Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் அருளிய முதல்வன் புராண முடிப்பு

 முதல்வன் புராண முடிப்பு

சந்திர சேகரன் றழற்கண் ணேபொறி 
வந்தன வாறவை மாசில் கங்கைசார்ந் 
தைந்துட னொன்றணை குழவி யாகியா 
றந்தநன் மாதர்க ளமுத முண்டவே. (1)

சந்திர சேகரன் தழல் கண்ணே பொறி 
வந்தன ஆறு அவை மாசில் கங்கை சார்ந்து 
ஐந்துடன் ஒன்று அணை குழவியாகி ஆறு 
அந்த நன் மாதர்கள் அமுதம்  உண்டவே. (1)

சந்திரனைச் சூடியுள்ள சிவபெருமான் உடைய நெற்றிக்‌ கண்களில் இருந்து ஆறு நெருப்புப்‌ பொறிகள்‌ வெளி வந்தன. அவை, குற்றமற்ற சரவணப்‌ பொய்கை என்னும் நீர்‌ நிலையை அடைந்து ஆறு குழந்தைகளாக, (கார்த்திகைப்‌ பெண்கள் என்னும்‌) அழகிய நல்ல ஆறு மாதர்கள் உடைய பால் ஆகிய அமுதத்தை உண்டன. (1)

( தழல் கண் = நெருப்பு கண்ணாகிய நெற்றிக் கண்; ஐந்துடன் ஒன்று அணை குழவி = ஆறு (5+1=6) குழந்தைகள்)


உண்டவை பலபல வுருவங் காட்டுபு 
பண்டுமை யாலொரு படிவ மாயவள் 
கண்டென வருத்தமு துண்டு காமர்செய் 
அண்டவொண் கயிலைசென் றாடல் செய்யுமால். (2)

உண்டவை பலபல உருவங் காட்டுபு 
பண்டு உமையால் ஒரு படிவமாய் அவள் 
கண்டு என அருத்து அமுது உண்டு காமர்செய் 
அண்ட ஒண் கயிலை சென்று ஆடல் செய்யும் ஆல். (2)

முன்னாளில்‌ இப்படிப்‌ பால் உண்ட அக்குழந்தைகள்‌, பற்பல திருவுருவங்களைக்‌ காட்டின. உமையம்மை ஒரு சேரச்‌ சேர்த்து எடுத்‌ததால் ஒரு திருமேனி உடையதாகி, அவள்‌ கற்கண்டு என்னும்படி தனது திருமுலைப்பாலை ஊட்ட உண்டு, ஆகாயத்தை அளாவி நின்று அழகைத்‌ தருகின்ற ஒளி உடைய கைலாய மலையை அடைந்து பல திருவிளையாடல்கள்‌ புரிந்து நின்றது. (2)

(ஒரு படிவமாய்=ஒரு உருவமாய்; பண்டு=முன்பு/முன்னாளில்; அருத்து=ஊட்டுவிக்க; காமர் செய்=அழகைத் தரும்; ஆடல்=திருவிளையாடல்கள்)


ஆடலில் வெஞ்சுட ரசுவ மேறிய 
தீடணை யம்புலி யிரத மூர்ந்தது 
மூடமி லிந்திரன் முதலி னோர்கரி 
சேடண வூர்ந்தது செம்பொற் சேயரோ. (3)

ஆடலில் வெஞ்சுடர் அசுவம் ஏறியது 
ஈடணை அம்புலி இரதம் ஊர்ந்தது 
மூடம்இல் இந்திரன் முதலினோர் கரி 
சேடண  ஊர்ந்தது செம்பொற் சேயரோ. (3)

அத்‌ திருவிளையாடல்களில்‌, அழகிய சிவந்த திருமேனியை உடைய ௮க்‌குழந்தை ஆனது சூரியனுடைய குதிரையின்‌ மீது ஏறியது. பெருமை வாய்ந்த சந்திரனது தேரில் ஏறிச்‌ சென்றது. அறிவார்ந்த இந்திரன்‌ முதலான தேவர்கள் உடைய யானைகளின்‌ மிசை அழகு பொருந்த மேல் ஏறி வந்து அவற்றை நடத்தியது. (3)

(ஆடலில்=திருவிளையாடல்களில்; வெஞ்சுடர்=சூரியன், அசுவம்=குதிரை; ஈடு அணை= பெருமை வாய்ந்த அம்புலி=சந்திரன்; இரதம்=தேர்; கரி=யானை; சேடுஅண=சேடு அண்ண அதாவது அழகு பொருந்த)


செங்கரு டன்புலி சீய மோதிமஞ் 
சங்குற ழேறுழை சரபம் யாடிவர்ந் 
தெங்கணு மேகிய தெழில்கொ ளெந்நில 
மங்கைய ரும்விழை மகிமைப் பிள்ளையே. (4)

செங்கருடன் புலி  சீயம்  ஓதிமஞ் 
சங்குறழ் ஏறு உழை சரபம் ஆடி இவர்ந்து 
எங்கணும் ஏகியது எழில்கொள் எந்நில 
மங்கையரும் விழை மகிமைப் பிள்ளையே. (4)

எவ்வுலகத்து பெண்களும்‌ விரும்பும் படியான அழகு வாய்ந்த மகிமை பொருந்திய அப்பிள்ளை, சிவந்த கருடன்‌, புலி, சிங்கம்‌, அன்னம்‌, சங்கு போன்ற நிறத்தையுடைய எருது, கலைமான்‌, சரபம்‌, ஆடு என்னும் இவற்றின்‌ மேல் ஏறி எங்கும் உலாவியது. (4)

(செங்கருடன்  = சிவந்த கருடன்; சீயம்=சிங்கம் ; ஓதிமம்=அன்னம் ; சங்கு உறழ் ஏறு= சங்கு போன்ற வெண் நிறம் உடைய எருது ; உழை=கலைமான் ; சரபம் = எட்டு கால்களை உடையதும் ஒரு சிங்கத்தையே கொல்லும் வலிமை உடையதுமான ஒரு வகை பறவை ; இவர்ந்தது=மேலேறி அமர்ந்து உலாவியது)


பிள்ளைமை நீத்தொரு பெருவ யோதிகம் 
உள்ளவ னாய்ச்சுர ருலகை நன்குசெய் 
உள்ளமொ டங்ஙன முலாவி னான்வன 
நள்ளிட னடைந்துகின் னரஞ்செய் தானவன். (5)

பிள்ளைமை நீத்தொரு பெருவ யோதிகம் 
உள்ளவனாய்ச் சுரர் உலகை நன்குசெய் 
உள்ளமொடு அங்ஙனம் உலாவினான் வன 
நள்ளிடன் அடைந்து கின்னரஞ் செய்தான் அவன். (5)

(இறைவன்‌) இப்பிள்ளைத்‌ திருக்கோலத்தை விடுத்து, தேவலோகத்தைச்‌ செம்மைப்படுத்தும்‌ திருஉள்ளத்தோடு, ஒரு முதியோனாகி அங்கு உலாவினான்‌. (அது மட்டும் அல்லாமல்‌) செறிந்த காட்டின் நடுவே சென்று ஒரு வீணை உண்டு பண்ணி அதனை வாசித்தான்‌. (5)

(வயோதிகனாய் = முதியவனாய் ;  சுரர் உலகை=தேவலோகத்தை ; வன நள் இடன் = காட்டின் நடுவான இடம் ; கின்னரம்=நரம்பிசை கருவி அதாவது வீணை)


செய்யத னோசையிற் சேர்வி லங்குபுள் 
மெய்யைம றந்தன வேய்ங்கு ழற்றொனி 
ஐயனெ ழுப்பின னகலுண் மாதர்கள் 
மையல்செய் விரகமுள் வருந்த நாளுமே. (6)

செய் அதன் ஓசையில் சேர் விலங்கு புள் 
மெய்யை மறந்தன வேய்ங்குழல் தொனி 
ஐயன் எழுப்பினன் அகலுள் மாதர்கள் 
மையல்செய் விரகம் உள் வருந்த நாளுமே. (6)

அவ்வோசையின்‌ இனிமையால்‌ அங்கே வந்து கூடிய விலங்குகளும்‌, பறவைகளும் தம்மை மறந்தன. பின்னர்‌, நகரத்தில் ‌வசிக்கும்மங்கையர்‌, மயக்கம்செய்யும்விரக நோயால்எப்பொழுதும்வருந்துமாறு, வேணுகானத்தை (புல்லாங்குழல் கானத்தை)  எழுப்பினான்.(6)

(புள்=பறவை ; மெய்யை மறந்தன = மெய் மறந்தன ; வேய்ங்குழல் தொனி=மூங்கிலால் ஆன புல்லாங்குழலின் ஒசை ; அகலுள்=நகரம்/ஊர் ; மையல் செய்=மயக்கதைச் செய்யும் ; விரகம் உள் வருந்த=காதலால் உள்ளம் வருந்த)


மேலட ரண்டமு மேய சேயவன் 
மாலுடல் வரையிடை வந்து வானவர் 
பாலுறு வலிகளைப் பாறச் செய்துதன் 
வாலிருந் தைவத வடிவு காட்டினான். (7)

மேல் அடர் அண்டமு மேய சேயவன் 
மாலுடல் வரை இடை வந்து வானவர் 
பாலுறு வலிகளைப் பாறச் செய்து தன் 
வால் இரும் தைவத வடிவு காட்டினான். (7)

இத்திருவிளையாடல்புரிந்த பின்னர்‌, எல்லா அண்டங்களிலும்சென்று உலாவிய  பால சுப்பிரமணியன்‌  மாமேரு என்னும் மலையை அடைந்து, (தன்னை எதிர்த்த) தேவர்கள் வலிமையை அழித்து, (பின்னர்யான்சிறுவன் அல்லன் என்று) தனது தூய பாரமேச்சுவர வடிவத்தை அவர்கட்குக்காட்டினான். (7)

(மாலுடல் வரை =வலிமை/பெருமை உடைய வடிவத்தை உடைய மலை (மேரு மலை) ; பாறச் செய்து=அழியச் செய்து ; வால் இரும் தைவத வடிவு = தூய பெருந்தெய்வ வடிவம்)


காட்டலுஞ் சதமகன் கடவு ளேயெமை 
வாட்டொரு சூரனை மடித்துக் காவெனக் 
கேட்டவ னஞ்சன்மின் கிருபை செய்துமென் 
றாட்டரன் பாற்படை யரசை வாங்கினான். (8)

காட்டலுஞ் சதமகன் கடவுளே எமை 
வாட்டு ஒரு சூரனை மடித்துக் காவெனக் 
கேட்டவன் அஞ்சன்மின் கிருபை செய்தும் என்று 
ஆட்டு அரன்பால் படை அரசை வாங்கினான். (8)

காட்டின உடன்‌  தேவேந்திரன்‌, ''எங்கள்கடவுளே! எங்களை துன்புறுத்தும் சூரபதுமனைக் கொன்று எங்களைக்காத்து அருள்கஎன்று குறை இரந்து வேண்ட; அதனைக்கேட்ட இளம்பூரணனான முருகன்‌,  "அஞ்சன்மின்அருள்புரிவோ​ம்‌” என்று திருவாய் மலர்ந்து அருளி, ஆனந்த தாண்டவனாகிய பரமசிவனிடத்திலே உள்ள படைக்கல நாயகமாகிய வேலாயுதத்தைப்பெற்றான்‌. (8)

(சதமகன் = தேவேந்திரன் ; மடித்துக் கா=கொன்று காப்பாற்று ; அஞ்சன்மின்=அஞ்சாதீர்கள்; ஆட்டு அரன்= ஆனந்த தாண்டவனாகிய பரமசிவன்)


வாங்கிமற் கணத்தொடு மகிவந் தோதியும் 
வீங்குமெய்க் கயமுகன் றனையும் வீட்டுபு 
பாங்குடைச் சிங்கனும் பானு கோபனும் 
நீங்கிடக் கண்டவர் நிருபற் கீண்டனன். (9)

வாங்கி மல் கணத்தொடு மகி வந்து ஓதியும் 
வீங்கு மெய்க் கயமுகன் தனையும் வீட்டுபு 
பாங்குடைச் சிங்கனும் பானு கோபனும் 
நீங்கிடக் கண்டவர் நிருபற் கீண்டனன். (9)

பெற்று, வலிய பூதகணங்களோடு பூவுலகிற்கு வந்து (கிரெளஞ்ச) மலையையும்,பருத்த உடம்பு உடைய தாரகாசுரனையும்அழித்து, அவரோடு உரிமை பூண்ட பானுகோபனும், சிங்கமுகாசுரனும்மடிந்து  ஒழியக்கண்டு, அவர்கள்தலைவனாகிய சூரபதுமனை வேலாயுதத்தால்இருகூறாய்ப்பிளந்தான்‌. (9)

(மல் கணத்தோடு = வலிய பூத கணங்களோடு; மகி வந்து = பூலோகத்திற்கு வந்து; ஓதியும்=கிரௌஞ்ச மலையும்; வீங்கு மெய்= பருத்த உடம்பு; வீட்டுபு=அழித்து; நிருபர்=தலைவன்/அரசன்; கீண்டனன்=பிளந்தனன்)


கீளவை பரிகொடி யாய்க்கி ளர்ந்தன 
ஆளொரு வரையடைந் தருணை யான்புகழ் 
வாளன கண்ணியை மணந்து விண்புரந் 
தாளெயின் மான்மணந் தான்ச யம்புவே. (10)

கீள்அவை பரி கொடியாய்க் கிளர்ந்தன 
ஆள்ஒரு வரை  அடைந்து அருணையான் புகழ் 
வாள் அ(ன்)ன கண்ணியை மணந்து விண்புரந்து 
ஆள் எயின் மான் மணந்தான் சயம்புவே. (10)

பிளக்கப்பட்ட அவை, கந்தக்கடவுளுக்கு (மயில்‌) வாகனமாகவுங்‌ (கோழிக்‌) கொடியாகவும்விளங்கின. இப்பால்‌, சுயம்புவாகிய ஆறுமுகச்சிவன்‌, தன்னால் ஆளப்படும்திருப்பரங்குன்றத்தை அடைந்து, அருணகிரிநாத சுவாமிகள்புகழும்படியான, வாள்போன்ற கண்ணை உடைய தெய்வயானைப்பிராட்டியைத்திருமணம்செய்து கொண்டு இந்திரனுக்கு முடிசூட்டுதலால் விண்ணுலகை இரட்சித்து (காத்து),  தான்ஆண்டுகொள்ளுதலுக்கு உரிய வேடர்குல பெண்ணாய்த்தோன்றிய வள்ளி பிராட்டியையும்திருமணம்செய்து அருளினான். (10)

(கீளவை= கீள் அவை = பிளக்கப்பட்ட அவை; பரி=மயில் வாகனம்; கொடி=கோழிக் கொடி; கிளர்ந்தன=விளங்கின; ஆள் ஒரு வரை= ஆளப்படுகின்ற மலை அதாவது முருகனால் ஆளப்படுகின்ற திருப்பரங்குன்றம்; அருணையான்=அருணகிரிநாதர்; வாள் அன கண்ணி= வாள் அன்ன கண்ணி= கத்தி போன்ற கண்களை உடைய தெய்வயானை அம்மை; விண்புரந்து = விண்ணுலகத்தைக் கொடுத்து; எயில் மான்=வேடர் குலத்து மானாகிய வள்ளி அம்மை; சயம்பு=சுயம்பு அதாவது தான்தோன்றி)

கந்தசட்டி மாவிரத பூசையிற் கந்தபுராண படனஞ் செய்ய வேண்டுமென்னு நியதியுண்டு. அஞ்ஞான்று அதுசெய்தற் கியலாதார். இத்திருப்பத்தையே ஒருமுறை பத்தியோடும் பாடி அப்படன புண்ணியத்தைப் பெறலாம்; ஐயமின்று.

No comments:

Post a Comment