Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

தெய்வ வணக்கம்

பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த முதன் மண்டலத்தைச் சார்ந்த தெய்வ வணக்கம் பாடலும் உரையும்:

தெய்வ வணக்கம்

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

றிவினுக் கறிவான பொருளையடி கட்கருளு
                மானந்த போதநிதியை
      அத்துவித நிச்சய வகண்டவே காகார
                மானசின் மயவாரியைக்
குறிதிரி பிலாதசிவ யோகபரி பூரணக்
                 கூர்ப்பினைக் குருபரத்தைக்
       குழவுமுது கிழமையின் றிலககோ சரசிற்சு
                  கோதய விலாசவெளியைத்
துறவரிரு தயநடையை யம்பரம தேசெனக்
                  சுடருமா னந்தவடிவைச்
        சுத்தபர தத்துவச் சுடரைச் சுயம்புவைத்
                   துரியவோங் காரமுதலை
நிறைசரத நிட்கள நிராகநிரு நாமபர 
                   நிட்டையி னிலாவுதிருவை
        நித்திய சுவானுபவ முற்றவயி லடிகளை
                   நிரந்தரமு ணெஞ்சில்வைப்பாம்         (1)
======================================
•அடிகள் = முனிவர்
ஆநந்தம் என்னும் வடகிளவி (வடசொல்) தமிழ் வழக்கிற்கு இயைய "ஆனந்தம்" என வரையப்பட்டது; இதுவே ஏற்புடைத்து. என்னை? (ஜ்ஞாநம் - ஞாநம், மநஸ், மநம், வசநம், மாநம், உபமாநம், ப்ரதாநம் என்னும் வட கிளவிகள் ஞானம், மனம், வசனம், மானம், உவமானம், பிரதானமென வரையப்படுகின்றன ஆகலின். பிறவும் அன்ன.
======================================

விளக்கம்: 

அறிவினுக்கு அறிவான பொருளை -- சிற்றறிவான உயிர்களுக்கு அறிவிக்கும் பேரறிவான பரம்பொருளை

அடிகட்கு அருளும் ஆனந்த போத நிதியை -- முனிவர்களுக்கு அருள்புரியும் இன்ப அறிவான செல்வத்தை

அத்துவித நிச்சய அகண்ட ஏக ஆகாரம் ஆன சின்மய வாரியைக் ---இரண்டற்றதாய் நிலைபெறும் எல்லையற்ற ஏக வடிவான அறிவுக்கடலை

குறிதிரிபு இலாத சிவயோக பரிபூரணக் கூர்ப்பினைக் குருபரத்தைக் --  பெயரும் மாறுபாடும் இல்லாத சிவயோக முழுநிறைவான சிறப்பினை; ஞானாசிரியனை

குழவு முது கிழமை இன்று இலகு அகோசர சிற் சுகோதய விலாச வெளியைத் -- இளமை முதுமை என்பதற்கு உரிமை உடையதாக இல்லாது அறிவதற்கு அரிதான அறிவின்பத்தைத் தோற்றுவிக்கின்ற பெரு வெளியை

துறவர் இருதய நடையை -- துறவிகளின் இருதய இயக்கத்தை

அம்பரம தேசு எனச் சுடரும் ஆனந்த வடிவைச் -- அழகிய மேலான ஒளி என ஒளி வீசும் இன்பவடிவை

சுத்தபர தத்துவச் சுடரைச் சுயம்புவைத்  -- தூய மேலான தத்துவ ஒளியை; சுயம்புவை

துரிய ஒங்கார முதலை  -- துரிய ஓங்கார முதற் பொருளை

நிறை சரத நிட்கள நிர்ஆக நிருநாம --  நிறைவான மெய்யும் அருவமும் உடம்பிலாததும் பேர் இலாததும்

பரநிட்டையில் நிலாவு திருவை  --  மேலான நிட்டையில் உள்ள தெய்வமும்

நித்திய சுவானுபவம் உற்ற அயில் அடிகளை  -- நிலையான தன் இன்ப அனுபவமுடையதும் ஆன வேலிறையை

நிரந்தரம் உள் நெஞ்சில் வைப்பாம்  -- எப்போதும் மனத்தினுள் வைப்போமாக!


நின்மல நிராமயப் புராணபர தாரக
                 நிரம்பர நிராகாரமாய்
  நிர்க்குண நிராகுல நிராசன நிராசூச
                 நிட்பிரபஞ் சப்பிரம்மாய்ச்
ன்மமிகை மரணமின் றண்டபிண்டப் பெயர்கொள்
                   சங்கங்க ளிற்கலாவிச்
 சச்சிதா னந்தசிவ சிற்ககன மாய்நித்த
                   சருவவல் லபமுள்ள தாய்த்
ன்மகிரு பாகர விலாசசுக சாகர
                   சதாசிவ மகேசவடிவாய்ச்
 சதுர்மறைசொல் வேதாந்த சித்தாந்த நிலையிலெழு
                   சமரச சுபாவமுடிபாய்
ன்மவுன ரறிவின்மெய் யறிவாகி விரிவாகி
                   நாளுஞ் சிறந்துதிகழும்
  ஞாட்பா றெழுத்திறைக் கடிமையென விதயமுண்
                   ணண்ணியஞ் சலிசெய்குவாம்        (2)

விளக்கம்: 

நின்மல நிர் ஆமய புராண பரதாரக -- மும்மலங்கள் இல்லாததும் பிறவி நோயற்றதும் பழைமையானதும் மேலான பிரணவ சொரூபமும்

நிர்அம்பர நிர்ஆகாரமாய் -- திசையில்லாததும் சட ஆகாசம் அல்லாததும்

நிர்க்குண நிர்ஆகுல நிர்ஆசன நிர்அசூச -- துன்பமில்லாததும் இருக்கை ஒன்றும் இல்லாததும், அசுத்தம் இல்லாததும்

நிட் பிரபஞ்சப் பிரமமாய்ச் -- பிரபஞ்சமில்லாப் பெரிய பொருளானதும்

சன்மமிகை மரணம் இன்று அண்ட பிண்டப் பெயர்கொள் சங்கங்களில் கலாவிச்  --  பிறப்பு, துன்பம், மரணம் இல்லாததும்; அண்டங்கள் எனவும் பிண்டங்கள் எனவும் பெயர் கொண்டு உள்ள கூட்டங்களில் சேர்ந்து

சச்சிதானந்த சிவ சிற்ககனமாய் -- சத்து சித்து ஆனந்த, சிவ சிதாகாசமாய் (அறிவு ஆகாசமாய்)

நித்த சருவ வல்லபம் உள்ளதாய்த் -- நிலையாக எல்லா ஆற்றலுமுடையதாய் உள்ளதும்

தன்ம கிருபாகர விலாச சுக சாகர -- அறத்திற்கும் கருணைக்கும் நிலைக்களமாக உள்ள அழகிய இன்பக்கடலாய்

சதாசிவ மகேச வடிவாய்ச் -- சதாசிவ மூர்த்தி வடிவாகவும், மகேசுர மூர்த்தி வடிவாகவும்

சதுமறைசொல் வேதாந்த சித்தாந்த நிலையில் எழு சமரச சுபாவ முடிபாய்  -- நான்கு வேதங்களும் கூறும் வேதாந்த சித்தாந்த நிலையில் தோன்றும் ஒற்றுமைத் தன்மை முடிபாய்

நன் மவுனர் அறிவின் மெய் அறிவாகி விரிவாகி -- நல்ல மோனத்தைக் (மௌனத்தைக்) கொள்வோர் சிற்றறிவின் மெய்யறிவாகிப் பரந்து

நாளும் சிறந்து திகழும் ஞாட்பு ஆறு எழுத்து இறைக்கு -- நாள்தோறும் சிறந்து விளங்கும் வலிமையான திருவாறெழுத்து இறைக்கு
 
அடிமை என இதய உள் நண்ணி அஞ்சலி செய்குவாம் -- அடிமை என மனத்துள் பொருந்தி வணங்குவோமாக.

தொல்லையில் வாதவூ ரடிகளொரு பெயர்புரஞ்
             சொல்லவொண் ணாமுதலெனச்
     சொற்றபர மாய்மும் மறைக்கிதய மாயுள்ள
             தூவரிக ளுக்குரிமையாய்
ஒல்லைமறை யின்பனுவல் பன்னுமா றாதார
             வுடலையும் பிராணனென்றே
     ஓதாவி தன்னையும் பொலமெனும் பொருளையு
              மொருங்கே கவர்ந்தொன்றைநல்
கெல்லையொன் றில்பரம பதியாகி யதர்வத்தி
              லெசுரிலெழு பஞ்சருத்ரம்
     என்றதிவ் யோபநிட தங்களறை கின்றசிவ
              மென்னவெவ ருந்தொழவளர்
தில்லையம் பொதிநடக் களைகணா யாறென்று
              செப்புபொறி கட்கணங்காய்த்
    தேகிக ளுளக்குகை தொறுமுள்ள தாயுள்ள
               தெய்வமணி யைப்பணிகுவாம்    (3)

=======================================
ஒல்லை=பழமை; பஞ்சருத்ரம்=அதர்வண வேதத்தைச் சார்ந்த அதர்வசிரம், அதர்வசிகை, எசுர் வேதத்தைச் சார்ந்த கைவல்லியம், சுவேதாசுவதரம், கலாக்கினி ருத்திரம் என்னும் உபநிடதங்கள். இவைகள் வைதிக சைவத்தை இனிது விளக்கும்.
=======================================

விளக்கம்: 

தொல்லையில் வாதவூர் அடிகள் ஒரு பெயர்புரம் சொல்ல ஒண்ணாத முதல் எனச்  சொற்ற பரமாய்  -- பழங்காலத்தில் திருவாதவூரடிகள் (மாணிக்கவாசக சுவாமிகள்) ஒரு பெயரும் ஓர் ஊரும் உடையது எனச் சொல்ல முடியாத முதற் பொருள் என்று சொன்ன பரம்பொருளாய்

மும்மறைக்கு இதயமாய் உள்ள தூவரிகளுக்கு உரிமையாய் -- இருக்கு, யசுர் சாமம் எனும் மூன்று வேதங்களின் இதயமாக விளங்குகின்ற தூய மகாவாக்கியங்களான தத்துவமஸி, அஹம்பிரம்மாஸ்மி, பிரஞ்ஞானம் பிரம்ம ஆகியவற்றிற்கு உரியதாய்

ஒல்லை மறையின் பனுவல் பன்னும் ஆறு ஆதார உடலையும் பிராணன் என்றே -- பழைமையான ஆகமங்கள் கூறுகின்ற மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களுடைய உடம்பையும் பிராணன் என்று 

ஒது ஆவி தன்னையும் பொலம் எனும் பொருளையும் ஒருங்கே கவர்ந்து ஒன்றை நல்கு --  அழைக்கப்படுகின்ற உயிரையும் பொன் என்னும் பொருளையும் நம்மிடத்தில் இருந்து கவர்ந்து (ஞானம் என்ற) ஒன்றைக் கொடுக்கும்

எல்லை ஒன்றுஇல் பரமபதியாகி -- எல்லை எதுவும் இல்லாத மேலான கடவுளாய் ஆகி

அதர்வத்தில் எசுரில் எழு பஞ்சருத்ரம் என்ற திவ்ய உபநிடதங்கள் அறைகின்ற சிவம்என்ன -- அதர்வணம், யசுர் வேதங்களில் சொல்லப்படுகின்ற, அதர்வ சிரசு, அதர்வசிகை எனப்படம் வைதிக சைவ சித்தந்தத்தை விளக்கிக் கூறும் பெருமைக்குரிய உபநிடதங்கள் கூறுகின்ற சிவபெருமான் என்று கூறும்படி

எவரும் தொழ வளர் தில்லை அம் பொதிநடக் களைகணாய் -- எத்தகையவரும் வணங்கும்படி வளரும் தில்லை என்னும் சிதம்பரத்தில் அழகிய பொதுசபையில் நடனம் செய்பவனாயும், உயிர்களுக்குப் பற்றுக்கோடாகவும் ஆதாரமாகவும் 

ஆறு என்ற செப்பு பொறிகட்கு அணங்காய்த் -- ஆறு என்று சொல்லப்படும் தீப்பொறிகளால் ஆன தெய்வமாகவும்

தேகிகள் உளக்குகைதொறும் உள்ளதாய் உள்ள தெய்வமணியைப் பணிகுவாம் -- உடம்பு பெற்ற உயிர்கள் அனைத்தின் உள்ளம் எனும் குகைதொறும் எழுந்தருளியிருக்கும், சிந்திப்பதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணியாய் உள்ளதை வணங்குவோமாக

குறிப்பு: "அமரர்கோ" என்னும் பிரதமப் (முதல்) பிரபந்தம், பிராத்தனையாய் இருத்தலின் வணக்கச் செய்யுளும் இருத்தல் வேண்டும் என்பது நுதலி "அறிவினுக்கு அறிவான பொருளை" என்றற் தொடக்கத்து இத் தெய்வ வணக்கச் செய்யுள் ஒரு மூன்றும் கூறப்பட்டனவாம். இப்படிக் கூறினமை, திருத்தணிகைத் தல பரியந்தம் உள்ள 100-பின்னென்றே உணர உள்ளது. விவரம்--தெய்வமணம் கமழும் ஆசிரியருடைய (பாம்பன் சுவாமிகளின்) பெருஞ் சரித்திரத்திலே காணலாம்.

ஓம் குமரகுருதாசகுருப்யோ நம:

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment