ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
பத்தர்களைக் காக்கும் வீரபிரதாப அரசாம் முருகவேள், தவராஜ சிங்கமான நம் பாம்பன் சுவாமிகளுக்குச் சேவை செய்யும் சேவகனாக அருள் செய்த வரலாற்றினைக் காணலாம்:
சங்க கால பாடல் ஒன்று முருகனைக் குறிப்பிடும் போது,
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்...
பொருள்: நினைத்ததை முடிப்பதில் முருகனை ஒத்தவனே!
என்று முருகனைப் பெருமைபடுத்தும்.
ஆம் தம் அடியார்கள் நினைப்பதை முன்னின்று முடிப்பவன் முருகனே!
"நினைப்பவர் நினைப்பில் நின்று நினைப்பது முடிக்கும் எந்தாய்" என்று சுவாமிகளும் முருகனைப் பாடியுள்ளார்.
முதன் முறையாக பாம்பன் சுவாமிகள் சென்னை செல்வதற்காகத் தொடர்வண்டியில் ஏறினார். அப்பொழுது சுவாமிகள், "வச்சிரபாணியாய்! சத்திபாணியாய்! தண்டபாணியாய் இலங்கும் என் இறைவா! இது வரை எனக்கு தெரிந்துள்ள ஊர்களிலேயே இருந்தேன். உதவி செய்வாரும் உதவி செய்தனர்; இனி யான் செல்லும் நகரம் எனக்கு எவ்வாறு இருக்குமோ?" என்று சொல்லி கண்ணீர் வடித்தார். மறுநாள் காலை அத்தொடர்வண்டி சென்னையை அடைந்த பின்னே ஒருவர் சுவாமிகளை நேராக கூட்டிக் கொண்டு சென்னை யானைக்கவுனி பகுதியிலுள்ள வைத்திய நாத முதலியார் தெருவில் உள்ள 41வது இலக்க வீட்டிலே இவரை சேர்பித்தார். அவ்வீட்டில் உள்ள தவச்சீருடைய முதிய பெண்மணியான பங்காரு அம்மாள், சுவாமிகளைக் கண்ணுற்றவுடன் வணங்கி, அவரை மேல் மாடிக்கு அழைத்துப் போய், "இராத்திரி என் கனவில் இத் தப வடிவம் தோன்றி 'எனக்கு ஆகாரம் இடுக' என்று கேட்டபடியால் நாம் இவருக்குச் செய்ய வேண்டிய உபசாரத்தைச் செய்யக் கடவோம்" என்று தன்னுடைய மகனார் கோவிந்தராஜ முதலியார், மருமகள் ஜெகதாம்பாள் ஆய இருவருக்கும், அங்குள்ள வேறு சிலருக்கும் அறிவித்து அன்னம் படைத்து உபசரிக்கலானார். இதனை அறிந்து கொண்ட சுவாமிகள் இறைவன் இழைத்த அருட்செயலை நினைந்து நினைந்து அழுது அழுது மகிழ்ந்தார். பின் அந்த அம்மையாரின் வேண்டுகோளின் படி, சுவாமிகள் அம்மையாருக்கு திருவாறெழுத்தை விதிப்படி உபதேசித்தார். அவ்வம்மையாருக்கு குமாரானந்தம் என்னும் தீட்சா நாமமும் சூட்டினார்.
இந்த அற்புத அருள் வரலாற்றைச் சுவாமிகளே பாடியுள்ளார்.
சென்னை சேர்முனே யவ்வி ராவவ்வூர்த்
திருவி னேர்கொனார் தவமு ளாள்கனாத்
தன்னி லென்னுடம் போடு நின்றனந்
தருதி யென்றுநே ரருளி யந்தவீ
டென்னை யெய்துமா றாற்றி யங்குளா
ரெவரை யுந்தொட ரடிமை கொண்டனை
சென்னை சேர் முனே அவ் இரா அவ் ஊர் -- அடியேன் சென்னை நகரை அடைவதற்கு முன் நாள் இரவில் அவ் ஊரில் உள்ள;
திருவின் நேர் கொ(ன்)னார் தவமுளாள் கனா தன்னில் -- திருமகளை ஒத்த பெருமையுடையவரும், தவமுடையவரும் ஆன பங்காரு அம்மாள் கனவில்;
என் உடம்பொடு நின்று அ(ன்)னம் தருதி -- என் உடம்பைக் காட்டி (என்னுடைய உருவத்தைக் காட்டி) நின்று அன்னம் தருக என்றும்
நேர் அருளி அந்த வீடு என்னை எய்துமாறு ஆற்றி -- என் முன்னே தோன்றி என்னை அந்த வீடு அடையுமாறு செய்தும்
அங்குளார் எவரையும் தொடர் அடிமை கொண்டனை - அவ்வீட்டில் உள்ள அனைவரையும் தொடர்ந்து தொண்டாற்றும் படி கொண்டாய்;
இப்பாடலில் சுவாமிகள், " முருகப் பெருமான் என்னுடைய (சுவாமிகளின்) உருவத்தைக் கொண்டு பங்காரு அம்மாள் கனவில் நின்றார்" என்று குறிப்பிடுகின்றார் என்றால், சுவாமிகளின் பெருமையை என்னவென்று உரைப்பது? மேலும்
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
என்று பரமனைப் பாடிய மாணிக்கவாசக சுவாமிகளின் வரிகளை எண்ணி மகிழலாம்.
சுவாமிகள் அனைத்தையும் துறந்தார் ஆனால் துறவிக்கும் ஓர் உறவு வேண்டுமே! அது முருகனே!
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்ற தெய்வப்புலவரின் வரிகளுக்கு சுவாமிகளின் வாழ்க்கையே உதாரணம்.
வைத்த பொருள் நமக்காம் என்று சுவாமிகள் தேடி வைத்தது முருகனின் பாதமே!!!
தந்தை தாயும் சகோதரர்களும் தாரமும் சுகுமாரரும்
பந்து மித்திர சொந்தமும் பல்பவுள்சு நின்பதம் ஆகவே
சிந்தை செய்து அதைத் தேடினேன் அன்றித் தேடி வைத்தது ஒன்று இல்லையே
கந்தனே இரும்பாவலா வள்ளி காவலா அறிவாய் அரோ
(பந்து மித்திரர் = சுற்றமும் நட்பும்; பல்பவுள்சு = பலவிதமானச் செல்வங்களும்; நின்பதம் = நின்னுடைய திருவடி; இரும்பாவலா = பெரிய கவிஞனே)
சுவாமிகளுக்கு முருகப் பெருமான் யாதுமாகி நின்ற அருளிப்பாடுகளை அறிந்தோம். அடுத்த பகுதியில் முருகப் பெருமானுக்குப் பாம்பன் சுவாமிகள் எப்படி தந்தையாகவும், தாயாகவும், நண்பனாகவும், பாதுகாவலனாகவும், மருத்துவனாகவும், சேவகனாகவும் அன்புகாட்டினார் என்பதைக் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
தொடரும்.....
Cottage/suit along with food was booked.convayance was also arrangeed.Both with correct identification
ReplyDeleteIt shows the level at which lord Murugan held his disciple Srimuth pambanar..where there is true love therestno ego pristige