீற்றை விடமாட்டார் என்றும் தெளிந்தேன். 90

குகப்பிரமானந்த விளக்கம்

வெறுவெளியிற் கையேந்தி வேண்டுவதிற் றேவை
அறியவொண்ணா துண்ணுழைந்தா லாகுமென்றுந் தேர்ந்தேனே.
 
வெறுவெளியில் கை ஏந்தி வேண்டுவதில் தேவை
அறிய ஒண்ணாது உள் நுழைந்தால் ஆகும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: வெற்று வெளியில் கையை ஏந்தித் துதிப்பதினால் கடவுளை அறிய முடியாது; உள்ளத்திற்குள் நுழைந்தால் அறியலாகும் என்றும் தெளிந்தேன். 91

உண்ணுழைந்து கார்நீத் தொளிருயிரைக் கண்டபின்பு
தண்ணருளைக் காண்டல் சரதமென்றுந் தேர்ந்தேனே.
 
உள் நுழைந்து கார் நீத்து ஒளிர் உயிரைக் கண்டபின்பு
தண் அருளைக் காண்டல் சரதம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: உள்ளத்துள்ளே நுழைந்து ஆணவமல இருளை நீக்கி, ஒளிவீசும் உயிரைக் கண்ட பின்பு குளிர்ந்த அருளைக் காணுதல் உண்மை என்றும் தெளிந்தேன். 92

தனக்குணர்ச்சி யாகநிற்குஞ் சத்தியைக் கண் டாங்கே
தொனிப்பின்றி யாழ்தல் சுகமெனவுந் தேர்ந்தேனே.
 
தனக்கு உணர்ச்சி ஆகநிற்கும் சத்தியைக் கண்டு ஆங்கே
தொனிப்பு இன்றி ஆழ்தல் சுகம் எனவும் தேர்ந்தேனே.

பொருள்: தனக்கு அறிவாக நிற்கும் சத்தியைக் கண்டு, அவ்விடத்தில் ஓசை இல்லாமல் அழுந்தல் இன்பம் சுக அதீதம் என்றும் தெளிந்தேன். 93

அவ்வருளிற் றோயா தழுந்தியரு ணாதனண்ணல்
செவ்வியசம் பன்னசுகா தீதமென்றுந் தேர்ந்தேனே.
 
அவ் அருளில் தோயாது அழுந்தி அருள் நாதன் அண்ணல்
செவ்விய சம்பன்ன சுக அதீதம் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அந்த அருள் என்னும் சத்தியில் தோயாமல், அழுந்தி அந்த நிலையிலேயே அருள்நாதனான சிவத்தை அடைதல், செவ்வையான நிறைவுடைய இன்பம் கடந்த நிலையாகும் என்றும் தெளிந்தேன். 94

சொன்னசுகா தீதநிலைத் தோய்விற் பசுஞானம்
உன்னாது சாமங் கொருவனென்றுந் தேர்ந்தேனே.
 
சொன்ன சுக அதீத நிலைத் தோய்வில் பசுஞானம்
உன்னாது சாம் அங்கு ஒருவன் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: முன்பு சொன்ன இன்பம் கடந்த நிலைத் தோய்வில், பசுஞானத்தை நினையாது அங்கு ஒருவன் சாவான் என்றும் தெளிந்தேன். 95

ஒருவனெனு மெம்மா னொளியோன்கண் ணோக்கைத்
தெரியா தடக்குதல்போற் செய்யுமென்றுந் தேர்ந்தேனே.
 
ஒருவன் எனும் எம்மான் ஒளியோன் கண்நோக்கைத்
தெரியாது அடக்குதல் போல் செய்யும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: ஒருவன் எனக் கூறப்படும் எம் கடவுளான ஒளியோன் கண் பார்வையைத் தெரியாதபடி அடக்குதல்போல், பசுவிற்கு ஏதும் தெரியாதபடித் தன்னுள் அடக்குவன் என்றும் தெளிந்தேன். 96

சீவபோ தத்தையந்தத் திட்டமிறை யோன்கவர்கால்
ஆவியுந் தேவனென வாகுமென்றுந் தேர்ந்தேனே.
 
சீவ போதத்தை அந்தத் திட்டம் இறையோன் கவர்கால்
ஆவியும் தேவன் என ஆகும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: ஆன்மாவின் அறிவை அந்தப் பூரண இறையோன் கவரும் பொழுது, ஆன்மாவும் இறைவன் ஆகிவிடும் என்றும் தெளிந்தேன். 97

நித்த விரண்டுமொன்றா நிற்கு மனாதிநிலை
அத்துவிதங் காண்டலிது வாகுமென்றுந் தேர்ந்தேனே.
 
நித்த இரண்டும் ஒன்றா நிற்கும் அனாதிநிலை
அத்துவிதம் காண்டல் இது ஆகும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: நித்தியமான பதியும் பசுவும் இவ்விரண்டும் கலந்து ஒன்றாய் நிற்கும் அனாதிநிலை, அத்துவிதம் காணுதல் என ஆகும் என்றும் தெளிந்தேன். 98

புந்திநெறி யாமிதனைப் போரூர்ச் சிதம்பரப்பேர்
எந்தையை யாண்டமுரு கீயுமென்றுந் தேர்ந்தேனே.
 
புந்தி நெறி ஆம் இதனைப் போரூர்ச் சிதம்பரப்பேர்
எந்தையை ஆண்ட முருகு ஈயும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: அறிவு நெறியாகும் இதனைத் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் ஆகிய எமது தந்தையை, அடிமை கொண்ட முருகப்பெருமான் ஈந்தருளுவன் என்றும் தெளிந்தேன். 99

ஆனந்த வாழ்வை யருணகிரி நாதனுடை
யீனமறுத் தாண்டகுக னீயுமென்றுந் தேர்ந்தேனே.
 
ஆனந்த வாழ்வை அருணகிரிநாதன் உடை
ஈனம் அறுத்து ஆண்ட குகன் ஈயும் என்றும் தேர்ந்தேனே.

பொருள்: பேரானந்தப் பெருவாழ்வை அருணகிரிநாதர் உடைய குற்றங்களை ஒழித்து அவரை அடிமை கொண்ட குகப்பெருமான் ஈந்தருளும் என்றும் தெளிந்தேன்! 100

 

No comments:

Post a Comment